Followers

Tuesday, June 3, 2008

கலைஞரைப் பாராட்டி "தினமணி"யின் தலையங்கம்.வாழ்க நீவீர் நூறாண்டு!

அகவை 85 காணும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தினமணி வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள். ஆயிரத்துக்கும் அதிகமான பிறை கண்டு வாழ்வது, அதிலும் பேரோடும் புகழோடும், சீரோடும் சிறப்போடும் வாழ்வது என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அந்தவகையில் தங்கள் தலைவரின் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் தம்பியரின் உற்சாகம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்.

பொதுவாழ்வில் ஒரு மணிவிழாக் காலம் என்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக அரை நூற்றாண்டுக்கு மேல் பணியாற்றி இருப்பதும், கட்சியின் தலைவராக ஏறத்தாழ 40 ஆண்டுக்காலம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து தொடர்வதும், அனைத்துக்கும் மேலாக நாள் தவறினாலும் எழுதுவது தவறாது என்று தனது பேனாவுக்கு ஓய்வே கொடுக்காத இயல்பும், அன்றும் இன்றும் அயராத உழைப்பும் முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமே உரித்தான தனித்துவத்தின் ஒருசில பரிமாணங்கள்.

58 ஆவது வயதில் முதல்வர் கருணாநிதியிடம் பார்த்த அதே நகைச்சுவை உணர்வு, உற்சாகம், எந்த ஒரு பிரச்சினைக்கும், விமர்சனத்திற்கும் உடனுக்குடன் பதில் அளிக்கும் லாவகம் இவையெல்லாம் இன்னமும் சற்றும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் முதல்வர் கருணாநிதியின் அசாதாரணமான குணாதிசயம்.

அறுபதுகளில் பதவிக்கு வந்த முதல்வர்களில் இப்போதும் முழுநேர அரசியல்வாதியாகவும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஆட்சியில் அமர்ந்திருப்பவராகவும் இருப்பது இந்தியாவில் இரண்டே பேர்தான்.

ஒருவர் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் என்றால் இன்னொருவர் தமிழக முதல்வர் கருணாநிதி. இருவருமே இடையில் பல வருடங்கள் ஓரங்கட்டப்பட்டபோதும், தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்தபோதும் தளராமல் கட்சியைக் கட்டிக் காத்ததுடன் தங்களது தொண்டர்கள் மத்தியில் சற்றும் செல்வாக்கு இழக்காமல் இருக்க முடிந்ததன் காரணம் பாதலுக்கு இருந்த சமுதாய செல்வாக்கும், கருணாநிதியிடம் காணப்பட்ட உழைப்பும்தான்.

மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, தன்னை வழிமொழியவோ, ஆதரிக்கவோகூட எந்தத் தலைவரோ, சீமானோ இல்லாமல், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்களைப்போல பட்டப்படிப்போ, முதுநிலைப்படிப்போ இல்லாத நிலையில், தனக்கென ஜாதிப்பின்னணியோ, பலமோ இல்லாத சூழ்நிலையில், அவர் அடிக்கடி சொல்வதைப்போல நிஜமாகவே ஒரு சாமானியன்,

இந்த நிலையை அடைய எந்த அளவுக்கு எதிர்நீச்சல் போட்டிருக்க வேண்டும் என்பதையும், அத்தனையையும் கடந்து இத்துணை வெற்றியை அடைவதென்றால் எத்துணை திறமைகள் அந்த மனிதனிடம் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நினைத்தால் பிரமிப்பில் ஆழ்ந்துவிடுவோம்.

பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு பிரச்னைகளில் பலருக்கும் முதல்வர் கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவரது தமிழ்ப் பற்றையும், தமிழின உணர்வையும் யாரும் சந்தேகிக்க முடியாது.

அவரது செயல்பாடுகளும், பேச்சுகளும், விமர்சனங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது அடிப்படை நோக்கமான தமிழ் உணர்வை மறுக்க முடியாது.எந்த அளவுக்கு அவரது ரத்தத்தில் எழுத்து இரண்டறக் கலந்திருந்தால் அந்த மனிதர் இந்த வயதில் "நெஞ்சுக்கு நீதி' என்கிற பெயரில் தனது சுயசரிதையின் ஐந்தாவது பாகத்தை எழுதத் துணிந்திருப்பார் என்பதை யோசித்தால் வியப்பு மேலிடுகிறது.

அதை சுயசரிதை என்று சொல்வதைவிட, அரசியல் மற்றும் சமுதாய அரங்கில் பங்கேற்ற போராளி ஒருவரின் நேரடி அனுபவமும், பார்வையும், நிகழ்வுகளும் சரித்திரமாகப் பதிவு செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை.

.தனது 85 ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் கருணாநிதியிடம் தமிழ் சமுதாயத்தின் சார்பில் ஒரு கோரிக்கை. எழுபதுகளில் அவர் முதல்வராக இருந்தபோதுதான் காவிரி ஒப்பந்தம் முடிவுக்கு வந்து, காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒரு பிரச்சினையாக உருவானது.

அது இன்றுவரை முடிவுக்கு வராமல் தொடர்வது முதல்வர் கருணாநிதியின் ராஜதந்திரத்திற்கும், அரசியல் சாதுர்யத்திற்கும் ஒரு மிகப்பெரிய சவால். காவிரிப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதில் முதல்வர் முனைப்பாக இருந்து தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் அது.

தனிப்பட்ட முறையில் தினமணி சார்பில் அவருக்கு ஒரு வேண்டுகோள் சங்கத்தமிழ் கண்ட முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில், மதுரை தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதுடன், மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பாண்டித்துரை தேவரது சிலை நிறுவப்பட வேண்டும். அகவை 85 காணும் முதல்வர் கருணாநிதி தனது 100 ஆவது பிறந்தநாளையும் தனது தம்பிகளும், அன்பர்களும் கொண்டாடும் பேரதிர்ஷ்டம் பெற வேண்டும் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவனை "தினமணி" வேண்டிக் கொள்கிறது. ("தினமணி", 3.6.2008

No comments: