Followers

Sunday, February 8, 2009

பா.ஜ.க. காவி ஆட்சி ஏற்பட்டால் என்ன ஆகும் இந்தியாவின் நிலை?சிந்திப்பீர்!

எத்தகைய காலித்தனத்தில் இறங்கினாலும் - எத்தகையக் குற்றச் செயல்களைச் செய்தாலும் - வழக்கு இருக்காது - என்கிற உத்திரவாதத்தை பா.ஜ.க. அரசு தருகிறது.


ஒரு சோறு பதம்!
20 ஆண்டுகளுக்கு முன்பு 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு கட்சி மசூதியை இடித்துக் கோயில் கட்டவேண்டும் என்று பேசி - கிளர்ச்சி செய்து, இந்து மக்களின் மலிவான மத உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு ஊதிப் பெரிதாக்கி 184 எம்.பி.க்களைப் பெறும் அளவுக்கு மக்கள் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது. பின்னர் 5 ஆண்டுகளில் நாட்டை ஆளும் அவலம் கூட ஏற்பட்டுவிட்டது.

அவர்களின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு மோசமாக இந்துமத வெறி தலை தூக்கி ஆடியது என்பதை நியாய உணர்வு கொண்ட எவரும் மறைக்கவோ, மறுக்கவோ மறக்கவோ முடியாது. முழுக்கவும் காவி மயமாக்க வேண்டும் என்பதால் கல்வியைக் கறைப்படுத்தினார்கள். 

பாட நூல்களை எல்லாம் மாற்றினார்கள். இந்து மதமே உயர்ந்தது என்பதைப்போலவும், ஆரியர்கள் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், அவர்களின் தந்தையர் நாடான பாரதம் பாரிலேயே உயர்ந்த நாடு - அதற்கு அடிப்படைக் காரணம் ஆரியக் கலாச்சாரம் என்றெல்லாம் கல்வித் திட்டத்தைத் தலைகீழாக மாற்றி எழுதிவிட்டார்கள். 

அறிவற்றவன் கடலில் தூக்கிப் போட்ட கல்லைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கடினமான பணியில் பின்னர் வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுப் பெருத்த முயற்சிக்குப் பின் உண்மை வரலாற்றைச் சொல்லித் தரும் நிலையை உருவாக்கியது. ஆனாலும் இன்னும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை.

மதவெறி எவ்வளவு தூரம் சல்லடம் கட்டிக் கிளம்புகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு - சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேற்றத்திற்கு ஏற்படுத்தப் பட்ட முட்டுக்கட்டை. பார்ப்பனர்களும், பார்ப்பனச் சக்திகளும் ராமன் என்ற பேரைச் சொல்லி, அவனால் கட்டப்பட்ட பாலம் இருக்கிறது என்று சொல்லி, அதை இடிக்கக்கூடாது என்று சொல்லிக் கிளர்ச்சிகளைத் தொடங்கி, அதனை இந் நாட்டுப் பார்ப்பன - பனியா ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டு திட்டத்தை முடக்கிவிட்டார்கள்.

16 வயது மட்டுமே வாழக்கூடியவனாக இருந்தாலும் அறிவுள்ள மகன் வேண்டும் - அறிவு அற்ற, ஆனால், ஆயுள் நீண்ட மகன் வேண்டாம் - என்று கடவுளிடம் ஒப்பந்தம் போட்டுப் பெற்றப் பிள்ளை மார்க்கண்டேயன் என்கிறது புராணம். ஒப்பந்தத்திற்கு மாறாக - ஆயுள் முடிந்து அவனைக் கொண்டு போக எமன் வந்தபோது - வர மறுத்து - லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சண்டித்தனம் செய்ததால் - லிங்கத்தையும் சேர்த்து எமனின் மரணக் கயிறு வீசப்பட்டதால் - லிங்கம் கோபித்துக் கொண்டு எமனைத் தாக்கி - மார்க்கண்டேயனைக் காத்தது என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அபயம் கோரிக் கட்டிப் பிடித்துக் கொண்ட லிங்கமாக இன்று விளங்குவது - உச்சநீதிமன்றம்! அதனுடைய நடவடிக்கையால், சிறந்த சேதுக் கால்வாய்க் கப்பல் போக்கு வரத்துத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. இதற்குக் காரணமாக விசிறப்பட்டது இந்து மதவெறி! ஸ்டே கிடைத்ததே வழக்கு வெற்றி என்கிற நினைப்பு அவர்களுக்கு!

அதேபோலப் பல கட்டப் பிரச்சினைகளை ஏற்படுத்தித் தம் மத அரிப்பைத் தற்காலிகமாகத் தீர்த்துக் கொண்டவர்ள் ஒரேயடியாகத் தம் மதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு நாம் ஆட்சி அமைத்தால்தானே பெரும் வாய்ப்பு - என்கிற எண்ணம் ஏற்பட்டு அதற்கானத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையர்களுக்கும் மதச் சார்பற்றவர்களுக்கும் எதிராகக் கூர் தீட்டிக் கொண்டு குத்தீட்டியுடன் பாய்கிறார்கள். 

அதன் வாயிலாக இந்து மதத் தீவிரவாதத்தை வளர்த்து மக்களை மதத்தின் அடிப்படையில் இந்து என்கிற பதாகையின் கீழ் மந்தைகளாக்கிட வேண்டும் என்று முடிவு செய்து - மந்தைகளின் வாக்குகளை வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுகிறார்கள்.
சிறுபான்மையினரை உயிருக்குப் பயப்படும் நிலைக்கு ஆளாக்கவேண்டும் என்ற திட்டத்தில் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் இசுலாமியர்களைக் கொன்று குவித்து - இந்து மந்தையைத் திரட்டி - மீண்டும் முதலமைச்சராக நரேந்திரமோடி வந்துவிட்ட நிலை! 

அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில்! அதே போன்றே, கருநாடகத்தில்! கருநாடகத்தில் கூட்டணியில் இருந்து ஆட்சி செய்து பிறகு நூலிழைப் பெரும்பான்மையை விலை தந்துபெற்று ஆட்சி அமைத்துள்ளனர் சட்டிஸ்கர், ராஜஸ்தான் என்று இருந்ததை இழந்தார் கள் என்றாலும் கருநாடகத் தில் கால் ஊன்றிவிட்டனர். தென்னகத்தில் தடம் பதித்து விட்டோம் என்கிற இறுமாப்பில் என்ன செய்கிறார்கள்?

பச்சையாக இந்துமத வெறித்தனத்தைக் கட்ட விழ்த்து விட்டிருக்கிறார்கள்.
புதுப்புதுப் பெயர்களில் படை அமைக்கிறார்கள். ஏதோ, அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் நடத்தும் படை என நினைத்துக் கொள்ளக்கூடாது. 

இது நோய்க் கிருமிகளால், உடல் தாக்கப்பட்டதால் ஏற்பட்டு தொல்லை தரும் படை நோய்! இந்தப் படையால் அரிப்பு அதிகமாகிறதே தவிர - அழிவு ஏற்படுகிறதே தவிர, உலக அரங்கில் அசிங்கம் பூசப்படுகிறதே தவிர - உருப்படியான நன்மை ஏதும் விளையவில்லை! 

ஆனாலும் அவர்களுக்கு மனச்சாந்தி! மத வெறிக்குத் தீனி! அவ்வளவே! கருநாடகம், மாநில வெறி பிடித்தவர்களால் - மொழி வெறி பிடித்தவர்களால் - ஆளப்படும் நிலை! காவேரி நீரை நியாயமாக இப்படியிப் படிப்பங்கிட்டுக் கொள்ளுங்கள் எனத் தீர்ப்பாயம் சொல்லுமேயனால், அதனை மறுப்பது!
செம் மொழித் தகுதி தமிழுக்குத் தரப்பட்டது என்றால் - கூடாது, எங்கள் மொழிக்குத் தான் தரப்படவேணடும் என்று சண்டித்தனத்திலும் வம்புப் பேச்சிலும் ஈடுபடும் அவமானமான நிலை! பண்டாரப் பரதேசிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்களின் பாதார விந்தங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டு ஒவ்வொன்றாக மதவெறிக் காரி யங்களைச் செய்யும் கொடுமை!

ஒன்றா? இரண்டா? பாருங்களேன்!
2008 ஜூன் மாதத்தில் பதவிக்கு வந்த உடனேயே முதலமைச்சர் பெயரில் சிறப்புப் பூஜை - அரசுச் செலவில் செய்யப்பட வேண்டும் - என்று 34 ஆயிரம் கோயில்களுக்கு அரசாணையே போடப்பட்டது.

சுற்றுலாத் தலமான மஞ்சனபெல அணையில் விருந்து, நடனம் நடத்திய இளவயதினர் 35 பேர்களைத் தாக்கி அடித்தனர் - கருநாடக ரக்ஷன வேதிகே எனும் மாநில வெறி அமைப்பினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதத்தில் 2008 ஆகஸ்ட் 10-இல் நடந்தது இது.

கோகர்னா எனும் இடத்திலுள்ள மகாபலேசுவரர் கோயிலை ராமச்சந்திரபுர மடத்தின் கட்டுப்பாட்டுக்கு விட்டது அரசு - அரசு கோயில், மடத்தின் கோயிலாக மாற்றப்பட்டது!

மடம் கட்டி வைத்ததனாலே, தம்பி! வசம் கெட்டுப் போனது நம் நாடு என்று புரட்சிக்கவிஞர் பாடியதை நினைக்கவும்.

2008 செப்டம்பர் 14-இல் கிறித்துவ வழிபாட்டிடங்கள் மங்களூர் நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் அடித்து நொறுக்கப்பட்டன. ஒருவார காலம் தாக்குதல்கள் நடந்தன.

பாபா புதங்கிரி எனும் சுஃபி ஞானி அடக்கவிடத்தில் சங்பரிவாரங்களின் வெறியாட்டம் 12.10.2008 இல் நடந்தது. இந்துமதச் சாமியார்களும் வன்முறை வெறியாட்டங்களில் கலந்துகொண்டனர்.

வைகுண்ட ஏகாதசியன்று மாணவர்களிடையே பேசி லட்டு வழங்கி, இந்து மத வெறியை வளர்த்தனர் 7.1.2009-இல்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஹும்ளி நீதி மன்றக் கட்டடத்தில் குண்டு வெடிக்கச் செய்த கொள்ளையனைப் பிடித்து விசாரித்த போது தனக்கு இந்து மதவெறி அமைப்புகளுடன் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தினான்.
இதன் மூலம் மதவெறியர்கள் தொழில் முறைத் திருடர்களுடனும் சமூக விரோதிகளுடனும் பிணைப்பு வைத்திருப்பது உறுதியாகிறது.
சூரிய கிரகணம் நடந்த 26.1.09-இல் தீவினைகளை அகற்ற - சிறப்புப் பூஜை அரசுச் செலவில் நடத்தப்பட்டது.

மதவெறிச் செயல்களில் கடந்த குறுகிய காலச் சாதனைகள் கருநாடகா மாநிலத் தில் வெளிச்சத்துக்கு வந்தவற்றில் சில, மேலே பட்டியல் இடப்பட்டுள்ளன.

ஒழுக்கம் - இந்தியக் கலாச்சாரம் - பாரதப் பண்பாடு - என்பவற்றின் பெயரால் மதவெறியர்கள் நடத்திய காட்டு விலங்காண்டிச் செயல்களில் சில இவை:
பெங்களூரில் மது அருந்தும் இடங்கள் பல ஆண்டுகளாகப் பிரசித்தி பெற்றவை. இவற்றின் வாடிக்கையாளர்கள் 95 விழுக்காட்டினர் இந்து மதக்காரர்கள்தான். இந் நிலையில் 27-12-2008 - இல் ஃபுகா பார் விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர் ஹொய் சள சேனா எனும் அமைப்பினர். புதுப்புதுச் சேவை என்கிற பெயரில் காலிகளின் படைகளை உருவாக்கி வருகிறார்கள்.

கல்வி முகாமில் கலந்து கொள்ள மைசூர் சென்ற மாணவ, மாணவியர் பயணித்த பேருந்தை பஜ்ரங்தள் ஆள்கள் தாக்கி மாணவ - மாணவியரை அடித்தனர். பல மதங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் ஒன்றாகப் பயணம் செய்தது குற்றமாம்.

சங் பரிவார்களின் செயல்களைக் கண்டித்து விமரிசனம் செய்த காரவலி அலே எனும் ஏட்டின் ஆசிரியர் சீதாராம் மங்களூரில் கைது செய்யப் பட்டார். இவரின் பத்திரிகை அலுவலகத்தைப் பரிவார் ஆள்கள் தாக்கிச் சேதப்படுத்தினர்.

 கைது செய்யப்பட்ட ஆசிரியர் கையில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்ட கொடுமையை மதவெறி அரசின் காவலர்கள் செய்தனர். இது 6.1.2009-இல் நடந்தது. 25.1.2009 -இல் மங்களூரில் மது விடுதியின் உள்ளே ராமசேனா காலிகள் புகுந்து மகளிரைத் தாக்கினர். அதே நாளில் தனி நபர் வீட்டில் நடந்த விருந்தில் நுழைந்து பஜ்ரங் காலிகள், தாக்குதல் நடத்தினர்.

இவ்வளவுக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் - ஒன்றுமே இல்லை - ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன - என்கிறார் உள் துறை அமைச்சர் வி.எஸ். ஆசார்யா எனும் மைசூர் அய்யங்கார்.

ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் ஆகிய மதவெறி அமைப்புகளில் இருந்த பிரமோத் முதாலிக் என்பவர் - தேர்தலுக்கு நின்று பிரபலமாக வேண்டும் என்கிற அரிப்பின் காரணமாகத் தனி அமைப்பாக ராமசேனாவை உண்டாக்கி மலிவான காலித்தனங்களில் ஈ.டுபட்டு வருகிறார்.

2007 ஆகஸ்டில் எட்டியூரப்பா துணை முதலமைச்சராக இருந்தபோது இவர் மீதும் சங்பரிவார் காலிகளின் மீதும் நிலுவையில் இருந்த 51 வழக்குகளை வாபஸ் பெற்றார். முதாலிக் முதல் குற்றவாளியாகவும் பிரவீண் தொகாடியா அடுத்த குற்றவாளியாகவும் இருந்த வழக்குகள் இவற்றில் ஏராளம்.
தற்போதுகூட பாபா புதங்கிரியா, தத்தா பீடமா என்கிற இசுலாமிய -இந்து சண்டை தொடர்பான சிக் மகளூர் வழக்கைக் கடந்த மாதம் திரும்பப் பெற்று விட்டது கருநாடக அரசு.

எத்தகைய காலித்தனத்தில் இறங்கினாலும் - எத்தகையக் குற்றச் செயல்களைச் செய்தாலும் - வழக்கு இருக்காது - என்கிற உத்திரவாதத்தை பா.ஜ.க. அரசு தருகிறது.

எனவே காலித்தனங்கள் கணக்கின்றிச் செய்யப்படுகின்றன - 2008 மே முதல் இதுவரை 14 வன்முறைச் செயல்பற்றியப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன! குற்றம் என்ன தெரியுமோ? முசுலிம் அல்லது கிறித்துவ இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தது! இந்துப் பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அய்ஸ் கிரீம் கடையில் ஒரு முஸ்லிம் பையனுடன் பேசிக் கொண்டிருந்ததற்காக இந்துப் பெண்ணை அடித்தவன் பிரசாத் அட்டவார் எனும் பஜ்ரங்தள் ஆள்.

ஒரே தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் - இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் - சினிமா பார்க்கப் போனதற்காக 150 பஜ்ரங் காலிகள் அந்த நான்கு பேரையும் தாக்கிப் பின் காவலர்கள் வந்து மீட்டனர். குற்றம், வழக்கம்போலவே இரு வேறு மதங்களைச் சார்ந்திருந்ததுதான்!
மக்களே போன்ற கயவர்கள் இப்படி என்றால் - காவல்துறையும் அப்ப டியே! இதழாளர் பி.வி. சீத் தாராம் இவர்களை விமரிசனம் செய்து எழுதியமைக்காகக் கைது செய்யப்பட்டு - கைவிலங்கிடப்பட்டு - இன்னமும் சிறையில் அடைக்கப் பட்டே இருக்கிறார்!

இந்தக் கும்பலைச் சேர்ந்த ஓர் ஆள் - எஸ்.எல். பைரப்பா என்பவர் கூறுவது எவ்வளவு பொய்யானது என்பதைப் பார்க்கலாம் - சோனியா காந்தி அதிகாரம் பெற்றதிலிருந்து இதுவரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் இந்தியாவில் கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார் இவர்!
சுமார் 5 ஆண்டுக் கால மாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இருக்கிறது - சோனியாகாந்தியை வழி காட்டியாகக் கொண்டு! நாள் ஒன்றுக்கு 5000 பேர் மதம் மாறுகிறார்கள். என்றால் - 5 ஆண்டுக்காலத்தில் சுமார் ஒரு கோடி பேர் மதம் மாறியிருக்க வேண்டும். இதனை அவரால் நிரூபிக்கத் தேவைப்படும் புள்ளி விவரங்கள் உண்டா? கேட்டால் தாக்குவார்களே தவிர, தங்களைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.

கருநாடகாவின் அயோத்தியா ஆக்குகிறேன் பாபா புதங்கிரியை எனச் சபதம் கூறியிருக்கிறார் அனந்த குமார் எனும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.! பாபா புதங்கிரி என்பது, இசுலாமிய ஞானி ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம். இதனை தத்தாத்ரேயகோவில் எனக் கூறி சொந்தம் கொண்டாடுவது இந்துமதக் கும்பல். இதனால் இரு தரப்பிற்கும் மோதல்! வழக்கு! இதைச் சரி செய்வதற்குப் பதில் பெரிதாக்கப் பார்க்கிறார்கள்!

ஆட்சி அவர்கள் கையில் இருப்பதால் எதையும் செய்வார்கள்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல - மேலே கண்ட கலவரப்பட்டியல்! கருநாடகாவைப்போல இந்தியா முழுக்கவும் பா.ஜ.க. காவி ஆட்சி ஏற்பட்டால் என்ன ஆகும் இந்தியாவின் நிலை?
சிந்திப்பீர்!--சார்வாகன்

SOURCE:viduthalai/20090207/

1 comment:

சிந்திக்க உண்மைகள். said...

DEAR " வலைப்பூக்கள்.com "

THANKS FOR YOUR MESSAGE