Followers

Tuesday, April 29, 2008

உண்டியல் திருட்டைத் தடுக்க முடியாத கபாலீசுவரன், அவனுக்கு பூஜை செய்தால் கண்டுபிடிக்க உதவுவானோ? இது யாரை ஏமாற்ற? யார் பிழைக்க?

காக்கியா - கடவுளா?கபாலீசுவரர் கோயில் உண்டியல் திருட்டை கண்டுபிடிக்க மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பூஜையாம்!

சென்னை, மயிலாப்பூரில் கபாலி கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றுப் பல நாள்கள் ஆகியும் திருடர்கள் கண்டுபிடிக்கப்படாத அவலம் நீடிக்கிறது. தடயவியல் அறிவைப் பயன்படுத்திக் குற்றவாளிகளைப் பிடிக்க முயல்வதற்குப் பதில், மூட நம்பிக்கை கொண்ட காவல் துறையினர் காவல் நிலையத்தில் பூஜை செய்தனராம்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குமேல் பூஜை நடத்தப்பட்டுள்ளது. நான்கு பார்ப்பன பூசாரிகளும், அவர்களுக்கு உதவி செய்திட இரண்டு பேர் என ஆறு பேர் பூஜை செய்துள்ளனர்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கடவுளின் அருளையும், உதவியையும் வேண்டி இந்தப் பூஜை செய்யப்பட்டதாம்!

நள்ளிரவுக்குமேல் தொடங்கி ஒரு மணிநேரம் பூஜை நடந்ததாம். காவல் ஆய்வாளரின் மேசை சுத்தமாகத் துடைக்கப்பட்டு பூஜைக்குரிய பொருள்கள் பரப்பி வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டதாம். காவலர்கள் வெறும் காலுடன் பயபக்தியோடு பூஜையில் கலந்துகொண்டார்களாம். கர்ப்பூரம் கொளுத்தி ஆரத்தி காண்பிக்கப்பட்டதாம்! காவலர்கள் சூடம் எரியும் நெருப்பைக் கைகளைச் சுட்டுவிடாத தூரத்தில் நீட்டிக் கண்களில் ஒத்திக் கொண்டார்களாம்.

பிறகு பூஜாரி, தண்ணீரை காவல் நிலையம் முழுக்க தெளித்தாராம். அதன்மூலம் காவல் நிலையத்தைப் பிடித்திருந்த கெட்ட ஆவிகளை விரட்டிவிட்டாராம்.

கெட்ட ஆவிகள் ஓடினவோ, இல்லையோ குற்றப் பிரிவுக் காவல் ஆய்வாளர் ஜி. சுப்பிரமணியம் விடுப்பில் சென்று விட்டார். பூஜைக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.

அறிவை அடகு வைத்துவிட்டு மடமையில் மூழ்கிக் கிடக்கும் காவல் துறையினர் அறிவு பெறுவது எப்போது? திறமையை வளர்த்துக் கொள்வது என்றைக்கு?

கபாலீசுவரனின் முன்னிலையிலேயே (கோயிலில்) நடைபெற்ற உண்டியல் திருட்டைத் தடுக்க முடியாத கடவுள், அவனுக்கு பூஜை செய்தால் கண்டுபிடிக்க உதவுவானோ? இது யாரை ஏமாற்ற? யார் பிழைக்க?
http://viduthalai.com/20080429/news03.html

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: