Followers

Thursday, May 1, 2008

பசிக்குது, கொஞ்சம் பழைய சோறாவது போடம்மா! பசியெடுக்காத வரத்தை உனக்குத் தருகிறேன்.

கடிகார மொய் - நம்முடைய இந்து மதம் இருக்கிறதே, இதுமாதிரி விசித்திரமான மூடநம்பிக்கைகள் கொண்ட மதம் உலகத்தில் எதுவுமே கிடையாது என்பதை எல்லாரும் சொல்கிறார்கள்.

அறிவிருப்பவர்கள்! ஏற்றுக் கொள்கிறார்கள்.பாருங்களேன்,

எந்த மதக் கடவுளாவது கல்யாணம் பண்ணிக் கொள்கிறதா? அதுவும் வருஷா வருஷம்?

இந்த மதத்தில்தான் இந்தக் கூத்து. அதிலும் கொடுமை கடவுளின் மனைவியும் கடவுளாகி விட்டது. இந்த நிலையில் கடவுளும் கடவுளச்சியும் கல்யாணம் செய்து கொள்வதைத் திருவிழா வாகவே ஆக்கி விட்டார்கள். இந்த மாதத்தில் இந்தக் கன்றாவிதான் ஊருக்கு ஊர்.

சென்னைக்கு அடுத்த பெரிய ஊர் மதுரை. அங்கே மீனாட்சி என்னும் கடவுளச்சியின் ஆட்சி என்று பெருமை பொங்கப் பேசும் பேதைகள் மாநகராட்சி மேயரையோ, மாவட்ட ஆட்சித் தலைவரையோகூட மறந்து விடுவார்கள். எல்லாமே மீனாட்சி தான் என்பார்கள்.

ஆனால் குடும்ப அட்டைக்கு தாசில்தாரிடம் வருவார்கள். இலவச டி.வி. பெட்டிக்கும் அவரிடம்தான் வருவார்கள். ஏன்? விளக்கம் சொல்லத் தெரியாது.

இந்த மீனாட்சிக்கும் சுந்தரேசனுக்கும் கல்யாணம். அதையாவது இவர்கள் இரண்டு பேரும் செய்தார்களா என்றால் இல்லை!

எண்ணெய்ச் செக்குபோல இருக்கும் இரண்டு பார்ப்பனர்கள் (இதிலும் அவாளே! வேஷம் கட்டிக் கொண்டு தாலி கட்டிக் கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட சாமிகள். மூளை கெட்ட பக்தர்கள்.
நிற்க, கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதினார்களாம். சாப்பாட்டுக்கு முந்தி எழுதினார்களா? சாப்பிட்டு விட்டு எழுதினார்களா? விவரம் இல்லை. சில ஊர்களில் தனி நபர் திருமணங்களில் `மொய் எழுதி விட்டுச் சாப்பிடலாம் என்றே ஒலிபரப்புவார்கள். அதுபோல மீனாட்சி கல்யாணத்தில் செய்தார்களா என்பது தெரியவில்லை.

மொய் எழுதுபவர்களுக்கு ஒரு கோரிக்கை பணமாக வைப்பதற்குப் பதில் நூல்களை வாங்கித் தரும் பழக்கம் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது இல்லை. இதனால் நூல்கள் அதிகம் மக்களைச் சென்று அடையும் வாய்ப்பு அடைக்கப்பட்டு விட்டது.

இதனை நீக்கிடும் வகையில் நூல்களை அளிக்கும் பழக்கம் தொடரப்பட வேண்டும் என்றார் மானமிகு கலைஞர். பக்தர்கள் அதைக் கடைப்பிடிப்ப திலும் பெருத்த சிக்கல் உண்டு.

கடவுளுக்கும் கடவுளச்சிக்கும் படிக்கத் தெரியுமோ என்னமோ? தெரிந்திருந்தாலும் மதுரையில் உள்ள பொம்மைகள் எப்படிப் படிக்கும்? இதுகள்தான் தாலி கட்டுவதையே வேறு ஆளை வைத்துச் செய்து கொள்கின்றனவே!

மொய்ப் பணம் தருவதற்குப் பதிலாக பயன்படக் கூடிய பொருளாகக் கூடத் தரலாம்! அப்படிச் செய்ய விரும்புவர்களுக்கு ஒரு யோசனை. ஒரு அலாரம் கடிகாரம் வாங்கி மொய் எழுதுங்கள்.

மீனாட்சியின் அண்ணனுக்குப் பயன்படும். அந்த ஆள்தான் வருஷா வருஷம் லேட்டாக வந்தே வாங்கிக் கட்டிக் கொள்கிறான். அந்தக் கள்ளனையாவது காப்பாற்றலாம். பக்தர்களுக்குப் ``புண்ணியமாகப் போகட்டும்.
---------------------------------------
3 நாளில் 16 அவதாரம்
உள்ளூர்க் கடவுள்களின் காட்டு விலங்காண்டித்தனம் இப்படி என்றால், ஒரிசா நாட்டுக் கடவுள் சங்கதி வேறுவிதமாக உள்ளது.

இந்திய நாட்டு வாழ்த்துப் பாடலில் நம் நாட்டுக்கு அடுத்து அந்தநாடுதான் குறிப்பிடப்படுகிறது. `திராவிட உத்கல வங்கா என்று வருகிறதே, அந்த உத்கல் நாடுதான் இன்றைய ஒரிசா.

அங்கே ஒரு கடவுள். விஷ்ணு மதக் கடவுள். சிவ மதக் கடவுள் அல்ல. (அப்படியானால் இந்து மதக் கடவுள் என்பதுதான் எது?) பேர், நாராயண் கோசாய்ன் என்பது. இதை ஒரு குட்டையில் ஊறப்போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே வெளியே தூக்கி வந்து வித்தை காட்டுகிறார்கள். ஜாஜ்பூர் மாவட்டக் கடவுளாம் இது. இருக்குமிடம் சிங்காப்புர் கிராமம். ஒரிய மக்களின் புத்தாண்டு நாளன்று மட்டுமே தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கிறார்கள்.

அய்ந்து ஏக்கர் பரப்பளவில் ஏரி. அதன் நடுவே ஒரு கான்க்ரீட் மேடை. அதற்குக் கீழே பள்ளம். அந்தப் பள்ளத்தில் போட்டு அமுக்கி வைத்திருக்கும் கடவுள். ஆறடி உயரக் கருங்கல் சிலை. இந்தச் சடங்குக்குப் பெயர் ஜலகேளி.

நீரில் துள்ளி விளையாடும் நிகழ்ச்சியாம் இது. மரக்கட்டை நீரில் மிதக்கும். கருஞ்கல் அமிழ்ந்து போகும். இந்தச் சாமி கருங்கல். எப்படி துள்ளி விளையாடும்? எப்படி ஏமாற்றுகிறான் பாருங்கள்.

மூழ்கிக் கிடக்கும் கல்சிலையை வெளியே எடுப்பதுகூட கள்ளழகன் வைகை ஆற்றில் இறக்கப்படுவது போன்ற மூடக் கூத்துதான். அந்தப் பகுதியின் பழைய அரச வமிசத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பழைய வழக்கப் படியே பல்லக்கில் தூக்கி வரப்பட்டு ஏரிக் கரைக்கு வருவாராம்.

கோயிலுக்கு நாராயண் கோகெய்ன் எழுந்தருள வேண்டும் என்று குரல் கொடுப்பாராம்.சாமி குதித்துக் கொண்டு குளத்திலிருந்து வெளியே வந்து விடுமா? அதுதான் இல்லை!

25-30 பேர் சேர்ந்து குளத்தில் இறங்கிக் கடவுளை இழுத்து மேலே கொண்டு வந்து தரையில் வைப்பார்களாம். அங்கே கடவுள் 16 அவதாரம் எடுக்குமாம். அது எங்கே எடுக்கிறது? எல்லாம் பக்தர்கள் செய்யும் மேக்அப் மாறுதல் தானே!

புதுப்புதுத் துணிகளை பொம்மையின் இடுப்பில்கட்டி அவதாரம் 16 என்று கதை விடுகிறார்கள். இந்த ஒப்பனை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றி மாற்றிச் செய்யப்பட்டு 16 என கணக்குக் காட்டுவார்கள். மூன்று நாள் கழித்து மீண்டும் தண்ணீரில் மூழ்கடித்து விடுவார்கள்.

இந்த வகையில் செய்யப்படும் 16 அவதாரங்களையும் ஒருவர் பார்த்து விட்டால் அவருக்கு முக்தி கிடைத்து விடுமாம். முக்தி என்றால், இனிமேல் பிறப்பே இல்லாத நிலையாம். மறு பிறப்பு நம்பிக்கை உள்ள இந்து மதத்தில் தான் இந்த நிலை.

திருவாரூரில் பிறந்தால் முக்தியாம், காசியில் செத்தால் முக்தியாம், சிதம்பரத்தைப் பார்த்தாலே முக்தியாம், திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தியாம்.
எவ்வளவு குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தருகிறது இந்து மதம் பார்த்தீர்களா?

இதுவும் நிற்க, ஆண்டு 365 நாள்களில் 362 நாள்களுக்குத் தண்ணீரில் மூழ்கியே கிடக்கிறதே, இந்தச் சாமி ஏன்? இது என்ன தண்டனையா? அல்ல, இந்தச் சாமியின் சோதாத்தனம்.

முகுந்ததேவ் என்பவன் உத்சல நாட்டை கி.பி. பி68-இல் ஆண்டபோது கலபஹாத் எனும் வேற்று நாட்டான் படையெடுத்து வந்தானாம். பூரியின் ஜெகன்னாத் கோயிலை இடித்துப் பயங்கரத்தை ஏற்படுத்தி விட்டு இந்த ஜாஜ்புர் வந்தானாம்.

உடனே, கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த மதுப்புர்கார் மன்னன் ஏரியில் தூக்கிப் போட்டு விட்டான். அதன் பின்னர் கடவுள் கனவில் வந்ததாம். பகைவனை ஒன்றும் செய்ய முடியாதக் கையாலாகாதக் கடவுள் கனவில் தானே வர முடியும்?

வந்து வருடப் பிறப்பன்று என்னைக் கும்பிட்டால் போதும் என்று கூறிப் பயந்த பக்தர்களுக்குச் சலுகை தந்ததாம்.
பகைவனிடமிருந்து பக்தர்களைத்தான் காப்பாற்ற முடியவில்லை; தன்னையாவது காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் முக்தி தருகிறதாம்!

தந்தை பெரியார் ஒரு கதை சொல்வார். அம்மா, பசிக்குது, கொஞ்சம் பழைய சோறாவது போடம்மா! பசியெடுக்காத வரத்தை உனக்குத் தருகிறேன் எனக் கேட்டப் பிச்சைக்காரனைப் போல ஒரிசா கடவுள் இருக்கிறதா, இல்லையா? -- சு. அறிவுக்கரசு
viduthalai.com/20080426/

No comments: