Followers

Saturday, April 5, 2008

தங்கத்திலான மாரியம்மன் சிலை எழுந்ததாம். கடவுள் சிலை கிளம்பியதாகப் பித்தலாட்டம்! முறியடித்த திராவிடர் கழகத் தோழர்கள் ‘

தியாகராயர் நகர் திடீர்ப் பிள்ளையார் புரட்டுபோல
குண்டலப் பட்டியிலும் கடவுள் சிலை கிளம்பியதாகப் பித்தலாட்டம்!

முறியடித்தனர் திராவிடர் கழகத் தோழர்கள்

கிருட்டினகிரி, ஏப். 5- சென்னை தியாகராயர் நகரில் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்ப்பனர் ஒருவரின் தூண்டுதலால் திடீர் பிள்ளையார் பூமியை வெடித்துக் கிளம்பினார் என்று கதை கட்டியதுபோல (பின்னர் குட்டு உடைபட்டது)

கிருட்டினகிரி மாவட்டம் குண்டலப்பட்டியில் பூமி வெடித்து கடவுள் சிலை கிளம்பியது என்று புரளியைக் கிளப்பி விட்டனர்.

திராவிடர் கழகத் தோழர்கள் தலையிட்டு, அதன் திரைமறைவில் இருந்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி விட்டனர். பக்தர்கள்கூட அதற்காகத் திராவிடர் கழகத் தோழர்களைப் பாராட்டினர்.

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செயபாலன் மகன் அப்பு (எ) கோவிந்தராஜி கடந்த ஆறு மாதங்களாக அம்மன் அருள் வருமாம். சாமியாடி வாக்கு சொல்வது, திருநீறு மந்தரித்து தருவதுபோன்ற செயல்களை செய்து வந்துள்ளார்.

கடந்த 20.3.2008 அன்று அப்புவுக்கு கனவில் சாமி வந்து ஆஞ்சநேயர் குட்டை என்ற இடத்தில் தான் எழுவதாக கூறியதாம். அதற்கு 108 எலுமிச்சை பழம். 108 குடம் தண்ணீர் ஊற்றி பூசை செய்தால், பூமியிலிருந்து வெளியே வருவதாகக் கூறியதாம்.

மாரியம்மன் எழுந்ததாம்

அதன்படி, கடந்த 21.3.2008 இரவு 9 மணிக்கு ஊர்ப் பெண்கள் குடம் குடமாக தண்ணீர் மற்றும் எலுமிச்சைப் பழம் கொண்டுவந்து பக்தர்கள் அப்புமீது தண்ணீர் ஊற்றியதும், அம்மன் அருள் வந்ததாம் அப்புவுக்கு. சாமி சிலை புதைந்து இருக்கும் இடத்தில் 108 எலுமிச்சை பழம், 108 குடம் தண்ணீர் ஊற்றக் கூறினாராம்.

தண்ணீர் ஊற்றியதும் மாரியம்மன் சிலை எழுந்ததாம். இது தங்கத்திலான சிலை என மக்களிடம் வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

அப்புவுக்கு கடவுளின் மகிமையுள்ளது. அப்புவுக்கு அம்மன் அருள் வந்து மேலும் பல சிலைகள் உள்ளதாகக் கூறியதாம். பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும்தான் சிலை வெளியே வரும் என்று அப்பு கூறியுள்ளார்.

ஆனால், அடுத்த இரண்டு நாள்கள் கழித்து மேற்கண்ட பூசை செய்ததும், வரலட்சுமி என்ற கடவுளர் சிலையை எடுத்துள்ளாராம் அப்பு. குண்டலப்பட்டி ஊர் பெரியவர்கள், பெண்கள் அனைவரும் அப்புவுக்கு கடவுள் அருள் உள்ளது. அவரால்தான் தங்கக் கடவுளர் சிலைகள் எடுக்கப்பட்டன என ஊரே தம்பட்டம் அடித்து பீற்றிக் கொண்டனர்.

திரண்டனர் திராவிடர் கழகத் தோழர்கள்குண்டலப்பட்டியைச் சேர்ந்த திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ. திராவிடமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சி. வேலன், பெ. திருமலை, சி. முனியப்பன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் இது முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தி.

கல் வெடிப்புச் சந்தில் புதைத்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட பித்தளைச் சிலை என பிரச்சாரம் மேற்கொண்டனர். நீங்கள் சாமி இல்லை என்பவர்கள் அப்படித்தான் சொல்வீர்கள் என்று ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

ஊரில் கடவுளர் சிலைகள் பூமியிலிருந்து தானாக பூசை செய்ததும், தோண்டி எடுக்கப்பட்டது என்றதும், மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளர் கோ. திராவிடமணி குண்டலப்பட்டி கிராம நிர்வாக அலுவலரை அணுகி, இந்தச் செய்தியின் உண்மை கண்டறியப்பட்டு மக்களை ஏமாற்றி சாமி என்ற பெயரில் பணம் பறிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து அம்பலப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதன் பேரில், குண்டலப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டு, வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் விரைந்தனர்கிருட்டினகிரி வட்டாட்சியரும், வருவாய் கோட்டாட்சியரும் சென்ற 31.3.2008 அன்று காலை 11 மணிக்கு குண்டலப்பட்டிக்கு, நகை மதிப்பீட்டாளர் ஒருவரையும் அழைத்து வந்து, சிலைகளை ஆய்வு செய்து பார்த்தபோது, சமீபத்தில் புதைத்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட பித்தளை சிலைதான் என ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்று பக்தியின் பெயரில் மக்களை ஏமாற்றும் செய்தியை பரப்பினால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.வருவாய் கோட்டாட்சியர் மேற்கொண்ட ஆய்வில், தெளிவு பெற்ற கிராம மக்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோ. திராவிடமணி, சி. வேலன், பெ. திருமலை போன்ற தோழர்கள் கூறியது தான் உண்மை எனப் பாராட்டுத் தெரிவித்தனர்.

தகவல்: கோ. திராவிடமணி, விடுதலை செய்தியாளர்குறிப்பு: சென்னை -

தியாகராயர் நகரில் சிவாவிஷ்ணு ஆலயத்துக்கு அருகாமையில் மசூதி கட்டுவதற்கு முசுலிம்கள் ஆயத்தமான நிலையில்,

தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் போலீஸ் கான்ஸ்டபிள் செல்வராசு என்பவர்மூலம் ஒரு சூழ்ச்சி செய்தார்.

பூமியில் குழி பறித்து பருத்திக் கொட்டையைப் போட்டு, அதன்மேல் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, ஒரு ஓட்டை வழியாகத் தண்ணீர் செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

பருத்திக் கொட்டை ஊறிப் பெருக்க, பிள்ளையார் சிலை பூமிக்கு வெளியே தலையை நீட்டியது.

இந்தப் பித்தலாட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் போட்டு அங்கு பேசுவதாக அறிவித்தார் தந்தை பெரியார். இதற்கிடையே, காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. கான்ஸ்டபிள் செல்வராசும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
http://viduthalai.com/20080405/news01.html
-----------------------------------------------
சிந்திக்க உண்மைகள்.

No comments: