Followers

Thursday, June 12, 2008

ஏன்டா கிறிஸ்துவனாக மாறினாய்?சர்ச்சை இடி. சான்றிதழை பிடி.

கோதுமைக்கு ஆசைப்பட்டு கிறிஸ்துவர்களாகி கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். அதன் பலனை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

ஆல்பட், ஆரோக்கிய ஜார்ஜ், அந்தோணி என்று ஆசைப்பட்டு கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டு, அதன் எதிரொலியாக இப்போது சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரணிப் பகுதி தலித் மக்கள் சிலர்.

``உங்களுக்கு சாதிச்சான்றிதழ் பெற இடைஞ்சலாக இருக்கும் அந்த சர்ச் எதற்கு? அதை உடையுங்கள்''என்று ஒரு தாசில்தார் வேறு மறைமுகமாக உசுப்பேற்றுவதால், மனமுடைந்து கிடக்கிறார்கள் அவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி அருகே உள்ள புலவன்பாடி கிராமத்தில்தான் இப்படியொரு அவஸ்தை எனக் கேள்விப்பட்டு, அங்கு நாம் சென்றோம்.ஊர்க்கோயில் நடுவே காய்ந்து போன குளம். அதையொட்டி அனைத்துப் பிரிவினரும் சமமாக தேநீர் அருந்த வசதியாக கீற்றுக் கொட்டகையில் ஒரு டீக்கடை.அதையும் தாண்டி நாம் சென்றபோது 175 தலித் குடும்பங்கள் வாழும் தலித் குடியிருப்புப் பகுதி தலை காட்டியது.

அங்கு தலைநிமிர்ந்து கம்பீரமாக நின்ற `புனித போஸ்கோ அருளப்பர்' தேவாலயத்தின் அருகே நாம் நடந்தோம். அப்போது அந்த சர்ச்சின் அருகே கிறிஸ்துவப் பாதிரியார்களால் நடத்தப்படும் பள்ளியில் இருந்து குருவிக் கூட்டம் போல சின்னஞ்சிறார்கள் பள்ளி முடிந்து வெளியே வந்தார்கள்.

கைகளில் மஞ்சள் நிற துணிப்பையில் பாடப்புத்தகங்கள். உடலில் சட்டை எதுவும் இல்லை. டிரவுசர் என்ற பெயரில் பட்டன் இல்லாத ஏதோ ஒன்று அவர்களது இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் சர்ச் பார்க் கான்வென்ட்டுகள்.

இன்னொருபுறம் சட்டை கூட இல்லாத கிறிஸ்துவப் பள்ளிகளா? என்ற கேள்வியுடன் முதலில் லூர்துசாமி என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அண்மையில் முனிசாமி என்று பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட அவர் பேசத் தொடங்கினார்.
``நாங்கள் பிறப்பால் ஆதிதிராவிடர்கள். எங்கள் தாத்தா, பாட்டன்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.அதற்கடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த நாங்கள் ஒழுங்காக கிறிஸ்துவ மதத்தில் இணைந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் இயேசுநாதரை வணங்கி வருகிறோம்.மேலோட்டமாக நாங்கள் கிறிஸ்துவப் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டதால் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்போது சாதிச்சான்றிதழ் பிரச்னை என்ற தலைவலி வந்து விடுகிறது.

`நீங்கள் எல்லாம் கிறிஸ்துவர்கள்' என்று சொல்லி ஆதி திராவிடர் என சாதிச்சான்றிதழ் தர அதிகாரிகள் மறுத்து விடுகிறார்கள். நாங்கள் கிறிஸ்துவர் ஆகிவிட்டதால் ஆதிதிராவிடர் இல்லையென்று ஆகி விடுமா? என்னங்க நியாயம் இது? நாங்கள் ஆதி திராவிடர்கள் இல்லையென்றால் ஊருக்கு நடுவில் எங்களையும் வீடுகட்டிக் கொள்ள அனுமதிப்பதுதானே?

தாசில்தாரிடம் கேட்டால், பாதிரியாரிடம் `கிறிஸ்துவன் என்று கடிதம் வாங்கி வா' என்கிறார். நாங்கள் கிறிஸ்துவராக மாறாத நிலையில், பாதிரியார் அப்படிக் கடிதம் தர மறுக்கிறார். இருபக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் கதையாகி விட்டது எங்கள் கதை.

மாதவன், வல்லவன் என்ற என் இரு மகன்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குள் நான் ஒருவழி ஆகிவிட்டேன். ஒன்று நாங்கள் கிறிஸ்துவப் பெயர்களை வைக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது நாங்களாவது முழுமையாக மதம் மாறியிருக்க வேண்டும்.

இரண்டில் ஒன்றைச் செய்யத் தவறியதால்தான் இவ்வளவு பிரச்னை. இங்கே இருக்கிற தாசில்தாரோ, `உங்க ஊரில் சர்ச் இருக்கிறதால்தான் இத்தனை பிரச்னை' என்று திரும்பத் திரும்ப ஏதோ ஒரு நோக்கத்தில் சொல்கிறார்'' என்றார் லூர்துசாமி என்ற முனிசாமி.

அடுத்துப் பேசியவர் ஆறுமுகமாக இப்போது மாறியுள்ள டேவிட்.
``கோதுமைக்கு ஆசைப்பட்டு எங்கள் தாத்தாக்கள் ஓடிப்போய் கிறிஸ்துவர்களாகி கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். அதன் பலனை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

இப்போது என் பெயர் டேவிட் என்பதால் என் மகன்கள் சிவராமன், அரவிந்தன் ஆகியோருக்கு சாதிச்சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் எங்களது கிறிஸ்துவப் பெயர்கள் இடையூறாக நிற்கிறது'' என்று புலம்பினார் அவர். சாந்தி, பீட்டர் என்பவர்களின் புலம்பலும் இதேதான்.

``ஒவ்வொரு வருஷமும் இதே கூத்து. எங்களைக் கிறிஸ்துவர்கள் என்று கூறி சாதிச்சான்றிதழ் மட்டுமல்லாமல்,தொகுப்பு வீடுகள் தரவும் மறுக்கிறார்கள்.சாதிச்சான்றிதழ் வாங்க நாங்கள் அலையும் அலைச்சலுக்கு ஆயிரம், ஐநூறு என்று செலவாகிறது. எங்களுக்குப் பிடித்த சாமியை நாங்கள் கும்பிடுகிறோம். எங்களை ஆதிதிராவிடர் இல்லையென்றால் எப்படி?'' என கேள்வி எழுப்பினார்கள் அவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கிளைச் செயலாளர் பாபு, நம்மிடம், ``என் அப்பா பெயர் ஜோசப். என் தம்பி பெயர் துரை பொன்னையன். இதையே காரணமாகக் காட்டி சாதிச்சான்றிதழ் தர மாட்டேன் என்கிறார்கள். என் அப்பா பெயர் ஜோசப் என்று இருந்தாலும் அவர்தான் எங்கள் பகுதி இந்துக்களுக்கு நாட்டாண்மை. அண்மையில் கூழ் வார்க்கும் திருவிழாவை நடத்தியது கூட அவர்தான்.

தாசில்தாராக இருக்கும் கோவிந்தராசு எப்போது பார்த்தாலும், எங்கள் ஊர் தேவாலயத்தை உடைக்க வேண்டும் என்பது போலவே பேசுகிறார்.`உங்க ஊரில் சர்ச் இருப்பதுதான்யா அத்தனை பிரச்னைக்கும் காரணம்' என்றுவிரட்டுகிறார். `அப்படியானால் `சர்ச்'சை இடித்து விடட்டுமா?' என்று கூட அவரிடம் வி.சி. தொண்டர் அணிச்செயலாளர் முத்தமிழ் கேட்கும்படி ஆகிவிட்டது'' என்றார் பாபு.

முத்தமிழிடம் பேசினோம். ``தாசில்தார் சொல்வதைப் பார்த்தால் ``சர்ச்'சை இடி! சாதிச்சான்றிதழ் தருகிறேன்' என்று சொல்வதைப் போல உள்ளது. ஏதோ ஒரு வகையில் தலித் மக்களுக்கு இடைஞ்சல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன'' என்றார் அவர்.

தாசில்தார் கோவிந்தராசுவிடம் கேட்டபோது, ``அவர்கள்எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிடட்டும். எனக்கென்ன வந்தது? `சர்ச்'சை இடிக்க வேண்டும் என்ற ரீதியில் நான் பேசவில்லை'' என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து கமிட்டி போட்டால்தான் பிரச்னை தீரும் என்ற நிலையில், ஆலய பாதிரியார் அலெச்சாண்டரிடம் நாம் பலமுறை பேச முயன்றோம். முடியவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முதல்கட்டமாக சர்ச்சுக்குப் பூட்டு போட்டுவிட்டு,அடுத்தகட்டமாக போராட்டத்தில் இறங்கத் தயாராகி வருகிறது. புலவன்பாடி கிராமத்தின் அருகே உள்ள பத்தியாவரம் கிராமமும் இதே பிரச்னையால்தான் இன்று சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. புலவன்பாடி விஷயத்திலாவது அதிகாரிகள் முன்கூட்டியே விழித்துக் கொண்டால் தேவலை. -ம.பா.கெஜராஜ் kumudam reporter.
--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: