Followers

Sunday, August 31, 2008

உச்சநீதிமன்றமா? மனு(அ)தர்மப் பீடமா? கும்மிருட்டில்" கிடக்கும் நீதிபதிகள்!

கும்மிருட்டில்" கிடக்கும் நீதிபதிகள்! உச்சநீதிமன்றமா? மனு(அ)தர்மப் பீடமா?
விவாகரத்து கூடாதாம்! கணவன் மனைவி சேர்ந்து வாழ்வது என்பது கடவுளின் விருப்பமாம்!


அரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த நரேந்திர குமார் வர்மா - சவீதா என்னும் இணையர்கள் 16 ஆண்டுக்காலம் பிரிந்து வாழ்ந்த நிலையில், மணவிலக்குக் கோரி கணவர் வழக்குத் தொடர்ந்தார்.

கீழ்மட்ட நீதிமன்றங்களில் மாறி மாறி தீர்ப்புகள் அளிக்கப்பட்டு இறுதியில் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் செல்லப்பட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வீ, ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கினை விசாரித்து மணவிலக்குக்கு அனுமதி மறுத்துவிட்டது.

சட்டப்படி இரண்டு வருட காலம் பிரிந்திருந்தாலே மண விலக்குப் பெறலாம் என்று சட்டம் இருக்கிறது. இதன் அடிப் படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பும் வழங்கி வருகின்றன.

இந் நிலையில் 16 ஆண்டுக்காலம் பிரிந்து வாழ்ந்த இணையர்க்கு மணவிலக்கு அளிக்க மறுத்து அளித்த தீர்ப்பானது வழக்குரைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் புருவத்தை மேலும் கீழும் நெளியச் செய்திருக்கிறது.

கணவன் மனைவி சேர்ந்துதான் வாழவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இருக்கின்ற நீதிமன்றங்களிலேயே உச்ச அதிகாரம் படைத்திருப்பதால் அதற்கு உச்சநீதிமன்றம் என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது. இம்மன்றம் அளிக்கும் தீர்ப்பு சட்டமாகவே கூடக் கருதப்படும் (Judgment Made Law).

அப்படி உள்ள நிலையில் சட்டத்தை வைத்துத் தீர்ப்புக் கூறாமல், மவுடீகத்தின் அடிப்படையில் - இல்லாத கடவுளின் விருப்பம் என்றெல்லாம் நீதிபதிகள் பேசுவது அறிவுடைமையானதுதானா?
ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானா?
என்கிற கேள்விகள் சிந்திப்பவர்கள் மத்தியில் கண்டிப்பாக எழத்தான் செய்யும்.

யார் அந்தக் கடவுள்? அவரின் விருப்பம் என்று எந்த அடிப் படையில் நீதிபதி கூறுகிறார்? என்கிற கேள்விகளுக்குச் சாட்சியத் தோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிரூபிக்கத் தயார்தானா?

நீதிமன்றம் என்பது சட்டத்தையும், சாட்சியத்தையும் வைத்துத்தான் தீர்ப்புகளை வழங்கவேண்டும். அப்படியிருக்கையில், கடவுள் விருப்பம் என்று நீதிபதிகள் எப்படி கூறலாம்?

சாட்சியாக அவர்கள் கூறும் கடவுள் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டாரா?

அவருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டதா?

அவர் வந்து சாட்சியம் கூறினாரா?

என்ற கேள்விகளுக்கு நீதிபதிகளிடத்திலிருந்து பதில் வந்தாகவேண்டும்.
நீதிபதிகளுக்கு என்று சில நம்பிக்கைகள் இருக்கலாம்.

அவற்றை அவர்களின் வீட்டுப் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சட்டப்படி செயல்பட வேண்டிய ஒரு மன்றத்தில் தம் நம்பிக்கைகளைத் திணிப்பது சட்டப்படி குற்றமேயாகும்.உச்சநீதிமன்றமே பகுத்தறியும் சிந்தனைக்கு விரோதமாக கடவுள்களையெல்லாம் காட்டி தீர்ப்புக் கூறினால், ஒவ்வொரு வகை நீதிமன்றத்திலும் நீதிபதிகளின் நம்பிக்கை சார்ந்த ஜோதிடம் முதலியவற்றைத் துணைக்கழைத்து தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்துவிடமாட்டார்களா?

அசரீரி எனக்குச் சொன்னது; என் அந்தராத்மா இவ்வாறு கூறுகிறது; என் கனவில் கடவுள் வந்து கூறியது இதுதான் என்று கூறி தீர்ப்புகளை எழுத ஆரம்பித்தால், நாடே பூஜையறையாகவும், மூடத்தனத்தின் மொத்தக்காடாகவும் அல்லவா மாறிவிடும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் 51-ஏ துணைப் பிரிவு (h) என்ன கூறுகிறது?

மக்கள் மத்தியில் விஞ்ஞானச் சிந்தனையை வளர்க்க ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. குடிமக்களின் கடமையே பகுத்தறிவை வளர்ப்பதென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கடமையைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். வேலியே பயிரை மேய்ந்தால், பயிர்களைக் காப்பவர் யார்?>>viduthalai 21.08.08

Saturday, August 30, 2008

படமெடுத்தாடும் பக்தப் பாமரர்கள்!

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் நாகாத்தம்மன் புற்றுக்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர் என்கிற செய்தியைப் படிக்கும்பொழுது,

நம் நாட்டில் படித்த பெண்கள் கூட பாமர மூடர் அளவில் இருக்கிறார்களே என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.

முதலில் கடவுளுக்குப் பொருள்களைக் கொடுத்து திருப்திப்படுத்த முனைவதே - அவர்கள் கடவுளைக் கற்பித்த இலக்கணமுறைக்கே முரணானதாகும்.

கடவுளுக்கு ஒன்றைக் கொடுத்தால் நமக்கு இன்னொன்று செய்வார் என்பது ஒரு வியாபார முறையில்லாமல் வேறு என்ன இது?

நாம் செய்யும் நன்மை தீமைகளை - எல்லாம் அறிந்ததாகக் கூறப்படும் கடவுள் அறிய மாட்டாரா? அதன் அடிப்படையில் கூலி கொடுக்க மாட்டாரா?

ஏன் இந்தத் திசையில் பக்தர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?
சரி.. பொருள்களைத்தான் படைக்கிறார்களே அதிலாவது பொருள் இருக்க வேண்டாமா?

பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றுகிறார்களே - முட்டை வைத்துப் படைக்கிறார்களே! பாம்பு அந்தப் பாலைக் குடிக்கிறதா? முட்டையை உடைத் துத்தான் சாப்பிடுமா?

பாம்பைப் பற்றிய கடுகு மூக்கு அளவு பொது அறிவு இருந்தால் இதனைச் செய்வார்களா? படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட இவையெல்லாம் தெரியாமல் போன மர்மம் என்ன?

பக்தி என்று வரும்போது புத்தியைச் செலவழிக் கக் கூடாது என்று எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லி, மக்களின் அறிவை மரத்துப் போகச் செய்து விட்டார்கள்.

அது மட்டுமல்ல - நம் நாட்டுப் படிப்பு என்பது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்து விட்டார்கள். இந்த நிலையில் உள்ளவர்கள் பகுத்தறிவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?

பாம்பின் நாக்கு என்பது பிளவுபட்ட தன்மை உடையதாகும். தண்ணீரையோ பாலையோ உறிஞ்சிக் குடிக்கும் ஆற்றல் என்பது பாம்புக்கு இயற்கையாகவே அதன் உடல் கூற்றின் அமைப்புப்படி கிடையாதே! அப்படியிருக்கும்போது பாம்பு எப்படி பாலைக் குடிக்க முடியும்?

பாலகர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயாளிகளுக்கும் மிகவும் தேவையான பாலினை பாம்புப் புற்றில் கொட்டுவதும், பாலாபிஷேகம் என்ற பெயரில் குழவிக் கற்களின்மீது (கோயில் சாமிகளின்மீது) ஊற்றுவதும் பக்கா கிரிமினல் செயல் அல்லவா!

உணவுப் பொருள் நாசத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட வேண்டாமா? பாலில் தண்ணீர் கலந்தால் தண்டிக்கும் சட்டம், அந்தப் பாலை இப்படியெல்லாம் விரயப்படுத்துகிறார்களே - எங்கே போய் ஓடி ஒளிந்தது?

சாணியை சாமி என்றும், களிமண்ணை பிள்ளை யார் என்றும் எப்படி இவர்களால் நம்ப முடிகிறது?

சாணியையும் களிமண்ணையும்கூட கும்பிட வேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருப்பதும் அதனை ஆறறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்வதும் எவ்வளவு பெரிய விபரீதம்! - காட்டுவிலங் காண்டித்தனம்!

பாம்பு கடித்தால் மனிதன் சாவான் என்ற பயத்தில் பாம்பைப்பற்றி தப்பும் தவறுமாக நம்பித் தொலைக்கின்றனர்.

நவம்பர் 2005 பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழில் பாம்பைப் பற்றி வெளிவந்த ஒரு கட் டுரையை - பக்தி என்னும் பாம்பால் கடிபட்டு நஞ்சு ஏறிய மூடப் பக்தர்களுக்குக் காணிக்கையாக்குகிறோம் படியுங்கள்.

நாம் அனைவரும் பாம்புகளைப் பார்த்திருப்போம். அவற்றைப்பற்றி அறிந்திருப்போமா என்றால் குறைவுதான். நம் நாட்டில் பாம்புகளைப்பற்றிய கட்டுக்கதைகள்தான். அதிகம். அந்தக் கட்டுக் கதைகளில் சில:

1. நல்ல பாம்பை அடித்துவிட்டால் தேடிவந்து பழிவாங்கும்.
2. கொம்பேறி மூர்க்கன் பாம்பு - தன்னால் கடிக்கப்பட்டவர்களை சுடுகாட்டில் வந்து எரிக்கிறார்களா? அல்லது புதைக்கிறார்களா என்று பார்க்கும்.
3. மண்ணுளிப் பாம்பு நக்கினால் தொழுநோய் வரும்.
4. மண்ணுளிப் பாம்புக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை தலை மாறும்.
5. மகுடி ஊதினால் பாம்பு வரும்.
6. மகுடி இசைக்கு ஏற்றபடி பாம்பு ஆடும்.
7. பச்சைப் பாம்பு கண்கொத்தும்.
8. நல்ல பாம்பு நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் ஒரு அடி அளவுக்குக் குட்டையாகி விடும்; இறக்கை முளைத்துவிடும்; மாணிக்கக்கல் கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.
9. பாம்புக்கு பால் வைத்து கும்பிட்டால் வந்து குடிக்கும்.
10. நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணையும்.

இப்படிப் பலப்பல. இவைகளுக்கு முதலில் சில விளக்கங்கள் பார்ப்போம்!
பழி வாங்குமா நல்ல பாம்பு?

எந்தப் பாம்புக்கும் பழிவாங்கத் தெரியாது. அந்தப் பழக்கமெல்லாம் தீய மாந்தரிடம்தான் உள்ளது. பாம்புகளுக்கு நினைவாற்றல் கிடையாது. ஆகையால் யார் அடித்தார்கள் என்ப தெல்லாம் அதற்குத் தெரியாது. பக்கத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களைப் போட்டுத் தள்ளும் அவ்வளவுதான்.

கொம்பேறி மூர்க்கன் நஞ்சற்ற பாம்பு. அது கடித்தால் யாரும் சாக மாட்டார்கள். பாம்புகளுக்கு காது என்பதே கிடையாது. பின் எப்படி மகுடி இசைக்கு ஆட முடியும்?

நூறு ஆண்டுகள் வாழும் நல்ல பாம்பு மாணிக்கக் கல் கக்குமா?
மாணிக்கக் கல் என்பது பட்டை தீட்டினால் மட்டும் ஒளிரும். அதை பட்டை தீட்டி நல்ல பாம்பு வாயில் போடுபவர்கள் யார்?

குடிக்காது. பால் பிடிக்காது என்றில்லை. பால் குடிக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில் பாம்புக்குத் தேவையான நீர், அது உண்ணும் உணவிலிருந்தே போதுமான அளவு கிடைத்து விடுகிறது. அது மட்டுமின்றி அவற்றிற்கு உறிஞ்சு வதற்கென்று உறுப்புகள் இல்லை. எனவே, தனியாக நீரோ, பாலோ அருந்தத் தேவையில்லாமல் போகிறது.

ஆகவே, பாம்புகளைப் பற்றிய இப்படிப்பட்ட கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்!
இந்தியாவில் நஞ்சுள்ள பாம்புகள் சில வகைகள் மட்டுமே உள்ளன. அவை, நாகப்பாம்பு வகைகள், விரியன் வகைகள், சுருட்டை, சில கடற்பாம்புகள்; பெரும்பாலும் பாம்புகள் நஞ்சற்றவை. அது மட்டுமல்லாமல் பாம்புகள் நமக்கு நண்பர்களாகவும் உள்ளன. >>viduthalai/20080823/snews01.html

Friday, August 29, 2008

மூத்திரம் குடித்தால் பாபம் தொலையுமாம் ? இதோ ஒரு "கண்ணப்பன்!"

கர்நாடக மாநிலம் பாகல்கேட்டை அருகே, தனது கண்ணை கத்தியால் தோண்டி எடுத்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்திய பக்தர் முதுகப்பாவை படத்தில் காணலாம்.

உள்படம்: தோண்டி எடுக்கப்பட்ட கண்.

சிவன் சிலை கண்ணில் ரத்தம் வடிவதைப் பொறுக்க மாட்டாத கண்ணப்பன் தன் கண்ணைப் பிடுங்கி அந்தச் சிலைக்குக் கண்ணை வைத்தானாம்!

பக்திப் பைத்தியம் முற்றி இன்னொரு கண்ணையும் பிடுங்கி வைக்கச் சென்றபோது, "நில்லு கண்ணப்ப" என்று சிவன் தடுத்தான் என்பது கதை.

இந்தப் பக்தன் பக்திப்போதை தலைக்கேறி, தன் கண்ணைக் கத்தியால் தோண்டி (என்ன காட்டு விலங்காண்டித்தனம்!) காணிக்கை தந்தானாம். "நில்லு பக்தா" என்று அந்தக் கடவுள் தடுக்கவில்லை. காரணம், அது கல்லு - அதற்கு ஏது ஈவு இரக்கம் எல்லாம்?கடைசியில் கண் மருத்துவமனைக் குத்தான் செல்லவேண்டியிருந்தது! > viduthalai newspaper 29.08.08
----------------------------------------------------

மூத்திரம் குடித்தால் பாபம் தொலையுமாம்.

ஏன் அவனவன் விலங்குகளின் மூத்திரத்தைக் குடிக்க ஆலாய்ப் பறக்கிறான்?

மூத்திரம் குடி என்று இந்துமதப் புராணங்கள் கூறுகின்றன. அஷ்டமி, நவமி தொட்டது துலங்காது என்று எழுதி வைத்து விட்டு அஷ்டமியில் கிருஷ்ணன் பிறந்தான் - நவமியில் இராமன் பிறந்தான் என்றும் கதை கட்டி விட்டார்கள்.

அஷ்டமியில் பிறந்ததால் தான் கிருஷ்ணன் அம்பால் அடிபட்டு விறைப்பு நோயால் (டெட்டனஸ்) செத்தானோ?

நவமியில் பிறந்த இராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு செத்தானோ?

மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாள்களில் (தேய்பிறையில் வரும் நாள்கள்) உபவாசம் இருந்து கும்பிடுபவன் செய்த சகல பாவங்களிலும் இருந்து விடுபட்டு மோட்சம் போவான் என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.

ஒரே ஒரு கண்டிசன்! உபவாச காலத்தில் மாட்டு மூத்திரத்தை மட்டும் சாப்பிட வேண்டும். மூத்திரம் கழிவுப் பொருளல்லவா?

அதிலும் மாட்டு மூத்திரம். அதைக் குடிக்கச் சொல்கிறானே!ஆனி மாத அஷ்டமி நாளில் விரதம் இருந்து சிலபூசை செய்தால் அறிவு உண்டாகுமாம். மேலே கண்ட கண்டிசன் தான். மாட்டு மூத்திரம் குடிக்க வேண்டும்.

அஷ்டமி நாளில் நாயைக் கும்பிட உகந்த நாள் (பைரவன்) அதுபோலவே சிவனைக் கும்பிட்டாலும் பலன்கள் கிட்டு மாம். சிவனைக் கும்பிடும்போது மாட்டு மூத்திரம் குடிக்க வேண்டியது கட்டாயம்!

நல்ல வாய்ப்பு அவர்களுக்கு - நாயைக் கும்பிடும்போது நாய் மூத்திரம் குடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; சொன்னால் - குடிப்பதற்கும் பக்தன் தயார்! பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே! > viduthalai newspaper 29.08.08