Followers

Thursday, June 5, 2008

ஐயோ ஐ.ஏ.எஸ்.!

இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்கு மயங்காத குடும்பங்களே இல்லை எனலாம்.

சமூகத்தில் கிடைக்கும் உயர் அந்தஸ்து, அதிகாரம், புகழ், பொதுநலனில் கிடைக்கும் மரியாதை போன்றவை ஐ.ஏ.எஸ். மோகத்தை அதிகப்படுத்தி வருகிறது. பெற்றோர்களும், தனது மகனோ, மகளோ ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பல ஆயிரங்களைக் கொட்டிச் செலவு செய்கின்றனர்.

வறுமையில் மட்டுமே வாழ்ந்து, கடின உழைப்பால் ஐ.ஏ.எஸ். கனவை எட்டிப் பிடித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இவையெல்லாம் பழைய கதையாகிவிடுமோ என்கிற அச்சம் இப்போது எழத் தொடங்கியிருக்கிறது.

ஏனெனில், `ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்படும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

காரணம், பெருகிவிட்ட தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அந்த நிறுவனங்கள் கொடுக்கும் லட்சக்கணக்கான ஊதியத்தால் மாணவர்கள் தடம் மாறுகின்றனர். போதாக்குறைக்கு ஐ.ஏ.எஸ். பணியில் இருக்கும் உயர் அதிகாரிகளே, தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் போக்கு கடந்த காலங்களில் அதிகரித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள், `இனி எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். இருக்குமா?' என்ற விவாதத்தை சகல தரப்பிலும் உருவாக்கியுள்ளது.

1757-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், வங்காள மன்னன் சிராஜ் உத்தௌலாவுக்கும் இடையில் நடந்த பிளாசிப் போர், 1764-ல் நடந்த பக்ஸார் போர், இதையடுத்து தென்னாட்டில் நடந்த கர்னாடகா போர் ஆகியவற்றில் ஆங்கிலேயப் படையினர் வெற்றி பெற்றனர்.

தங்களது ஆளுகையின்கீழ் வந்த இந்தப் பகுதிகளில் நிலத்தை நிர்வாகம் செய்து, வரி வசூல் செய்து பிரிட்டிஷ் கஜானாவை நிரப்புவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் ஐ.சி.எஸ். என்று சொல்லப்படும் இந்தியன் சிவில் சர்வீஸ் (இந்திய குடிமைப் பணி). இந்தப் பணிகளில் தேர்ச்சி பெற்ற வெள்ளைக்காரர்களுக்கு இந்தியாவில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டன.

பின்னாளில் ஐ.சி.எஸ். பணியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நேர்மையான முறையில் அரசு இயந்திரம் செயல்படுவதற்கு புதிய சட்டங்களை வகுத்துக் கொடுத்தார் ஆங்கிலேயப் பிரபு கார்ன் வாலிஸ்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு ஐ.சி.எஸ். என்ற வார்த்தை ஐ.ஏ.எஸ்.ஸாக (இந்திய ஆட்சிப் பணி) மாறிப் போனது. இதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகள் நடத்தி ஆட்சிப் பணிகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்து வந்தனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவது நடைமுறை.

ஆரம்ப காலங்களில் ஆட்சிப் பணிகளுக்குத் தயாராகிறவர்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. 79-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, முதல்நிலைத் தேர்வு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதினால், அவர்களில் பத்தாயிரம் பேரை வடிகட்டி எழுத்துத் தேர்வுக்கும், பின்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் நிலையை ஏற்படுத்தினார்.

இதில் ஒரு பணியிடத்திற்குப் பன்னிரண்டு பேர் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இருபத்திரண்டு இந்திய மொழிகளில் அவரவர் தாய்மொழியிலேயே தேர்வுகளை எழுதலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில்தான்,`ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆட்சிப் பணிகளுக்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இருநூறு, முந்நூறு என்று இருந்தது. பிறகு படிப்படியாகக் குறைந்து தேர்ச்சி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்த கொடுமையும் நடந்தது.

இந்த ஆண்டு அதிகப்படியாக 90 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்திற்கு மட்டும் மதிப்பெண் அடிப்படையில் முப்பது ஐ.ஏ.எஸ்.கள் கிடைக்கலாம். ஆனால் வருங்காலங்களில் ஓர் ஐ.ஏ.எஸ்.கூட இல்லாத நிலைதான் உருவாகும். அந்தளவுக்கு மாணவர்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. உறுப்பினர் பாலகுருசாமியும், `2004-ம் ஆண்டு இருபத்து நான்காயிரம் பேர் ஆட்சிப் பணித் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு பன்னிரண்டாயிரம் பேராகக் குறைந்துவிட்டனர்'என்று கூறியதையும் மேற்கோள் காட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

அரும்பாக்கத்தில் பிரபா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தை நடத்தி வரும் பிரபாகரனை சந்தித்துப் பேசினோம். இவர் அரசு குடிமைப் பணி பயிற்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர்.தற்போது நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்த வினோத் சேஷன் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்தான்.

அவர் நம்மிடம் பேசும்போது, " உண்மைதான். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மாணவர்களை அதிக சம்பளத்தின் பக்கம் திருப்புவதால் ஒட்டுமொத்த பட்டதாரி இளைஞர்களில் குறைவான சதவிகிதத்தினர்தான் குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வருகிறார்கள்.

ஒருவர் ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கு முறையாகப் படிக்க ஆரம்பித்தால் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகள் கவனத்தோடு பாடங்களைப் படிக்க வேண்டும். அதுவே, ஐ.டி. துறைகளில் வேலைக்குச் செல்வதற்கு ஒரு பொறியியல் பட்டப் படிப்பு போதும். பல ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.

இதனால் புத்திசாலியான மாணவர்கள்கூட தடம் மாறும் நிலைதான் ஏற்படுகிறது. முதல்நிலைத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் இருக்கும். தேர்வை எதிர்கொள்ளும் வடமாநில மாணவர்கள்,ஆங்கிலத்தில் கேள்விகள் புரியாமல் இருந்தாலும்,இந்தியைப் படித்துப் பார்த்து உடனுக்குடன் பதில் எழுதிவிடுகிறார்கள்.

நம்மூர் ஆட்களுக்கு ஆங்கிலம் கொஞ்சம் கஷ்டம்தான். மிகவும் சிரமப்பட்டு டெல்லிக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றால் ஒருவித பயம் ஆட்படுத்துகிறது. இதைத் தவிர்ப்பதற்காக நேர்முகத் தேர்வுகளை மாநிலத்தின் தலைநகரங்களில் வைக்கலாம். ராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்யும் மையங்கள் பெங்களூரு, அலகாபாத்தில் இருக்கிறது. ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனுக்கு ஏழு இடங்களில் நேர்முகத் தேர்வு மையம் செயல்படுகிறது.

யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு மட்டும்தான் இந்த நிலை. மூன்று தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தோற்றால்-கூட மீண்டும் முதல்நிலையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இது பெரும்பாலான மாணவர்களை சோர்வுக்கு உள்ளாக்குகிறது.

அதையும் மீறி லட்சிய வெறியோடு வெற்றி பெறும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முன்பு அரசு பயிற்சி மையம் ஒன்றுதான் செயல்படும். இப்போது வீதிக்கு வீதி பயிற்சி மையங்கள் உருவாகிவிட்டன.

தவிரவும், முன்பு அறுபதாயிரம் பேரில் பத்தாயிரம் பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். இப்போது மூன்று லட்சம் பேரில் எட்டாயிரம் பேரை எடுக்கின்றனர். இதனால் கடும் போட்டிதான் உருவாகும். யு.பி.எஸ்.சி. தலைவர் அமீர் தத்வா கடந்த ஆண்டு தேர்வை நல்லமுறையில் நடத்தினார்.

இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வே அவ்வளவு கடினம். வரும் ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் ஆட்சிப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம்'' என நிஜத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, மத்திய அரசுப் பணிகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கத் தொடங்கினோம்.80-ம் ஆண்டுகளில் கணிசமான அளவுக்கு இருந்த ஐ.ஏ.எஸ். தேர்ச்சி விகிதம், 94-ம் ஆண்டில் இருந்து 98-ம் ஆண்டுவரையிலும் ஒற்றை இலக்க அளவிலேயே இருந்துள்ளது. 99-ம் ஆண்டில் இந்திய அளவில் 320 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 27 பேர் தேர்வானார்கள். 2000-ம் ஆண்டில் 35 பேரும், 2001-ல் 38 பேரும், 2002-ல் 24 பேரும், 2003-ல் 54 பேரும், 2004-ல் 48 பேரும், 2005-ல் 36 பேரும், 2007-ல் 36 பேரும், 2008-ல் 90 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முப்பது ஆண்டு-களில் இந்த ஆண்டுதான் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுக்கும்போது இரட்டை இலக்கத் தேர்ச்சி என்பது வேதனையான ஒன்றுதான் என்கின்றனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர்.

தமிழக அரசால் நடத்தப்படும் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் பிற்பட்ட, எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதியோடு பாடம் கற்றுத் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் பல அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்தான்.

2004-05-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற நாகராஜன் (தற்போது ஓசூர் சப்கலெக்டர்)அரசுப் பயிற்சி மைய மாணவர்தான். ஆண்டுதோறும் இருநூறு மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு சிலர்தான். ஆனால், இந்த மையத்திற்காக ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது.

`ஏன் இந்த நிலை?' என்றோம், அரசு குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வர் உஷா கல்யாணியிடம்.

"தகவல் தொழில்நுட்பம் உள்பட எந்தத் துறை வளர்ச்சியடைந்தாலும் ஆட்சிப் பணிகளின் மீது மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இப்போதெல்லாம் பள்ளி மாணவிகள் ஆர்வத்தோடு ஐ.ஏ.எஸ். பணி குறித்து விசாரித்து அறிகின்றனர். வெற்றி பெற்றவர்கள் பட்ட சிரமங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் இளைய தலைமுறைக்கு அதீத ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டு எங்கள் மையத்தில் இருந்து 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஓட்டலில் சர்வராக இருந்து ஜெயித்த ஜெய்கணேஷ் எங்கள் மாணவர்தான். யு.பி.எஸ்.சி. ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, `நல்ல ரிசல்ட் வந்துள்ளது.

இன்னும் அதிகரிக்க வேண்டும்' என எங்களை ஊக்கப்படுத்தினார். எங்கள் மையத்தின் தரத்தை இன்னும் உயர்த்த உள்ளோம். ஒரு நிதியாண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு புத்தகங்களை வாங்குகிறோம்.தற்போது வழங்கப்படும் நிதியை கூடுதலாக்கித் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

வரும் ஆண்டுகளில் படிக்கும் அத்தனை பேரையும் வெற்றி பெற வைக்கப் பாடுபடுவோம்'' என்றார் நம்பிக்கையோடு.

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் 31-ம் இடம் பிடித்த ராஜேந்திர சோழனின் கருத்து இந்த விஷயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது.

இவர் தொடர்ந்து நான்கு முறை தமிழில் எழுதித் தோல்வியடைந்தவர். "முதலில் பாடத்திட்ட முறைகளைத் தேர்வு செய்து படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நான் பி.இ. படித்திருக்கிறேன். வீட்டிலேயே முதல் பட்டதாரி நான்தான்.ஆட்சிப் பணித் தேர்வுக்கு தமிழ் இலக்கியமும், வரலாறும் தேர்வு செய்து படித்தேன்.

கல்லூரியில் நான் படித்த பொறியியல் எனக்கு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. பிளஸ் டூ முடித்தவுடன் பாடங்களைத் தேர்வு செய்யும் முறையை யாரும் எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை.தமிழில் தேர்வு எழுதுவதற்கு போதிய புத்தகங்களும் இல்லை.அத்தனையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்படுத்தித்தான் படித்தேன். ஆங்கிலம், இந்தி குறித்த பயம் தேவையில்லை. தமிழை நன்றாகப் படித்து எழுதினாலே எளிதில் வெற்றி பெறலாம்.

ஐ.டி.துறையின் வளர்ச்சி ஐ.ஏ.எஸ் கனவுகளை அதல பாதாளத்தில் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காரணம். ஆட்சிப் பணியில் ஒருநிலையில் தோற்றாலும் திரும்பவும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும். பொருளாதார நெருக்கடியின்மை, குடும்ப ஆதரவு இருந்தால் வெற்றி எளிதாகும்.

ஆட்சிப் பணிகளில் தேர்வாகின்றவர்களில் கிராமப்புற மாணவர்கள்தான் அதிகம். ஏனென்றால், நகர்ப்புறங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம் கிராமப்புறங்களில் பெருமளவு கிடைப்பதில்லை.

இதனால் ஐ.ஏ.எஸ். படிப்பு குறித்த அக்கறை ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்படுகிறது. நான் ஆட்சிப் பணிக்காக படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து மொபைல் போனையே தொட்டதில்லை. இதனால் கால அளவு ஏராளமாகக் கிடைக்கிறது. வகுப்பறைகளில் ஐ.ஏ.எஸ்.விதையை ஊன்றுவதுதான் தமிழக பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஒரே வழி'' என்கிறார்.

"பொருளாதாரக் காரணிகள்தான் மாணவர்களை ஐ.ஏ.எஸ். பக்கம் திருப்பவில்லை'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் பேராசிரியர், மன்னர் ஜவஹர்.

அவர் மேலும் நம்மிடம் பேசும்போது, "மாநிலம் முழுவதும் 240 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 68 ஆயிரம் மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர். இதில் நாற்பத்தைந்தாயிரம் பேர் ஐ.டி, கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளைத் தேர்வு செய்து படித்தவர்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் பல்கலையால் நடத்தப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாவில் சராசரியாக பதினொன்றாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

மாதச் சம்பளம் குறைந்தது இருபத்தைந்தாயிரம் ரூபாய். எங்களிடம் 135 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த நிறுவனங்களில் தகுதிக்கு ஏற்ற மாணவர்களை கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்கின்றனர்.

மற்ற பொறியியல் கல்லூரிகளும் தனித்தனியாக வேலைவாய்ப்பு மேளாக்களை நடத்தி மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருகின்றனர். வசதி உள்ளவர்கள் மருத்துவப் படிப்பிற்குச் செல்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, படிப்பு முடிந்ததும் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்ச்சி பெற உழைக்க வேண்டிய கால அளவும், பொருளாதாரச் சூழலும்தான் மாணவர்களின் ஆர்வம் குறைந்ததற்குக் காரணம்'' என்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ள அரசியல் நெருக்கடி,நிர்வாகத்தில் தேவையில்லாத தலையீடுகள் போன்றவை அடுத்த தலைமுறைக்கு ஐ.ஏ.எஸ். மீதான ஆர்வத்தை குலைப்பதாகச் சொல்கிறார் சீனியர் அதிகாரி ஒருவர்.

அவர் மேலும் கூறும்போது, "தமிழ்நாட்டில் தற்போது முந்நூறு ஐ.ஏ.எஸ்.கள் பணியில் உள்ளனர். இவர்களில் பலர் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படுகின்றனர்.ஆட்சிகள் மாறும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளைப் பார்க்கும்போது அடுத்த தலைமுறைக்கு இந்தப் பணியில் அதிருப்திதான் ஏற்படுகிறது. தற்போது அதிகாரிகளிடம் நேர்மை அருகி வருகிறது.

அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கை பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. வரும் காலங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஐ.ஏ.எஸ். என்ற வார்த்தை சராசரி வார்த்தையாகும். இன்னும் முப்பது வருடங்களில் காணாமல் போகும்.

இப்போது ஐ.ஏ.எஸ். பணியில் சேருபவர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் பதினைந்தாயிரம் வழங்கப்படுகிறது. இதுவே, ஐ.டி. நிறுவனங்களில் மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறைவில்லாமல் சம்பாதிக்க முடிகிறது. சொந்தமாக வீடு வாங்கும் கனவு நிறைவேறுகிறது. ஐ.ஏ.எஸ். பணியில் நேர்மையாகச் செயல்பட்டால் சொந்த வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பதற்குக்கூட சம்பளம் போதவில்லை. இதுதான் மாணவர்களின் ஆர்வம் குறைவதற்குக் காரணம்'' என அதிரடியாகக் கூறினார் அந்த அதிகாரி.

நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம் ஐ.ஏ.எஸ்.நம்மிடம் பேசும்போது, "91-ம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பில் அதிகப்படியான முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இதனால் ஏராளமான அதிகாரிகள் உருவானார்கள். ஐ.ஏ.எஸ்.களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டுமென்றால் பள்ளி, கல்லூரிகளில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாட்னா பல்கலைக்கழகம் போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு பாடமுறைகள் அனைத்தும் ஆட்சிப் பணித் தேர்வுகளை ஒட்டியே உள்ளன. இதனால் இந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுகின்றனர்.

நம்மூர் பாடத்திட்டத்தில் இந்த முறை இல்லை. நன்கு படிக்கக்கூடிய புத்திசாலி மாணவர்கள்கூட வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்கின்றனர். கவர்ச்சிகரமான சம்பளம்தான் இதற்குக் காரணம். இதையும் மீறி சமூக நோக்கத்திற்காக கஷ்டப்பட்டு படித்து ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூகப் பார்வையை மாணவர்களிடம் அதிகளவில் விதைக்க வேண்டும். அப்போதுதான் அதிகப்படியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாவார்கள்'' என்கிறார் உறுதியாக.
ஸீ ஆ. விஜயானந்த்

ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்து பதவிக்கு வரும் பல அதிகாரிகள்,துறையில் ஏற்படும் கடும் நெருக்கடியால் பதவியை விட்டு விலகும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
முன்பு அரசுச் செயலராக இருந்த விவேகமான அதிகாரி, நிதித்துறையில் இருந்த கடவுள் பெயரைக் கொண்ட அதிகாரி, சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் சம்பளத்தைக்கொட்டிக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்குப் படையெடுத்து விட்டார்களாம்.

இதில் சில அதிகாரிகள் கட்டாய விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, ஐ.டி. நிறுவனங்களின் ஆலோசகர், மனித வளத்துறை போன்றவற்றில் நிர்வாகிகளாக அமர்ந்துவிட்டார்களாம்.

இதனைக் கேள்விப்பட்ட பல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பெருத்த யோசனையில் இருக்கிறார்களாம். விரைவில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஐ.டி நிறுவனங்களுக்குப் படையெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்
.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நிலைக்குழு கமிட்டி இந்தியா முழுவதும் கருத்துக் கேட்டு வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பழநி எம்.பி. கார்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கருத்துக் கூறிய பலரும், `யு.பி.எஸ்.சி. போர்டு மதிப்பெண் விவரங்கள் சரியான முறையில் சொல்லப்படுவதில்லை.

தேர்வு முறைகளில் உள்ள கடினம், நேர்முகத் தேர்வை வீடியோ செய்தால்தான் தவறு நடக்காது. யு.பி.எஸ்.சி. உறுப்பினர்களும் பயப்படுவார்கள்' என்பன போன்ற ஆலோசனைகளை பல தரப்பினரும் எடுத்துச் சொல்ல, அனைத்தையும் சீரியஸாகக் குறிப்பெடுத்துக் கொண்டாராம் சுதர்சன நாச்சியப்பன்.நிலைக்குழு கமிட்டியின் பரிந்துரையால் விரைவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். kumudam reporter.
----------------------------------------------------

`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி ஏமாந்து நிற்க்கும் இந்தியர்கள்

2 comments:

Sakthi said...

thank you

SIVA said...

wow beautiful article. nice very nice. keep it up