Followers

Tuesday, September 9, 2008

பரதாயணம் – கலைஞர் கருணாநிதி

பரதாயணம் – கலைஞர் கருணாநிதி.

(பொதுக்கூட்டம் - மக்கள் கூடியிருக்கிறார்கள். அறிவியக்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர், பாகவதர் உடையுடனும் - இன்னொரு தோழர் சீடன் வடிவிலும் நின்றுகொண்டு, பரதாயணக் காலட்சேபத்தை நடத்துகிறார்கள்... இடையிடையே பாடிக் கொண்டு! கேட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள்.

இதில் பிற்பகுதிதான் கற்பனை! முதற்பகுதி - வால்மீகி ராமாயண உண்மை!)
குறிப்பு: (காலட்சேப நடையில் இழுத்தாற் போல படிக்கின் இனிமை பயக்கும்)

பாகவதர்: அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா! முன்னொரு காலத்தில் அய்ம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் இந்த உலகத்திலே ராஜரீகம் செய்து வந்தார்கள்...
சிஷ்யன்: ஆமாம்...
பாக: உலகமென்றால்...
சிஷ்: உருண்டை வடிவமாக... சதா சர்வ காலமும் சுற்றிக் கொண்டேயிருக்கும்!
பாக: அட முட்டாளே! அது இப்போதுள்ள உலகமடா! முன்பெல்லாம் உலகமென்றால், கன்யாகுமரி முனையிலேயிருந்து இமய மலைத் தொடரிலேயுள்ள கைலாச மலையின் அடிவாரம் வரையிலே வியாபித்துப் பரந்து கிடந்ததாக்கும்!
சிஷ்: ஆமாம்.. ஆமாம்!

பாக: அப்படிப் பரவிக் கிடந்த உலகத்திலே... அயோத்யாபுரிப்பட்டணத்தை தசரத மகாராஜா ஆண்டு வந்தார்!
சிஷ்: ஆமாம்!...
பாக: யார் ஆண்டு வந்தா?
சிஷ்: தசரத மகாராஜா!...
பாக: அந்த மகாராஜாவின் அரண்மனையிலே... அறுபதினாயிரம்.. (சிஷ்யனிடம் திரும்ப)
சிஷ்: போர் வீரர்கள் இருந்தார்கள்!

பாக: (திகைத்து) போர் வீரர்களா? .... அடப் பாவி!... போர் வீரர்கள் இல்லையடா!...
சிஷ்: அங்!... (சமாளித்து) ... க்ஷமிக்கவும் ஸ்வாமி: அறுபதினாயிரம் பொன் நாணயங்கள்!
பாக: அட புத்தி கெட்டவனே... பொறுடா பொறு!... நீ சொல்வதும் உண்மைதான் - பொன் நாணயங்கள்தான் - அவர்கள் உடம்பெல்லாம் பொன்தான்!... தங்க நிறந்தான்! நீ சொல்லியபடி போர் வீரர்கள்தான்!... ஆனால் அவர்கள் போரிடும் இடமே வேறு!... தசரதனோடு பஞ்சணையிலே போரிடும் பாவையர்கள்! அறுபதினாயிரம் பத்தினிமார்கள்!...
சிஷ்: அய்யோடா! ஆமாம்!
பாக: அந்த அறுபதினாயிரம் பேருக்கும் பிள்ளை குட்டிகள் கிடையாது!...
சிஷ்: அய்யோ பாவம்...
பாக: பிள்ளைகள் இருந்திருந்தால்...
சிஷ்: அயோத்தியில் பஞ்சம் வந்திருக்கும்!

பாக: ங்!... முந்திரி கொட்டை! பிள்ளைகள் இருந்திருந்தால் தசரதன் சந்தோஷமாக இருந்திருப் பான்!... தசரதனுக்கு அறுபதாயிரம் உற்சவ விக்ரகங்களே அல்லாமல் மூன்று பேர் மூல விக்கிரகங்கள்! அவர்கள் கௌசல்யா - சுமித்ரை - கைகேயி, ... என்னும் நாமதேயமுடையவர்கள்!...

அவர்களும் மலடிகளாகவே இருந்தார்கள்! ... அதற்காக தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்!... அந்த யாகத்திலே குதிரை வெட்டப் பட்டது - வெட்டப்பட்ட குதிரையை அணைத்துக் கொண்டு மூல மனைவியர் மூன்று பேரும் தூங்கினார்கள்!
சிஷ்: ஆமாம்!
பாக: யாகத்திலே அவிர்ப்பாகம் வரவழைக்கப்பட்டது!
சிஷ்: ஆமாம்.
பாக: அதை அந்த மூன்று மனைவிகளும் சாப்பிட்டு விட்டு, யாகத்திற்கு வந்திருந்த ரிஷிகளோடு இந்திர போகத்தை அனுபவித்தார்கள்.
சிஷ்: ஆமாம்!
பாக: அதனால் என்ன ஆயிற்று?
சிஷ்: கற்பு போயிற்று!
பாக: இல்லையடா! கரு உருவாயிற்று!...
சிஷ்: ஆமாம்!...
பாக: அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா! இப்படியாகத்தானே, வால்மீகி ராமாயணத்து சுலோகத்தின்படி யாகம் நடைபெற்று, மூன்று பட்ட மகிஷிகளும் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்!
சிஷ்: ஆமாம்!
பாக: அந்தப் பிள்ளைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, யானை யேற்றம் - குதிரையேற்றம் - முதலிய எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டார்கள்!
சிஷ்: ஆமாம்!...

பாக: அந்த தசரதனாகப் பட்டவனுக்கு... மூத்த பிள்ளை ராமன் மீதுதான் மோகம் ... அன்பு எல்லாம்!... அதனால் அவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து தேதி குறிக்க வசிஷ்ட முனிவரை வரவழைத்தான்.
சிஷ்: ஆமாம்!

பாக: இப்படியாகத்தானே வசிஷ்ட முனிவர் வந்ததும், அவரைப் பார்த்து தசரதன், அகோவாரும், அன்பார்ந்த முனிபுங்கவரே! அடியேன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறேன். அதாகப்பட்டது, நமது ராமச்சந்திரனுக்கு அயோத்தி யுவராஜா பட்டாபிஷேகத்தை செய்து முடித்துவிடலாமென நினைக்கிறேன் என்பதாகச் சொல்லி நின்றான் - உடனே வசிஷ்ட முனிவர், தனது நரைத்த தாடியைத் தடவியபடி சொல்வதாவது;

கேளும் தசரத மகாராஜனே! முன்னொரு காலத்தில் கேகயன் மகள் கைகேயியை நீ விவாகம் செய்து கொள்ளப் போகும் போது நடந்ததை மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன் - வயதான உனக்குப் பாரியாளாக வர கைகேயி இணங்கவில்லை.

கிழவருக்கு எப்படி இந்தக் கிளியைக் கொடுப்பது என்று கேகய ராஜன் மறுத்துவிட்டான். உடனே நீர், கைகேயியின் சௌந்தர்ய ரூப லாவண்யத்திலே மயங்கி தேன் குடித்த வண்டு போல இருந்த காரணத்தால், கைகேயிக்கு அயோத்தியையே காணிக்கையாகத் தருகிறேன் என்று வாக்களித்து,
அந்த க்ஷணமே, அவளுக்கு ஆரிய தர்ம சாஸ்திரகிரமப்படி கன்யா சுல்கம் என்ற பெயரால் அயோத்தியைத் தாரை வார்த்துக் கொடுத்து,

இந்த தேசத்திலே நீ கைகேயியின் பிரதிநிதியாக இருந்து ஆள்வதென்றும், கைகேயிக்குப் பிறக்கும் குந்தைக்கே அயோத்தி சொந்தமென்றும்,
அப்படி அவளுக்குப் புத்திர பாக்யம் கிட்டாவிட்டால், அவளுடைய சகோதரன் யுதாஜித்து ராஜகுமாரனுக்கே அயோத்தி ஸ்வாதீனமாகுமென்றும் ஒப்பந்தம் செய்து கொடுத்து, கைகேயியை மணந்து கொண்டிருக் கிறாய்!... அதை மறந்து விடாதே மகராஜனே! என்று பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்தி நின்றார் ரிஷி சிரேஷ்டர்!
சிஷ்: ஆமாம்!

பாக: அதைக் கேட்ட தசரதன் கலகல வென நகைத்து, என்ன சுவாமி! தாங்களே இப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து என்று பழமொழியே இருக்கிறது. அதன் பிரகாரந்தான் நான் கைகேயியை மணந்து கொண்டேன்! என்றான்.

அதைக்கேட்ட வசிஷ்ட மாமுனிவர், ஆயிரம் பொய் சொல்லலாம்; ஆனால் ஆரிய தர்மப் படி அயோத்தியை கைகேயிக்கு சுவாதீனப் படுத்தி விட்டாயே நீ; அதை அவளிடமிருந்து பறிப்பது போல் அல்லவா இருக்கிறது இந்த முயற்சி? என்று வியாக்யானம் செய்தார் முனிவர்!
சிஷ்: ஆமாம்!

பாக: எது எப்படியானாலும் சரி; என் மகன் ராமன்தான் நாடாள வேண்டும்!... வசிஷ்ட மகரிஷியே! வாக்குறுதிகளைப் பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை. தாங்கள் பட்டாபிஷேகத்திற்கு சுப லக்னம் பார்த்துக் கொடுங்கள்! இதுதான் நல்ல சமயம். பரதன் அவனுடைய பாட்டன் வீட்டுக்குப் போயிருக்கிறான்... அவன் திரும்பி வருவதற்குள், ராஜ்யத்தை ராமனிடத்திலே ஒப்படைத்து விடுகிறேன்... பிறகு ராமன் பாடு! பரதன் பாடு!

பார்த்துக் கொள்ளட்டும் நமக்கென்ன என்று தசரதன் கண்டிப்பாக மொழிந்ததைக் கண்ட வசிஷ்ட மகா முனிவரும் பட்டாபிஷேகத்திற்கான சுபயோக சுப தின மொன்றைக் குறித்துக் கொடுத்து விட்டு, ராமனையும் அழைத்து வரச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்!
சிஷ்: ஆமாம்!
பாக: இந்த விஷயம் அரண்மனையிலேயுள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது... ஆனால் கைகேயிக்கு மாத்திரம் தெரிவிக்கப்படவில்லை.
சிஷ்: ஆமாம்...
பாக: காரணம் என்ன வென்றால்...
சிஷ்: ஆமாம்!
பாக: என்னடா ஆமாம்...
சிஷ்: காரணம் என்ன வென்றால்...

பாக: (கோபமாக) என்ன சொல்லு!
சிஷ்: கைகேயிக்குத் தெரிந்தால், தசரதன் மீது கோர்ட்டிலே கேஸ் போட்டு விட்டு, பட்டாபிஷேகத்தை நிறுத்த ஸ்டே ஆர்டர் வாங்கி விடுவாள்!
பாக: அடே அதெல்லாம் இந்தக் காலம்!... அந்தக் காலத்திலே கோர்ட் ஏது?...
சிஷ்: அப்படியானால் இராவணனுக்கு ஏரோப்ளேன் ஏது ஸ்வாமி!

பாக: ஏய்... அவசரக்காரா! அதற்குள் ஆரண்ய காண்டத்துக்கு வராதே!
சிஷ்: செத்தாலும் ஆரண்யத்துக்குப் போக மாட்டேன் சாமி!...
பாக: அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா!... இப்படியாகத் தானே, பரதனுக்கும் கைகேயிக்கும் தெரியாமல் ராமனின் பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் தசரதன் கவனித்துக் கொண்டிருந்தான்...
சிஷ்: ஆமாம்!
பாக: எப்படியோ கூனி யென்னும் தோழி மூலமாக கைகேயிக்கு சேதி எட்டி விட்டது!
சிஷ்: ஆமாம்!

பாக: சேதி கேள்விப்பட்ட கைகேயி, சீறும் பாம்பானாள்! அடுக்குமா இந்த அக்கிரமம் என்று ஆத்திரப்பட்டாள்! இதை எப்படித் தடுப்பது என்று கூனியிடம் யோசனை கேட்டாள்!
சிஷ்: ஆமாம்!
பாக: உடனே கூனியாகப்பட்டவள், கைகேயியைப் பார்த்து கவலைப்படாதே பெண்ணே! உன்னைக் கல்யா ணம் செய்யும்போது, தசரதராஜன் இந்த அயோத்தியை உனக்குக் கன்யா சுல்கமாக அளித்திருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து போர்க் கொடியை உயர்த்து என்று யுக்தி கூறினாள்!
சிஷ்: ஆமாம்!

பாக: அது கேட்டு கைகேயி, வேண்டாமடி! என்னுடைய நாயகன் தசரத ராஜனுக்கு தேச முழுவதும் சத்தியகீர்த்தி, உத்தமன், சிரேஷ்டன், என்றெல்லாம் புகழும், பெயரும் இருக்கிறது! அவன் அயோத்தியை முன்பே எனக்களித்து விட்டு, இப்போது பறித்துக் கொள்ள சூழ்ச்சி செய்கிறான் என்று நான் கூறுவேனேயானால்,

தசரத மகாராஜாவைப் பற்றி உலக முழுவதும் தகாத முறையிலே பேசுவாகள்! வாக்கு மறந்தவர், வஞ்சகர், சூழ்ச்சிக்காரர், காம போதையில் ராஜ்யத்தை அளித்துவிட்டு இப்போது கபட நாடகம் ஆடி பிடுங்கிக் கொண்டவர் என்றெல்லாம், என் கணவருக்குக் களங்கம் ஏற்பட நான் காரணமாயிருக்க மாட்டேன் என்று சொல்லி அழுதாள்.
சிஷ்: ஆமாம்!

பாக: உடனே கூனி, அப்படியானால் ராமனே நாடாளட்டும்! என்றாள் சிரித்துக்கொண்டே! அது கேட்டு கைகேயி, அதற்கும் சம்மதிக்க மாட்டேன். அந்தத் துஷ்டனுடைய ஆட்சியிலே, என் கதியும் என் மகன் கதியும் என்ன ஆவது! என்று பிரலாபித்து விட்டு, மீண்டும் சொல்கிறதாவது: கேளடி கூனி! கேகயத்தில் இந்தக் கிழவன் அளித்த கன்யா சுல்கத்தை,

மக்களிடம் ஞாபகப்படுத்தி, அவருக்கு அபகீர்த்தி உண்டாக்காமல், அந்தப் பழியையும் பாவத்தையும் நானே ஏற்றுக் கொண்டு அவருக்கு வரும் தீயபெயரை நான் பெற்ற தியாகம் செய்யப் போகிறேன் என்றாள். அதுகேட்ட கூனி அதிசயத்தால் நிமிர்ந்து நின்று எப்படியடியம்மா? என்றாள்!

கேளடி கூனி! முன்பொரு முறை மன்னர், இரண்டு வரங்கள் அளித்திருக்கிறார், அதன்படி நான் எது வேண்டு மானாலும் கேட்டுப் பெறலாம்! அப்படி வரத்தைக் கேட்டு, பரதனுக்கு நாடும், ராமனுக்கு காடும் வாங்கித் தரப்போகி றேன்... இதிலே ஏதாவது பழி வந்தால், என் பர்தாவிற்காக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கைகேயி சபதம் செய்வது போலப் பேசினாள்!...
சிஷ்: ஆமாம்!

பாக: இராஜ்ய பட்டாபிஷேகத்திற்கான காரியங்களை யெல்லாம் பார்த்து விட்டு, வழக்கம் போல தன் இளம் மனைவி கைகேயியிடம் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதற்கான முஸ்தீபுகளோடு முதிய மகாராஜா தசரதர் பராக்! பராக்!!
சிஷ்: பராக்! பராக்!!

பாக: கைகேயி மாளிகையிலே வாசனைத் திரவியங்கள், பான விசேஷங்கள், வழக்கம் போல் எல்லாம் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. தசரத மகாராஜனுடைய பிரகிருதி வேகம் அதிகரித்தது! ராமனுக்குப் பட்டங்கட்டி விட்டு, வனவாசம் செல்ல வேண்டுமென்று தீர்மானித் திருந்த அந்தக் கிழ மகாராஜனுக்கு உள்ள முழுதும் காதல் வேகம் பொங்கிட, கைகேயி! கையேயி! என அழைத்தான் - கைகேயி, எந்த நிலைமையிலே இருக்கிறாள்!
சிஷ்: ஒரே ஆத்திரமாக...

பாக: ஆமாம்! தசரதன் வந்ததுதான் தாமதம்! ஒரு கூடை நெருப்பை அள்ளி அவன் தலையிலே கொட்டினாள்! குய்யோ முறையோவெனக் கத்தினாள்! மாரடித்தாள்! புலம்பினாள்! ஒப்பாரி வைத்தாள்!
சிஷ்: ஆமாம்.
பாக: இப்படியெல்லாம் அவள் எதுவும் செய்யவில்லை. கேகயன் மகள், கேட்ட வரம் இரண்டு! ஒன்று, ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்! மற்றொன்று பரதன் நாடாள வேண்டும்!
சிஷ்: ஆமாம்!
பாக: வரம் கேட்டதும் தசரதன் என்ன செய்தான்?
சிஷ்: கொடுத்தான்.

பாக: கொடுக்கவில்லை... சூழ்ச்சி அம்பலமாகி விட்டதே என்று நினைத்தான். அவள் காலிலே விழுந்தாள். இருதயம் வெடித்து விட்டது!... இறந்து விட்டான்!... இப்போது கைகேயி என்ன ஆனாள் தெரியுமா?
சிஷ்: விதவையானாள்!

பாக: அது மட்டுமல்ல; கன்யா சுல்க முறைப்படி அயோத்திக்கு அவள் அரசியாகி விட்டாள்! இனி அவள் இட்டதுதான் சட்டம்! இராமனைக் கூப்பிட்டாள்! காட்டுக்குப் போ! என்று கட்டளையிட்டாள்! இராமனும், சீதையும், இலக்குமணப் பெருமாளும், காட்டுக்குப் போனார்கள்! கைகேயி, சொல்லாமலே நாட்டு மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது! ராமன் நாட்டைப் பறிக்க சூழ்ச்சி செய்தான் என்ற சங்கதி, கேகய ராஜன் மூலமாக உலகமெங்கும் தெரிந்துவிட்டது! ... பாட்டன் வீட்டுக்குப் போன பரதன் ஓடோடியும் வந்தான்!
சிஷ்: ஆமாம்!

பாக: விஷயமனைத்தும் தெரிந்தது அவனுக்கு!...
சிஷ்: ஆமாம்!
பாக: தேசத்திலே உள்ள சில பிரமுகர்கள், பரதன் நாடாளுவது நியாயம் - ஆனால் ராமன் காட்டுக்கு விரட்டப்பட்டது என்னமோ அநியாயம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்! இதைக் கண்ட கைகேயிக்குக் கொஞ்சம் பயம் பிறந்தது! பரதன்மீது அயோத்தியில் உள்ள வர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தாள்.

அதற்காக ஒரு தந்திரம் செய்தாள்! பரதனைக் கூப்பிட்டு, என் செல்வச் சிரஞ்சீவி பரதா! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன் கவனமாகக் கேள்! உன் தந்தை எனக்குக் கொடுத்த நாட்டை அபகரித்து உன் அண்ணனுக்கு கொடுக்கப் பார்த்தார்!

அப்பாவுக்கு பழிவரக் கூடாதென்று நானே பழியைச் சுமந்து கொண்டு உன்னை நாட்டுக்கு உரியனாவக ஆக்கிவிட்டேன். ஆனால், நாட்டிலே சிலர், ராமன் காடேகியதைப் பற்றி வருந்தி, உன்னைத் தூஷிப்பதாகத் தெரிகிறது. அதனால், நீ நல்ல பெயர் வாங்க, ஒரு நாடகம் நடத்த வேண்டும்! என்றாள்!
சிஷ்: ஆமாம்!

பாக: அது என்ன நாடகம்? எப்படிப்பட்ட நாடகம்?
சிஷ்: த்ரீ டி நாடகம்!
பாக: த்ரீடி நாடகமில்லையடா! திருடி நாடகம்!
சிஷ்: திருடி நாடகமா?
பாக: ஆமாம்... ராமன் காட்டுக்குப் போகும்போது ஒரு விலை உயர்ந்த பொருளைத் திருடிக் கொண்டு போய்விட்டான்!... அது என்ன பொருள் தெரியுமோ?...
சிஷ்: சீதை!...

பாக: சே! சீதையை ராமன் எப்படா திருடினான்? சீதைதான் அவன் மனைவியாயிற்றே... அவன் போகும் போது திருடிக் கொண்டு போன பொருள் விலை உயர்ந்த மாணிக்கம்! அதைக் கொடுத்தால் அயோத்தியாபுரிப் பட்டணத்தைப் போல ஆறு பட்டணங்களை விலைக்கு வாங்கலாம்! அந்த மாணிக்கத்தை ராமன் திருடிக் கொண்டு போய் விட்டான்!
சிஷ்: ஆமாம்!

பாக: அப்படி ஆராய்ச்சி நடத்தியதில்... பார் புகழும் அந்த மாணிக்கக் கல்லை, ராமன் தனது பாதரட்சையிலே மறைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டான் என்று புலன் கிடைத்து விட்டது கைகேயிக்கு!
சிஷ்: ஆமாம்!

பாக: அப்போதுதான் பரதன், கேகய நாட்டிலிருந்து வந்து சேர்ந்தான் - அவனிடம் கைகேயி சொல்லுவாள்: தம்பீ! பரதா! ஈரேழுலோகத்திலும் காண முடியாத ஈடு இணையற்ற மாணிக்கக் கல்லை, உன் அண்ணன் பாதுகையிலே மறைத்துக் கொண்டு போய் விட்டானாம்! மாணிக்கக் கல் இல்லாத அயோத்தி, சூரியனில்லா வானம் போன்றது! கண் இல்லா முகம் போன்றது! எப்படியும் அந்தக் கல்லைத் திரும்பக் கொண்டு வரவேண்டும் என்றாள்.
சிஷ்: ஆமாம்!

பாக: அதற்கு என்ன வழி யென்று தெரியாமல் பரதன் விழித்து, திகைத்து, நின்றான்.
சிஷ்: ஆமாம்!
பாக: அப்போது கைகேயி சொல்கிறாள்: பரதா! பயப்படாதே! சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல வேண்டும்! நீ இப்போதே, ராமன் காட்டுக்குப் போவது கூடாது! அவன்தான் நாடாள வேண்டும் என்று கதறு! நான் சமாதானப்படுத்துவேன் - கேட்காதே!

மந்திரி பிரதானி களையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டு ராமனைத் திரும்ப அழைத்து வருவதாகப் புறப்படு! புலம்பலை நிறுத்தாதே! அண்ணலே! அண்ணலே! என்று அழு!

அவன் பாதங்களைத் தொழு! நானிருக்கும் வரையில் அவன் நாட்டுக்குத் திரும்பி வரப் பயப்படுவான்! ஒரு வேளை, அப்படியே அவன் திரும்பி வந்துவிடுவான் போல் ஜாடை தெரிந்தால் அதற்கு இடங் கொடுக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!... அவனுக்கு நேராகவே என்னைத் திட்டு! மந்திரி பிரதானிகள் எல்லாம் உன்னுடைய சகோதர பாசத்தை மெச்சுகிற அளவுக்கு நாடகத்தை நடத்து!

அண்ணா, நீ தந்தை சொல் மறவாத தனயன்! தந்தையின் வாக்குப்படி தரணியை வெறுத்து விட்டு, இப்படித் தவக்கோலம் பூண்டுவிட்ட, நீயல்லவா தெய்வம்! இப்படிப் புகழ்ந்து பேசியே அனைவரையும் மயக்கு! திரும்பி வருகிறேன் என்று ராமன் சொல்வதற்கு அவனுக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல், ஜாக்கிரதையாகப் பேசு! ஒன்று மறந்து விடாதே பரதா!

ராமனின் பாதுகையிலே பதுக்கி வைத்திருக்கும் நமது மாணிக்கக் கல்! அதைக் கவர்ந்து வரவே இவ்வளவு ஏற்பாடும்! நீ ஆளாவிட்டா லும் உன் பாதுகை நாட்டை ஆளட்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, அதை எப்படியாவது பிடுங்கிக் கொண்டு வந்து விடு! மந்திரி பிரதானிகளுக்கு மத்தியிலே, ராமன், மாணிக்கக் கல்லை எடுத்துக் கொள்ள முடியாது! விழிப்பான்! திகைப்பான்!

வேண்டாமடா தம்பி, பாதுகையைத் தொடாதே, பாபம்! என்பான்!
பாதுகையா இது? பார் புகழ் தெய்வத் திருவடியண்ணா! என்று கூறி, நீயாகவே அவைகளைக் கழற்றி எடுத்துக் கொண்டு வந்து விடு மகனே! என்பதாகக் கைகேயி கூறவும், பரதனும் நாடகத்தை நடத்தப் பரவசத்தோடு புறப்பட்டான்!
சிஷ்: ஆமாம்!

பாக: அன்னையின் சொற்படியே, ராமனோ, லட்சுமணனோ தன்னைக் கொன்று விடாமல் இருப்பதற்காக, பாதுகாப்பாக ரதகஜ துரகபதாதிகளை அழைத்துக் கொண்டு, பரதன் ராமனிடம் சென்றான்!
தந்திரமாகவும், சாகசமாகவும், அழுதும், புலம்பியும் - அண்ணனிடத்திலே அவனுக்கு அழியாத பாசமிருப்பதாகக் காட்டிக் கொண்டான்! அதை அண்ணன் ராமனும் நம்ப வில்லை - ஆனாலும் எதிரேயுள்ள மந்திரி பிரதானிகளுக்காக இருவரும் ஒருவரையொருவன் தழுவிக் கொண்டார்கள்!
சிஷ்: ஆமாம்!

பாக: அப்படி ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளும் போது என்ன நடந்தது தெரியுமோ?
சிஷ்: மறைத்திருந்த புலி நகத்தால் குத்திக் கொன்று விட்டான்!
பாக: அடே முட்டாள்! அது சிவாஜி கதையடா?
சிஷ்: ஆமாம்!
பாக: இருவரும் தழுவிக் கொண்டதைக் கண்ட அரண்மனைவாசிகள் ஆனந்த பாஷ்யம் பொழிந்தனர்!
சிஷ்: ஆமாம்!

பாக: உடனே பரதன், ராமனைப் பார்த்து, அண்ணா! நீதான் தந்தை சொல் தட்டக் கூடாதென்று ஆரண்யம் வந்துவிட்டாய்!... உனக்குப் பதிலாக உன் பாதுகைகளைக் கொடு! அவைகளுக்குப் பட்டங் கட்டி, அதன் பிரதிநிதியாக நான் ஆளுகிறேன் என்று, ராமனுடைய காலிலேயிருந்த பாதுகைகளைக் கழற்றி கொண்டான்!
சிஷ்: ஆமாம்!

பாக: ராமனும் வேறு வழியின்றி, மாணிக்கக் கல் மறைத்திருந்த பாதுகைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று.
சிஷ்: ஆமாம்!
பாக: அப்படி ராமன், பாதுகைகளைக் கொடுத்ததிலும் ஒரு சூழ்ச்சியிருந்ததை பரதன் உணர முடியவில்லை. கைகேயியும் உணர முடியவில்லை!
சிஷ்: ஆமாம்! உணர முடியவில்லை!
பாக: பாதுகையிலே மாணிக்கக் கல்! மண்டலங்களை விலை கேட்கக் கூடிய மதிப்பு வாய்ந்த மாணிக்கக் கல்! அதனால் அவைகளைத் தலையிலே வைத்து தூக்கிக் கொண்டு போனான் பரதன்!
சிஷ்: ஆமாம்!...

பாக: அதன் பிறகு, சில வருஷம் கழித்து கைகேயி, இறந்துவிடவே, அதைக் கேள்விப்பட்ட ராமன் - விபீஷண, சுக்ரீவர்களுடைய படைகளுடனே, அயோத்தி நோக்கி படை எடுத்தான்!
சிஷ்: ஆமாம்!
பாக: தனக்குரிய நாட்டில் ராமன் படை எடுப்பது அநியாயம் என்று பரதன் வாதிட்டான்.
சிஷ்; ஆமாம்!

பாக: பதினாலு ஆண்டு, என் பாதுகை நாட்டை ஆண்டிருப்பதால்... ஆளும் அனுபவ பாத்தியதை எனக்கே உரியது என்று ராமன் பதில் கொடுத்தான்...
பன்னிரண்டு ஆண்டுக்கு மேல் போனாலே பாத்தியதை வந்துவிடுகிறது; அதுவும் பதினாலு ஆண்டு என்றால், பாத்தியதை வந்தது நியாயந்தானே என அண்டமா முனிவரெல்லாம் அபிப்பிராயம் தெரிவித்தனர்!
சிஷ்: ஆமாம்!
பாக: உடனே, பரதன் நாட்டை விட்டு வெளியேறி, நந்திக்கிராமம் என்னும் ஊரிலே தீக்குண்டம் வளர்க்கச் சொல்லி, அதிலே குதித்து உயிர் விட்டான்!
சிஷ்: ஆமாம்!

பாக: அந்த மாணிக்கக் கல்லும் அவன் மடியிலேயே இருந்து, நெருப்பிலே கருகி, வெடித்துச் சிதறிப் போயிற்று!
சிஷ்: ஆமாம்!
பாக: இந்தப் பரதாயணத்தைப் படித்தவர்கள், படிக்கப் பக்கமிருந்து கேட்டவர்கள் - கேட்டவர்கள் சொல்லிக் கேட்டவர்கள் அனைவருமே...
சிஷ்: மோட்சத்திற்குப் போவார்கள்!
பாக: இல்லையடா இல்லை!... படித்தவர்களும் கேட்டவர்களும் மோட்சத்திற்கும் போக மாட்டார்கள் - மோசத்திற்கும் போகமாட்டார்கள்...! பகுத்தறிவு பெறுவார்கள்!...
சிஷ்: நமப் பகுத்தறிவு பதே! பரதாயணம் முற்றிற்று!...
unmaionline.com/20080701/page20.

No comments: