Followers

Wednesday, September 17, 2008

கடவுளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போவார்களா?

ஏழுமலையான் - பத்மாவதி சிங்கப்பூரில் கல்யாணம்!பொம்பிளை கடவுளை ஆம்பிளை குளிப்பாட்டுகிறான்.

கடல் கடந்து வெளிநாடு சென்ற ஏழுமலையான்
தம்பதியினரை ஏற்றுக் கொள்கின்றனர்; வெளிநாடு சென்ற
அர்ச்சகரை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையே ஏன்?

தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவார்ந்த கேள்வி

சென்னை, ஆக. 12- சிங்கப்பூருக்குச் சென்ற திருப்பதி ஏழுமலை யானையும், அவனது துணைவியார் பத்மாவதியையும் திருப்பதியில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் திருப்பதி கோவில் அர்ச்சகர் சாஸ்திரத்தை மீறி விமானத்தில் ஏறி வெளிநாடு சென்றார் என்பதற்காக அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையே ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநாட்டை (செப். 6,7) விளக்கி தாம்பரத்தில் 8-8-2008 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: திருப்பதி கோவிலில் நகைக்கொள்ளை

இங்கே வியாபாரம் செய்தது போதாது என்று திருப்பதி ஏழுமலையானை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து விட்டார்கள். சற்று நேரத்திற்கு முன்னாலே எங்களுடைய கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை சொன்னார் அல்லவா?

எப்படி ஏழுமலையான் பெயர் சொல்லி பதினைந்துலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட நகையை எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்பதை. இன்றைய விடுதலையில் தெளிவாக வந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருக்கிறார்கள் மக்கள்.

பக்தர்கள் அதைப்பற்றி சிந்திப்பது இல்லை. காரணம் பக்தி வந்தால் புத்தி போய்விடும். புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று தந்தை பெரியார் பொருத்தமாகச் சொன்னார்களே. அதன்படி பார்த்தால் சிங்கப்பூரிலே கம்ப்யூட்டர் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நவீன நகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏழுமலையான் - பத்மாவதி சிங்கப்பூரில் கல்யாணம்!

இங்கு இருக்கின்ற ஏழுமலையானை அவருடைய துணைவியார் பத்மாவதி சகிதமாக சிங்கப்பூருக்கு கடவுள் சுற்றுலா வந்தார். நாமெல்லாம் சிங்கப்பூருக்கு சுற்றுலாவுக்குப் போகின்றோம். சிங்கப்பூர் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்பதற்காகப் போகின்றோம். ஆனால் திருப்பதி ஏழுமலையானே சிங்கப்பூருக்குப் போனார். இதிலே வேடிக்கை என்னவென்றால் ஏழுமலையான் தரிசனம் பற்றி சிங்கப்பூரில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.

நம்மாட்கள் கம்ப்யூட்டரைப் படித்தாலும், விஞ்ஞானத்தைப் படித்தாலும்கூட, இவனுக்கு அறிவைப்பற்றிக் கவலை இல்லை. பக்தியின் மூலமாக இவன் மூளை மழுங்கி விடுகிறது என்பதற்கு அடையாளமாக அங்கே டாலர் கணக்கில் வசூல் செய்தார்கள்.

சிங்கப்பூரில் திருப்பதி லட்டாம்!

இங்கிருந்து முன்னாலேயே ஒரு பத்து பார்ப்பனர்களுக்கு மேலே ஏற்றுமதி செய்து திருப்பதி லட்டை அங்கே வந்துதான் பிடித்துக் கொடுத்தார்கள். லட்டு சிங்கப்பூர் லட்டே தவிர, திருப்பதி லட்டு அல்ல. மைசூர் போண்டா என்பார். நமது ஊரில்தான் செய்வார். பெயர் அதற்கு மைசூர் போண்டா. மைசூர் பாக் என்று சொல்லுவார்கள்.

அது இங்கேதான் செய்யப்பட்டிருக்கும். மைசூரிலிருந்து வருவதில்லை. ஆனால் மைசூர் போண்டா, மைசூர்பாகு என்று அழைப்பதிலே நாம் பெருமையடைகிறோம். ஆனால் அதே நேரத்திலே இதை செய்வதற்கென்று வந்து அதையும் ஒளிப்படம் பிடித்து போட்டவுடனே பல பேருக்கு, அங்கே உள்ள மற்ற மதத்தினருக்கும் வியப்பு.

என்ன வேடிக்கை! லட்டு சிங்கப்பூரிலும் கிடைக்கிறது.

திருப்பதி லட்டை திருப்பதிக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்தால் அதற்கு மகத்துவம். ஆனால் திருப்பதி லட்டு என்று சொல்லி அதை இங்கேயே செய்வதற்கு அதற்குப் பார்ப்பானை இறக்குமதி செய்து அவர்கள் கொள்ளையோ - கொள்ளை என்று அடித்த நேரத்திலே அவர்களுடைய உற்சவமூர்த்தி வந்தார். இதிலே இன்னொரு பெரிய செய்தி என்னவென்று சொன்னால் உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

பக்தி வியாபாரத்தை ஏற்றுமதி செய்கின்றான்

அமெரிக்காவுக்குச் சென்ற மூடநம்பிக்கையுள்ள தமிழர்கள் கோயில் கட்டி இங்கேயிருக்கின்ற அர்ச்சகர்களைக் கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் ஒரு டாலர் ஏறத்தாழ நாற்பது ரூபாய். அங்கே பெரிய, பெரிய பங்களாக்களை வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு இவன் கடவுள் வியாபாரத்தை பக்தி வியாபாரத்தை ஏற்றுமதி செய்து விட்டான். திருப்பதி கோவில்அர்ச்சகர் திரும்பி வரும்பொழுது அங்கேயிருக்கின்ற நிர்வாக அதிகாரி சொன்னார்:

அர்ச்சகரை ஏற்றுக்கொள்ள மறுப்பு.

உன்னை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ மறுபடியும் அர்ச்சகராக முடியாது. காரணம் என்னவென்றால் இந்து மதத்தினுடைய சாஸ்திரப்படி சனாதனிகள் கடல் கடந்து போனால் அவன் இந்து அல்ல.

எனவே இந்துவாக இருந்தால்தான் நீ திருப்பதி ஏழுமலை யானுக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகராக இருக்க முடியுமே தவிர, நீ எந்த நிமிடம் விமானம் ஏறினாயோ, கப்பல் ஏறினாயோ அப்பொழுதே நீ இந்துத் தன்மையை இழந்து விட்டாய்.

எனவே நீ இந்து அல்ல. ஆகவே மறுபடியும் நீ இந்த உத்தியோகத்திற்கு வர முடியாது என்று சொல்லி அவன் வழக்குப் போட்டு அந்த வழக்கிலும் அது அவனுக்கு விரோதமாக ஆக்கி, பிறகு இன்னொரு அரசாங்கம் வந்து அந்த அதிகாரி மாறி மறுபடியும் அவனுக்கு வாய்ப்புக் கொடுத்ததாக அண்மையிலே நான் ஆந்திராவுக்குச் சென்றிருந்த பொழுது அங்கே இதைச் சொன்னார்கள்.

ஏழுமலையான் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சகராக இருந்த ஒருவர் அவர் வெளிநாட்டிற்குப் போய் வந்து விட்ட பிற்பாடு அவரே அர்ச்சனை செய்ய முடியாது என்று ஆனவுடனே ஏழுமலை யானும், உற்சவமூர்த்தியும் விமானத்திலே ஏறிச் சென்று விட்டு திரும்பி வந்தால் அவர்களுடைய கடவுள் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அர்த்தமுள்ள இந்து மதக்காரர்கள் சிந்திக்க வேண்டும்

அர்த்தமுள்ள இந்து மதம் என்று பேசுகிறார்களே - தாங்கள் எல்லாம் இந்து முன்னணி என்று சொல்லுகின்றார்களே அவர்களைக் கேட்கிறோம். நீங்கள் வைத்திருக்கின்ற சாஸ்திரத் தின்படி கேட்கின்றேன் நாங்கள். அதைப் பொருட்படுத்த மாட்டோம். எங்களுக்கு அதிலே நம்பிக்கை இல்லை. அது வேறு செய்தி. கடவுள் என்று முதலில் ஏற்றுக் கொண்டால்தானே அதைப் பற்றி முதலில் சிந்தனை. நமது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் கேட்டாள். அவள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்பட்ட பொதுவான பெண்.

கடவுளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போவார்களா?

அந்தப் பெண் - பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டது. திருப்பதி கடவுள் ஏழுமலையானும், அவருடைய மனைவியும் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்கள். இங்கு திருமணம் நடை பெறும் என்று சொன்னால் இந்த கடவுளர்கள் ஹனிமூனுக்கு ஆஸ்திரேலியாவுக்குப் போவார்களா? என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டது (கைதட்டல்).

இந்த மூடநம்பிக்கை நமது ஊரில் மட்டுமல்ல - வெளிநாட் டிலும் மூடநம்பிக்கை வியாபாரம் செய்வதற்காக இந்த ஏற்பாட்டை செய்தார்கள். எதற்காக இதைச் சொல்லுகின்றோம். கடவுளைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். எங்களைவிட உறுதியாக கடவுள் இல்லை என்று தெரிந்த சங்கதி யாருக்குத் தெரியும் என்றால் நமது நாட்டில் சங்கராச்சாரிகளுக்கும் இந்த அர்ச்சகர்களுக்கும் தான்.

பொம்பிளை கடவுளை ஆம்பிளை குளிப்பாட்டுகிறான்

ஆம்பிளை அர்ச்சகர், பொம்பிளை ஆசாமியைக் குளிப்பாட்ட ஆரம்பித்தானோ அதைப் பார்த்துக் கொண்டு ஆம்பிளை சாமியும் சும்மா இருந்ததோ அப்பொழுதே அவனுக்குத் தெரிந்து போய் விட்டது கடவுள் இல்லை என்று. (கைதட்டல்).

ஏனென்றால் இது சாதாரண வாழ்க்கையில் நடந்தால் சும்மாவிட மாட்டார்கள். யாருமே விட மாட்டார்கள்.

அவன் எவ்வளவு சோப்ளாங்கியாக இருந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

அர்ச்சகர் அவன் கடவுளச்சியை குளிப்பாட்டுகிறான். அவனுக்குத் தெரியும் கடவுள் இல்லை என்று.

அதனால்தான் சாணியைப் பிடித்து வைத்தால்கூட சாமி என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று அவன் கருதுகின்றான். தோழர்களே இந்த மூடநம்பிக்கையை நம்ப வைப்பதால் மிகப் பெரிய கேடுதான் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் ஏன் மேல் ஜாதி - கீழ் ஜாதி?

உழைக்கின்ற நாம், பாடுபடுகின்ற நாம் கீழ்ஜாதி. இன்னொரு வன் உழைக்காதவன் மேல் ஜாதி என்று சொன்னால் இந்த அமைப்பை மாற்றுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இல்லையா? ஆயத்தப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு வந்தோமா என்றால் இல்லை. ஏன்? என்ன காரணம்? அது நீங்களும், நானும் செய்த ஏற்பாடு அல்ல. பின் எப்படி அந்த ஏற்பாடு வந்தது?

எங்களை மேல்ஜாதியாகப் படைத்தவன் பகவான் என்று சொன்னார்கள். என்னை கீழ்ஜாதியாகப் படைத்ததும் ஆண்ட வன் என்று சொன்னான். அப்படியானால் அந்த ஆண்டவனை நம்பிக் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கின்ற வரையில் அது ஆண்டவன் செய்த ஏற்பாடே தவிர, மனிதன் செய்தது அல்ல என்று சொன்னவுடனே தான் தந்தை பெரியார் அந்த இடத்தில் தான் மெயின் சுவிட்ச் இருக் கிறது - அங்கே கையை வை என்று சொல்லித்தான் கடவுளை மற, மனிதனை நினை. கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொன்னார். (கைதட்டல்).

எவ்வளவு விபத்துக்கள்?

உங்களுக்கு இங்கே திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு நோட்டிஸ் கொடுத்திருப்பார்கள். எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்ற புள்ளி விவரம் அந்த நோட்டிசில் இருக்கிறது. தினமும் விபத்து நடக்கிறது. ஆனால் ஒருவரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையே.

பக்தர்கள் அய்ந்து பேர் அய்யப்பன் கோவிலுக்குப் போகிறார் கள். அதே போல பக்தர்கள் திருப்பதி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டுத் திரும்புகிறார்கள். அப்படி கோவிலுக்குப் போய்விட்டு திரும்புகிறவர்கள் நான்கு பேர் விபத்துக்குள்ளாகி சாகிறார்கள். அவர்கள் செத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைய மாட்டோம்.

பார்ப்பனர் உயிரையும் மதிக்கின்றவர்கள் நாங்கள்

ஏனென்றால் அவர்களும் நம்மாட்கள்தான். பாப்பான் உயிர் போனாலும் அவனும் மனிதர்தானே என்று கவலைப்படக் கூடியவர்கள் நாங்கள்.

அப்படியிருக்கின்ற பொழுது, மனிதர் உயிர் பலியாகி விடக் கூடாது என்று மனிதநேயத்தோடு நினைப்பவர்கள் நாங்கள். சங்கராச்சாரியார்கள் மட்டும்தான் நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது. அவன் சாக வேண்டும் என்று சொன்னவர்கள் அவர்கள். ஆகவே மனிதநேயம் இங்கே இருக்கிறதா? அங்கே யிருக்கிறதா? என்பதை நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

மற்றவர்கள் என்ன ஆதீனம்?

நம்மாள்களுக்கு எவ்வளவு அறிவு துருபிடித்திருக்கிறது பாருங்கள். அய்த்து பேர் கோவிலுக்குப் போனார்கள். நான்கு பேர் விபத்தில் இறந்து விட்டார்கள். ஒருவர் படுகாயம் அடைந்து அவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.

ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் என்றால் அவர் தெய்வாதீன மாக உயிர் தப்பினார். அப்படியானால் இறந்து போன மற்றவர் கள் எல்லாம் என்ன ஆதீனம்? மற்றவர்களை ஏன் காப்பாற்ற வில்லை அந்தத் தெய்வ ஆதீனம்?

பாபர் மசூதியை இடித்ததன் விளைவு

மனிதர்கள் சிந்தித்தால், இதில் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த மூடநம்பிக்கைகளைக் காட்டி ஒவ்வொரு ஆளையும் பிரித்து வைத்து விட்டான். பக்தி மனிதர்களை ஒன்றுபடுத்தவில்லை. கடவுள் மனிதர்களை ஒன்றுபடுத்தவில்லை. ஏனென்றால் என் கடவுள் வேறு என்கிறான். உன் கடவுள் வேறு என்கிறான். முஸ்லிம் கடவுள் வேறு. கிறிஸ்தவக் கடவுள் வேறு. இந்துக் கடவுள் வேறு.

பாபர் மசூதியை இடித்ததினுடைய விளைவு தானே உலகம் பூராவும் இவ்வளவு பெரிய தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. தீவிரவாதம் மதத் தீவிரவாதம் தான். மதத்தில் சொல்லிக் கொடுத்து விட்டான். நீ உன் மதத்தைப் பரப்ப வேண்டுமானால் தீவிரவாதத்தைப் பின்பற்று என்று சொல்லிக் கொடுத்து விட்டான். viduthalai/20080812/news 17

No comments: