Followers

Saturday, May 17, 2008

ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கருமேனி ! 5% முள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 % முள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்?

எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா?


5% முள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 % முள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்? இந்த இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்குத்தானா வைத்திய நாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்?


தலைவர்கள் ஜாதியின் அடிப்படையில் கைகளாலும் கால்களாலும் தாக்கிக் கொள்வதும் உதைக்குப் பயந்து கதவைச் சாத்திக் கொண்டு, எழுதிய தீர்மானத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு.

இவர்களைத் திட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா? எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் சு. சாமிகளும் அந்தக் காலத்திலும் இருந்தார்கள். எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டினார்கள்.

எச். ராஜா ஏன் கேட்கிறார்?

பாரதீய ஜனதா கட்சி என்று ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரு தலைவர்கள் குழு இருப்பதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவது உண்டு.

இந்தத் தலைவர்கள் ஜாதியின் அடிப்படையில் கைகளாலும் கால்களாலும் தாக்கிக் கொள்வதும் உண்டு. உதைக்குப் பயந்து உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டு, எழுதிய தீர்மானத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு.

அப்பேர்ப்பட்ட தலைவர்களில் ஒரு துணைத் தலைவராம். ஓதலும் ஓது வித்தலும் செய்ய வேண்டிய இந்தப் பார்ப்பனக் கருமேனி, எந்தக் கணக்கை எப்படி எழுதி ஏய்ப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் தொழிலில் இருப்பவர். அவர் அண்மைக்காலமாக ஒரு கோரிக்கையை வெகு வேகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

உப்புச் சப்பற்ற உதவாக்கரைக் கோரிக்கை என்றாலும், முற்போக்குப் பார்ப்பனர் (எனச் சொல்லிக் கொள்ளும்) என்பவரை ஆசிரியராகக் கொண்ட இங்கிலீசு நாளேடு ஒன்று முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கும் செய்தியாக இருப்பதால் அதைப்பற்றிய பல சேதிகளைத் தெரிவிப்பதற்காக எழுதப்பட நேரிட்டு விட்டது.

மதத்தின் பெயரையே ஏட்டுக்கு வைத்துக் கொண்டுள்ள அண்ணாசாலை ஆபத்பாந்தவன் பெருந் தலைப்பு வைத்து எழுதியுள்ள செய்தி. ஆலயங்களை நிருவகிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்று வேண்டும் என்பதுதான்.

இந்து அறநிலையங்களைப் பாதுகாக்க துறை ஒன்று தற்போது இயங்கி வருகிறது. 1949-ஆம் ஆண்டிலிருந்து ஏற்கெனவே வாரியமாக இருந்த அமைப்பு மாற்றப்பட்டு அரசுத் துறையாக ஆக்கப்பட்டது. அதற்கு முன்பு 23 ஆண்டுக் காலமாக நீதிக் கட்சி ஆட்சியால் கோயில் நிருவாகம் வாரியம் ஒன்றியம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கும் முன்பு பார்ப்பனர்களின் பண்ணயம்.இதன் வரலாறு என்ன?

1925-இல் நீதிக்கட்சி சென்னைப் பெரு மாநிலத்தை ஆண்டபோது இந்து அறநிலையங்களையும் ஆலயங்களையும் சரிவர நிருவகித்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அதற்கென ஒரு ஆணையர் குழு அமைக்கப்பட்டது.

இதற்கான ஊக்கம் மராத்திய மாநில கோல்ஹாபூர் சமஸ்தான மன்னரான சத்ரபதி சாகு மகராஜ் செய்த செயல்தான். கோயில் இனாம் நிலங்களை நிருவகிக்கும் பொறுப்பை சாகு மகராஜ் வருவாய்த் துறையிடம் ஒப்படைத்தார். கோயில் சொத்துக்களின் வருமானத்தைக் கல்வி வளர்ச்சிக்காகச் செலவு செய்திடலாம் என்றும் ஆணையிட்டார்.

அவர் நாத்திகரல்லர், கடவுள் நம்பிக்கையாளர்தான். ஆனாலும் ஜோதிபா புலேயின் கொள்கை நெறிப்படி நடந்தவர்.

பெரியாரின் ஆதரவுநீதிக்கட்சி 1925-இல் கொண்டு வந்த இந்தச் சட்டத்தை ஆதரித்தவர், அன்றைக்குக் காங்கிரசுக் கட்சியில் இருந்த தந்தை பெரியார். 1917-இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஒன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சத்திரம் நிலங்களின் வருமானம் முழுவதும் சமக்கிருதம் கற்பிப்பதற்கே பயன் படுத்தப்படுவதைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய டாக்டர் நாயர், திருப்பதி மடத்தலைவர் (மகந்து) எப்படிக் கோயில் பணத்தைத் தவறான செயல்களுக்குச் செலவு செய்தார் என்பதையும், சமக்கிருதப்பள்ளி தொடங்கினார் என்பதையும் குறிப்பிட்டார்.

பார்ப்பனர்களின் நலனுக்காகவே வருமானம் முழுமையும் செலவிடப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். கோயில்களின், அவற்றின் சொத்துக்களின் மீதிருக்கும் பார்ப்பனரின் ஆதிக்கத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று கர்ச்சித்தார்.

ஏராளமான சொத்துக்களும் பக்தர்கள் தரும் காணிக்கைகளாலும் பெருஞ்செல்வம் கோயில்களிலும் மடங்களிலும் குவிந்து கிடந்தது (கிடக்கிறது) ஆனால் இந்தச் சொத்துகளும் செல்வங்களும் கோயிலைக் கைப்பற்றிய வைத்திருந்த தனி நபர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அவர்கள் விருப்பப்படி விரயம் செய்து வந்தனர்.

பணத்திற்கு வரவு செலவுக் கணக்குகள் எதுவும் எழுதப்படாமலே இருந்தது. அதனால் அவற்றைத் தணிக்கை செய்யும் வாய்ப்பே கிடையாது. இவற்றைச் சீர்திருத்தம் செய்திட நீதிக்கட்சி ஆட்சி முன்வந்தது. 1922-இல் இதற்கெனச் சட்டம் கொண்டு வந்தது. நாள் 18.12.1922.

வாரியம் வந்தது

சட்டத்தின்படி தனிவாரியம் அமைக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள அறநிலையக் குழுவின் கண்காணிப்பில் செயல்பட்டு அறநிலைய சொத்துகள் பாதுகாக்கப்பட்டு அறச் செயல்கள் நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டது.

சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானம் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும், இந்துமதம் பற்றிய படிப்பு, பக்தர்களுக்குச் சுகாதார வசதிகள் ஏற்படுத்தல் போன்ற அனைத்துத் தரப்பு இந்து மக்களின் நன்மைக்காகச் செலவிடப்படும் என்பதும் சட்டத்தின் நோக்கமாகும்.

எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் சு. சாமிகளும் அந்தக் காலத்திலும் இருந்தார்கள். எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டினார்கள்.

சட்டத்தைக் கைவிடுமாறு ஆளுநரிடம் விண்ணப்பம் கொடுத்தார்கள். ஆனாலும் சட்டமன்றத்தில் விவாதிக்கப் பட்டுச் சட்டம் நிறைவேறியது. ஆனாலும் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிடத் திருப்பி அனுப்பினார்.

அவரது கருத்துப்படி திருத்தங்கள் செய்யப்பட்டுச் சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து வைஸ்ராய்க்கு அனுப்பினார்.

ஆதிக்கம் பறிக்கப்பட்டதால் அலறிய ஆரியம் வைஸ்ராயிடம் முறையிட்டுப் பார்த்தனர். சட்டத்தை நிராகரிக்கக் காரணம் ஏதுமில்லை என்பதால், வைஸ்ராய் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 168 நாள் 24.4.1925

சட்டத் (சட்டமன்றம்) துறை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1200 திருத்தங்கள்நீதிக்கட்சி ஆட்சியில் எந்தக் கூட்டமும் இதனளவுக்கு விவாதிக்கப்படவில்லை. இந்தச் சட்டம் 85 சட்டமன்றக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. 1200 திருத்தங்கள் இந்தச் சட்டத்திற்குத் தரப் பட்டன. அத்தனையும் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. சில திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.

இந்தச் சட்டத்தில் 1929-இல் பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் கொண்டு வந்த திருத்தத்தின் மூலம் தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஏன் இந்தச் சட்டத்தைப் பெரியார் 1922-லேயே ஆதரித்தார் என்பதும் பார்ப்பனர்கள் இன்றளவும் எதிர்க்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?

உத்தமர் ஓமாந்தூரார் 28.2.1947-இல் சென்னை மாகாணத்தின் பிரதமராகக் காங்கிரசுக் கட்சிக்காரரான ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டார். இந்த இரண்டு வருடம் இரண்டு மாதம் 6 நாள்களில் அவர் செய்த சாதனைகள் பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்க்கையில் மகத்தான மாறுதல்களைச் செய்தவை. கதர்ச்சட்டை அணிந்த கருப்புச் சட்டைக்காரர் என்றும் தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்றும் தூற்றப் (போற்றப்)பட்டவர்.

அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். புலால் உணவு உண்ணாதவர். புலால் உண்பவர்களோடு உடன் அமர்ந்து உண்ணாதவர். அப்பேர்ப்பட்ட ஒழுக்கசீலர், உத்தமர் ஓமாந்தூரார், எந்த மக்களுக்காகக் கோயில்களும் மடங்களும் உருவாக்கப் பட்டன (என்று அவர் நம்பிய)வோ அவை, ஒழுங்காக நடக்காமல் சிலருக்காக மட்டுமே பயன்படும் நிறுவனங்களாக மாறி விட்டதனால் தான் நாட்டில் நாத்திகம் பெருகி விட்டது என்று நம்பினார்.

நாத்திகப் பரவலைத் தடுக்கவும் கோயில்களும் மடங்களும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றவும் அறநிலையச் சட்டம் ஒன்றினைக் கொண்டு வந்தார்.

இந்துக் கோயில்களைப் போலவே ஊழல் நடந்துவந்த சமணக் கோயில்களையும் இந்தச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

எழுத்தறிவில்லாத பார்ப்பன அர்ச்சகர்கள் கோயில்களில் பணியாற்ற அனுமதிக்காமல், படித்தப் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட வேண்டும் அவர் களுக்கு வேத, சாத்திரப் புலமை அளிக்கப்படும் என்றும் சட்டம் கொண்டு வந்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக அறநிலைய வாரியம் என்றிருந்ததை முழுமையான அரசுத் துறையாக அற நிலையத் துறையாக மாற்றினார்.

பார்ப்பன அமைச்சர்.

இந்த முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தவர் டி.எஸ்.எஸ். ராஜன் எனும் பார்ப்பன அமைச்சர். இவர் 1937-இல் ஆச்சாரியார் மந்திரி சபையில் அறநிலையப் பொறுப்பை ஏற்ற அமைச்சர். அன்றைக்கு இதனை எதிர்த்தவர்கள் என்.எஸ். வரதாச்சாரியும் மதுரை வைத்தியநாத அய்யரும்தான். காங்கிரசுப் பிரதமர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸ் மேடைகளிலே பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.

இன்றைக்கும் எதையும் எதிர்த்துக் குதர்க்கம் செய்யும் `கல்கி ஏடு அன்றைக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்துக் குதர்க்கம் செய்து தன் சுவ தர்மத்தைக் காட்டிக் கொண்டது. அதனால் தான் புரட்சிக் கவிஞர் பாடினார், `கல்கிக் கூட்டம் கலக்கிய சேறு இது என்று!

இந்தச் சட்டத்தின் நோக்கம், அவசியம், அவசரம் ஆகியவற்றை விளக்கிட மடாதிபதிகள் கூட்டத்தை ஓமாந்தூரார் கூட்டினார். அவர் பேசிய பேச்சு முழுக்க முழுக்க சு.ம. வாடை வீசுவதாகவே அமைந்திருந்தது என்பதைப் பெருமையுடன் குறிப்பிட வேண்டும்.

மோசடிகளின் பட்டியல்

``பாமர மக்களின் சமூக, பொருளாதார அரசியல் நிலைமையை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்க முற்படும் போதெல்லாம் மதத்துக்கு ஆபத்து என்ற கூக்குரல் துர்ப்பாக்கிய வசமாக நம் நாட்டில் கிளம்புவது சகஜமாகி விட்டது.

உலகம் முன்னேறி வருகிறது. நாமும் துரிதமாக முன்னேற வேண்டும். மதத்தின் பெயரால் நமது முற்போக்கின் வேகத்தைத் தடுக்க முன்வருபவர்கள் தாங்கள் நம்புவதாகக் கூறும் தங்கள் மதத்துக்கே தீமை செய்தவர்கள் ஆவார்கள் இன்றைக்குப் பொருத்திப் பார்த்தாலும் சரியாகவே படுகின்ற சொற்கள், அல்லவா?
``வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே திரு நெல்வேலி வரை நடந்துள்ள மோசடிகள் 65-க்கு நான் ஜபிதாவை வைத்திருக்கிறேன்.

இந்த மசோதாவை எதிர்ப்ப வர்கள் மேற்படி புள்ளி விவரங்களைக் காட்டும் என்று ஜபிதாவைப் படித்துப் பார்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுது அவர்கள் உண்மையை உணர்வார்கள் (மேலும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தோழர் ப. திருமாவேலன் எழுதிய `காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கோயில்களில் ஊழல்1795-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரை கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கோயில் விவகாரங்களில் நல்லெண்ணத்தோடு பற்பல தலையீடுகள் செய்யப்பட்டன என்கிறார் ஓமாந்தூரார்.

21 ஜில்லாக்களில் 8292-க்குக் குறையாத கோயில்கள் சர்க்காரின் நேரடி நிருவாகத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதுகாறும் மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. பூசைகளும் உற்சவங்களும் தவறாமல் நிறைவேறி வந்தன என்கிறார் ஓமாந்தூரார்.

இத்தனையும் கிறித்துவ ஆங்கிலேயர்கள் ஆட்சியில்! இன்னொரு சேதி மிக முக்கியமானது. ``துர்திர்ஷ்டவசமாய் அன்றைய வெள்ளைக் கிறித்துவப் பாதிரிமார் சிலர் இத்தகைய காரியங்களின் மூலம் தங்கள் மதத்துக்கே ஆபத்து வரும் என்றனர்..

``கோயில் விஷயங்களை நிருவகிக்கும் பாவனையில் 1863-ஆம் வருடத்தில் சட்டம் போதிய பலனை அளிக்கவில்லை. அதனைத் திருத்தி அமைக்க ராமய்யங்கார், சர் முத்துசாமி அய்யர், சென்கல்ராவ் ஆகியோர் 1872, 1889, 1894 ஆண்டுகளில் திருத்த மசோதாக்கள் கொண்டு வந்தனர்.

இவர்களைத் திட்டுவதற்கு எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா?

சின்னஞ்சிறு கூட்டம் எதிர்க்கிறது
``இனாம்தார், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது எந்தச் சிறு கூட்டம் எதிர்த்ததோ, அதே சின்னஞ்சிறு கும்பலேதான் இப்போதும் இந்த மடாலயத் திருத்த மசோதாவையும் எதிர்க்கிறார்கள் என்றும் `` அய்ந்து சதவிகிதமுள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 சதவிகிதமுள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்?

இந்த இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்குத்தானா வைத்திய நாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்?

என்றும்

``இந்து மதக் கோயில்களும் மடங்களும் இன்று இருக்கும் கேவல நிலைமை நம்மை இந்து மதத்தைவிட்டு விரட்டுவதாகவும் அல்லா விட்டால் எந்த மதமும் தேவையில்லை என்ற முடிவுக்குத் துரத்துவதாகவும் இருக்கிறதே என்பதைக் காண சிறந்த சமயப் பற்றுதல் படைத்த என் உள்ளம் துடிக்கிறது என்றும் சட்டமன்றத்தில் காங்கிரசு உறுப்பினர்களே பேசினர்?

அதே அய்ந்து விழுக்காடு சின்னஞ்சிறு கும்பல்தான் (கூட்டம் அல்ல) இன்றைக்கும் எதிர்க்கிறது. தன் ஜாதி நன்மைக்காகத்தான் எதிர்க்கிறது.

95 விழுக்காடு மக்களுக்காக எதிர்க்கவில்லை. நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தாலும் ஒட்டகக்காரவான் நடந்து கொண்டே இருக்கும் என்பதைப்போல அவர்களைப் புறந்தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம்.

பக்தர்கள்தான்

1922-இல் சட்டம் கொண்டு வந்த பனகல் அரசரும் ஆத்திகர். 1948-இல் திருத்தம் கொண்டு வந்து அரசுத் துறையாக ஆக்கிய உத்தமர் ஓமாந்தூராரும் ஆத்திகர்தாம். அவர்களுடைய கடவுள் பக்தி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் பக்திக்குக் குறைந்ததல்ல; சுயநல மில்லாத இன நலம் மிக்க, மக்கள்நலம் கருதிய மேம்படுத்தப்பட்ட பக்தியாகும்.

அன்றைய சென்னை மாகாணத்தைச் சேராத, மன்னர் ஆட்சி நிலவிய திருவாங்கூர், கொச்சி, மைசூர் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்நிலையில் ராமகோபாலன்களும், எச் ராஜாக்களும் அங்கு போய்க் கூக்குரல் எழுப்பினார்களா? எழுப்பத் தயாரா?

கோயில்களில் திருட்டுகள்

60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து அற நிலையத்துறை அரசுத் துறையாக ஆவதற்கு முன்னால், வேதாரண்யம் கோயிலுக்கு 45 கிராமங்களில் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் வருமானம் 75 ஆயிரம் மட்டுமே கணக்குப்படி காட்டப்பட்டது. அந்த நிலை மீண்டும் வர வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் விரும்புகின்றனவா?

உடுப்பியிலிருக்கும் மடம் (அன்றைக்கு சென்னை மாகாணத்தில் இருந்தது) புரோ நோட்டுக் கடனாக ஒரு லட்சம் வாங்கிச் செலவு செய்துள்ளது. அறநிலைய வாரியத்தின் பார்வைக்கு வராமல், அனுமதி பெறாமல் கடன் வாங்கிச் சாப்பிட்டு விட்டார்கள். அதே மாதிரி இப்போதும் ஏப்பம் விட வேண்டும் என்பதற்காக இந்து முன்னணிக்காரர்கள் கூச்சல் போடுகிறார்களா?

வடஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு கோயில் சொத்து முழுவதும் ஒரு ஜாகிர்தாருக்குக் கொடுத்து கபளீகரம் செய்து விட்டார்கள். தஞ்சாவூர் சொர்க்கபுரம் மடத் தில் ஆயிரக்கணக்கில் கையாடல் செய்ததோடு 26 ஏக்கர் நிலத்தையும் விற்றுக் காசாக்கி விழங்கிவிட்டனர். திருச் செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் அர்த்த நாரிசனுடையதும் வேத புரீசுவரனுடையதுமான நகைகளைத் திருடிச் சாப்பிட்டு விட்டனர். ``சிவன் சொத்து குலநாசம் என்று எழுதி வைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் `அபேஸ் செய்து விட்டார்ள். இதை ஆண்டவனும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டவர்கள் (ஆட்சியாளர்கள்) கேட்டதால்தான் சட்டமே கொண்டு வந்தனர்.

அதை வேண்டாம் என்றால், காவல்காரனை வேண்டாம் என்கிறார்கள். காவல்காரன் கூடாது என்று திருடன்தானே நினைப்பான்? அப்படியென்றால் இவர்கள் யார்?

ஓமாந்தூரார் கேட்டார்: ``இந்த மாதிரியான அக்கிரமங்களை நம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தும் சர்க்கார் கைகட்டி, வாய் புதைத்து, வாளாவிருக்க முடியுமா என்றுநான் கேட்கிறேன். எந்த நாகரிக சர்க்காரும் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜன நாயக சர்க்காரும் மக்களின் ஆத்மீக லவுகீக வளர்ச்சியில் சிரத்தை கொண்ட எந்த நேர்மையான சர்க்காரும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்மூடி மவுன போல் பாராமுகமாய்ச் சும்மா இருக்க முடியாது.

அதே பதில்தான் இப்போதும். அரசு தன் கடமையை 80 ஆண்டுகளாகச் செய்து வருவதுபோலத் தொடர்ந்து ஆற்றும். இல்லையென்றால், சிதம்பரம் நடராசன் கோயில் நிலங்கள் போய் ஒழிந்தது போல எல்லாக் கோயில் சொத்துக்களும் ஒழிந்து போகும்!

அதைத்தான் எச். ராஜாக்களும் இராம. கோபாலன்களும் விரும்புகிறார்கள். நாம் ஒரு போதும் அனுமதிபோம்!---

சு. அறிவுக்கரசு---VIDUTHALAI.COM

No comments: