Followers

Wednesday, October 22, 2008

13 வயதில் மனைவியாகி தாயாகி வாழாவெட்டியாகும் மலை ராணிகளின் சோகம்

மைனர் பெண்ணுடன் உறவு வைத்தால் அது `ரேப்' என்று சட்டம் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் பதினாலு வயசுப் பெண் கர்ப்பிணியாக மட்டுமல்ல வாழா வெட்டியாகவும் இருக்கிறாள்
ஜாதி, மதம், அந்தஸ்து என அதுஅதுக்கு ஏற்றமாதிரி பலவிதமான திருமணங்கள் நடக்கும். ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைகிராமப் பகுதியில் நடக்கும் திருமணங்கள் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டது.
சடங்கு சம்பிரதாயம் ஒருபுறமிருக்க, சாந்தி முகூர்த்தத்திற்குப் பின்தான் கல்யாணமே... அதுவும் மறுநாள், சில நாள் கழித்து அல்ல... ஆறு மாதம்!``ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா அவளைக் கட்டிக்க விரும்பும் பையன் நேரிடையாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குப்போய், `உங்க மகளை நான் கட்டிக்கலாம்னு இருக்கேன். ஆறுமாதம் என்னோட குடும்பம் நடத்த அனுப்பி வைங்க! பிடிச்சிருந்தா கல்யாணம். இல்லன்னா பத்திரமா திருப்பி அனுப்பிவிடறேன்!' என்று கேட்பான்.
பொண்ணைப் பெத்தவங்களும் அதுக்கு சம்மதப்பட்டு அந்தப் பையனுடன் அனுப்பி வைப்பாங்க.
பல சமயங்கள்ல அந்த ஜோடி அப்படியே கல்யாணம் பண்ணி குடும்ப நடத்த ஆரம்பிச்சிடும். சில சமயம் பிரச்னை வந்து பெண்ணை திருப்பியும் அனுப்பிவிடுவாங்க... காலங்காலமா இது நடந்து வந்தாலும் இப்போ போலீஸ்காரங்க அப்படி செய்யக் கூடாதுன்னு தொந்தரவு பண்றாங்க. அதனால நிறைய குறைஞ்சிருச்சி. அதோ அந்தப் பக்கம் போவுதே பொண்ணுக, அதுல நாகவேணின்னு ஒரு பொண்ணு இருக்கே, அதுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சி. இப்ப நல்லாத்தான் சேர்ந்து வாழ்ந்துகிட்டிருக்கா'' என்று ஜமுனா மாத்தூர் பகுதி சம்பிரதாயத்தை விளக்கமாகச் சொன்னார் பெருங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர்.
ஜமுனாமரத்தூர் ஒன்றி-யத்தைச் சேர்ந்த இதுபோன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. `திருமண வயது பெண்களுக்குப் பதினெட்டு' என்று பின்புறம் எழுதிய ஆட்டோக்கள் நகரத்தில்தானே வலம் வருகின்றன. இதுபோன்ற மலைகிராமங்களில் இன்னமும் பூப்பெய்திவிட்டாலே கல்யாண வயதுதான்.
அந்தப் பெருங்காட்டூர் பெரியவர் காட்டிய நாகவேணியை நெருங்கி பேச்சுக் கொடுத்தோம்.
``எனக்கு போனவருஷம் கல்யாணமாச்சு. அவர் பேரு ராகவன். எங்க ஊருதான். ஆறுமாசம் கல்யாணத்துக்கு முன்னாடி அவரோடு சேர்ந்து வாழ்ந்தேன். அவருக்கும் என்னை பிடிச்சுப் போச்சு. கல்யாணமும் பண்ணிக்கிட்டார்...'' என்று வெட்கச் சிரிப்புடன் சொன்ன நாகவேணிக்கு அதிகபட்சம் பதினைந்து வயசு இருக்கலாம். அவரது கணவரைப் பற்றி கேட்டதும், ``அவர் விறகு உடைக்கப் போயிருக்கார். அவர் போனதும் கொரட்டுப் பழம் பறிக்க நாங்க காட்டுக்கு வந்துடுவோம். ஒரு நாள் முழுக்க பழம் பொறுக்கினா பத்து ரூபாய் கிடைக்கும்!'' என்று அப்பாவியாய் சொன்னாள் நாகவேணி.
அதென்ன கொரட்டுப் பழம் என்று அவர்கள் தலைச்-சுமையை இறக்கிப் பார்த்தோம். நாவல் பழம் மாதிரி இருந்தது. அதில் என்ன சிறப்பு என்று நமக்குப் புரியும்படி அவர்களால் சொல்ல இயலவில்லை.
மலைப்பாதையில் சிறிது தூரம் நடந்தோம். மற்றொரு பெரியவர் தென்பட்டார். அவருக்குப் பெயர் குழந்தையாம்.
``பையனுக்குப் பொண்ணை பிடிச்சிருந்தால் தானுங்க கல்யாணம் பண்ண முடியும். பொண்ணப் பார்த்து அதை முடிவு பண்றதைவிட பழகி முடிவு செய்யறதுதான் சரின்னு முன்னாடி இருந்தவங்க உருவாக்கின சம்பிரதாயம். காலம் காலமா குடும்பம் நடத்தறதுக்கு இதுதான் சரின்னு நாங்களும் தொடர்ந்து அப்படியே செய்யறோம்'' என்றார் குழந்தை.
இதில் எதாவது பிரச்னை வந்தால் பஞ்சாயத்தைக் கூட்டி விடுவார்களாம்... ``பஞ்சாயத்தில் பையன் ஏதாவது தப்பு செய்திருந்தாலோ, இல்லை அந்தப் பெண்ணுடன் வாழ விருப்பமில்லை என்று முரண்டு பிடித்தாலோ ஆறு மரக்கா அரிசியும் ஒரு பன்றியும் அபராதம் விதித்துவிடுவோம்... பன்றியை குழம்பு வைத்து அந்த அரிசியை பஞ்சாயத்துக்கு வந்திருந்தவர்களுக்குப் பொங்கிப்போட்டு விட்டால் பிரச்னை அத்துடன் தீர்ந்ததாக அர்த்தம்!'' என்று சின்னசாமி இந்த வேதனையான, நூதன திருமணத்தில் வில்லங்கம் வந்தால் தீர்க்கும் திகிலான தீர்ப்பைச் சொன்னார்.
மைனர் பெண்ணுடன் உறவு வைத்தால் அது `ரேப்' என்று சட்டம் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் பதினாலு வயசுப் பெண் கர்ப்பிணியாக மட்டுமல்ல வாழா வெட்டியாகவும் இருக்கிறாள். இது சம்பிரதாயமா, யதார்த்தமா, மீறலா இல்லை அரசின் கவனக்குறைவா? சாதாரண மக்களைப் பற்றிய சமூகத்தின் அலட்சியமா? காரணம் தெரியாதவரை முடிவுகள் ஏற்பட போவதில்லை..
- புஷ்கின்ராஜ்குமார்.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-10-22/pg3.php
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: