Followers

Thursday, June 5, 2008

`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி ஏமாந்து நிற்க்கும் இந்தியர்கள்

விண்வெளியில் வேலை கிடைக்கும்' என்று விளம்பரம் செய்தால் கூட ஏமாறத் தயாராக இருப்பவர்களின் நாடு நம்நாடு.

அந்த அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் இங்கே வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் என்று போய் ஏமாறுவதுதான் இந்தியர்களின் வழக்கம். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒரு நாடும் சேர்ந்திருக்கிறது. அந்த நாடு, உலக வல்லரசான அமெரிக்கா.

`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி அங்கே போய், கட்டிய பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன் `அபுகாரிப் சிறை' ஸ்டைலில் பல சித்திரவதைகளையும் அனுபவித்து இருக்கிறார்கள் அப்பாவி இந்தியர்கள்.

அவர்களில் தமிழர்களும் அடக்கம். இதைக் கண்டித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து, அதில் நான்குபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

வாஷிங்டனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.

``மும்பையைச் சேர்ந்த `திவான் கன்ஸல்டன்ஸி' என்ற நிறுவனம்தான் இந்த மோசடியின் ஆரம்பப்புள்ளி. `அமெரிக்காவில் நிரந்தர வேலை, கிரீன் கார்டு மற்றும் கைநிறைய டாலர்களில் சம்பளம்' என்று அந்த நிறுவனம் தந்த விளம்பரத்தை நம்பி அணுகினோம்.

சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். அமெரிக்க வேலைக்கு ஆளுக்கு ஆறு லட்ச ரூபாய் கட்டச் சொன்னார்கள். நேர்முகத் தேர்வை அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து நடத்தியதால், யாருக்கும் துளிகூட சந்தேகம் வரவில்லை.

தலையை அடகு வைத்து 550 பேர் ஆறுலட்ச ரூபாய் கட்டி, அவர்கள் நீட்டிய ஏராளமான காகிதங்களில், கேட்ட இடத்தில் கையெழுத்துப் போட்டோம். மருத்துவப் பரிசோதனை, பயணச் செலவு என்று வேறு தனியாகப் பணம் கறந்து கொண்டார்கள்.

2006 டிசம்பரில் அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள `சிக்னல் இன்டர்நேஷனல்' என்ற கட்டுமான நிறுவனத்தில் வெல்டர் மற்றும் பைப் ஃபிட்டர் வேலையைக் கொடுத்தார்கள்.

அதன்பின்புதான், பிரச்னையே ஆரம்பம். அங்கே எங்களுக்குத் தரப்பட்ட தங்குமிடம் என்ன தெரியுமா? வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய லாரிகள். ஒரு லாரிக்கு நான்குபேர் என்ற ரீதியில் படுக்கைகளைப் போட்டு எங்களைத் தங்க வைத்தனர். சரியான கழிப்பிடம், காற்றோட்ட வசதி எதுவும் இல்லை. இதற்கும், உணவுக்கும் சேர்த்து தினமும் முப்பத்து நான்கு டாலர் (ரூ.1600) பிடித்துக்கொண்டார்கள்.

எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு பன்னிரண்டு டாலர்தான் (ரூ.550தான்) சம்பளம். தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. இந்த நொள்ளை சம்பளத்தில் தங்குமிடத்துக்கும், உணவுக்கும் வேறு அவர்கள் பணம் பிடுங்கியதால் பதறிப்போனோம். அதைவிட குறைந்த செலவில் வெளியே தங்க முடியும் என்றாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

அப்படியே போய்த் தங்கினாலும் கூட ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப்படி 34 டாலர்களைத் தந்தே ஆக வேண்டும் என்று மிரட்டினார்கள்.

இதைத் தட்டிக்கேட்ட ஒருவரை அந்த நிறுவன அடியாட்கள், கடுமையாகத் தாக்கி பொய் கேஸ் போட்டு போலீஸில் பிடித்துக் கொடுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்த 120 பேரின் விசா காலம் முடிந்ததும், நிபந்தனைப்படி அதை நீட்டிப்புச் செய்யாமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அந்த நிறுவனம் முடிவெடுத்தது. லட்சக்கணக்கில் பணம் கட்டி இங்கு வந்த எங்களுக்கு அது பேரிடியாக இருந்தது.

வேறு வழியில்லாத நிலையில் எங்களில் சுமார் 250 பேர் அந்த லாரி குடியிருப்பிலிருந்து கடந்த மார்ச் மாதம் தப்பி, அமெரிக்கத் தொண்டு நிறுவனமொன்றில் அடைக்கலம் புகுந்தோம்.

எங்களுக்குத் தங்குமிடமும் உணவும் தந்த அந்தத் தொண்டு நிறுவனம், மேற்படி கம்பெனி மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணை காரணமாக எங்களின் விசா காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விசா முடியப்போவதால், அதற்குள் எங்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசை வலியுறுத்தி, நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வாஷிங்டன் வரை நடைப்பயணம் மேற்கொண்டோம்.

இறுதி முயற்சியாக,மே 14-ம்தேதி வெள்ளை மாளிகை முன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். தற்போது 17 பேர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள். பத்து நாட்கள்தான் போராட்டம் நடத்த அனுமதியுள்ள நிலையில், உண்ணாவிரதமிருந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 24-ம்தேதியில் இருந்து இந்தியத் தூதரகம் முன்பு அறப் போராட்டம் தொடங்கியுள்ளது'' என்றனர் அவர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த `ஐந்தாவது தூண்' என்ற தொண்டு நிறுவனத் தலைவர் விஜய் ஆனந்த் என்பவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். அவரிடமும் பேசினோம்.

``இந்தியர்களின் இந்தப் பிரச்னை குறித்து இந்தியத் தூதரிடம் மனு கொடுத்தோம். பதினைந்து நாள் கழித்து அவரைப் பார்த்தபோது, `இன்னும் அந்த மனுவைப் பிரித்துப் பார்க்கவில்லை. வேறு மனு கொடுங்கள்' என்று கூறி அதிர வைத்தார்.

தூதரகம் முன்பு உண்ணாவிரதமிருப்பவர்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு போராடுகிறார்கள். அதில் ஒருவருக்குப் பிறந்தநாள் என்ற நிலையில், உயிருக்கே ஆபத்தான நிலையிலும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கிறார்'' என பரிதாபப்பட்டார் விஜய் ஆனந்த்.

சென்னையில் உள்ள `மனிதம்-மனித உரிமைகள்' அமைப்பின் செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியமும் அமெரிக்காவில் நடக்கும் அந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். அவரிடமும் பேசினோம்.

``மனித உரிமைகளைப் பெரிதாக மதிக்கும் நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இப்படி 550 இந்தியர்களை இரும்புக் கொட்டகை போன்ற லாரிகளில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தட்டிக்கேட்டவர் மீது பொய்ப் புகார் கொடுத்து போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், அந்த ஊர் போலீஸாரும் மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள் என்றுதானே அர்த்தம்?

கிரீன் கார்டு தருகிறோம்;நிரந்தர வேலை தருகிறோம் என்று ஏமாற்றியிருக்கிறார்கள். இதை நம்பி மனைவியின் நகை, சொத்துக்களை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் பலர் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்களது கதி இப்படியாகி விட்டதால், வீட்டில் இருப்பவர்கள் வேறு வேலைகளுக்குப் போய் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களது `வெளிநாட்டு இந்தியர்களின் உரிமை பாதுகாப்பு அமைப்பு' சார்பில் ஜூன் முதல் தேதி சென்னையில் கூட்டம் நடத்தப்போகிறோம். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து விவாதிக்கப் போகிறோம்'' என்றார் அக்னி சுப்பிரமணியம்.

அமெரிக்காவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜு மேகநாதன் என்பவரின் மனைவி சரஸ்வதியைச் சந்தித்தோம். ``அமெரிக்க வேலையை நம்பி பல இடங்களிலிருந்து பிய்த்து பிறாண்டி ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி மும்பை ஏஜெண்டுக்குக் கொடுத்தோம். ஆனால், இன்று எங்கள் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டது. என் கணவருக்கு வேலை கிடைக்குமா? அல்லது வெறும் கையோடு திரும்பி வருவாரா? தெரியவில்லை. இந்தக் கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்றார் சரஸ்வதி. அவரது குரலில் வழிந்தோடிய சோகம் தீரும் நாள் எப்போது என்பதுதான் தெரியவில்லை. ஸீஸீ வே. வெற்றிவேல் kumudam.com
---------------------------------------

ஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: