Followers

Tuesday, May 13, 2008

இரையாகும் இணைய தளங்கள். கொள்ளை போகும் அரசு ரகசியங்கள். இந்தியா X சீனா.

Cyber War கணிப்பொறி யுத்தம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.
திபெத் விவகாரமாக இருந்தாலும் சரி, அருணாச்சல் பிரதேச பிரச்னையாக இருந்தாலும் சரி, ஒருபக்கம் கைகுலுக்கிக்கொண்டே இன்னொரு பக்கம் கட்டிப் புரள்வது வழக்கம்.

துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் வார்த்தைகளாலும் மோதலில் ஈடுபட்டு அலுத்துப் போய்விட்டது போல சீனாவுக்கு. தற்போது இந்தியாவுடன் மோதுவதற்கு நூதனமான, அதேசமயம் கொஞ்சம் காஸ்ட்லியான வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர், Cyber War தமிழில் கணிப்பொறி யுத்தம்.

‘இந்தியாவுக்குச் சொந்தமான இணையதளங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, அவற்றில் பொதிந்திருக்கும் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு, அவற்றை அழிக்கும் அல்லது மாற்றியமைக்கும் காரியத்தில் சீனாவைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.’

சீனா தொடுத்துள்ள சைபர் யுத்தத்தின் சாரம் இதுதான். இந்தியாவின் வெளியுறவு ரகசியங்கள் கொள்ளை போகும் அளவுக்கு விஷயம் வீரியமிக்கது என்பதால் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது இந்த சைபர் யுத்தம். இதுபற்றிக் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

நமக்குச் சொந்தமான இணையதளத்தில் நாம் சேமித்து வைத்துள்ள தகவல்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதில் நுழைவதற்காக நமக்கென்று சில பாஸ்வேர்டுகள் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி நாம் உள்ளே செல்லலாம். பார்க்கலாம். திருத்தம் செய்யலாம். அதேபோல எதிரிகள் எந்தவித பாஸ்வேர்டும் இல்லாமல் தங்களுக்கு இருக்கும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, நமது இணையதளத்துக்குள் ஊடுருவி விடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு ஹேக்கிங் (Hacking) என்று பெயர்.

அப்படி ஹேக்கிங் செய்து உள்ளே நுழைபவர், நம்முடைய தகவல்களை வெறுமனே படித்துவிட்டுச் செல்லலாம். தேவைப்பட்டால் அந்தத் தகவல்களை பிரதி எடுத்துக் கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் அழித்துவிடலாம் அல்லது இருக்கும் தகவல்களை எல்லாம் அழித்துவிட்டு, புதிய தகவல்களை தப்பும் தவறுமாகவோ, உண்மைக்கு மாறாகவோ, ஆபாசமாகவோ என்று எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துவிட்டுச் செல்லலாம்.

இதன்மூலம் நம்முடைய இணையதளத்தின் முகமே அடியோடு மாற்றப்பட்டுவிடும். இதற்கு ஆங்கிலத்தில் வெப்சைட் டீஃபேஸ்மெண்ட் (Website Defacement) என்று பெயர். பச்சையாகச் சொல்லவேண்டும் என்றால் நம்முடைய தகவல்கள் மீது தார் பூசுவதுதான் அவர்களுடைய நோக்கம்.

சீனாவைச் சேர்ந்த ஹாக்கர்கள் அத்துமீறி நுழைந்தது எந்த இணையதளத்துக்குள் என்று தெரிந்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒருசேர வரும்.

ஆம். அவர்கள் நுழைந்தது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கான அதிகாரப்பூர்வ இணையதளம். நுழைந்தவர்கள், அவற்றில் இருந்த மத்திய அமைச்சர்கள், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவின் ஆயுத பலம், ஆயுதங்கள் வாங்கும் இடங்கள், அவற்றைத் தயாரிக்கும் இடங்கள் ஆகியன பற்றியும் தேடியுள்ளனர்.

இதுமாதிரியான அத்துமீறல் காரியங்களுக்கு சீனாவைச் சேர்ந்த சைபர் கில்லாடிகள் இரண்டு வகை ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர். போட்ஸ்(BOTS) மற்றும் கீ லாக்கர்ஸ் (Key Loggers). போட்ஸ் என்பது ஒருவகை கம்ப்யூட்டர் புரொக்ராம். இதைப் பயன்படுத்தி நம்முடைய இணையதளத்தைக் கைப்பற்றி, பிறகு அதனோடு தொடர்புடைய கணிப்பொறிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

பிறகு அவருடைய விருப்பப்படி கட்டளையிட்டு எப்படி வேண்டுமானாலும் இயக்கச் செய்ய முடியும். இது மிகவும் ஆபத்தானது. தகவல்களும் ரகசியங்களும் கொள்ளை போவதைத் தடுப்பது அத்தனை சுலபமில்லை.

கீ லாக்கர் என்பது ஒரு மென்பொருள். இதை உங்கள் இணையதளத்தில் பொருத்தி விட்டால், பிறகு அவற்றில் நீங்கள் செய்யக்கூடிய அத்தனை மாற்றங்களையும் சிந்தாமல் சிதறாமல் கண்காணித்து, அதைப் பொருத்தியவருக்குத் தகவலாகக் கொடுத்துவிடும். இதன்மூலம் நீங்கள் ‘ரகசியம் என்று சொல்லும் அத்தனை விஷயங்களும் ஊரறிந்த ரகசியங்களாகிவிடும்.

எல்லாம் சரி.. இணையதளங்களுக்குள் ஊடுருவியவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்தவொரு இணையதளத்துக்குள் நாம் நுழையும்போதும் நம்முடைய ஐ.பி முகவரி (IP Address) அதில் பதிவாகிவிடும்.

அப்படி வெளியுறவுத் துறை இணையதளத்தை ஊடுருவியவர்களின் ஐ.பி முகவரிகள் சீனாவைச் சேர்ந்தவையாக உள்ளன. இதுதான் இந்திய அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. எதற்காக சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட வேண்டும்? இதற்கு மூன்று விதமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

*இந்திய அரசின் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்காக.

* அண்டை நாடுகளுடனான எதிர்காலத் திட்டங்கள் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக.

* இந்தியாவின் திட்டங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களுடைய வியூகங்களை மாற்றி, அதன்மூலம் இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு நகர முடியாமல் முடக்கிப் போடுவதற்காக.

* இவற்றில் ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம் அல்லது மூன்றுமே காரணங்களாக இருக்கலாம் என்று வலியுறுத்துகின்றனர் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

அதிர்ச்சிகள் நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வெறுமனே வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தோடு தங்களுடைய ரகசிய வேட்டையை அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை.

இந்திய அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் பலவற்றையும் குறிவைத்து அவர்கள் களமிறங்கியுள்ளனர். இதன் விளைவாக, இந்தியா முழுக்க கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இணையதளங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 612 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தத் தகவல்களைக் கொடுத்தது, ‘கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்’ என்ற கண்காணிப்புக் குழுவின் அறிக்கை.

ஹேக்கிங் மற்றும் டீஃபேஸிங்கால் பாதிப்புக்கு உள்ளான இணையதளங்களில் பெரும்பாலானவை, co.in, net.in, gov.in, org.in, net.in, res.in என்று முடிபவையே.

இவற்றில் gov.in என்பது இந்திய அரசுக்குச் சொந்தமானது. முக்கியமாக, நேஷனல் இன்ஃபர்மேடிக் சென்டர் (இந்திய அரசின் கணிப்பொறி மற்றும் இணைய நெட்வொர்க் இயங்குவதற்கு இதுதான் பிரதானம்) இணையதளமும் ஊடுருவலுக்கு இலக்காகி உள்ளது. நம்முடைய ரகசியங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து அரசு அதிகாரிகளை உறைய வைத்துள்ளது. என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் இந்த ஊடுருவல் தாக்குதல் இந்திய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற ஊடுருவலில் ஈடுபட்டுவரும் சீனா, கடந்த ஆண்டு அமெரிக்காவின் முக்கிய ஸ்தாபனமான பெண்டகனின் இணையதளத்துக்குள் ஊடுருவியது பெரிய அளவில் பிரச்னைகளை உருவாக்கியது.

‘கடந்த பதினைந்து ஆண்டுகளாக இம்மாதிரியான ஊடுருவல் முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறது. தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. ஆகவே, இதனை சரியான எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பதில் ஆகவேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும்’ என்கிறார் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஆர். பார்த்தசாரதி.

‘இந்த மென்பொருள் ரீதியான திருட்டைச் சமாளிக்க மாற்று யுக்திகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது’ என்று கூறியிருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா.

சீனா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை என்று சம்பிரதாய பாணியில் மறுத்துள்ளார் இந்தியாவுக்கான சீனத் தூதர். எது எப்படி இருந்தாலும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் ராணுவம் தொடர்பான ரகசியங்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தி, அவை எந்த வகையிலும் கொள்ளை போய்விடக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டியது அரசின் பொறுப்பு! --ஆர். முத்துக்குமார்.

கிறித்தவ பாதிரியார் கைது : ஜெபம் செய்தால் பிணியாளி உயிர் பிழைப்பார் ? இறந்த உடலுடன் 60 நாள்கள் வாழ்ந்த குடும்பம்.

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

No comments: