Followers

Thursday, July 21, 2011

நித்யானந்தாவின் குண்டலினி காமெடி. VIDEO

நித்யானந்தாவின் குண்டலினி காமெடி.

இப்பொழுது நித்யானந்தா என்னும் இளம் சாமியார் கிளம்பி பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு மலிவான விளம்பரம் பெறும் ஒரு ஏற்பாடு செய்தார்.

தன் பக்தர்கள், வெளிநாட்டுக்காரர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு ஜால வித்தையைச் செய்வதாக அறிவித்தார்.

குண்டலி சக்தி மூலம் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை எல்லாம் அந்தரங்கத்தில் மிதக்க வைக்கப் போகிறேன் என்றார். மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிக்கக் கூடியிருந்தனர்.

அபிமான நடிகை ரஞ்சிதா உட்பட பக்தர்களை குதித்துக் குதித்து எழச் சொன்னார் அவ்வாறே தவளைகள் மாதிரி தத்தித் தத்திக் குதித்தனர்.

குறிப்பிட்ட ஆக்ஞையை செய்து பக்தர்களை அந்தரங்கத்தில் மிதக்கச் செய்ய சைகையைக் காட்டினார். அந்தோ பரிதாபம், தன் அபிமான நடிகை உட்பட யாரும் அந்தரங்கத்தில் மிதக்கவில்லை; கீழே விழுந்ததுதான் மிச்சம்!

வெளிநாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்! நித்யானந்தா மிகுந்த அவமானகரமான முறையில் மூக்கறுந்தது தான் மிச்சம்.

மக்களைக் கூட்டி இப்படி ஏமாற்றியதற்காகக்கூட அவர்மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம் - எடுக்கவும் வேண்டும்.


ஏமாறாதீர்கள்!
நமது கனிவான வேண்டுகோள். சாமியார்கள் சித்து விளையாடி, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி, தாங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள், கடவுளிடம் நேரிடையாகப் பேசக் கூடியவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தி, மக்களைச் சுரண்டுவதை ஒரு கலையாக நடத்தி வருகின்றனர்.

மிகப் பெரிய தந்திரவாதியான சாயிபாபா பல அதிசய செயல்களை செய்து காட்டி மக்கள் மத்தியில் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வந்தார். லிங்கம் கக்குவார், கை அசைப்பில் திருநீறு கொடுப்பார் - தங்கச் சங்கிலியை வரவழைத்துக் கொடுப்பார். பக்திப் போதையில் மூழ்கிய மக்கள் இந்தத் தந்திரக் காட்சிகளை கடவுள் சக்தியால் செய்து காட்டுவதாக நம்பி, அவரிடம் சரணடைந்தனர், பொருள்களைக் கொட்டிக் கொடுத்தனர். வீட்டுக்கு வீடு அவர் படத்தை மாட்டிப் பூஜை செய்யவும் ஆரம்பித்தனர். அவரை எதிர்த்துப் சவால் விட்டனர். பெங்களூர் நரசிம்மையா (துணைவேந்தர்) சாயிபாபாவை சந்திக்க விரும்பினார்.

குறிப்பிட்ட சிலரின் முன் அதிசயங்களைச் செய்து காட்ட முடியுமா என்று சவால் விட்டார். உரிய பதில் இல்லை; மாறாக நாய்கள் குரைப்பதற் கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி, தனது தகுதியை வெளிப்படுத்தினார் சாயிபாபா. பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் சாயிபாபாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் எழுதினார். பதில் இல்லை. உடனே அஸ்ஸாம் வியாபாரி என்று சொல்லிக் கொண்டு, புட்டபர்த்தி சென்று சாயிபாபாவைச் சந்தித்து, நேருக்கு நேர் சாயிபாபா செய்து காட்டிய அதே வித்தையைச் செய்துகாட்டி பாபாவைப் பதற வைத்தார்.

அதற்குப் பின்னால் படிப்படியாக இந்த மேஜிக்குகளைச் செய்வதைக் குறைத்துக் கொண்டார். பிரபல மனநல மருத்துவர் ஆப்ரகாம் டி. கோவூர் அவர்களும், கோவை பிரேமானந்தா அவர்களும் சாயிபாபாவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தனர். சாமியார்களின் சக்தி என்பது வெறும் பூஜ்ஜியம் தான் என்பதை இதன் பிறகாவது பொது மக்கள் உணர வேண்டும். பாமரத்தனமான பக்திப் போதையிலிருந்து விடுபட வேண்டும். ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர்வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

 =================

 ஏமாறாதீர்கள்! 

சித்தர்களும் யோகிகளும் நாடி தேடி வந்து உபதேசிக்கப்பட்ட‌ ??? சன்யாசி, யோகி, சித்தர், குரு ஆகிய யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி . இவர் மந்திரம் ,அஞ்சனம் (மை போட்டு பார்த்தல்), ஜோதிடம் , வாஸ்து , ஆன்மீகம் , அதிர்ஷ்ட கற்கள், ஆவிகள் உலகம், (யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர் ஆவியை வரவழைத்து பேசியது.???)   ஆவிகளை வரவழைத்து பேசுவது, அமானுஷ்ய அனுபவங்கள் ,அதிசய மூலிகை , அந்தரங்கம் , நீர் மேல் நடக்க காற்றில் மிதக்க கண்ணுக்கு தெரியாமல் மறைய குண்டலினி யோகம், சித்த மருத்துவம், மதங்களின் வரலாறு , பன்னூல் ஆக்கம், தியானம், அரசியல் ஆகியவைகளில் சிறப்பு பெற்று ??? தன்னுடைய உஜிலாதேவி வலைப்பதிவு மூலம் உலகத்தோர் உய்வுற சமூக தொண்டாற்றுவதுடன் வெள்ளையர்களையும் சீடர்களாக கொண்டவர். ??

நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள் ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர்வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

2 comments:

நம்பி said...

//அபிமான நடிகை ரஞ்சிதா உட்பட பக்தர்களை குதித்துக் குதித்து எழச் சொன்னார் அவ்வாறே தவளைகள் மாதிரி தத்தித் தத்திக் குதித்தனர்.//

நித்யானந்தா சாமியாருமில்லை. அங்கு போகிறவர்கள் பக்தர்களும் இல்லை. மாறாக நித்யானந்தாவிடம் வசியமானவர்கள். நித்யானந்தா எப்படி பட்டவன்? என்று அனைவருக்கும் தெரியும். இங்கு செல்கிறவர்களுக்கும் தெரியும்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் எல்லாம் ஐ.டி துறையில் கைநிறைய சம்பாதிப்பவர்கள் தான். பெங்களூரை சுற்றி இருப்பவர்கள்.

வாழ்க்கையில் எதையோ தொலைத்துவிட்டு அதற்கான நிம்மதி இங்கு கிடைக்கும் என்று சென்றவர்கள்.

விரக்தியடைந்தவன் போதையை மாற்றாக எடுத்துக்கொள்வது மாதிரி.

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்றவர்கள், மருத்துவரிடம் சென்று நோய் குணமாகாதவர்கள், குடும்பத்தில் பிரச்சினை உள்ளவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மனைவியால் கை விடப்பட்டவர்கள் என அதிக மனஅழுத்தத்துடன் வாழக்கூடியவர்கள் இங்கு சென்றதாகத்தான் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆக வசியத்தினால் இங்கு செல்பவர்கள் தான் அதிகம். இவர்களை பக்தர்கள் என்று கூறமுடியாது. பக்தியே ஒரு வசியம்தான்.

இந்த வசிய வித்தையை உணர்ந்தவன் நித்யானந்தா அதை சரியாக பிரயோகிக்கின்றான். இம்மாதிரி பாதிக்கப்பட்ட மனிதர்கள் மேல். இவர்கள் எளிதில் வீழ்ந்துவிடுகிறார்கள். போக்கிடம், வெளியுலகம் அறியாத பகுத்தறிவற்ற மனிதர்களாக இருப்பதால்.

மனநல மருத்துவர் ஹிப்னாட்டிசம் பண்ணி மனிதனின் மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் விஷயங்களை கொண்டுவருவதில்லையா?. அது போலத்தான் இதுவும்.

(அப்போதும் சில நேரம் ஹிப்னாட்டிசத்தில் சில விஷயங்களை சொல்ல மறுப்பார்கள். குற்றவாளிகளை உண்மையை வெளிக்கொணர்வத்றாக இந்த பரிசோதனைக்கு ஆளாக்கும் பொழுது எச்சரிக்கையாக வசியப்படாமல் உண்மையை குற்றவாளி மறைப்பதையும் அறிந்திருக்கலாம்.)

கருப்பாக இருக்கும் அம்மன் சிலைக்கு பூட்டப்பட்டிருக்கும் நகையைப்பார்த்து யாராவது அம்மன் என்னமா அழகா இருக்கா! என்று சொல்லுவதையும் அறிந்திருக்கலாம்.

பெண்கள் இப்படி கோயில்களில் நின்று கொண்டு மூலவிக்கிரகத்தை பார்த்து சொல்வதை கேட்டிருக்கலாம். அப்படியே கன்னத்திலும் போட்டுக்கொள்வார்கள்.


....தொடர்ச்சி 2

நம்பி said...

தொடர்ச்சி....2
கருப்பா இருக்கிற கல்லை பார்த்து யாராவது அழகா இருக்கா அம்மன்! என்று சொல்லுவார்களா? அதற்கு தங்க நகை அணிவித்தால், அதன் மேல் வசியங்கொண்டு (தங்க நகை மோகம், இரும்புல செஞ்சு போட்டா அது கூட சொல்லமாட்டாங்க!) அம்மன் அழகா இருக்கா! என்று கூறுபவர்கள் நிறைய பேர் உண்டு.


எப்படி காசியை சுற்றி அகோரிகள் போதையுடன் திரிந்து கொண்டிருக்கிறார்களே! அது மாதிரி தான்.

அங்கு இருப்பவர்கள் எல்லாம் சோம்பேறித்தனத்தின் வாயிலாக, உழைக்க மனமில்லாதவர்கள், குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு வந்தவர்கள் தான் அகோரிகளாக மாறி இருப்பார்கள்.

அகோரிகளாக இருப்பவர்களுக்கு வேளாவேலைக்கு சோறு கிடைக்கிறது. மரியாதையும் கிடைக்கிறது. நல்ல போதையும் கிடைக்கிறது, செக்ஸ் விஷயங்களும் அளவில்லாமல் கிடைக்கிறது. இதை விட சோம்பேறிகளுக்கு என்ன வேண்டும்?

காசியை சுற்றி எப்போதும் யாராவது ஒருவர் எல்லா நேரங்களிலும் புண்ணியத் தானத்திற்காக சோம்பேறி சோற்றை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் சோற்றுக்கு அங்கே பஞ்சமில்லை.

அந்த மாதிரி தான் இந்த நித்யானந்த மடத்திற்கு, இன்னும் பல ஹைடெக் சாமியார்கள் பக்கம் சுற்றி கொண்டிருப்பவர்கள் எல்லாம் இந்த நவீன வசதிகளுடன் கூடிய போதை மார்க்கத்துக்காகத்தான்.

பண்க்காரர்களுக்கும் இந்த இடத்தைவிட மிகப்பாதுகாப்பான இடம் வேறு ஒன்றில்லை பக்தி மடம் என்ற பெயரில் என்ன வேண்டுமென்றாலும் பண்ணலாம். யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் அரசாங்கம் உட்பட. அவர்களே அங்கே வந்து காலில் விழுவார்கள்.

கஞ்சாவே அது மாதிரியான வசியத்தை உருவாக்கும் போதை வஸ்து தான். அப்படியே! மிதப்பது போன்ற உணர்வை உருவாக்கும். இப்போது இருக்கும் நிலைமையை மறக்கவைக்க கூடியது. (அளவுக்கேற்ற மாதிரி அதன் வீரியம் மாறக்கூடியது)

இங்கும் நகரப்பகுதிகளில் இருக்கும் பல குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அதாவது, அதிகப்படியான கடின உழைப்பு உழைப்பவர்கள் எல்லாம் இந்த கஞ்சாவைத்தான் அடித்துவிட்டு கடின வேலையைப் பார்ப்பார்கள்.

மது குடிப்பது அதிகப்படியான செலவை உண்டாக்கும். ஆகையால் அதற்கு மாற்றாகவும் இந்த கஞ்சாவை புகைத்து விட்டு சாதரணமாகவே வீட்டில் இருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், சாதாரண மனநிலையை மறந்து விட்டு சமூக விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களும் இந்த கஞ்சாவைத்தான் உபயோகிப்பார்கள்.

ஆக இங்கு போகிறவர்கள் தெரியாமல் போகிறார்கள்! என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தெரிந்தே இந்த கிளர்ச்சி விஷயங்களை விரும்பித்தான் செல்கின்றனர்.

இதை கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கித்தான் இதை தடுக்கவேண்டும். எப்படி கேளிக்கை விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள், லைசன்ஸ் போன்ற விதிகள் இருக்கிறதோ?

அதைப்போன்று அனைத்து சாமியார் மடங்களும் முழு நேரமும் அரசு கண்காணிக்க வேண்டும். தவறுபவர்களுக்கு உடனடியாக கடுமையான ஆயுள் தண்டனை வழங்கும் அளவுக்கு இந்திய சட்டத்தை மாற்றவேண்டும். இப்போதைக்கு இது தான் தற்காலிக மாற்று.