Followers

Monday, May 26, 2008

கலைஞர் கவனம் செலுத்திட - இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட வடக்கு - தெற்கு வேற்றுமை வெடித்துக் கிளம்பும்!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகள் அல்லாமல் வேறு பணி களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் (Staff Selection Commission) பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.இந்தத் தேர்வில் இந்தி, இங்கிலீஷ் ஆகிய இரு மொழிகளில் எந்த மொழியிலாவது எழுதலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாக, இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அதிகமான அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படும் பரிதாப நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து அவ்வப்போது குரல் எழுப்பப்படுகிறது. "விடுதலை" தொடர்ந்து தலையங்கங்களையும் தீட்டி வருகிறது. ஆனால், மத்திய அரசோ இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்புக் கேட்டுக்குப் பரிகாரம் தேட முன்வரவில்லை.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அவர்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும்போது, அவர்களின் முழுத் திறனையும் காட்ட வாய்ப்புக் கிடைத்து விடுகிறது.

இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆங்கிலத்திலேயே எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான வருமான வரித் துறைத் தலைமை அலுவலகத்தில் இவ்வாண்டு பணிக்குச் சேர்ந்த 200 பேர்களில் 160 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இரயில்வே வாரியம் நடத்தும் தேர்விலும் இதே நிலைதான் நீடிக்கிறது.இதில் வேடிக்கை, வினோதம் என்னவென்றால், மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள எந்த மொழியிலும் எழுதலாம் - இதன்மூலம் அவரவர்கள் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது.

அய்.ஏ.எஸ்., தேர்வையே தமிழில் எழுத வாய்ப்பு இருக்கும் போது, அதற்குக் குறைந்த தகுதி உள்ள பணிகளுக்கான தேர்வை தமிழில் - தாய்மொழியில் எழுதக் கூடாது என்றால் இது எந்த வகையிலான நியாயமாக இருக்க முடியும்?

இது தொடர்பாக 1999 ஆம் ஆண்டில் சில மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் (OA 1239/1999) சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (Central Administrative Tribunal) கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டது.மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில், அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் தேர்வு மொழிகளாக்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இது எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய பிரச்சினை. எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பல மொழிகள் இடம்பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மாநில அரசுகளுடன் விரிவான கருத்து பரிமாற்றங்களை நடத்தி, இப்பிரச்சினையில் ஒரு பொதுக் கருத்தினை எட்ட வேண்டுமென்று இத்தீர்ப்பாயம் கருதுகிறது.

பல மொழிகளில் தேர்வு நடத்துவது ஒரு கடினமான பணியென்று இத்தீர்ப்பாயம் கருதவில்லை. ஏனெனில், இதே நடைமுறை அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற உயர்மட்டத் தேர்வுகளில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த உரிமை, இத்தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, பொதுவான நோக்குடன் அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமென்று நாங்கள் நம்புகிறோம் என்று 1999 ஆம் ஆண்டில் சென்னை - மத்திய நிருவாகத் தீர்ப்பாயம் வலியுறுத்திக் கூறியும் மத்திய அரசு கேளாக் காதாக இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

வடக்கு - தெற்கு என்கிற பிரச்சினை ஆவேசமாக வெடித்துக் கிளம்பக் கூடிய பதற்றமான ஒரு சூழல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் இதில் கவனம் செலுத்திட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.
viduthalai./20080519/news

No comments: