Followers

Monday, September 1, 2008

பா.ஜ.க. ஆட்சி என்றால், அது பச்சைப் பாசிசமே! பச்சைப் பாசிசமே!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டதாக நரேந்திர மோடி அரசு பீற்றிக்கொண்டது.

முஸ்லிம்களான இரு மருத்துவர்கள் - டாக்டர் அலிகான்பதான் மற்றும் டாக்டர் சலீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உள்ளபடியே இந்த இருவருக்கும் - தொடர் குண்டுவெடிப்பு களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவ்விரு மருத்துவர்களின் வீட்டார், உறவினர்கள் அழுத்தமாகக் கூறினார்கள்.

பிரச்சினை பெரிதான நிலையில், குஜராத் அரசு என்ன செய்தது தெரியுமா? தவறாக இந்த மருத்துவர்களைக் கைது செய்துவிட்டோம் என்று கூறி விடுதலை செய்துவிட்டது.

குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடியின் தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சி எந்தச் செயலையும் மதவாதக் கண்கொண்டு பார்க்கக் கூடியதாகும்.

முஸ்லிம்கள் என்ற தகுதியே போதும் - அவ்வாட்சியின் கண் ணோட்டத்தில் அவர்கள் குற்றவாளிகள் - அந்தத் தடுமாற்றத்தின் காரணமாகத்தான் குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்களைக் கைது செய்யும் நிலை ஏற்பட்டது.

குஜராத் கலவரத்தின்போது பொடா சட்டத்தைப் பயன்படுத்தி - பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லிம்களைத்தான் பா.ஜ.க. அரசு கைது செய்தது. 287 பேர் பொடாவின்கீழ் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர்கள் முசுலிம்கள்; ஒருவர் சீக்கியர்.

படுகொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், தீ வைப்புக்கும் காரணமாக இருந்த இந்துக்கள் ஒரே ஒருவர்கூட பொடாவின்கீழ் கைது செய்யப்படவேயில்லை!

குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட இந்துத்துவா வெறி - இப்பொழுது ஒரிசாவையும் பிடித்து ஆட்டுகிறது. நேற்று இந்தியா முழுமையும் கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் முறையில் மூடப்பட்டன.

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடை பெறுகிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்திய இராணுவம் தலையிடவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்விட்டது - மாநில அரசு செயலிழந்துவிட்டது.

பா.ஜ.க. அதன் பரிவாரங்கள் பயங்கரமான பாதையில் நாட்டை இழுத்துச் செல்லுகின்றன. அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியில் காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கின்றன.

நாட்டின் விலைவாசியைப் பயன்படுத்திக் கொண்டு பாமர மக்களை ஏய்த்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் மிச்ச சொச்சமிருக்கும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி விடலாம் என்ற வெறியில் அவர்கள் துள்ளித் திரிகின்றனர்.

இன்றைய மத்திய அரசுக்குச் சில முக்கிய அடிப்படையான சட்டப்படியான கடமைகளும், செயல்பாடுகளும் இருக்கின்றன.

மதவாத வெறிகொண்டு திரியும் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல், பளிச்சென்று தெரியவே செய்கிறது.

அப்படி யிருக்கும்போது, இவர்கள் தேர்தலில் நிற்பதற்கு எப்படி அனுமதிக்கப் படலாம் என்பது மிகமிக முக்கியமான, நியாயமான, சட்டப்படியான அடிப்படைக் கேள்வியாகும்.

இவர்கள் ஆட்சி நடத்திய - நடத்தும் குஜராத் ஒன்றே ஒன்று போதும் இவர்கள் தேர்தலில் நிற்கத் தகுதியவற்றவர்கள் என்பதற்கு.

குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் நிற்கும் வழக்குகளின் பட்டியல் ஒன்றே போதும் - அவ்வாட்சியின் நிருவாக இலட்சணத்துக்கு.
குஜராத்துக்கு வெளியே நிலுவையில் இருக்கும் வழக்குகள் 13.
குஜராத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 4,562.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 2,037.
போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குஜராத் அரசால் கோப்புகள் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,032.

உச்சநீதிமன்றத் தலையீட்டின் பேரில், மீண்டும் தொடங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2000.
அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கு விசாரணைகளின்மூலம் புதிதாகக் கைது செய்யப்பட்டவர்கள் 830 பேர்.
புதிதாகத் தொடங்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை 59.
பழைய வழக்குகளின் அடிப்படையில் புலனாய்வு செய்ததின் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15.
குற்றங்கள் இழைத்த உயர் அதிகாரிகளின்மீது நோட்டீஸ் அனுப்பிய வழக்குகளின் எண்ணிக்கை 114. 10 கொலை வழக்குகள். 10-க்கும் மேற்பட்டோரைக் கொன்ற வழக்குகள் 11, கற்பழிப்பு வழக்குகள் 43. கொள்ளையடித்தல் மற்றும் தீ வைத்தல் சம்பவம் தொடர்பான வழக்குகள் 3,800. இந்தப் பட்டியல் போதாதா?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதான் என்பதற்கான ஆவணம் இது!
சட்டம் என்ன செய்யப் போகிறது? நாட்டு மக்கள் இதற்குமேலும் சிந்திப்பதற்கு என்னதானிருக்கிறது? சந்தேகமேயில்லை - பா.ஜ.க. ஆட்சி என்றால், அது பச்சைப் பாசிசமே!
viduthalai/20080830/news06.

No comments: