Followers

Tuesday, September 16, 2008

இந்துத்துவா கும்பலின் மறைமுகச் செயல்பாடுகள்.

அரசு அலுவலகங்களை தங்கள் கைக்குள் வைத்திட இதுபோன்ற செயல்களைத் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 7 ஆம் தேதியன்று சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்திய அரசு மதச்சார்பற்ற தன்மை கொண்டது - இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடும்கூட! ஆனால், நடைமுறையில் குறிப்பிட்ட இந்துமத சம்பந்தமான சம்பிரதாயங்கள் நிறைந்ததாகவே அதன் செயல்பாடு அமைந்துள்ளது.

ஒரு அரசு விழா என்றால், அதில் மேற்கொள்ளப்படுவது அத்தனையும் இந்துமத ஆச்சாரங்கள்தான்.

பூமி பூஜை என்று சொல்லி பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ஹோமம் வளர்த்து, எல்லாவிதமான இந்து மதச் சடங்குகளையெல்லாம் பின்பற்றுகிறார்கள் –

அரசு அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்துமதக்காரர்கள் மட்டும்தான் பணியாற்றுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

அடுத்த மதக்காரர்களைச் சீண்டும், சங்கடப்படுத்தும் அநாகரிகமான செயல்முறை இது.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்ற பெயரால் அலுவலக வளாகங்களுக்குள் தடபுடலாக பூஜைகளைச் செய்து வருகின்றனர்.
அதுபோலவே, அரசு அலுவலகம், வளாகங்களுக்குள்ளும் இந்துமத வழிபாட்டுப் படங்களையும், கோயில்களையும் எழுப்பி வருகிறார்கள்.

இது ஒரு ஆபத்தான போக்காகும். இந்து மதவாத அரசியல் நடத்தும் ஒரு அமைப்பும், அதன் துணைக் கிரகங்களும் இந்த நாட்டில் இந்துவெறியைத் தீயாக வளர்த்து வருகிறார்கள்.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பச்சையான இந்துத்துவா ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது.

பி.ஜே.பி. வேர்ப்பிடிக்காத மாநிலங்களில், அரசு அலுவலகங்களை தங்கள் கைக்குள் வைத்திட இதுபோன்ற செயல்களைத் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர். அரசு அலுவலக வளாகங்களுக்குள் மதமாச்சரியம் என்னும் விஷத்தைத் தூவும் நயவஞ்சக ஏற்பாடு இது.

பி.ஜே.பி.யை எதிர்ப்பது மட்டும் மதச்சார்பற்ற தன்மை உடையது ஆகாது. பி.ஜே.பி. சொல்லும், விரும்பும் அந்தக் காரியம் தங்குதடையின்றி நடைபெறும்போது, அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

அரசு அலுவலகங்களுக்குள்ளோ, வளாகங்களுக்குள்ளோ, நடைபாதைகளிலோ மதச் சின்னங்களை நிறுவக் கூடாது என்கிற சுற்றறிக்கையை - ஆணையை மாநில, மத்திய அரசுகள் அனுப்பி உள்ளன.

ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் அரசு அலுவலர்கள் பொருட்படுத்துவதே இல்லை.அதுபோலவே, நடைபாதைகளில் எல்லாம் கோயில்கள், உண்டியல்கள் - இரவு நேரங்களில் சீரழிவுச் செயல்பாடுகள் தாம்-தூம் என்று நடக்கின்றன.

அனுமதியில்லாமல் பொது இடங்களில் கோயில்களைக் கட்டக்கூடாது என்று தெளிவாக மத்திய - மாநில அரசுகளின் ஆணைகள் தெளிவாகவே இருக்கின்றன. அவற்றை மீறித்தான் நடைபாதையில் கோயில்களை எழுப்பி வருகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாலையின் - தெருவின் நுழைவுகளில் மதச்சின்னங்கள் அமைந்த வளைவுகளைக் கட்டி வருகின்றனர். இவற்றை மாநகராட்சி எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

கோயில் திருவிழாக்களையும், இந்து முன்னணி வகையறாக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பாமர மக்களின் பக்தியை, உணர்ச்சியைத் தங்களின் கட்சி வளர்ச்சிக்குத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அலுவலகங்கள், வளாகங்கள், நடைபாதைகள் இவற்றில் இந்துமதச் சின்னங்களை நிறுவுதல், நடைபாதைகளில் கோயில்களைக் கட்டுதல், கோயில் திருவிழாக்களை இந்து முன்னணியினர் முன்னின்று நடத்துதல் எல்லாமே ஒரு திட்டமிட்ட வகையில்தான் சங் பரிவார்க் கும்பலால் நடத்தப் படுகின்றன.

இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது; முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், நச்சு மரமாக வளர்ந்து, அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டை அமளிக்காடாக மாற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு இந்தக் கண்ணோட்டத்தில் அரிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

உளவுத் துறையும் இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
viduthalai/20080912/news

No comments: