Followers

Thursday, April 3, 2008

பாசியில் தெரிந்தது இயேசுவா - வீரப்பனா? கடவுள் பூமியில் காட்சி தருவதற்கு என்னென்ன வழிகளில் வருகிறார் தெரியுமா?

கடவுள் பூமியில் காட்சி தருவதற்கு என்னென்ன வழிகளில் வருகிறார் தெரியுமா?
முன்பு போலெல்லாம் நேரடியாக கடவுள் மனித உருவெடுத்து வந்துவிட்டார். இவர் இறைவன், இறைத் தூதர் என்று கிளப்பிவிட்டால், பகுத்தறிவாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்வது யார்?

அதனால் இப்போதெல்லாம் பாசி படிந்த சுவற்றில், வியர்வை பூத்த சட்டையில், சிறுநீர் கழித்து ஊறிப்போன உப்புச் சுவற்றில், கழிவு நீர் தேங்கிய குட்டையில் என்று பரவலாகக் காட்சி தருகிறார் கடவுள்.

எளிய மக்களை இப்படித்தானே சென்றடைய முடியும் என்று கருதுகிறார் போலும்.

தாறுமாறாக வளர்ந்த கிளையில், சுவரில் விழுந்த கிளையின் நிழலில், மாட்டுத் தோளில், பிரண்டைச் செடியில், மேகத்தில் என்று பல்வேறு பொருட்களிலும் கடவுளின் உருவம் தெரிவதாகக் கிளப்பிவிடப்படும் மூடநம்பிக்கைகள் இங்கு மட்டுமல்ல, உலமெங்கும் இருக்கின்றன.

கந்தசாமி படப்பிடிப்பின்போது அங்கிருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாய் வந்த செய்தியை அடுத்து அங்கு குவிந்த அப்பகுதி மக்கள் மரத்திற்கு மஞ்சளாடை சுற்றி, குங்குமம், சந்தனம் பூசி, கடவுளாக்கி விட்டார்கள்.

கந்தசாமி படக் குழுவிரும் படத்திற்கு கிடைத்த திடீர் விளம்பரத்தின் பயனை பத்திரிகைகளில் வெளிப்படுத்தி பெற்றுக் கொண்டார்கள். துணைநடிகை ஒருவரும் ஒரு ஆட்டம் ஆடி சான்ஸ் பெற்றுக் கொண்டார். வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன் என்பது அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டியது (பெட்டிச் செய்தி காண்க).
வேப்ப மரத்தில் பால் வடியும் கதை இருக்கட்டும். எருக்கஞ்செடியில் எப்போதுமே வடிகிறதே அதைக் கொஞ்சம் பக்தியோடு பருகுவதுதானே?

பால் வடிந்த கதையைப்-போலவே பால் குடித்த கதையும் பிரபலம் இந்தியாவில்! 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஸ்பூனும் கையுமாக வரிசையாக நின்றார்கள்.
காய்ந்த, நீர்ப்பசை தேவைப்-படுகின்ற எந்த பொருளில் திரவத்தை வைத்தாலும் உள்ளிழுத்துக் கொள்ளும் என்பது சாதாரண அறிவு உள்ளவர்களுக்கும் தெரியும். பக்தி வந்தால் புத்தி போய்விடுமல்லவா?
நாய் பொம்மையில் ஸ்பூன் வைத்தாலும் பால் குடிக்கும் என்று செய்து காட்டி புரட்டைப் போட்டு உடைத்தார்கள்- பகுத்தறிவாளர்கள்.

ஒருபடி மேலேபோய் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், இன்றைய தலைவருமான கி. வீரமணி அவர்கள் சென்னை - அண்ணா சாலையில் தமுக்கடித்து சவால் விட்டார்.

பிள்ளையார் பால் குடிப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றார். பால் குடிப்பதை சடாரென நிறுத்திக் கொண்டாரே பிள்ளையார். தனக்குப் பிடித்த மோதகத்தையும், கொழுக்கட்டையையும் அடுத்து சாப்பிடப் போகிறார் என்று ஆவலாய் இருந்த நமக்கு ஏமாற்றமல்லவா மிஞ்சியது.

பிள்ளையாருக்கு மட்டுமல்ல, சிவன், காளி இன்னும் பல்வேறு சிலைகளுக்கும் பால் கொடுத்து பசுமாட்டின் வயிற்றெரிச்சலைக் கட்டிக் கொண்டார்கள் பக்தர்கள். இடத்தை அபகரிக்க திடீர் பிள்ளையார் முளைத்து, பின் ஓடிய கதையும் கூட தமிழ்நாட்டில் உண்டு.

கடவுள் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக கிளம்பிய வதந்திக்கு பதிலடியாக நாய் படத்திலிருந்து விபூதி கொட்டச் செய்து, குட்டை உடைத்தார்கள் நாத்திகர்கள்.
ஏதோ இந்து மதத்தில் மட்டும் இந்த பிசினஸ் நடப்பதில்லை.

இயேசு சிலையின் கண்ணில் இரத்தம் வடிவதாகவும், மாதா கண்ணில் கண்ணீர் வருவதாகவும் செய்த மோசடிகளெல்லாம் வந்த தடம் தெரியாமல் போயிருக்கின்றன.

கண்ணாடியில் படர்ந்த பனியில், ரோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டியில்(Bread), கருகிப் போன சப்பாத்தியில் கூட கடவுளைக் கற்பனை செய்து பார்த்துப் பரவசப்படுகிறார்கள் - மூடமக்கள்.

சிகாகோவின் சாலையோரத்தில் சுவற்றிலிருந்த கறையில் மாதா உருவப்படம் தெரிவதாக கூட்டம் கூடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை பி.பி.சி. செய்தி எள்ளலுடன் கூறுகிறது.

குட்டிக் குட்டியாய் எழுந்து அடங்கும் இந்த பரவசங்கள்தான் மக்களுக்கு அவர்கள் தரும் மயக்கப் பிஸ்கட்டுகள். அதைக் கச்சிதமாக கவ்விக் கொண்டு மயங்கிவிடுகிறார்கள் மக்கள்.

எதேச்சையாய்த் தெரியும் இந்த உருவங்கள் கடவுள் உருவங்களில் மட்டுமல்ல, நாம் எந்த வடிவத்தில் கற்பனை செய்து பார்க்கிறோமோ அப்படியெல்லாம் தெரியும்.

மேகத்தில் எத்தனை உருவங்களைப் பார்க்கிறோம் - நம் கற்பனைக்கேற்ப!
பாசியில் தெரிந்த உருவங்களில்கூட மான் உருவம் தெரிந்ததும், எம்.ஜி.-ஆர். உருவம் தெரிந்ததும், இயேசு தெரிந்ததாக சொல்லப்பட்ட அதே படத்தைப் பக்கவாட்டில் பார்க்கும்போது, கடைவாய் பல் போன்று தெரிந்ததாய் சொன்னதும் அவரவர் கற்பனையின் பாற்பட்டதே.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல, நாம் நினைப்பதே நம் கண்ணுக்குத் தெரிகிறது என்கிற சாதாரண அறிவைப் பெறாத இந்த மக்களுக்கு திராவிடர் கழகத் தோழர்கள் செய்தது போன்று பிரச்சாரம்தான் அறிவுக்கண் திறக்க செய்த அருமருந்தாகும். - ஜீனியர் சர்ச்லைட் - உடுமலை
மக்கள் கருத்து----
1. கண்ணதாசன் நகர் ஆறாவது பிளாக்கில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் தன்னை இந்து என்று அறிமுகப்படுத்தி கொண்டார். இவர் சாஃப்ட்வேர் படித்துவிட்டு, தமா ஜூவல்லரி (International Airport)-ல் கணினிப் பொறியாளராக பணிபுரிபவர். முதலில் பக்கத்து பில்லரில் ஜீசஸ் வந்தார். இன்று அதற்கு பக்கத்து பில்லரில் மாதா வந்தது. அதற்குமேலே ப்ளஸ் வந்தது. நாளைக்கு என்ன வருமென்று தெரியாது. ஒவ்வொன்றும் மெல்ல, மெல்ல உருவாகிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் ஒன்னே ஒன்னு செய்யணும்

2. அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு இளைஞர் புஷ்பராஜ். இவரும் தன்னை ஒரு இந்துதான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அதை ஒரு கலையா பார்க்கவேண்டும். எனக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் தனக்கு மான் ஒன்று தெரிகிறது என்று சொன்னார்.
(நான்தான் சொன்னேன் என்று ரவிக்குமார் என்ற இளைஞர் குறுக்கிட, புஷ்பராஜ் அவரை ஆமோதிக்கிறார்.) நானும் உற்றுப் பார்த்தேன். எனக்கும் மானின் கண்கள் போன்று தெரிந்தது. அந்தத் தூணில் ஈரம் இருக்கிற வரையிலும் அந்த உருவம் இருக்கும். காஞ்சு போச்சுன்னா இருக்காது.

அதுமட்டுமல்ல, விநாயகர் பால் குடிச்சாருன்னு எல்லோரும் சொன்னாங்க. அதையே நாங்க நம்பல. கிருத்துவர்கள் யாரும் நம்பல. நாங்க இத நம்பிடுவோமா?
புஷ்பராஜை - சீனிவாசன் என்பவர் மறுத்துப் பேச புஷ்பராஜ் நானொன்றும் பூணூல் போடவில்லை என்று கூறி அனைவரையும் கலகலக்க வைத்தார்.
அந்த தேவலாயத்தின் பாதிரியார் சவுரிமுத்து சொல்லும்போது, கடவுள் அப்பப்போ வந்து காட்சி தருவாரு. அந்த மாதிரித்தான் இதுவும் - என்று முடித்துக் கொண்டார்.

3. இராயபுரத்தில் வசிக்கும் கண்ணன் என்கிற கூலித்தொழிலாளி இன்னும் ஒரு படிமேலே போய் விட்டார். சார், நான் அம்மன் சாமியை கும்பிடுகிறவன். இதை பார்ப்பதற்காக இராயபுரத்தில் இருந்து வந்தேன்.
நான் என்ன சொல்றேன்னா, அல்லாவ விட, இந்து சாமிகளைவிட, இயேசுக்கு பவர் ஜாஸ்தின்னு சீனுவாசன் சொன்னாரு.
நாளைக்கே அந்த மணிக்-கூண்டுக்கு பெயிண்ட் அடிச்சிடலாம், பிறகு காலையில் பார்க்கலாம். அதுக்கப்புறமும் இயேசு தெரிஞ்சாருன்னா, நாம் எல்லோரும் கிறுத்துவ மதத்திற்கு மாறிடலாம் என்று ஒரே போடாக போட்டார்.
4. செந்தமிழ் சேகுவேரா என்கிற ஆட்டோ ஓட்டுநர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎன்று திருக்குறளைச் சொல்ல கூடியிருந்த மக்கள் கைதட்டி அசத்தினர்.
5.தன்னைப்பற்றி எதையும் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒருவர் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எனக்கு அது எம்.ஜி.ஆர். மாதிரியே தெரிகிறது என்று கூறி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
6. பெரம்பூரில் வசிக்கும் அதிகம் படிக்காத ஆட்டோ ஓட்டுநர் அய்யாக் குட்டி, டேங்குல மழைத் தண்ணிபட்டு நனைஞ்சு கறை புடிச்சி ஏதோ ஒரு உருவம் மாதிரி தெரியுது. வேற ஒன்றும் இல்ல என்று பொட்டில் அறைந்ததுபோல கூறினார். UNMAI.ONLINE
----------------------------------------------------
படிக்க:>
எலுமிச்சையில் அம்மன் தோன்றி கண்ணீர் வடிக்க, கெட்டிக்கார ஆர்.எஸ்.எஸ் க்கு போட்டியாக ஆரோக்கியமாதா சிலை திரும்ப !!! எம்.ஜி.ஆர் காளை மாட்டுக் கண்ணில்!!!

கல்கி பகவான் படத்தில் குங்குமம் கசிகிறதாம்.பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்க....
-----------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்கு ஒரு நண்பர் படம் ஒன்று அனுப்பினார். 10 வயதுக்குட்பட்ட குழந்தையானால் அதற்கு 9 டொல்பீன் தெரியும்; அடுத்தவர்க்கு குறிப்பாக மனித நிர்வாணப் படம் பார்த்தவர்களுக்கு 9 நிர்வாண உருவம் தெரியும். எனவே இது மனப் பிரமை...மடத்தனத்தைக் காசாக்குவதும்; கடவுளாக்குவதுமே தொழிலானதால்... இக்கோளாறுகள்.
அன்புதான் கடவுள் என்பதை மறக்கடிக்கிறார்கள். இவை பரவலாக எல்லா மதத்திலும் ஏதோவகையில் உண்டு.