Followers

Sunday, December 28, 2008

கம்யூனிஸ்ட் கட்சியா ? கந்து வட்டி கூடாரமா?

01.01.09 ஹாட் டாபிக்
ம்ப முடிகிறதா? கொள்கை, கோட்பாட்டுக்குப் பெயர் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாநகரச் செயலாளர் ஒருவர் கழன்று போய் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் ஐக்கியமாகி, தோழர்களை அதிர வைத்திருக்கிறார். அதுகூட பரவாயில்லை. `கம்யூனிஸ்ட் கட்சி என்பது கந்து வட்டிக்காரர்களின் கூடாரம், சாதிகள் தலைவிரித்தாடும் இடம்' என்பது மாதிரி அவர் குற்றச்சாட்டுகளையும் கூறி காம்ரேடுகளைக் கலங்கடித்திருக்கிறார். 

 
அவரது பெயர் கனகசாமி. சி.பி.எம். கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரான அவர், கடந்த 21-ம்தேதி காலையில் வழக்கம் போல் சிந்துபூந்துறை தாமிரபரணிக் கரையோரம் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து வேலைகளைக் கவனித்திருக்கிறார். அன்று மாலை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியவர், நேரே ஆரியாஸ் ஓட்டலுக்குப் போய், அங்கே அ.இ.ச.ம.கட்சித் தலைவர் சரத்குமார் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி தொண்டர்களோடு தொண்டராக ஓர் ஓரமாய் நின்றிருக்கிறார். அதன்பின் ராதிகா சகிதம் வந்த சரத்குமார் முன்னிலையில் அ.இ.ச.ம.க.வில் ஐக்கியமாகி விட்டார்.

`சி.பி.எம். கட்சியின் மாநகரச் செயலாளர் ஒருவர் தன் கட்சிக்கு வருகிறார்' என்பதை முதலில் சரத் குமாரே நம்பவில்லையாம். சால்வை போர்த்தி கட்சியில் இணைந்த கனகசாமியைக் கட்டிப்பிடித்து வரவேற்ற சரத்குமார், அன்று நடந்த பொதுக்கூட்ட மேடையிலும்கூட கனகசாமிக்குப் பொன்னாடை போர்த்தியிருக்கிறார்.
கனகசாமி விஷயத்தைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், குறிப்பாக மாவட்டச் செயலாளர் பழநி உள்பட யாரும் முதலில் அதை நம்பவில்லையாம். பிறகு ``சரி, ஏதோ ஒரு வேகத்தில் போய்விட்டார் போலிருக்கிறது. மேடையோரம் நிற்பார். போய் கூட்டி வந்து விடுங்கள்'' என்று சில தோழர்களை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் கனகசாமியோ செல்போனை சுவிட்ச்ஆஃப் செய்துவிட்டு மேடையிலிருந்ததால் தோழர்களின் முயற்சி தோற்றுப் போனது.

ஏன்? எதற்காக கனகசாமி கட்சி மாறினார்? பாளையங்கோட்டைக்கு வெளியே திருமால் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த அவரை நேரில் சந்திக்கக் கிளம்பினோம். அவரது வீட்டில் இருந்த ஒரே விலையுயர்ந்த சாதனம் மிக்ஸி மட்டுமே. அதைத் தவிர இருபதாண்டு பழைமையான ஒரு ரேடியோ. மற்றபடி சேர், மேஜை, கட்டில், ஃபேன், டி.வி. என எதுவுமே இல்லை.

அவரிடம், `அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்?' என்று கேட்டபோது, அதற்காகவே காத்திருந்தது போல் குமுறல்களைக் கொட்டத் தொடங்கினார் கனகசாமி.

``சிவகிரி பக்கம் உள்ள ராமநாதபுரம்தான் என் சொந்த ஊர். 78-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபியாகி, 1984-ல் கட்சியின் முழு நேர ஊழியனானேன். நான் வீட்டை மறந்து வெறியுடன் கட்சிப்பணி செய்ததால் வறுமை தாண்டவமாடியது. என் மனைவி பரமேஸ்வரி பீடி சுற்றிச் சம்பாதிக்கும் காசைக்கூட அவ்வப்போது பிடுங்கி கட்சிக்காக செலவழித்து விடுவேன். இதனால் பல நாட்கள் என் குழந்தைகளுக்கு பாலுக்குப் பதில் கேப்பைக் கூழ் கொடுத்தே வளர்த்தாள் என் மனைவி.

அதன்பின் எனக்கு ராமநாதபுரம் கிளைச் செயலாளர் மற்றும் சிவகிரி தாலுகா செயலாளர் பதவி கிடைத்தது. கட்சிக்கு ஊதியமில்லா ஊழியனாக மாறிய நான், ஊரில் எனது பங்காகக் கிடைத்த இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்று கட்சிக்காகச் செலவழித்தேன். 1990-ல் எனக்கு மாதச்சம்பளமாய் இருநூறு ரூபாய் தந்தார்கள். அறுவடை சமயங்களில் விவசாயிகளிடம் கையேந்தினால் ஆறு மூட்டை நெல் தேறும். ஒரு வருடம் சாப்பாட்டுப் பிரச்னையில்லை.

1997_ம் ஆண்டு நான் கட்சியின் அலுவலகச் செயலாளராய் நியமிக்கப்பட்டு, நெல்லை சிந்துபூந்துறையிலுள்ள அலுவலகத்திற்கு வந்தபோதுதான் கம்யூனிஸ்டுகளின் சுயரூபம் எனக்குத் தெரிய வந்தது. கட்சிக்குள் முறைதவறிய பாலுறவு சகஜமாக இருந்தது. சில மாதர் சங்கப் பெண்களை இதற்காகப் பயன்படுத்தும் கொடுமை தாண்டவமாடியது.. மாநில அளவில் பெயர் பெற்ற ஒரு தலைவருக்கும், பொறுப்பில் உள்ள பெண்மணிக்குமான உறவு ஊருக்கே தெரிந்திருந்தது. தோழர்கள் பலர் பெண்பித்தர்களாக இருந்தார்கள்.

பொதுவாக சமூக விரோதிகள், பெரு நிலக்கிழார்கள், குடிகாரர்கள், கந்துவட்டிக்காரர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது விதி. `நாளை எண்ணி வட்டி சேர்க்கும் நாய்களுக்கு இங்கு இடமில்லை' என்று நாங்கள் பாட்டுப்பாடியே கட்சி வளர்த்தோம்.
ஆனால் நெல்லையிலோ நிலைமை தலைகீழ். கட்சியின் உயர் பதவியான மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான் தலைமையில் ஒரு கந்துவட்டிக் குழுவே இருக்கிறது. இவர்களுக்கென உள்ள ஓர் ஏஜெண்ட் இவர்களது பணத்தை பத்து சதவிகிதத்திற்கு வட்டிக்கு விட்டு ஐந்து சதவிகிதத்தை இவர்களுக்குக் கொடுக்கிறார். குழந்தைவேலு என்ற தீக்கதிர் ஏஜெண்ட், பல லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தைக் காப்பாற்றவே கட்சிக்கு வந்தவர். இதெல்லாம் பற்றி மாவட்டச் செயலாளர் பழநியிடம் சொன்னால், `அது மாற்றுப் பொருளாதார ஏற்பாடுதானே?' என்று அவர் அலட்சியமாகச் சொல்லி வந்தார்.

கடந்த 11.11.2007-ம்தேதி நான் நெல்லை மாநகரச் செயலாளராய் நியமிக்கப்பட்டேன். அன்றுமுதல் என்னை பதவியை விட்டு விரட்டுவதிலேயே இந்த கந்துவட்டி பார்ட்டிகள் குறியாய் இருந்தார்கள். இதற்குக் காரணம் சாதிப்பாகுபாடு என்பது பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. இங்கே தேவர் சமூகத்தினர் கட்சிப்பொறுப்பிற்கு வந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலை. நாடார், தலித் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். நான் நாடார் என்பதாலேயே என்னை அவர்கள் விரட்ட முயன்றார்கள்.

ஆறுமுகம் என்கிற நாடார் சமூகப் பிரமுகர், புளிச்சிகுளம் மாடசாமி போன்றவர்களையும் இதே காரணத்துக்காக கட்சியில் இருந்து இவர்கள் ஒதுக்கி விட்டார்கள். அங்கே சாதிக்கொடுமை தலைவிரித்தாடும் நிலையில் இனிமேலும் அங்கிருக்க விரும்பாத நிலையில்தான் சரத்குமார் கட்சியில் சேர்ந்தேன்'' என்றார் கனகசாமி.
`அப்படியானால் நீங்களும் சாதி பார்த்துத்தான் கட்சியைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இல்லையா?' என்றோம். ``அப்படியெல்லாம் இல்லை. சரத்குமார் எல்லா சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்வதால்தான் அவரது கட்சியைத் தேர்வு செய்தேன்'' என்றார் கனகசாமி.

கனகசாமியின் அதிரடி குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் கருமலையானிடம் விளக்கம் கேட்டோம்.

``கனகசாமி ஓர் அப்பாவி. சூதுவாது தெரியாதவர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் கட்சியிலுள்ள பெண்களைப் பற்றி அவர் தவறான சில கருத்துக்களைச் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது.
சில தோழர்கள் சில பெண்களைக் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். வரம்பு மீறக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அவர்கள் வீடுகளில் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறோம். அதைத்தான் கனகசாமி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

கந்து வட்டியைப் பொறுத்தவரை அது மாவட்ட மாநாடுகளில் எழுப்பப்பட்ட பிரச்னைதான். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். பணத்தை வட்டிக்கு விடுவதை எப்படி மறைக்க முடியும்? பூனைக்குட்டி வெளியே வந்துவிடாதா? கட்சியில் சாதியிசம் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு.
கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள நாடார் மற்றும் தலித்துகளின் பட்டியலை உங்களுக்கு நான் தரத்தயார். தோழர் கனகசாமி ஏன் இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை'' என்றார் அவர் சோகமாய்.

என்னதான் சொன்னாலும், கனகசாமியின் விலகல் காம்ரேடுகளை கொஞ்சம் கலங்க வைத்திருக்கிறது என்பது மட்டும் நிஜம். thanks to: kumudam reporter

No comments: