Followers

Wednesday, May 14, 2008

மூடத்தனத்தின் முடைநாற்றம். என்ன வினோதம்! வேடிக்கை!

மனிதன் மிருகங்களைவிட உயர்ந்தவன் ஆவது அவனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவின் காரணமாகத்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை!

ஆனால், அந்தப் பகுத்தறிவுக்கு வாழ்க்கையில் விடை கொடுத்துவிட்டு வாழும் விசித்திர மனிதர்களை - மூட நம்பிக்கைச் சேற்றில் குளித்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களைக் கண்டால் நாம் அழுவதா? சிரிப்பதா என்பது விளங்கவில்லை.

பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும் என்று எளிய வார்த்தைகளால் தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, பழைமையாளர்கள் - நம்பிக்கையாளர்களான பக்தர்கள் பலருக்குச் சுரீரென்று கோபம் பொத்துக்கொண்டு மேலே கிளம்பும்!

ஆனால், உண்மையில் நாட்டின் நாலா பக்கங்களிலும் நடைபெறும் பல்வேறு சம்பவங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது, வெட்கத்தால் தலை கவிழும் நிலை அல்லவா ஏற்படுகிறது?

மாலை ஏடு ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி இதோ:-ஆந்திராவில், வருகிற 29 ஆம் தேதி 18 சட்டசபை தொகுதி, 4 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் நிஜாமாபாத் மாவட்டம் டிச் பள்ளி சட்டசபை தொகுதியில் தெலுங்குதேசம் சார்பில் போட்டியிடுபவர் எம். வெங்கடேசுவரராவ். இவர் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஒருமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார்!

அவர் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு தொண்டர்களுடன் புறப்பட்டார். அப்போது அவரது மாமனார் பரிச்சேரி குடும்பராவிடம் ஆசி பெற சென்றார்.

அப்போது அவர் ஆசிக்குப் பதிலாக வெங்கடேசுவரராவ் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்! பிறகு கன்னத்தைத் தடவியபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

இதுபற்றி வெங்கடேஸ்வரராவ் கூறும்போது,நான் 1985 ஆம் ஆண்டு முதல் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து வருகிறேன். இதுவரை நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வந்துள்ளேன்.

அவர் என் கன்னத்தில் அறைந்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன். இந்தத் தடவை நான் எதிர்பார்த்ததைவிட அவர் ஓங்கி அறைந்தார். இதனால் நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார்!

எப்படிப்பட்ட நம்பிக்கை பார்த்தீர்களா? வலி(மை)யான நம்பிக்கை!இந்த பிரகஸ்பதி ஒரு லட்சம் பேர்களுடைய பிரதிநிதியாக சட்டசபைக்குப் போகப் போகிறார்! என்ன வினோதம்! எவ்வளவு வேடிக்கை!

இதுபோன்ற நம்பிக்கை பலப்பல.தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே ஒரு கோயில் திருவிழாவில் பழைய விளக்குமாற்றால் அடிவாங்கும் இளைஞர்களுக்கு உடனே வேலை வாய்ப்பு கிடைக்குமாம்! பணம் காசு சேருமாம்!

எனவே, விளக்குமாற்றால் அடிக்கும் அடிவாங்கும் விநோதத் திருவிழா; நூற்றுக்கணக்கான அறிவுக் கொழுந்துகளான இளைஞர்கள் துடைப்பக்கட்டை அடிவாங்கி தூய்மை பெறுகின்றனராம்!

இன்னொரு ஊரில் சாராயம் குடித்து பெண்கள்மீது, காரித் துப்பும் பூசாரிகளிடம் கியூவில் நின்று எச்சில் வாங்கி சாமிக்கு காணிக்கைச் செலுத்தும் பக்தைகளின் பரவசம்தான் என்னே!சேலத்தில் செருப்படி மாரியம்மன் திருவிழா என்றே வருஷந்தவறாமல் செருப்படி வாங்கிட முந்தும் பக்தகோடிகள் ஏராளம்! ஏராளம்!!

சென்னை மடிப்பாக்கத்தில் பீர் சாமியார்- சுருட்டுச் சாமியார் பல மனைவிகளைத் திருமணம் செய்ததோடு கடைசியில் தற்கொலை செய்துகொண்டு - புதுக்காதலியுடன் செத்த சேதியும் நினைவைவிட்டு மாறுமா?

இதுபோல கன்னத்தில் அறை வாங்கினால் ஜெயிப்பேன் என்று நம்பும் மேதைகள் இருப்பது அதிசயமா?

கன்னத்தில் முத்தமிட்டால்... என்ற பாட்டு வரிகளை மாற்றி எழுதி, இனி கன்னத்தில் அறை விழுந்தால் கனத்த வெற்றி உறுதியம்மா என்று புதுப்பாட்டு போடவேண்டும் போலிருக்கிறது!

இவர் தெலுங்குதேச எம்.எல்.ஏ.,வாக நான்கு முறை இருந்துள்ளாராம்!
தெலுங்கு தேசக் கட்சியே மாமனாரை (என்.டி. இராமராவ்) முதுகில் குத்தி (அல்லது உவமையாகச் சொல்லவேண்டும் என்றால் முகத்தில் அறைந்துதானே) மருமகன் சந்திரபாபு நாயுடுவால் மறுபிறவி எடுத்ததுதானே!

இதிலிருந்து ஒரு தலைகீழ் மாற்ற பரிணாம வளர்ச்சி போலும் இது!இந்தியாவுக்கு இன்னும் எத்தனைப் பெரியார் தேவையோ!பக்தர்கள்கூட வெறுக்கும் மூடத்தனத்தின் முடைநாற்றம் அல்லவா இது! -VIDUTHALAI.COM
---------------------------------
இதுதான் பார்ப்பனீயம். -துரும்பைத் தூணாக்கும் கல்கி ?கல்கியின் பதில் என்ன?
படிக்க அழுத்தவும் :- R.S.S. மோடி மலத்தை அள்ளத் தான் சொன்னான். மலத்தை உண்ணச் சொல்லுகிறாரே கர்த்தர் பைபிளில்.?

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

No comments: