Followers

Tuesday, April 1, 2008

பலே !! பலே !! அஞ்சாமல் பாவம் செய்யுங்கள். அஞ்சல் , இணைய தள வழி இந்து ,கிறித்துவ பாவ மன்னிப்பு ஏற்பாடுகள்.பாவங்கள் பஞ்சாய்ப் பறந்தோட.

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம்.

ஆம், என்க! .இந்து மதத்தில் பிராயச்சித்தம், கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு - இப்படியாக ஒவ்வொரு மதத்திலும் பாவங்களை மன்னிப்பதற்காக ஏற்பாடுகள் உண்டு.

12 வருடங்கள் செய்த பாவங்களின் பட்டியலைத் தூக்கிக் கொண்டு போய் கும்பகோணம் மகா மக குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால். அந்த க்ஷணமே அனைத்துப் பாவ மூட்டைகளும் நீர் மூழ்கிக் கரைந்து போய், புண்ணியங்கள் குலை குலையாய் காய்த்து, சொர்க்கலோகத்துக்குச் சாலை போட்டு கொடுத்து விடும்.

கிறித்துவ மதத்தில் ஞாயிறு தோறும் பாவ மன்னிப்புச் சீட்டு தயாராகவேயிருக்கும் திங்கள் தொடங்கி சனிவரை பாவங்களைக் குவித்து விட்டு, ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயப் பாதிரியாரிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு, புண்ணியத்தைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

மறுபடியும் அதே பக்தர் திங்கள்கிழமை முதல் சனிக் கிழமை வரை பாவங்களைச் செய்வதில் தயக்கம் கிடையாது. இது ஒரு தொடர் ஓட்டம் போல (Relay Race).

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால் கேட்கவா வேண்டும்.

இப்பொழுது அதிலும் ஒரு தலை கீழ்ப் `புரட்சி தேவாலயத்துக்கு மெனக் கட்டுப் போய், நேரத்தையும் காலத்தையும் செலவழிக்க வேண்டாம்.

இதுதான் கணினி காலமாயிற்றே! பாவ மன்னிப்புக் கடிதங்களைத் தயாராகவே கணினி படுத்தி வைத்துள்ளனர். அதற்கான இணைய தளங்கள் (website) இப்பொழுது வந்து விட்டனவாம்.

`டெய்லி கன்பெஷன் டாட்காம், மை சீக்ரெட் டாட்காம் என்று போட்டிப் போட்டுக் கொண்டு பாவ மன்னிப்புக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

இணைய தளங்களில் தாங்கள் செய்த பாவங்களைப் பட்டியல் போட்டு, அவற்றிற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டுப் பதிவு செய்ய வேண்டியதுதான் பக்தர்களின் வேலை.

உடனே மின் அஞ்சலில் (இ-மெயில்) பாதிரியாரிடமிருந்து பாவ மன்னிப்புக் கடிதம் கிடைத்து விடும்.

கண்மூடி கண் திறப்பதற்குள் பாவங்கள் பஞ்சாய்ப் பறந்தோடி விடும்.

ஆமாம்! கடவுளையும், மதங்களையும் இனிமேல் இப்படிதான் காப்பாற்றியாக வேண்டும். கஷ்டப்பட்டு,

உடலை வருத்தி பட்டினி கிடந்து, மவுன விரதம் அனுசரித்து,

இரவு முழுவதும் கண் விழித்து - பகவானிடம் தங்கள் பக்தியின் சிரத்தையைக் காட்ட வேண்டும் என்று இக்காலத்தில் வற்புறுத்தினால்,

`அட, போப்பா, உனக்கும் வேலையில்லை; உன் கடவுளுக்கும் வேலையில்ல.`கடவுளாவது, கத்திரிக்காயாவது! என்று பொரிந்து தள்ளி மாட்டார்களா?

மத வியாபாரிகள் மிகவும் கெட்டிக்காரர்களாயிற் - மக்கள் போக்குக்கும், மனப்பான்மைக்கும், தகுந்தாற்போல் தொழிலின் பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்களா?

இந்து மதக்காரர்கள் மட்டும் இளித்தவர்களா?

இப்பொழுதெல்லாம் திருப்பதி, அய்யப்பன் கோயில் பிரசாதங்களைப் பணம் அனுப்பி அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாமே!

மதவாதிகள், தொட்டதற்கெல்லாம் மரபுவழி, பழக்க வழக்கம், ஆகமத்தில் அப்படிக் கூறப்பட்டுள்ளது - என்று தொட்டதற்கெல்லாம் சொல்லி வந்தார்களே அழிம்புப் பேசி வந்தார்களே - அவர்கள் ஏன் இந்தப் புது மாற்றங்களில் மூக்கை நுழைப்பதில்லை?

தங்கள் வசதிக்கும், பிழைப்புக்கும், ஆதிக்கத்திற்கும் தகுந்தாற் போல மிகவும் நெளிவு சுளிவாக நடந்து கொள்வார்கள்.

கேட்டால் பட்சம் பிறழ்ந்து போச்சு என்று புதுக்கரடிகளை விடுவார்கள்.

இந்த விஷயத்தில் மாஜி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் வாயில் ஒரு மூட்டை சர்க்கரையைத்தான் அவிழ்த்துக் கொட்ட வேண்டும்.அவர்தான் அடித்துச் சொன்னார்.

1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் அகில இந்திய இந்து மாநாடு ஒன்று நடந்தது. அம்மாநாட்டில்தான் ஜெயேந்திரர் திரு(?) வாய் மலர்ந்து அருளினார். என்ன தெரியுமா?

``கோயில்களுக்குப் போவதையும் மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப் படுகிறது என்றாரே!

அதுதானே இப்பொழுது நடக்கிறது.இப்பொழுது சொல்லுங்கள் சங்கராச்சாரியார் வாயிலில் ஒரு மூட்டை சர்க்கரையை அவிழ்த்துக் கொட்டலாமா - கூடாதா? - மயிலாடன்
http://viduthalai.com/20080328/news22.html
--------------------------------
மற்ற பதிவுகள்

No comments: