Followers

Wednesday, May 7, 2008

தமிழர்களைத் தாழ்த்த பயன்படுகின்ற நூலா பஞ்சாங்கம் ?

தமிழர்களைத் தாழ்த்தவும் வளர்ச்சியைத் தடுத்திட பயன்பட்ட, பயன்படுகின்ற நூல் பஞ்சாங்கம்.பஞ்சாங்கம் பார்ப்போமா ?

கலைஞர் தொலைக் காட்சியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (20-4-2008) காலை 10 மணி தமிழருவி நிகழ்ச்சி யில், தமிழக முதல்வர் மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் கவிதை வாசித்தார்கள்.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்" என்னும் பாடலை எடுத்துக் கொண்டு முழு நிலவை தமிழர்கள் பார்த்த பார்வையை ,ஒரு சோகத்தை இலக்கிய நயத்தோடு என்றும் அழியா இலக்கியமாக புலவர் கபிலர் படைத்த கதையைச் சொன்னார்.

" வளவன் ஏவா வான ஊர்தி" பாடலின் மூலம் ஆதியில் தமிழர்கள் பெற்றிருந்த வானவியல் அறிவையும், இடையிலே சந்திரனை, சூரியனை சூதுவாதிகள் தெய்வங்கள் என்ற காரணத்தால், பாதியிலே பகுத்தறிவுக்கு இடமின்றி பாழ்பட்டுப் போன வரலாற்றை அற்புதமாய் பகுத்தறிவுப் பாதையிலே சொன்னார் நமது கலைஞர் அவர்கள்.

சந்திரனை, சூரியனை தெய்வம் என்று சொல்லி தமிழர்களின் பகுத்தறிவுக்கு தடைபோட, தமிழர்களின் வளர்ச்சியைத் தடுத்திட பார்ப்பனர்களால் கையாளப் பட்ட கருவிகளில் முக்கியமானது பஞ்சாங்கம் ஆகும்.

ஏதோ ஒரு நூலை எங்கோ வாசிக்கின்றார்கள், விற்பனை செய்கின்றார்கள் என்ற நிலையில் போகக் கூடிய காரியமல்ல பஞ்சாங்கம் என்பது.

நூலோர் தங்களை உயர்த்திக் கொள்ளவும் தமிழர்களைத் தாழ்த்தவும் பயன்பட்ட, பயன்படுகின்ற நூல் பஞ்சாங்கம் . ராபின் சர்மா என்னும் எழுத்தாளர் தன்னுடைய ஃபமிலி விஸ்டம் என்னும் ஆங்கில நூலில் தினந் தோறும் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளைச் சொல்வார். நன்மையானதோ, தீமையானதோ, ஒரு செயலை தினந்தோறும் செய்யும்போது அது பழக்கமாகி விடுகின்றது, கொஞ்ச நாளில் அது வழக்கமாகி விடுகின்றது.

கொஞ்ச நாட்களுக்குப் பின் நாம் அதனை விட்டு விட வேண்டும் என நினைத்தாலும் விட்டுவிட முடிவதில்லை.

காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் படிப்பது என்பதை அப்படிப்பட்ட ஒரு வழக்கமாக பக்தி தமிழர்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.தமிழர்களைத் தாழ்த்த பயன்படுகின்ற நூலா பஞ்சாங்கம் ?

எப்படி எனக் கேள்வி சிலர் எழுப்பக் கூடும். வெண்ணிலாவின் வளர்பிறை, தேய்பிறை வைத்து இந்த இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யாதே எனச் சொன்னது மட்டுமல்ல, கெட்ட திதிகள் எனச் சொல்லப் பட்ட நாள்களில் பிறந்த குழந்தைகளூக்கு பலன் சொல்கின்றார்கள் பாருங்கள்.

"சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்வதில் நாட்டமுடையவர்கள், முரடர்கள், பிறர்க்கு தீங்கு செய்வதில் மகிழ்ச்சியுடையவர், நீசத் தொழில் புரிபவர், பயமற்றவர், சிலர் நாத்திகராக இருப்பர். வஞ்சகமான எண்ணங்களையுடையவர்.

"இது உண்மையா? ஒரு கவிஞர் பாடினார்- "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராக ஆவதும், தீயவராக ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்று.

ஆனால் முழு வெண்ணிலா அல்லது அமாவாசைக்கு அடுத்த 4-வது நாளில், 8வது நாளில், 9-வது நாளில், 14வது நாளில் பிறந்த, பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒழுக்கமற்ற குழந்தைகள், முரட்டுக் குழந்தைகள், பாசிஸ்டுகள் (பிறர்க்கு தீங்கு செய்வதில் மகிழ்ச்சியுடையவர்), நீசத் தொழில் புரிபவர் என்று சோதிடம் சொல்கின்றார்களே- இவை நம்மைத் தாழ்த்தும் செய்தி இல்லையா?

ஒரு வினாடிக்கு 60 குழந்தைகள் உலகம் முழுவதும் பிறக்கின்றன. ஒரு மணி நேரத்தில் எத்தனை குழந்தைகள், ஒரு நாளில் எத்தனை குழந்தைகள் - ஒரு மாதத்தில் இவர்கள் கணக்குப்படி 4-ம் 4-ம் 8 நாட்களில் பிறக்கும் குழந்தைகள் எத்தனை பேர்? அத்தனை குழந்தைகளையும் இந்த நாளில் பிறந்தார்கள் என்பதற்காக இப்படி திட்டி சோதிடம் எழுதி வைத்துள்ளார்களே? இது மனித நேயத்திற்கு எதிரான செயல் இல்லையா? இது விஞ்ஞான அடிப்படையில் சரிதானா? .

உளவியலில் ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்டவர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்கின்றோமே - ஆனால் சோதிடத்தில் இப்படி, பொதுமைப்படுத்தி குழந்தைகளை, மனிதர்களை இழிவுபடுத்திச் சொல்கின்றார்களே, இது விஞ்ஞானமா அல்லது அஞ்ஞானமா? இது மனித நேயமா அல்லது இது சக மனிதனை வெறுக்க வைக்கும் முறையா?

பஞ்சாங்கத்தின் இரண்டாவது அங்கம் வாரம் ஆகும். உண்மைக் கோள்கள் 7க்கும் ஒவ்வொரு நாள் என்னும் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோள். சூரியன்-ஞாயிறு, திங்கள்- சந்திரன், செவ்வாய்- செவ்வாய், புதன்- புதன், குரு- வியாழன், சுக்கிரன்-வெள்ளி, சனி- சனி . ஆனால் இந்த இந்த நாளில் பிறந்தவர்களுக்கு இந்த இந்த பலன் பொது பலன் என்கின்றார்களே எப்படி?

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பிறந்தவர்கள் நற்குணமும், தரும சிந்தனையும், அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவராவார். சிறைகளில் உள்ள கைதிகளில் எவருமே வாரத்தின் இந்த 5 நாட்களில் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது ஏனென்றால் இயற்கையாகவே பஞ்சாங்கத்தின்படி, ஜோதிடத்தின்படி நற்குணமும், தரும சிந்தனையும், அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவர்கள் . குற்றம் செய்ய வாய்ப்பு இல்லை-அதனால் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை. கணக்கெடுத்து பார்ப்போமா?

கைதிகளில் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் பிறந்தவர்கள் இல்லையா? சரி , மீதி இருக்கும் செவ்வாய், சனி ஆகிய தினங்களில் பிறந்தவர்கள்?. "போர் புரிதல், வக்கிரமாக பேசுதல், கொடூர குணம், சோம்பேறியாக இருத்தல் போன்ற குணமுடையவர்." என்கின்றார்கள்.

"சதுர்த்தி, அஷ்டமி,நவமி, சதுர்த்தசி" போன்ற நாட்களில் பிறக்கும் குழந்தைகளை, மனிதர்களை பஞ்சாங்கத்தின் அடிப் படையிலான திதியை வைத்து மோசமான குணமுடையவர் களாக சித்திரிக்கின்றார்கள் என்றால், பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான வாரத்தை வைத்து, செவ்வாய், சனி ஆகிய தினங்களில் பிறந்தவர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கின்றார்கள். இது சரியா? இது முறையா?

திதி என்று சொல்லி, வாரம் என்று சொல்லி நம்மை மோசமானவர்களாகச் சித்திரித்தார்கள் என்றால் , மாதங்களை இரண்டாகப் பிரிக்கின்றார்கள் . உத்தராயண மாதங்கள் என்றும், தட்சிணாயன மாதங்கள் என்றும் பிரிக்கின்றார்கள். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி இந்த 6 மாதங்களும் உத்தராயண மாதங்கள். இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்குண்டான பொதுப் பலன்கள் "தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையுள்ளவன், மற்றவர்களை காக்கும் தன்மை கொண்டவன். மனத்தெளிவும், அனைத்து சுகங்களையும் அனுபவிப்பவன்". இந்த 6 மாதங்களில் பிறந்தவர்கள் எல்லாம் அப்படியா?

டேட்டா பேஸ் எடுத்து சரி பார்ப்போமோ? தவறென்றால் ஜோதிடம் தவறு- என பகிரங்கமாக தினமணி தலையங்கம் எழுதுமா?

தட்சிணாயன மாதங்கள் 6 . அவை ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய 6 மாதங்களாகும். தட்சிணாயன மாதங்களில் பிறந்தவர்களுக்கு பொதுப் பலன் சொல்கின்றார்கள் பாருங்கள் .

விலங்குகளை கொடுமைப்படுத்துகிறவர்கள், மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்கள், கள்ளத்தனமானவர்கள், அயோக்கியர் கள், வஞ்சகர்கள், ஏமாற்றுக்காரர்கள், பயிர்த் தொழில் புரிபவர்கள்" . தோழர்களே , பயிர்த் தொழில் புரிபவர்களை யாரோடு சேர்த்திருக்கின்றார்கள் பாருங்கள்.

நமது தமிழ்த் தாத்தா திருவள்ளுவர் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" என்றார். மேலும் "உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதொற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து" என்றார். உழவுத் தொழிலையும், உழுப வரையும் சிறப்பித்து சொல்லும் தமிழ்ப் பண்பு எங்கே? உழவை நீசத் தொழில் எனப் பழித்த மனு(அ)தர்மம் வழி வந்த ஜோதிடம் எங்கே?

ஏன் இப்படி தட்சிணாயன மாதங்களில் பிறந்தவர்களை இப்படி இழிவுபடுத்துகிறீர்கள் என்றால், இந்த 6 மாதமும் மேலோகத்து தேவர்களுக்கு இரவு, இரவில் பிறந்தவர்கள் அதனால் இப்படி என்கின்றார்களே- இது விஞ்ஞானமா அல்லது அஞ்ஞானமா?

உத்தராயண மாதங்கள் 6 மாதமும் மேலோகத்து தேவர்களுக்கு பகலாம் , அதனால் நல்ல பொதுப் பலனாம், அது மட்டுமல்ல நல்ல காரியங்கள் எல்லாம் உத்தராயண மாதங் களில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கின்றார்கள். 6 மாதமும் எப்படி பகல் பொழுதாகும் ?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் திருவள்ளுவர். ஜோதிடத்தின் மெய்ப் பொருள் என்ன என்றும் காண்பது அறிவுதானே? ஜோதிடர் வாய்க் கேட்பின், மெய்ப் பொருள் என்ன என்று ஆராயக்கூடாதா? அப்படியே நம்பத்தான் வேண்டுமா?. நம்பினால் சொர்க்கம் நம்பாவிடில் நரகம் என்னும் வாதமா?

கி.பி. 500, 600 வாக்கில் அடிமைப் படுத்த வேண்டும் என்னும் நோக்கில் கற்பித்த கற்பனைகளை இன்றைக்கும் நம்பித்தான் ஆகவேண்டுமா?

சந்திரனில் சென்று பூச்செடி 2015-ல் வளர்க்கலாம் என்னும் அளவில் உலகில் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் இந் நாளில் இன்னும் பழம் பஞ்சாங்கமா? செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தில் மனிதனை அனுப்பப் போகின்றோம் என்னும் செய்தி வரும் இந்நாளில் இன்னும் பெண்களுக்கு செவ்வாய் தோஷம் எனச் சொல்லிக் கொடுமையா? பஞ்சாங்கம் படித்துத்தான் ஆகவேண்டுமா? இன்னும் ஏமாளிகளாய் நாங்கள் இருந்துதான் ஆகவேண்டுமா? இல்லை, இல்லை. - வா. நேரு
viduthalai.com/20080503/
-------------------------------------------
படிக்க அழுத்தவும் :-
பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: