Followers

Monday, May 12, 2008

ஒற்றைப் பார்ப்பான் எதிரே வருவது கெட்ட சகுனமாமே ? ஏழுமலையான் எப்போது இஸ்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவரானார்?

ஒற்றைப் பார்ப்பான் எதிரே வருவது கெட்ட சகுனமாமே ? ஏழுமலையான் எப்போது இஸ்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவரானார்?

ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: பத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செல்ல வேண்டும் என்று சிறீ ஹரிகோட்டா இயக்குநர் மாதவன் நாயர் திருப்பதி ஏழுமலையான் (தினமணி 26.4.2008) தரிசனம் செய்துள்ளாராமே? – ந. - த. இராமநாதன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில்: படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு தலைசிறந்த உதாரணம்.ஏழுமலையான் எப்போது இஸ்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவரானார்? மூடத்தனத்தின் முறைநாற்றம் இது! வெட்கம் நம்மைப் பிடுங்கித் தின்கிறது!

கேள்வி: கபாலீஸ்வரன் கோயில் திருடன் பிடிபட வேண்டும் என்று காவல் நிலையத்தில் பூஜை புனஸ்காரம் செய்துள்ள காவல்துறை அதிகாரிகளை என்னவென்று சொல்வது? - தி. தமிழ்மாறன், சென்னை-81

பதில்: இதைவிட மகா மடத்தனம் - மானக்கேடு வேறு கிடையாது! அதுவும் கலைஞரின் பகுத்தறிவு ஆட்சியிலா இப்படிப்பட்ட அதிகாரிகள்?

கேள்வி: இந்து மதக் கோயில்களில் கோபுரங்கள் இவ்வளவு உயரத்தில் எழுப்பப்படுவது - ஏன்? - கி. கீதாலக்குமி, சீரங்கம்

பதில்: கோயில்கள் கோபுரங்கள்பற்றி இராஜ சாம்பசிவ சர்மா எழுதிய நூலில் இப்படி உயரமாக எழுப்புவது, தாழ்த்தப்பட்டோர், சூத்திரர் கோயில் அருகில் அல்லது உள்ளே வராமல் எட்டி நின்றே தரிசனம் செய்தலே - தீட்டுப்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் என்று குறிப்பிடுகிறாரே!

கேள்வி: மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுமீது பார்ப்பனர்கள் பாய்வது - ஏன்? - கு.வ. குணசேகரன், புளியம்பட்டி

பதில்: சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பதால்தான் இப்படி மரத்திற்குப் பின் இருந்து அம்பு எய்யும் நாடகம்!

கேள்வி: இந்து மத சம்பந்தப்பட்டது என்றால் அதனை இகழ்ச்சியாகப் பேசுவதுதான் கலைஞரின் வேலை என்று எழுதுகிறாரே திருவாளர் சோ? - சு. மணிமாறன், கம்பம்

பதில்: `சோவுக்கு மஞ்சள் காமாலைப் பார்வை. ஆரியக் கண்ணில் எல்லாம் எப்போதும் கலைஞர்மீது குறை காண வேண்டும் என்பதே வேலை.

கேள்வி: சாலை மறியல் போராட்டம் அனுமதிக்கத்தக்கது தானா? - காரை செல்வமணி, சென்னை-18

பதில்: சாலை மறியல் போராட்டம் என்பது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டிய - அனுமதிக்க் கூடாத ஒரு மக்கள் விரோதச் செயல் ஆகும்.

கேள்வி: கருநாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று தொடக்கத்தில் கூறினார்கள்; இப்பொழுதோ பா.ஜ.க., தான் ஜெயிக்கும் என்கிறார்களே? - அ.லியாகத் அலி, பாளையங்கோட்டை

பதில்: கருத்துக் கணிப்பு என்பதல்லாம் கருத்துத் திணிப்பு ஆகும் என்றுதான் எப்போதும் நாம் கூறுவது!
தேர்தல் 10-ஆம் தேதி ஒரு பகுதி. மாத இறுதியில்தான் மூன்றாம் கட்டம் முடியும் எனும்போது, இதற்குப் பொருள் உண்டா? இது தேவையற்ற வீண் குழப்பம்!

கேள்வி: உலக நாடுகளில் விலைவாசிகள் ஏற்றத்திற்குக் காரணம் இந்திய மக்களிடத்தில் வாங்கும் சக்தி அதிகமானதுதான் என்று அமெரிக்க அதிபர் புஷ் சொல்லியிருக்கிறாரே? - ந. ஆனந்தன், காஞ்சிபுரம்

பதில்: புஷ் ஒரு உளறுவாயர்; ஆழந்தெரியாமல் காலை விடும் ஒரு அரைவேக்காட்டுப் பேர் வழி என்பது ஈராக் முதல் இந்தியப் பிரச்சினை வரை தெளிவாகிவிட்டது1

கேள்வி: வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரை இராணுவத்தில் சேர்ந்தபோது ஒரே முகாமில் அவர்களோடு மற்றவர்கள் தங்கிட மறுத்ததால், தாழ்த்தப்பட்டோர்களை இராணுவத்தில் சேர்ப்பது நிறுத்தப்பட்டதாக ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளர் தெரிவிக்கிறாரே? - கா. ஜீவாவிரும்பி, தாம்பரம்

பதில்: இது சரியான தகவலாக நமக்குத் தெரியவில்லை; வடஆர்க்காடு மாவட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் இராணுவத்திற்குச் சென்றவர்கள் - இரண்டாம் உலகப் போரின் போது ஏராளம் உண்டு! முற்பகுதி தகவல் எங்காவது ஒரு சில இடங்களில் இருந்திருக்காலம் ஆனால் இராணுவச் சேர்ப்பு நிறுத்தப்படவில்லை.

கேள்வி: ஒற்றைப் பார்ப்பான் எதிரே வந்தால் கெட்ட சகுனம் என்கிறார்களே? - சு. சியாமளா, வாலாஜா

பதில்: ஒற்றைப் பார்ப்பானை, பார்ப்பன எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க அந்நாளில் `அவாள் செய்த `அவாள் பாதுகாப்பு ஏற்பாடு இது!
viduthalai.news

No comments: