Followers

Saturday, June 7, 2008

மூன்று மூடத்தனம்.. உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வமும், கீர்த்தியும் வராதா?

ஜோதிடம் ஒரு மூடத்தனம். அதை நம்புவது மூட நம்பிக்கையாகும். ஒன்பது கிரகங்கள் அல்ல. சூரியன் கிரகமல்ல. சந்திரனும் கிரகமல்ல, ராகுவும் - கேதுவும் உண்மையில் இல்லை. கிரகமான பூமியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விளக்கங்களை எடுத்துச் சொன்னதால் பல பேர் அந்த மூட நம்பிக்கையைக் கைவிட்டு விட்டனர்.

பா.ஜ. கட்சி இந்தியாவை ஆளும் கெட்ட வாய்ப்பு ஏற்பட்ட காலத்தில் அதன் கல்வி அமைச்சராக இருந்த முழு மூடர் ஒருவர் ஜோதிடத்தைக் கல்லூரியில் அறிவியல் பாடமாக்கிக் கற்றுக்கொடுக்க ஆணையிட்டார். கற்றுத் தரும் பல்கலைக் கழகங்களுக்குக் கோடிக் கணக்கில் நிதி உதவி தந்தார்.

பணத்துக்காகச் சில பல்கலைக் கழகங்கள், பகுத்தறிவுக்குப் பதில் பணத்துக்கு ஆசைப்பட்டுப் பாடத்தைத் தொடங்கினார்கள்.

அந்த நிலையில் படித்தவர்கள், அறிஞர்கள் மத்தியில் பாடத் திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு. ஜோதிடம் எப்படி அரசியல் ஆகும்? என்கிற அறிவார்ந்த கேள்விக்குப் பதில் கூறத் தெரியாத மத்தியக் கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி திடீர் பல்டி அடித்தார். ஜோதிடம் அறிவியல் அல்ல; ஒரு கலை என்கிற வகையில் கற்கலாமே என்று வழுக்கி விழுந்தார். பல்கலைக் கழகங்கள், பிஎஸ்சி பட்டம் தராமல், பி.ஏ. பட்டம் தருகிறோம் என்று கூறிவிட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் ஒரு பல்கலைக் கழகம், பொட்டி சிறீராமுலு பெயரில் உள்ளது. அதில் ஜோதிடம் படிக்க மாணவர்கள் மோதுகின்றார்களாம். ஜோதிடத்தில் முதுகலை (எம்.ஏ.) படிக்க மோதுகிறதாம் கூட்டம். அதிலும் ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்ற பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர்களிடையே கடும் மோதலாம். நான் முந்தி, நீ முந்தி என்று வந்து விண்ணப்பம் போடுகிறார்களாம். என்ன காரணமாம்? எல்லாம் மூட நம்பிக்கைதான்!

வாஸ்து சாஸ்திரம் பாடத்தில் ஒரு பகுதியாம். இதைப் படித்தால் வாஸ்துப்படி வீடு கட்டித் தருகிறேன் எனக் கூறி மட மக்களை ஏமாற்றலாம். எனவே, கட்டடப் பொறியியல் படித்தவர்கள் சேருகிறார்களாம்.

மருத்துவ ஜோதிடம் ஒரு பாடமாம். மெடிக்கல் அஸ்ட்ராலஜி என்பது அதற்குப் பெயர் வைத்துவிட்டார்கள். அனாடமி படித்த டாக்டர்கள் இந்த ஜோதிடம் படிக்க விண்ணப்பம் போடுகிறார்களாம். அதில் என்ன மருத்துவ முறை இருக்கிறது? ஏழாம் வீடு, பத்தாம் வீடு பார்த்து அறுவை மருத்துவம் செய்வதா?

மருத்துவ சிகிச்சைக்கா இந்திய நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்து வரும் நிலையில் மருத்துவத்திலும் மூட நம்பிக்கை.

வழக்குரைஞர்களையும் விட்டு வைக்கவில்லை இந்த மூட நம்பிக்கை. எந்த நாளில் வழக்கைத் தாக்கல் செய்தால் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இவர்களும் ஜோதிடம் படிக்கிறார்களாம். எங்கே போய் முட்டிக் கொள்வது?

வலுவான சாட்சியங்களோ, சட்டப் பிரிவுகளுக்குச் சாதகமான தன்மையோ, வாதிடும் திறமையோ எதுவும் தேவையில்லை, ஜாதகம் பார்த்தால் போதும் என்று வழக்குரைஞர்கள் இருப்பார்களேயானால், நீதியை எப்படி நிலை நிறுத்துவது?

இப்போதே, நீதியை வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில், இதுவும் சேர்ந்து கொண்டால், நீதி தேவதையை யாரும் கொலை செய்யவேண்டாம். அதுவே தற்கொலை செய்துகொண்டு செத்துப் போகும்!

ஆக்டோபஸ் போல ஆரியம் தன் நச்சுக் கரங்களை நீட்டுகிறது. ஒருமுனையில் சாகடிக்கப்பட்டால், மறு முனையில் பார்ப்பனீயம் தலை தூக்குகிறது. மூட நம்பிக்கையும் அப்படியே புதுப்புது விதங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதை வேரோடுக் கெல்லி எறிந்து கந்தகத் தூளை வைத்துக் கருக்கிச் சாய்த்திடவேண்டும். அதற்குப் பெரியாரே பெருமருந்து!- அரசு -


சோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா?
வானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது.

சோதிடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம்!

சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்!

வேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா!

வானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம்ஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்!

அக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும்!

அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை! குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது!

அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்! எப்படிப் பொருந்தும்.கிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது

கிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும்! வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது! அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது.

அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர்! கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா?

சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது!

சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல! அறிவுக்கும் பொருந்தாதது!

இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.

எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது! எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல! நம்பத் தகுந்ததும் அல்ல!

நட்சத்திரங்களின் தூரம்(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)
ரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு ரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு

கடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு சிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு கன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு

கன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு விருச்சிக ராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு மகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு

மிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்!
சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு! விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட்!

சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது!

சூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்!

நட்சத்திரங்களின் ஆற்றல்!
ரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது!

அந்த நட்சத்திரக் கூட்டத்தின் குறுக்களவு 33 ஒளியாண்டு! வயது 100 கோடி ஆண்டு!ஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.சுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.கேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி!

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.

நமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு! அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.

குறி பார்த்தல்-
மூடநம்பிக்கைகளில் சில வற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண்டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன.
இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம்.

சில மூடநம் பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது. இந்தக் காரணமொன்றே பல பொய் நம்பிக்கைகளின் மேல் வைத்துள்ள விஸ்வாசத்திற்கு ஆதாரமென அறிதல் வேண்டும்.

நமது ஆசையின்படியே விஷயங்கள் நமக்கு அனுகூலமாகவே வேண் டுமென்ற மனப்பான்மை பெரும்பாலாருக்குண்டு.

இந்த மனப்பான்மையாலேயே ஜோசியத்தின் மேலும், ஜாதகத்திலேயும், குறி சொல்லும் விஷயங்களிலேயும், கைப்பார்ப்பதிலேயும், மை போட்டுப் பார்ப்பதிலேயும் நம்மவர்களில் பலருக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது.

கஷ்டப் படாமலே நமக்குச் செல்வம் வராதா?
நாம் முயற்சி செய் யாமலே நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்பிவர மாட்டார்களா?
உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வமும், கீர்த்தியும் வராதா?


என்ற நோக்கங்கள் நமது மனத்தில் அடுத்தடுத்து எழுவதால் ஆரூடம் என்ன தெரிவிக்கின்றது. குறி சொல்லுகிறவன் நமக்கு என்ன ஆதாரமளிக்கின்றான்? கைரேகை என்ன குறிக்கின்றது? என்று அவாக் கொண்டு இந்த மோச வார்த்தைகளின்மேல் நம்பிக்கை வைக்கின்றோம்.

குறி சொல்லும் விஷயங்களில் நமது பாமர ஜனங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. நமக்குப் பல குறைகள் நேரிடுகின்றன. இந்தக் குறைகளை நீக்கிக் கொள்ள ஆசை மேன்மேலும் உண்டாவது சகஜம்.

இந்த ஆசையால் குறி சொல்லுகிறவன் சொல்லை நம்ப நேரிடுகின்றது. அவன் சொல்லுவது மெய்யோ, பொய்யோ, நம்முடைய கோரிக்கையின்படி நிறைவேறும் என்று அவன் சொல்லுகின்ற படியால், அவன் சொல்லின் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது.

குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.
குறி மேடையில் குறி சொல்லுகின்றவர்களில் பலர் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எளிதில் கோபம், சந்தோஷம் அடைவார்கள். இவர்களுடைய ஆடம்பரங்கள் பாமர ஜனங்களின் மனத்தை உருகச் செய்து விடுகின்றன. உடுக்கை, சிலம்பு முதலிய வாத்தியங்கள் குறிகேட்க வந்திருப்போரை ஓர்வித மயக்க முண்டாக்கக் கூடியதாக இருக்கின்றன.
குறி சொல்லும் இடங்களில் மதுரை வீரன் படமும், அதில் குதிரைச் சவாரி நாய்களுடன் செல்வதாக வரையப்பட்டுத் தொங்கவிட்டிருக்கும்.

குறி சொல்பவனும், பகல் வேஷத்திற்குரிய திருநீறு, குங்குமம் திரேக முழுமையும் பூசி கொண்டு, கழுத்தில் பொன், உத்திராக்கம், கைகளில் பொன் தோடா, பட்டாடை முதலிய வஸ்திரங்களை அணித்து, உடுக்கைச் சிலம்புடன் அவன் இஷ்ட தேவதையை வசியமாக்க முயற்சி செய்வான்.

இந்த வேஷங்களைக் கண்டோர் மயங்கி விடுகின்றார்கள். இவர்கள் மயக்கத்தை அதிகரிக்க, உடுக்கையையும், சிலம்பையையும் உரத்துத் தட்ட ஆரம்பிப்பான்.
அவனுக்கு ஆவேசமும் வருவதாக நடிப்பான்.

இந்த ஆவேசத்திற்கு வேண்டிய மதுபானமும் அருந்துவதோடு, புட்டியிலும் சாராயம் மதுரை வீரனுக்காகப் படையல் போட்டிருக்கும். வேலை ஒன்றுமில்லாத வீணர்கள் அந்தக் குறிமேடைகளில் சென்று பக்திவான்களைப் போல நடிப்பார்கள்.

இந்தச் சூதை அறியாத பெண்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பார்கள். இவைகளை ஏதோ அலட்சியமாகக் கேட்டு, அதற்கு ஏதோ ஓர் பரிகாரத்தைத் தெரிவிப்பான். இந்த பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து கையிலிருக்கும் பணத்தையோ, நகையையோ, தட்சணையாகக் கொடுப்பார்கள். இந்த விதமாக அந்தப் பெண்கள் மதிமோசம் போவார்கள்.

முக்கியமாக, ஸ்தீரிகள் பிள்ளை வரம்பெறக் குறி மேடைகளுக்குப் போவதைப் பார்க்கலாம் அல்லது தனக்கும் தனது புருஷனுக்குமுள்ள மனஸ்தாபத்தைக் குறித்துக் குறி கேட்கப் போவதுமுண்டு.

இந்த இரண்டு விஷயங்களைக் குறி சொல்லுகிறவன் எப்படித் தீர்ப்பானோ என்று விசாரிப்பதே கிடையாது.

இதைப் போன்ற மூடநம்பிக்கையைக் காண்பதரிது. பிள்ளை பிறப்பதற்கு ஆண் பெண் இருவர் திரேகம் தக்க பருவத்தில் இருத்தல் வேண்டும் ஆயிரக்கணக்கான ஸ்தீரி புருஷர்களுடைய திரேகம் பக்குவப்பட்டு இருப்பதால், அவர்களுக்குச் சந்ததி விருத்திக்குத் தடையொன்றுமில்லை.

ஆனால், ஏகதேசமாக ஏதோ ஒருவர் இருவருக்குத் திரேக பக்குவமில்லாமல் இருக்கும்;

அதனால் கர்ப்பம் தரிக்க முடியாமற் போகும். இதனையும் தீர்த்துக் கொள்ள அவுஷதங்களும், சிகிச்சைகளும் இருக்கின்றன.மலட்டு ஸ்தீரி புருஷர் சிற்சில சிகிச்சையால், சந்தான விருத்தி பெறுகிறார்கள். அப்படியும் சிலருக்குக் குணப்படுவதில்லை.

மலட்டு ஸ்தீரி புருஷர்களைப் போல் மலட்டும் ஆடும், மாடும், புழுப் பூச்சிகளும், செடிகளும், மரங் களும் உலகில் ஏகதேசமாக இருக்கின்றன. விளையாத நிலங்களும் சில இருக்கின்றன.

இவைகளை ஏதாவது செடி, மரம், புழு, பூச்சி, ஆடு, மாடு களை உற்பத்தி செய்ய மதுரை வீரனால் முடியாதிருக்க, ஸ்தீரி புருஷர்களை மாத்திரம் பிரஜா விருத்தி செய்வதென்றால் யார் நம்புவது?

இதை உன்மத்தர்கள்தான் நம்பக்கூடும்!

பிரஜாவிருத்திக்குத் தடையை நீக்க டாக்டர்களுக்கே தெரியுமே அல்லாது மோசக்காரர்களாகிய குறி சொல்கின்றவர்களுக்கு ஒன்றும் தெரியா. மதுரை வீரன் படத்தாலும் உடுக்கை சிலம்பாலும், தீபத்தின் சுடர் அசைவாலும் மலட்டுத்தனம் நீங்குமாயின் இவ்வளவு சுளுவாகக் கோடானு கோடி கறம்பு நிலங்களை விளைய வைக்கலாமே! -- ம. சிங்காரவேலர்--viduthalai.com
--------------------------------
மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .

பஞ்சாங்கம் பார்ப்போமா அறிவியல் அடிப்படையில்? .குளிகை நேரத்தில் செய்யப்படும் செயலை அடிக்கடிச் செய்ய நேரிடுமாம். தாலி கட்டினால் அடிக்கடி தாலி கட்டவா ?

ஏதோ கூட்டல், கழித்தல் போட்டு கை விரல்களை அப்படியும், இப்படியும் மடக்கி செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அறிவு ஜோதிடர்கள் தலைக்குள்ளே ? விளக்கம் வருமா?

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: