Followers

Saturday, November 8, 2008

இந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்.

இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்குக் கைப்பூண் போன்ற சான்று, காந்தியார் கொலை.

சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை காந்தியார் பேசினார் என்பது தானே இந்துத்துவ வெறியர்களின் கோபத்துக்கான காரணம்?

 பாகிஸ்தான் பிரிவினையை நேரு, பட்டேல், ராஜாஜி போன்றவர்களெல் லாம் ஏற்றுக் கொண்டு அவரிடம் தெரிவித்ததால், வேறு வழியின்றி காந்தியார் எதிர்க்க இயலவில்லை. பாகிஸ்தான் பிரிவினையைக் காட்டி காந்தியார் உயிருடன் இருக்கக் கூடாது எனத் தாம் முடிவு செய்ததாக நாதுராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட பொய்!

பிரிவினையை ஆதரித்த மற்றவர்களுக்கு எந்த இடையூறும் யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. கூட்டுச் செயல், முடிவு என்ற வகையில் கண்டனம் கூடக் கிடையாது.

கோட்சேயின் ஞானகுரு விநாயக தாமோதர் சவர்க்கார் 1904-இல் ஆங்கிலேயர்களைக் கொல்வதற்காக உருவாக்கிய இயக்கம் அபிநவ் பாரத்! அது தான் இப்போது 2006-இல் அதே புனே நகரில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

1905-இல் ரசியாவின் ஜார் அலெக்சாண்டர் அந்நாட்டு மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியதற்குக் காரணம் அவர்கள் நடத்திய ஆயுதம் ஏந்தியப் புரட்சி. இதைக் கண்ட பால் கங்காதர் திலக் (மராத்திப் பார்ப்பனர்) சொன்னது என்ன தெரியுமா? பிரார்த்தனை செய்வதால், ஒன்றும் ஆகாது; அயர்லாந்து, ஜப்பான், ரசியாவைப் பாருங்கள், அவர்கள் போல ஆயுதம் ஏந்துங்கள் என்றார்.

இந்த யோசனையை யார் கேட்டார்களோ இல்லையோ, இந்து மத உயர் ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் கேட்டனர். திலகரே அவர்களின் தலைவர்தானே! வெற்றிலை பாக்குக் கடைக் காரனும், எண்ணெய்ச் செக்கு ஓட்டுபவனும் தேர்தலில் நிற்கலாமா? என்று கேட்ட பார்ப்பனப் பேஷ்வாப் பரம்பரையாயிற்றே!

இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியைப் போய்ப் பார்த்துப் பேசி அறிந்து வந்தவர்கள் இந்து மகாசபையினர். அவர்களைச் சேர்ந்த மூஞ்சேதான் போன்சலா மிலிட்டரி பள்ளியை நாசிக்கில் தொடங்கினவர். இவரும் இந்துத்வ வெறியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்களில் ஒருவர்.

இவர்களெல்லாம் உருவாக்கிய அபிநவ் பாரத் அமைப்பின் உறுதிமொழி நம் புனித மதத்தை அழிக்கும் மிலேச்சர்களான அந்நிய நாட்டு எதிரிகளின் இரத்தம் நம் மண்ணில் சிந்தச் செய்வோம் என்பதே! என்ன பொருள்?
ஆங்கிலேயர்களைக் கொல்வோம்! ஏன்? அவர்கள் நம் மதத்தை அழிக்கிறார்கள்! கவனிக்க வேண்டும். சுதந்திரத் தாகம் அல்ல, காரணம்; சுயராஜ்யம் அல்ல குறிக்கோள்! மதவெறி! மதத்தைக் காக்க வேண்டும் என்னும் ஆவேசம்! அதுவே அவர்களின் இலட்சியம்.
 
இந்துத்வா என்ற சொல்லை 1920-இல் பயன்படுத்தியவர் ஆயிற்றே, சவர்க்கர்! இந்துஸ் தான், பாகிஸ்தான் என்று இரு நாட்டுக் கொள் கையை முதன் முதலில் எழுதிக் காட்டி இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்கிற வித்தினை ஊன் றியவரே இவர்தானே! காரணம் இந்து மதவெறி அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாதே!

அதனால்தானே, இந்து மதப் பழக்கங்களின் அடிப்படையில், அந்நியர்களைக் கொல்வது பாபம் அல்ல, யாகம் போன்றது என்று வியாக்யானம் செய்து எழுதியது யுகாந்தர் எனும் இவர்களின் பிற்போக்கு ஏடு! அந்நியர் என்பது ஆங்கிலேயரை மட்டுமல்ல, இசுலாமியர்களையும் உள்ளடக்கியது என்பது சொல்லாமலே விளங்குமே!

இந்த யாகம் செய்து யாகக் குண்டத்தில் மற்ற மதக்காரர்களைப் போட்டுப் பொசுக்குவதற்காக, வெடிகுண்டு தயாரிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்காக, ரசியா நாட்டு வேதியியல் பொறியாளரிடமிருந்து நூல்கள் வாங்கப்பட்டன.
 
1908-இல் எடின்பர்க் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற பாண்டுரங்க பாபட் என்பார் இப்படிப்பட்ட நூல்களை வாங்கினார். செய்தார். வீசினார். மாட்டிக் கொண்டார். அலிப்பூர் குண்டு வெடிப்பில் கைதானார்.

ஆங்கிலேய மாஜிஸ்திரேட்டுக்குக் குறி வைத்து இரண்டு பெண்களைக் கொன்ற வழக்கு இது. இவர்களின் கதையே இதுதான், குறி வைத்தவர்களைக் கொல்லாமல் அப்பாவிகளைக் கொல்வார்கள் என்று ஒரு ஆய்வறிஞர் பதிவு செய்துள்ளார்.

புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப் படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது.
எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி, அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.


திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனாலும் போன வாரம்கூட ஒருவர் இந்த உண்மையை மறைத்து மழுப்பி அவருக்குத் தேச பக்தத் திலகம் சூட்டும் முறையில் ராணி ஏட்டில் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்புலத்தைக் கொண்ட இந்துமத வெறியர்கள்தான் இப்போது இசுலாமிய மக்கள் மீதான தம் மதவெறித் தாக் குதலைத் தொடர்ந்துள்ளனர்
. இதற்கு உதவி புரிய போர்ப்படையினரின் ஒத்தாசைகளை நாடியுள்ளனர். எளிதில் கிடைக்காத அரிய, அதிக ஆற்றல் மிக்க ஆர்டிஎக்ஸ் வெடிப் பொருள்களை ராணுவக்காரர்களிடமிருந்து பெற்று வெடிகுண்டு தயாரிக்கின்றனர்.

ஓய்வு பெற்ற ராணுவக்காரர்களும் மாட்டிக் கொண்டனர். பணியில் இருக்கும் ராணுவக்காரர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்துக்களை ராணுவமயமாக்கு; ராணுவத்தை இந்து மயமாக்கு என்கிற ஆர்எஸ்எஸ்., இந்து மகா சபா, அபிநவ்பாரத், விஎச்பி அமைப்புகளின் கோஷத்திற்கு பா.ஜ.கட்சியும் ஆறு ஆண்டுக்கால ஆட்சியும் ஆதரவு அளித்ததன் விளைவு இது!
 
நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு ராணுவத்தினர் எப்போது காட்சி அளித்தனர்? இப்போது அந்த நிலை இருக்கிறதே! மணிக்கட்டில் கறுப்பு, சிவப்புக் கயிறு கட்டிக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்களே! அதன் விளைவுதானே ராணுவக்காரர்கள் சதிச் செயலில் பங்கு பெற்றது!


2003-ஆம் ஆண்டிலிருந்தே இந்துத்வ வெறியர்கள் வெடிகுண்டு செய்யத் தொடங்கி விட்டார்கள்.


2006-இல் வெடிகுண்டு செய்யும் போது விபத்து ஏற்பட்டு நரேஷ் கொண்ட்வார், இமான்சு பான்சே எனும் இரண்டு பேர் இறந்தார்கள். மராட்டியத்தில் நானடட் எனும் நகரத்தில் இது நடந்தது.

விசாரணையில் இவர்கள் இருவரும் 2006 ஏப்ரலில் நடந்த பர்பானி மசூதித் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பது தெரிய வந்தது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்தான் 2003 ஏப்ரலில் புர்னா மற்றும் ஜல்னா நகரங்களில் மசூதிகளின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தெரிந்து என்ன பயன்? அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஒன்றும் இல்லை. எனவே அவர்களுக்குத் துணிவு கூடிவிட்டது. பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்கூட, புனே நகரில் நடத்தப்படவிருந்த மகாபாரத நாடகத்தை நடத்தக் கூடாது என்று நாடகக் கொட்டகையை வெடிகுண்டு வீசித் தாக்கினார்கள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி எனும் இந்துமத வெறி அமைப்பினர்.
மகாபாரதக் கதையொன்றைத் தழுவி (நக்கல்) அங்கத நடையில் தயாரிக்கப் பட்ட நாடகம். நம்மூர் சோ பார்ப்பனர் அந்தக் காலத்தில் நடத்திய நாடகம் போல! சகிப்புத் தன்மை இல்லாது, மதவெறி தலைதூக்கி நடத்தப்பட்ட தாக்குதல்.

மலேகான் குண்டு வெடிப்புக்காகக் கைது செய்யப்பட்டுள்ள மங்கேஷ் நிகாம் என்பவன் மதவெறிச் செயல்களை ஏற்கெனவே செய்தவன். ரத்னகிரியில் ஒரு குடும்பத்தினர் கிறித்துவ மதத்தைத் தழுவிய குற்றம் செய்தமைக்காக அவர்களின் வீட்டின்மீது வெடிகுண்டு வீசியவன் இந்த ஆள். இதற்காகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டவன். மீண்டும் வெடிகுண்டு வீசியிருக்கிறான்.

சிரங்கு பிடித்தகையும், இரும்பு பிடித்த கையும் என்பார்களே, அதுபோல வெடிகுண்டு வைத்த கை சும்மா இருக்காதோ!


உத்தரப்பிரதேசம் மாயாவதியின் மாநிலம். அங்கே, பஜ்ரங் தளத்துக்காரர்கள் ராஜீவ் மிஸ்ர மற்றும் பூபிந்தர்சிங் ஆகிய இரண்டு பேர் இந்த ஆண்டு அக்டோபரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது இறந்து போயினர். கான்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது. வெடிகுண்டு செய்யும் எண்ணம் இந்துத்வ வெறியில் ஏற்படுகிறது. சரி. வசதி வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன? ராணுவம் தான் கைகொடுக்கிறது.

2006 செப்டம்பரில் குஜராத் மாநிலம் அகமது நகரில் பழைய இரும்பு வணிகரிடம் 196 கிலோ எடையுள்ள காக்டெயில் ராணுவ வெடிகுண்டு கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணை தெரிவித்தது என்ன?
15 வருடங்களாக இந்தியாவில் நடந்த எல்லா வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு வெடிப் பொருள்களை வணிகர் சங்கர் ஷெல்கே விற்றிருக்கிறார். இவருக்கு அந்தப் பொருள்களை ராணுவமே விற்றிருக்கிறது. பழைய இரும்பு என்று விற்றிருக்கிறது. நாடு எங்கே போகிறது?


அதைவிடக் கொடுமை! இந்த ஷெல்கேயின் வணிகம்பற்றி விசாரணை செய்யப்பட்டது. உயர் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களை இந்த ஆள் கள்ளச் சந்தையில், விற்றிருக்கிறார்; அம்மோனி யம் நைட்ரேட் கலந்த வெடிப் பொருள்களை வைத்துப் பயன்படுத்துவது தொல்லை என்பதால் இதனை வாங்கிப் பல தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்!
இதற்கான நோய் நாடி நோய் முதல் நாடப்பட வேண்டாமா? இதைச் செய்யாததால்தானே நாடே சுடுகாடாகியுள்ளது?

ராணுவத்தை இந்து மயமாக்கி வெற்றி பெற்று விட்டனவா, மதவெறிச் சக்திகள்? பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோழி திருடியவனும் கூடச் சேர்ந்து குலவுவது போல், இத்தனைப் பயங்கரவாதத்திற்கும் காரணமான இந்துமதவெறி அமைப்புகள் என்ன கூக்குரலை எழுப்பி வந்துள்ளன?

இன்றைக்கும் பாருங்கள், பா.ஜ. கட்சிச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மலேகான் வெடிகுண்டுச் சதிகாரியை அப்பாவி என்கிறார். முசுலிம்களைப் பயங்கரவாதிகள் என்கிறார். என்னய்யா இது இரட்டை அளவுகோல் என்று இதழாளர் கேட்டால்; குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அப்பாவிதானே எனக் கேட்கிறார். இதே வாதம் இசுலாமியர்களுக்குப் பொருந்தாதா?


மக்களை இரண்டாக்கியவர்கள், இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள். திரிசூலம் தந்து கிறித்துவ, இசுலாமிய, மதச் சார்பற்றவர் ஆகிய மூவரையும் கொல்வதற்கு என்று பகிரங்கமாகப் பேசித் தீட்சை அளித்தவர்கள் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க மாட்டார்கள், சாத்வீகமானவர்கள் என்று பசப்புகிறார் வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா.

இவரேதான் முன்பு கூறினார், இந்துக்கள் வன்முறையில் இறங்கி ஆயுதம் ஏந்தலாம் என்பதற்கு அடையாளம் இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது என்றார். திட்டம் போடும்போது ஒரு பேச்சு, திட்டம் போட்டு குட்டு உடைந்து மாட்டிக் கொண்டால் வேறு பேச்சு எனும் இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு! இதுதான் இந்து மதம், இந்துத்வா!

வரலாற்று ஆய்வாளர் ஈஜின் டிசவுசா கூறியது போல, நாஜிப் பிரச்சாரத்தை மராத்திய, மும்பைப் பத்திரிகைகள் செய்தன, இட்லர் பாணியில் இந்து வீரர்களை உருவாக்கினர். முசோலினியின் பயிற்சியைப் பெற்று பாசிஸக் கட்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை அடியோடு அகற்றி அழித்தால்தான் மதவெறி பிடித்த அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவைக் காத்திட முடியும்.
/viduthalai/20081108/snews

No comments: