Followers

Tuesday, September 30, 2008

மீண்டும் "பொடா" வேண்டுமா?

அத்வானி முதல் செல்வி ஜெயலலிதாவரை இந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

சேலத்திற்கு சனிக்கிழமை வந்த பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பயங்கரவாதத்தைத் தடுக்க, மீண்டும் "பொடா" சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, அத்வானிமுதல் செல்வி ஜெயலலிதாவரை இந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

பொடா வந்தால் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு விடும் என்பது இவர்களின் கணிப்பு. ஆனால், இதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்பதுபற்றி முதலில் சிந்திக்கவேண்டும்.

2002 மார்ச்சில் பா.ஜ.க. ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 2004 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அகற்றப்பட்டது.

பா.ஜ.க. ஆட்சியின்போது மாநிலங்களவையில் இந்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்று 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.

எந்தப் பா.ஜ.க. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முனைப்பாக இருந்ததோ, அதே பா.ஜ.க. ஆண்ட குஜராத்தில்தான் இந்த அலங்கோலம் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்!

அப்படியானால் இந்தச் சட்டத்தை குஜராத் பா.ஜ.க. அரசு பயன்படுத்தவில்லையா?

அவர்களே கொண்டு வந்த சட்டத்தைப் பயன்படுத்தாமல் இருப்பார்களா? தாராளமாகவே பயன்படுத்தினார்கள்.

287 பேர்மீது இந்தச் சட்டம் ஏவப்பட்டு, சிறைச்சாலையில் நெட்டித் தள்ளப்பட்டனர்.

இந்த 287 இல் 286 பேர் முசுலிம்கள் - ஒருவர் சீக்கியர்.
இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமானால் எந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டார்களோ, அந்த மக்களைச் சேர்ந்தவர்களே பொடாவின் வழியாக சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள், தான் குற்றமற்றவர் என்று (Burden of Proof) நிரூபிக்கவேண்டும்.

காவல் துறையில் அச்சுறுத்தலின்கீழ் குற்றம் சாற்றப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரவுலட் சட்டம்தான் நினைவுக்கு வருகிறது.
இந்தக் கொடிய - மனித உரிமைக்கு எதிரான இந்தச் சட்டத்தை தீவிரமாக - சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பயன் படுத்திய ஆட்சி பா.ஜ.க. ஆட்சிதான். ஜார்க்கண்ட் மாநிலம் இதில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் 30 விழுக்காட்டினர் யார் தெரியுமா? 12 வயதுக்கும் உள்பட்ட சிறுவர்கள்.

இந்தச் சட்டத்தின்கீழ் 301 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1160 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சதவிகித வழக்குக்கூட நிரூபிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்தச் சட்டத்தின் போர்வைக்குள் பதுங்கியிருந்த கேவலமான வெட்கக்கேட்டை நிர்வாணமாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதற்குமுன் நிறைவேற்றப்பட்ட தடா சட்டம்கூட (20.5.1985) அந்தத் தரத்தில் தானிருந்தது. வெறும் ஆறு மாதத்துக்குத்தான் அது அமலில் இருக்கும் என்று ஆரம்பத்தில் சமாதானம் சொல்லப்பட்டது. ஆனால், பத்தாண்டுக்காலம் அது ராஜநடை போட்டது!

இன்றைக்குப் பொடா தேவை பொடா தேவை என்று கூச்சல் போடும் ராஜ்நாத்சிங் கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.

சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுவித்து, அவர்களின் நாட்டுக்கே - பாதுகாப்பு அமைச்சரே உடன் சென்று பாதுகாப்பாக விட்டு வந்தவர்கள்தான் இந்தப் பா.ஜ.க. பயங்கரவாதிகள்.

தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்கவேண்டுமானால், நியாயமாக அத்வானி அண்ட் கம்பெனிகள் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதியை இடித்தனரே -

அவர்கள்மீதுதான் பாய்ந்து பிராண்டியிருக்கவேண்டும். அந்தக் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்திருந்தால், இந்தச் சட்டத்துக்கு இப்பொழுது பராக்குக் கூற முன்வர மாட்டார்கள்.

மனித உரிமையின் மகத்துவத்தைப் புரியாத பாசிஸ்டுகள் தான் தடா, பொடா சட்டங்களை வரவேற்பார்கள். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முற்போக்கு என்கிற முத்திரையைக் காப்பாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம்.http://files.periyar.org.in/viduthalai/20080929/news06.html

No comments: