Followers

Thursday, April 10, 2008

வைப்பாட்டிகளையும் ஏற்பாடு செய்து தெரு திருப்புழுதிகளையும் அவிழ்த்துக் கொட்டுகிறார்களே - யாராவது கேள்வி எழுப்பியதுண்டா?

கடவுளைத் தேடி பக்தர்கள் போன காலம் போய் மக்களைத் தேடி மகேசன் வந்து விட்டாரோ!

பெரும் பிள்ளை விளையாட்டு!

நால்வருணம் ஆச்சிரமம்ஆசாரம் முதலாநவின்ற கலைச் சரிதமெலாம்பிள்ளை விளையாட்டேஎன்றார் வடலூர் இராமலிங்க அடிகளார்.

இந்தக் கருத்துக்கான மூலத்தைத் தேடி மூலை முடுக்கெல்லாம் யாரும் அலைதல் - திரிதல் வேண்டாம்.

சென்னைத் தீவுத் திடலிலே ஒரு பெரும் விளையாட்டு நடந்திருக்கிறது. இந்த விளையாட்டை ஆடியவர்கள் சிறுபிள்ளைகள் அல்ல - வளர்ந்த பெரியவர்கள்தாம்.14 ஆயிரம் சதுர அடியில் இந்த விளையாட்டு நடந்திருக்கிறது. பிரம்மாண்டமான வகையில் சினிமா பாணியில் அரங்கு அமைக்கப்பட்டது.

எதற்காக இந்த அரங்கம்? ஒரு ஜோடி திருமணத்துக்காக! அரசியல் பிரமுகர் வீட்டுத் திருமணமோ! பெரிய தொழிலதிபர் வீட்டு விசேஷமோ! பலரும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

ஆனால், நடந்ததோ கடவுள் குடும்ப விவகாரம். கடவுள் வீட்டுத் திருமணம். மாப்பிள்ளை திருப்பதி வெங்கடாஜலபதி, மணமகள் பத்மாவதி தாயார்.
இந்த இளம்(?) ஜோடிகளுக்குத்தான் திருமணம். லட்சம் மக்கள் பார்வையாளர்கள்.

இதற்குப் பெயர் சீனிவாசா திருக்கல்யாண நிகழ்ச்சியாம்.கல்யாணம் நடந்த நேரமோ இரவு 7.47 மணியாம்.பொதுவாக உதயாதி நாழிகையில்தானே வைதீகர்கள் சுபமுகூர்த்தம் நடத்துவார்கள் - இது எப்படி என்று யாரும் கேட்டுவிடாதீர்கள் - இது கடவுள் சமாச்சாரம்.

இந்தக் கல்யாண வைபவத்துக்காக பெண்ணும், மாப்பிள்ளையுமாகிய பொம்மைகள் திருப்பதி கோயிலிலிருந்து பூஜை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டனவாம்.

அது சரி... பத்மாவதியின் கழுத்திலே திருவாளர் வெங்கடேசன் தாலி கட்டினாரா? அதுதான் இல்லை. அர்ச்சகர்ப் பார்ப்பனர்தான் தாயாராம்மாளுக்குத் தாலி கட்டினாராம்.

ஒரு சந்தேகம் எழலாம். பத்மாவதி அம்மையார் புருஷன் திருவாளர் வெங்கடேசனா அல்லது அந்த அர்ச்சகர்ப் பார்ப்பனரா? பக்தர்களின் முடிவுக்கே விட்டுவிடலாம்.

எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் மட்டும் இது என்ன புதுக்கூத்து!

பாரம்பரியமாக, வேதாகமச் சத்தியமாக சீனிவாச திருக்கல்யாணம் திருப்பதில் தானே நடந்து வந்திருக்கிறது? இப்பொழுதென்ன இந்தப் புது தடபுடல்?

அண்மைக்காலமாக ஏனிந்த ஏற்பாடு?திருப்பதியிலிருந்து உற்சவமூர்த்தியைக் கொண்டு வந்து தீவுத் திடலிலே கல்யாணம் செய்வதற்கு எந்த ஆகமம் அனுமதி அளித்திருக்கிறது?

கடவுளைத் தேடி பக்தர்கள் போன காலம் போய் மக்களைத் தேடி மகேசன் வந்து விட்டாரோ!

அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலே பக்திப் பஞ்சம் ஏற்பட்டதால், காலத்துக்கேற்ற கோலமாக இந்தப் புது யுக்தியைக் கடைபிடித்து இருப்பார்களோ!

பக்தி என்பது ஒரு வணிகம் என்பது இப்பொழுது விளங்கிவிடவில்லையா?

வடலூர் இராமலிங்க அடிகள் எவ்வளவு சரியாகவே கூறியிருக்கிறார் - பிள்ளை விளையாட்டே என்று.

அர்ச்சகர் பிரச்சினையா - எந்த மொழியில் வழிபாடு - என்று பிரச்சினை வெடிக்கும்பொழுதெல்லாம் ஆகமத் தடிகளைத் தூக்கிக்கொண்டு அடியாள்களாகத் திரளும் - வைதீகச் சிரோன்மணிகள், நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி, ஓ மைலா(ர்)டு, இந்த அநியாயத்தைக் கேட்கமாட்டீர்களா?

என்று பஞ்சக்கச்சக் கோவணத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு இடிமுழக்கம் செய்யும் அதே கூட்டம்தான் திருப்பதி வெங்கடேசுவரனை - பத்மாவதியை மூலக்கிரகத்திலிருந்து வீதிக்கு இழுத்து வந்து மலிவுப் பதிப்பு செய்துள்ளனர்.

கடவுளா அவர் அரூபி, (உருவமற்றவர்) அய்ம்புலனுக்கும் சிக்காதவர் என்றெல்லாம் அளந்து கொட்டும் அதே கூட்டம்தான்,

கடவுளுக்கு உருவம் கற்பித்து, பெண்டாட்டியைக் கட்டி வைத்து, பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக்கொள்ள பள்ளியறைகளையும் ஏற்படுத்தி,

இன்னும் சொல்லப்போனால், வைப்பாட்டிகளையும் ஏற்பாடு செய்து

இவ்வளவுத் தெரு திருப்புழுதிகளையும் அவிழ்த்துக் கொட்டுகிறார்களே -

யாராவது ஒரே ஒரு பக்தர் இதுபற்றி கேள்வி எழுப்பியதுண்டா?

பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே - அவர்கள் எப்படி கேள்வியை எழுப்புவார்கள்?

கொஞ்சம் தொண்டைக் குழிவரை முட்டி மோதிவரும்தான்; அதற்குமேல் வெளிவராது!

பகவான் சமாச்சாரமாயிற்றே - கேள்வி கேட்டால் ரௌரவாதி நரகப் படுகுழிக்கு அல்லவா போக நேரும்!

இந்தப் பய பக்தி (பயம்+பக்தி) இருக்கும் வரை பார்ப்பன வாழ்வுக்குப் பஞ்சம் ஏது?

கடைசியாக ஒரு கேள்வி. தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் அது.

போன வருஷம் வெங்கடேசன் - பத்மாவதிக்குத் தாலி கட்டினானே - அதை எவன் அறுத்துக் கொண்டு போனான்? எதற்காக மீண்டும் இந்த ஆண்டு தாலி கட்டும் ஏற்பாடு?--- மயிலாடன்
http://viduthalai.com/20080409/news06.html
----------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: