Followers

Saturday, June 14, 2008

அவாளுக்குள் அடிதடி. சபாஷ், சரியான போட்டி. சைவமா? வைணவமா?

சிதம்பரம் நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடக் கூடாது என்று தீட்சதர்கள் அடம் பிடிக்க, அதனை எதிர்த்து ஓதுவார் ஆறுமுகசாமி போர்க்கொடி தூக்க - அது தமிழர் - பார்ப்பனர் என்கிற இனச் சண்டையாக உருவெடுக்க - கடைசியில் உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும் என்ற நிலையில் தீட்சதர் பார்ப்பனர்கள் இறங்கிவர நிலைமை இப்பொழுது ஓரளவு சீரடைந்து இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு களேபரம். நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோயிலில் வைத்து ஓகோ என்று நடந்துகொண்டிருக்கிறது. எவ்வளவோ காலமாகத்தானே தில்லை கோயிலுக்குள் பெருமாள் தூங்கிக் கொண்டிருக்கிறார். (பள்ளி கொண்டுள்ளார்) இப்பொழுது தூங்கி விழித்து துஷ்ட வேலைகளில் இறங்கிவிட்டாரா என்று யாரும் கேட்கவேண்டாம்.

நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் இந்தத் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மட்டும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

சிதம்பரத்திலுள்ள வைணவப் பக்தர்கள் (வடகலை தென்கலை நாமக்காரர்கள்) இந்தக் கோயில் பெருமாளுக்குப் பிரம்மோற்சவம் நடத்த விரும்பி, இந்து அறநிலையத்துறையை அணுகி அனுமதியையும் பெற்றுவிட்டனர். அவ்வளவுதான்! நடராஜர் கோயில் சிவ பக்தர்கள் தாண்டி தோண்டியில் விழ ஆரம்பித்துவிட்டனர்.

நடராஜர் கோயிலில் பெருமாள் பரிவார தேவதையாகத் தானியிருக்கிறார்.. பரிவார தேவதைக்கு பிரம்மோற்சவ விழா நடத்தக்கூடாது. இங்கே கோயில் என்ற அமைப்பில் பெருமாள் இல்லை. தனி சன்னதியில் தான் பெருமாள் இருக்கிறார். கோயில் என்றால் ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், கர்ப்பக்கிரகம் எல்லாம் இருக்கவேண்டும். இங்கே ராஜ கோபுரத்துக்கு வெளியில்தான் கொடிமரம், பலிபீடம் இருக்கிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்ளும் பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. அங்கே எல்லாம் பிரமோற்சவ விழா நடக்கவில்லை. பிரமோற்சவ விழா என்றால் தேரோட்டம் வேண்டும். இவர்களிடம் தேரேயில்லை.. அதேபோல் வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தம் என எதுவுமேயில்லை.

அப்படியிருக்க பிரம்மோற்சவம் நடத்த வேண்டுமென்று வைணவர்கள் பிடிவாதம் பிடிப்பது மூர்க்கத்தனமான செயல் - இப்படியெல்லாம் வரிசைப்படுத்தி ஆக்ரோசமாகச் சொல்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜாஸ்தான டிரஸ்டிகளில் ஒருவரான ராஜசேகர தீட்சதர்.(ஜூனியர் விகடன் 1-6-2008 - பக்கம் 4)

உடனே இதற்கு மறுப்பு வேண்டாமா? தில்லை ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயில் மேலாளர் டிரஸ்டி ரங்காச்சாரி இதோ பேசுகிறார்.திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலம் இது. தனி திவ்விய க்ஷேத்திரம் அத்துடன் தனி நிர்வாகம் தனி ஆகமத்துடன் இங்கே பூஜை நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தனிக் கோயில் என்றால் அது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த அம்சத்துடன் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம் என ஒரு கோயிலுக்குத் தேவையான அனைத்தும் இந்தப் பெருமாள் கோயிலுக்கு இருக்கிறது. பெருமாளை பரிவார தேவதை என்று தட்டிக்கழித்தால், இங்குள்ள சிவகாமி அம்மன், சுப்பிரமணியசுவாமி போன்றவர்களும் பரிவார தேவதைகள்தானே! அவர்களுக்கெல்லாம் கொடியேற்றி உற்சவம் நடத்துவது மட்டும் சரியா?-இப்படி பதிலடி கொடுத்துள்ளார் கோயில் மேலாளர் ரங்காச்சாரி!

சபாஷ், சரியான போட்டியாத்தான் தோன்றுகிறது.குப்பையைக் கிளறினால் முடி, முட்டை, கிழிந்த கந்தல், நத்தையின் கூடுகள் எல்லாம்தானே அணி வகுக்கும். அவாளுக்குள் போட்டி வந்தால் அவ்வளவுதானே. எல்லா வண்டவாளமும் தண்டவாளம் ஏறுகிறது.

திருக்குறுங்குடி பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்த சிவன் கோவிலை இடித்தது தொடர்பாக காஞ்சி ஜெயேந்திரன்-மீது கூட புகார் இருக்கிறது. வைணவக்காரர்களுக்கும், சிவ பக்தர்களுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் இன்று நேற்று ஏற்பட்டவையல்ல!

வைணவர்களுக்குள்ளும் வடகலை, தென் கலை சண்டை பிரசித்தி பெற்றது. காஞ்சிபுரம் பெருமாள் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் லண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்று நாறியது.

வடகலைகாரன் தென்கலைகாரனை நேரில் பார்த்து விட்டால் சுவரில் போய் முட்டிக்-கொள்வான். அதற்குப் பெயர் கண்டு முட்டு. ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேள்விபட்டால் சுவரில் போய் முட்டிக் கெள்வதால் அதற்குப் பெயர் கேட்டு முட்டு என்பதாகும்.

சிவன் கோயில் கோபுரத்தில் காக்கை உட்கார கோபுரப் பொம்மை அந்த வழியாக சென்ற வைணவன் தலையில் விழ, அந்த நேரத்தில் கூட, தன் தலையில் சிவன்கோயில் பொம்மை விழுந்து ரத்தம் கொட்டுகிறதே என்பதுபற்றிக் கவலைப்படாமல் வீர வைணவ காக்கையே!

சிவன் கோயில் கோபுரத்தை இடித்துத் தள்ளு! நன்றாக இடித்து தள்ளு என்றானாம்!இதுபோல சிவ பக்தர்களுக்கும், விஷ்ணு பக்தர்களுக்கும் இடையே உள்ள வெறுப்பும் எதிர்ப்பும் நெடியேறக் கூடியவையாகும்.

1982-இல் திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயில் மொட்டைக் கோபுரம் சீர் செய்யப்-பட்டது. அக்கோவில் மடத்து ஜீயரின் மேற்பார்வையில் இது நடந்தது. அந்த வைணவக் கோயில் கோபுரம் கட்ட ஸ்மார்த்தரான காஞ்சி சங்கராச்சாரியாரும். பலரும் உதவி செய்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கல்கி வார இதழ் சார்பாக ஜீயரிடம் பேட்டி காணப்பட்டது.கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவது போல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன்கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்களா?

ஜீயரின் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்யமாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா, சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு.

அதுபடி பார்த்தால் சங்கரனுக்கு (சிவபெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு.

இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி தபஸ் பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் போருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழி படற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம்.

நாராயணனைத் தெய்வமாக்கிக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்திக் கெட்டுப் போகும்... அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டேன்.(கல்கி - 11-.4-.82)

இந்து மதம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மதத்தில் இத்தகைய கடவுள்கள். அவர்களை வழி படுகிறவர்களுக்குள்ளும் பேதாபேதம்!

சிவனை வணங்குபவர்கள் விஷ்ணுவை மதிப்பதில்லை,விஷ்ணுவை வணங்குபவர்கள் சிவனைச் சீண்டுவதில்லைசிவனை வணங்கினால் புத்தி கெட்டுப்போகும் என்கிற அளவுக்கு ஒரு ஜீயர் பேசுகிறார் என்றால் இதன் தன்மை என்ன?

இப்படி முரண்பட்ட குப்பைகள் நிறைந்தது எப்படி ஒரு மதமாகும்.ஒருக்கால் இப்படியெல்லாம் இருந்தால்தான் அர்த்தமுள்ள இந்து மதமாகுமோ?

இப்படி ஒருமைப்பாடு இல்லாதது எப்படி ஒரு மதமாகும். இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் சீண்டும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டம், முதலில் தங்கள் வீட்டுக்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கிற இந்தக் குப்பைகளை அள்ள வேண்டாமா?

இந்துமதம் என்று கூறக்கூடிய ஒரு மதம் என்பது அமைப்பு ரீதியாகவும் இல்லை - சித்தாந்த ரீதியாகவும் இல்லை. சாணியும் - சந்தனமும் ஒன்று - அதுதான் இந்து மதம் என்று சொல்கிறவர்களை கேலியாகத்தான் பார்க்க முடியும்.

அரியும் சிவனும் ஒன்று இதை அறியாதவனின் வாயில் மண்ணு என்று எதுகைமோனையோடு பேசிப் பயனில்லை.

இவர்கள் சொல்கிறவிதம் பார்த்தால் ஜீயரையும் அறியாதவர் பட்டியலில் அல்லவா அடைக்கவேண்டும்.

இந்து மதத்துக்குள் நடக்கும் இந்தச் சண்டைகள்பற்றி திருவாளர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே மனம் நொந்து புலம்பியதுண்டு.

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டைகளே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைதான் அதிகம்.(சென்னை - தமிழிசைச் சங்கக் கட்டடத்-திறப்பு விழாவில் முதல் அமைச்சர் ஆச்சாரியார்)

இதைவிட இந்துமதத்துக்கு வேறு யாரால்தான் பொருத்தமான சான்றினை கூறமுடியும்? unmaionline.com
-------------------------------------
ஏன்டா கிறிஸ்துவனாக மாறினாய்?சர்ச்சை இடி. சான்றிதழை பிடி.
-------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

Thamizhan said...

என்னதான் அடித்துக் கொண்டாலும்
காரியம் என்று வரும் போதும்,
தமிழின முன்னேற்றம் என்று வரும் போதும் பட்டையும், நாமமும் மற்றதும் ஒன்று சேருவது மட்டுமன்றி நம்முடைய தமிழர்களையும் குழப்பி விடுகிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டம்,செம்மொழி,
இட ஒதுக்கீடு எதுவானாலும் பாருங்கள் அதுகள் அனைத்தும் சேர்ந்துதானே
குரைக்கின்றன.