Followers

Tuesday, June 24, 2008

தந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிராணி + இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

மூட நம்பிக்கைகளை கழகம் முறியடிக்கும் விதத்தைப் பாரீர்!

பட்டுக்கோட்டை, ஜூன் 23- பட்டுக் கோட்டை தி.க. மகளிரணி அமைப்பாளர் தோழியர் இ. அல்லிராணியின் தந்தையார் ம. மெய்க்கப்பன் (வயது 84) 30-5-2008 அன்று இயற்கை எய்தினார்.

எவ்வித மூட சடங்குகளின்றி அவரது உடல் எரிக்கப்பட்டது.சுடுகாட்டிற்கு இதுவரை வடசேரியில் அனுமதிக்கப் படாத மறுக்கப்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் உடன் சென்றனர். தோழியர் அல்லி ராணி சுடுகாடு வரை வந்து உடலுக்கு தீ மூட்டினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் அத்தி வெட்டி பெ. வீரையன், அமைப்பாளர் கைலை ஊமைத் துரை, இராம. அன்பழகன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மறைந்தவரின் படத்திறப்பு நிகழ்ச்சி ஜூன் 14 அன்று நடை பெற்றது. அதன் நினைவாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ. 1000/- நன்கொடையாக அளிக்கப்பட்டது.
------------------------------------

"தலித் கோவிந்தம்!"

திருப்பதி வெங்கடாசலபதியின் கல்யாணக் (சீனிவாசா கல்யாணம்) காட்சி திருப்பதியில்தான் நடந்து வருவது வழக்கம்.

இவ்வாண்டு சென்னைத் தீவுத் திடலிலேயே அப்படி ஒரு காட்சியை அரங்கேற்றினார்கள்.இப்பொழுது அடுத்த திட்டமாக திருப்பதி ஏழுமலையான் சாமியை சேரிப் பகுதிகளுக்கும், மீனவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப் போகிறார்களாம் - அந்தத் திட்டத்துக்கு முறையே தலித் கோவிந்தா, மச்சய கோவிந்தா என்ற நாமகரணமும் சூட்டியுள்ளார்கள்.

தலித் கோவிந்தா என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிக்கு கோவிந்தனாகிய வெங்கடாசலபதியைக் கொண்டு செல் லுதல்; மச்சய கோவிந்தா என்றால், மீனவர் பகுதிகளுக்கு ஏழுமலையானைக் கொண்டு செல்லும் திட்டமாகும்.

அப்படி அந்தப் பகுதிக்கு ஏழுமலையான் சாமியை கொண்டு போகும்போது, அந்தப் பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களுமே கடவுளுக்கு நேரடியாகப் பூஜைகளை நடத்துவார்களாம். அதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கயிருக்கிறதாம்.

என்ன இது? இந்த மதவாதிகள் திடீரென்று சமதர்மவாதிகளாக மாறிவிட்டனரா - ஜாதி ஒழிப்பு வீரர்களாக ஞானோதயம் பெற்றுவிட்டார்களா என்று திடுக்கிட வேண்டாம்.

இந்து மதத்தைப் பரவலாகக் கொண்டு செல்வதுதான் இதன் நோக்கம் என்று திருப்பதிக் கோயில் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. கருணாகர ரெட்டியார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் இந்து மதத்தை விட்டு விலகியிருந்து வருகின்றனர் என்றால், இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

கோயிலுக்குள் பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. மற்றவர்கள் ஜாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்ற நிலையில், இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

இதனை முன்னிட்டே மதவாத எண்ணத்தோடு மதத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இத்தகைய ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர அர்ச்சகராக வேறு யாருக்கும் தகுதி கிடையாது; அருகதை கிடையாது. அப்படிச் சென்றால் சாமி சிலை தீட்டுப்பட்டுவிடும்.

அதற்குப் பிறகு பல பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டி வரும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வகையறாக்கள் இப்பொழுது, இந்து மதக் கடவுள் சிலைகளை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பகுதிக்குக் கொண்டு செல்வதும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே பூஜை செய்யலாம் என்று அனுமதிப்பதும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

இனி ஜாதியைச் சொல்லி ஆதிக்கம் செலுத்த முடியாது; பழைய ஆகமங்களை எடுத்துக் காட்டி மற்றவர்களை வெளியே நிறுத்த முடியாது என்ற நிலைக்கு இந்து மதவாதிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
viduthalai.com

No comments: