Followers

Thursday, September 4, 2008

மத விரோதத்தை ஏற்படுத்தும் தினமலர் ஆசிரியருக்கு முன் ஜாமீன்.

சென்னை, செப். 3- சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமலர் ஏட்டின் ஆசிரியர், அச்சிடு பவர், வெளியிடுபவர் ஆகிய மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தினமலர் ஏட்டின் வேலூர் பதிப்பில் முகமது நபியின் படம் போட்டு செய்தி வெளியிட்ட வழக்கு தொடர்பாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏட்டின் ஆசிரியர் ராகவன், அச்சிடுபவர் சத்தியமூர்த்தி, வெளியிடுபவர் வெங்கடபதி ஆகியோர் முன்ஜாமீன் பெற் றுள்ளார்கள். இந்த ஆணை 8.9.2008 முடிய அமலில் இருக் கும். இந்தப் படத்தை வெளி யிட்டதற்கு எந்தக் கெட்ட உள்நோக்கமும் கிடையாது என்று அவர்கள் சார்பில் வழக்குரைஞர் தெரிவித்தார். இணைய தளத்திலிருந்து எடுத்து வெளியிட்டதாகக் கூறியுள்ளார்.

வேலூரில் நிறைய இசுலாமியர்கள் இருக்கிறார்கள். அந்த நிலையில், அந்த ஊரிலிருந்து வெளிவரும் ஏட்டில் இப்படம் வந்துள்ளது. அத்துடன் முசுலிம் தூய மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாளில் இம் மாதிரி நடந்துள்ளது எனவும் அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

மூன்று நபர்களையும் கைது செய்யவேண்டாம் எனவும், இது தொடர்பாக காவல் துறையின் அறிவுரைகளைப் பெற்றிடுமாறும் அரசு வழக்குரைஞரை நீதிமன்றம் கேட் டுக்கொண்டது. எந்தச் சூழலில் ஏட்டில் இந்தப் படம் வெளியிடப்பட்டது என்பதைத் தெரிவிக்குமாறு இதழாளர்களை நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த ஏட்டில் இசுலாமியர் பற்றி வெளிவந்த விஷ(ம)ப் படத்தின் விளைவாக வேலூரில், திருவண்ணாமலையில், சென்னையில் எனப் பல இடங்களிலும் இசுலாமியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன.
>> http://files.periyar.org.in/viduthalai/20080903/news06.html

முகமதுநபி பற்றி தினமலர் கேலிச் சித்திரம்
முஸ்லிம்கள் போராட்டம் அடுத்தடுத்து போலீஸ் தடியடி
வேலூர், செப்.3- நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கும் நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேலிச் சித்திரம் வெளியான திங்களன்று மாலையில் வேலூர் அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட் டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று காலை வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

கண்ணீர் புகைக் குண்டு வீசும் வாகனம், தண் ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டிஅய்ஜி சுந்தரமூர்த்தி, எஸ்பி அறிவுச்செல்வம், டிஆர்ஓ சுகந்தி, ஏடிஎஸ்பி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொன்னார்கள்.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட வர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். விரட்டி விரட்டி தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி தாக்குவதா? என்று முஸ்லிம் பெரியவர்கள் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தடியடியில் காயம் பட்டவர்களை ரத்தம் சொட்ட அழைத்து வந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார். ஆனால், இந்து - முஸ்லிம் இடையே பகையை தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரை கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டபடி கூட்டத்தினர் முன்னேறினர்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். இதற்கிடையே, வெளியே நின்றிருந்த கூட்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் துரத்தி துரத்தி அடித்தனர்.

பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று ஒரு ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெங்களூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டது. தொடர்ந்து போலீசார் ரோந்து வருகின்றனர்.
>>viduthalai/20080903/news06.html

No comments: