Followers

Wednesday, October 1, 2008

நரியை "நனையாமல்" குளிப்பாட்டும் "கல்கி!"

இந்த வாரம் "கல்கி" இதழ் (5.10.2008) ஒரு தலையங்கத்தைத் தீட்டியிருக்கிறது. தே.மு.தி.க. தலைவர் திருவாளர் விஜயகாந்த் வரும் தேர்தலில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற அறிவுரையை இலவசமாக வழங்கியிருக்கிறது.

(1) தனியாகத் தேர்தலில் நின்றால் ஒரு சில இடங்களைப் பெறலாம்; ஆட்சி அமைக்கவோ, ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கோ வகிக்க முடியாது.

(2) கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தாலும் இதே நிலைதான்.


(3) தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

(4) பா.ம.க.வும், விஜயகாந்தை ஏற்கவில்லை என்ற சூழலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ஒரே ஒரு சாத்தியக் கூறுதான் மிஞ்சுகிறது.

(5) தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் போக்குப் பிடிக்காமல் சலித்துப் போயிருக்கிற தமிழக மக்களுக்கு இந்த மாற்றுக் கூட்டணி வரவேற்கத்தக்கதாகத் தோன்றும்.

- இவ்வாறு "கல்கி" இதழ் தே.மு.தி.க.வுக்கு அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறது.

இதன் திரைமறைவு நோக்கம் தி.மு.க.வுடன் யாரும் கூட்டுச் சேர்ந்துவிடக் கூடாது - தி.மு.க. தனியாக விடப்படவேண்டும் என்பது தான் கல்கி கூட்டத்தின் உள்ளக் கிடக்கை. அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்பதுபோல, சுற்றி வளைத்து, ஆரியத்திற்கே உரித்தான நயவஞ்சகத்துடன் கருத்துதானம் செய்கிறது கல்கி.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதியின் 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

காங்கிரசில் உள்ள ஒரு சிலர் அவ்வப்போது குறுக்குச்சால் ஓட்டினாலும், கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும் அந்தரங்கச் சுத்தியுடன் தி.மு.க.வுடன் நல்லுறவு கொண்டேயிருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் பழுத்த அனுபவங்களை முக்கிய பிரச்சினைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். கலைஞர் அவர்கள் எழுதும் கடிதங்களுக்கு முதல் மரியாதை கொடுத்துச் செயல்படவும் செய்கிறார்கள்.

இந்த நிலையில், தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இருக்கும் இந்த நல்லுறவைக் கெடுக்க வேண்டும் என்கிற நயவஞ்சகம் தான் இதில் இழையோடுகிறது.

"கல்கி" கூட்டத்தால் இதனைச் சாதிக்க முடியுமா? என்பது வேறு பிரச்சினை; அதேநேரத்தில், அந்த வட்டாரத்தின் ஆசையுடன் கலந்த மனப்பான்மை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தி.மு.க. ஆட்சி என்பது கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களை யும், வளர்ச்சிப் பணிகளையும் அன்றாடம் கொண்டு சேர்த்துக் கொண்டுதானிருக்கிறது; பாடுபடும் மக்களின் பசிப் பிணியைப் போக்கும் அறச்சாலையாக இந்த ஆட்சி இருப்பதை வெகுமக்கள் நன்றாக உணர்ந்து தானிருக்கிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்குநூறு நிறைவேற்றும் ஆட்சியை இதற்குமுன் யாரும் கண்டதில்லை என்ற நன்றி உணர்வு மக்களிடம் ஆழமாகப் பதிந்துதான் இருக்கிறது.

வேலை கிட்டா இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகள் கிட்டிட புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் புயல் வேகத்தில் நடந்துகொண்டுதான் உள்ளன.

அரசியல் கட்சிகளின் கூட்டுத்தொகைக் கணக்குகளைப் போட்டு, தேர்தல் வெற்றிகளை யூகத்தின் அடிப்படையில், நான்கு சுவர்களுக் குள் உட்கார்ந்துகொண்டு ஆசையை அசைபோட்டுக்கொண்டு இருக்கும் மனப்பான்மைக்கு, நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் மரண அடி கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

நேரடியாகப் பலன்கள் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக் கும் மக்கள் - முன்பைவிட விழிப்புணர்வு அதிகம் பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள், நல்லது கெட்டது எது என்பதை அறிந்த மக்கள் தங்கள் உணர்வுகளை சரியான வகையில் வெளிப்படுத்து வார்கள் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க.வைத் தனிமைப்படுத்தி தோல்வி அடையச் செய்யலாம் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்.

அரசியல் கட்சிகள் என்ற கண்ணோட்டத்தில் தனிமைப்படுத்திட முயன்றாலும்கூட ஆட்சியின் பலன்களை அன்றாடம் அனு பவித்துக் கொண்டிருக்கும் வெகுமக்களின் நேசத்திலிருந்து தி.மு.க. ஆட்சியைப் பிரித்துவிட முடியாது தனிமைப்படுத்தவும் முடியாது.

இது கல்லின்மேல் எழுத்தாகும்."கல்கி" வட்டாரம் மனப்பால் குடித்து, கனவு லோகத்தில் சஞ்சரிக்க வேண்டாம்!

http://files.periyar.org.in/viduthalai/20080930/news05.html
-----------------------------

1 comment:

IlayaDhasan said...

>>3) தி.மு.க., அ.தி.மு.க.வுடன் >>கூட்டணி என்ற பேச்சுக்கே >>இடமில்லை.
>>(5) தி.மு.க., >>அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் >>போக்குப் பிடிக்காமல் சலித்துப் >>போயிருக்கிற தமிழக மக்களுக்கு >>இந்த மாற்றுக் கூட்டணி >>வரவேற்கத்தக்கதாகத் தோன்றும்


மேலே சுட்டிய இரண்டிலும் இரண்டு கட்சிகளையும் தானே சொல்லியுள்ளார்கள்..