Followers

Friday, May 30, 2008

அய்யப்ப மூட பக்தர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

“மகர விளக்கு மனிதன் ஏற்றுவதுதான் கடவுள் சக்தி ஒன்றும் கிடையாது:”-சபரிமலை தந்திரி ஒப்புதல்.

பொன்னம்பலமேடு பித்தலாட்டம் அம்பலம்!
கேரள மந்திரியும் கூறுகிறார்.

மோசடியை அரசு தடை செய்யுமா?

திருவனந்தபுரம், மே 29- ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த அய்யப்பன் பொம்மையை வைத்துக் கோயில் கட்டிக் கும்பிடும் சபரிமலைக்கு சற்றுத் தூரத்தில் பொன்னம்பலமேடு எனும் காட்டுப் பகுதியில் பொங்கல் நாளன்று மூன்று முறை தீ எரிந்து அணையும்.

இதை மகரவிளக்கு என்று கூறி, தெய்வாதீனமாக இது நடப்பதாகப் புளுகி, மக்களை ஏமாற்றி, அவர்களின் கடவுள் நம்பிக் கையை மலிவான முறையில் முதலீடாக்கி சபரிமலை கோயிலும், குருக்களும், கேரள அரசுகளும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

புத்தியை இழந்து பக்தியில் ஆழ்ந்த, மூட பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்குச் சென்று வருவதன்மூலம் கேரள தேவஸ்வம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் கோடிக் கணக்கில் வருமானம் ஆண்டு தோறும் குவிந்து வருகிறது.

இதை இழக்க விரும்பாத இவர்கள், இந்த மோசடியை நீடிக்க அனுமதித்து வந்தார்கள். கேரளப் பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் இந்த மோசடியை அம்பலப்படுத்திய போதெல்லாம் அவர்கள்மீது காவல்துறை அடக்குமுறையும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.

கேரள மின்வாரிய ஊழியர்களின் கூட்டு மோசடியால் பொன்னம்பலமேடு காட்டுப் பகுதியில் நெருப்பைக் கொளுத்தி, மகரவிளக்குப் பித்தலாட்டம் நடந்துவந்த நிலையில், பகுத்தறிவாளர்கள் அதற்கு எதிர்த்திசையில் நெருப்பைக் கொளுத்தி எதிர்நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் மட்டுமல்லாது, கேரள மின்வாரிய ஊழியர்கள் நெருப்பைக் கொளுத்துவது, அவர்களின் ஜீப் வண்டி அருகில் நிறுத்தப்பட்டிருப்பது ஆகிய ஒளிப்படங்களையும் வெளியிட்டு உண்மையை நிலை நிறுத்தினர்.

காங்கிரசுக் கட்சி கேரளாவை ஆண்ட காலத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, சட்ட மன்றத்தில் இதுபற்றிக் கேள்வி வந்தபோது, முதலமைச்சர் கருணாகரன் இதை ஒப்புக் கொண்டார்; மக்களின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்பதால், அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்று பூசி மொழுகி விட்டார்.

ஈ.கே. நாயனார் கேரள மாநில முதலமைச்சராக இருந்த போது, கேரள பகுத்தறிவாளர்கள் அவரை நேரில் சந்தித்து விவாதித்தபோது, நீங்கள் சொல்வது உண்மைதான்; மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தான் செயற்கையாக தீபம் காட்டுகிறார்கள் ஆனாலும், தடை செய்ய முடியாது என்று கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகர விளக்கு தெய்வீகச் செயலல்ல; மனிதனின் செயல் தான் என்று சபரிமலை குருக்களான கண்டரேறு மகேஸ் வரரு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கேரள அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரள அற நிலையக் குழுமத் தலைவர் சி.கே. குப்தன் என்பவரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசு இதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது; ஏனென்றால், இது கலவரத்திற்கு ஏதுவாகி விடும் என்று மந்திரி கூறுகிறார். மகரவிளக்கைக் கொளுத்திக் காட்டுவதைத் தடை செய்ய முடியாது என்று தேவஸ்வம் போர்டு தலைவரும் கூறுகிறார்.

இவர்கள் இரு வருமே இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.சபரிமலை தந்திரி கண்ட ரேறு மகேஸ்வரரு தன் பெயரன் ராகுல் ஈஸ்வர் மூலம் அளித்த அறிக்கையில் மகர விளக்கு கொளுத்துவது காட்டு மக்களின் பழக்கம் என்பதாகவும், மகரஜோதி என்பது வானில் உள்ள நட்சத்திரம் எனவும் கூறியிருக்கிறார்.

மகர விளக்கு என்பதே பித்தலாட்டம் எனப் பகுத்தறிவாளர்கள் கூறி, அதனைக் கையும், களவுமாகப் பிடிப்போம் என்று அறிவித்து, காட்டுக்குள் நுழையப் போன போது கேரளக் காவல் துறையும், வனத் துறையும் சேர்ந்து கொண்டு அவர்களைத் தடுத்துவிட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இதன் மூலம் பித்தாலட்டத்திற்குத் துணைபோன குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.தற்போது சபரிமலை தந்திரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள நிலையில், பக்தர்களுக்கு அறிவுத் தெளிவைத் தரவேண்டியது மதச் சார்பற்ற மாநில அரசின் கடமை அல்லவா?

ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டியதும் அரசின் கடமையல்லவா? அதைச் செய்வதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எதிர் பார்ப்பு.viduthalai.news

No comments: