Followers

Friday, March 28, 2008

கிறித்துவ, இசுலாமியப் பிள்ளைகளுக்கு விபூதி நாமம் !!!! ஆசிரியர்களுக்கு அறிவு வ(ள)ரவேண்டும்!

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 20 பேர் குறைய, எட்டு லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வுக்குப் படிக்கும் நேரத்தில் கோயில்களில் நடத்தப்பட்ட அக்கிரமத்தைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

எல்லாக் கோயில்களிலும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டே இருந்தது. கடவுளை எழுப்புகிறார்களா?

இப்படிச் சத்தம் போடும் ஒலி பெருக்கி எந்த ஆகம விதியின்படி வைக்கப்பட்டது?

தமிழில் பாடுவதற்குக் கூப்பாடு போடுபவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள்?

தேர்வுக்குப் பக்தனின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். அர்ச்சகர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். ஆனாலும் ஒலி பெருக்கி கத்திக் கொண்டே இருக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்று பல ஊர்களிலும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கழகம் பல ஊர்களில் தீர்மானமே போட்டு அனுப்பியது. கோயில்கள் கேட்வில்லை. விழா நேரங்களில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒலி அளவில் மட்டும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கூறியது. இதனை நிறைவேற்ற வேண்டிய காவல்துறை எருமை மாட்டின் மேல் பெய்த மழையாகக் கருதித் தன் கடமையைச் செய்கிறது.

பாவம், அவர்களுக்கும் எவ்வளவோ வேலை, துப்பாக்கியைப் பாதுகாப்பது உள்பட!இவ்வளவு இடையூறுகளுக்குமிடையே தேர்வு எழுதுபவர்கள் டென்சன் இல்லாமல் எழுத வேண்டும் என்பதற்காக, இத்தனை ஆண்டுகளாக இல்லாதச் சலுகையை இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அளித்துள்ளார்.

கேள்வித்தாளை முழுமையாகப் படித்திடக் கூடுதலாக பத்து நிமிடங்கள் தேர்வு எழுதும்போது அளித்துள்ளார். நிறைய மதிப் பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் முயலும் நேரத்தில் தம்மாலான பங்களிப்பை அரசு அளித்துள்ளது - மக்கள் நலம் பேணும் அரசு என்பதால்!அதே நேரத்தில் கல்வியாளர்கள் என்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

மூட நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறார்கள். படித்து ஆசிரியர்களாக இருக்கிறார்களே தவிர, இவர்களுக்கு அறிவு என்பதே கிடையாதோ என நினைக்கத் தோன்றுகிறது.
நெய்வேலியில், ஜவகர்மேல் நிலைப் பள்ளியில் நேற்று மாணவ, மாணவியரை காலை 8-30 மணிக்கே வரச் சொல்லி விட்டார்கள். கூட்ட அரங்கில் அமரச் செய்தார்கள்.

மேடையில் ஒரு பார்ப்பனக் கூட்டம் நெருப்பைக் கொளுத்தி, ஏதோ ஒரு ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். மந்திரம் ஓதினார்களாம். மாணவ, மாணவியர் அதைத் திருப்பிச் சொல்லச் செய்திருக்கிறார்கள். அரை மணி நேரம் இந்த மூடச் சடங்கைச் செய்து முடித்து விட்டு மாணவ, மாணவியரை வரிசையாக வரச்சொல்லி அவர்களின் நெற்றியில் சாம்பலைப் பூசி அனுப்பியிருக்கிறார்கள்.
நாமம் போடும் பிள்ளைக்கும் விபூதிதான்!
கிறித்துவ, இசுலாமியப் பிள்ளைகளுக்கும் விபூதிதான்!

இப்படிச் செய்யலாமா? கல்விக் கூடங்களில் மத வழிபாடு நடத்தலாமா? அதிலும் ஒரு மத வழிபாடு நடத்தலாமா?
அதிலும் ஒரு மதத்தில் ஒரு பிரிவு வழிபாடு நடத்தலாமா?

சட்டம் இதை அனுமதிக்க வில்லையே! எப்படிப் பள்ளித் தலைமை ஆசிரியர் செய்கிறார்? நெய்வேலி நிருவாகம் எப்படி அனுமதிக்கிறது?

அரசின் கல்வித் துறை மாவட்ட அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்?தென் மாவட்டங்களில் ஒரு பள்ளியில் மாணவ, மாணவியரின் பெற்றோர்களையும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கால்களைத் தட்டில் வைத்து, மாணவர்கள் அவற்றைக் கழுவிப் பூஜை செய்து ஆசி பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளேடுகளில் படத்துடன் செய்தி வந்துள்ளது.இன்னொரு பள்ளிக் கூடத்தில் தேர்வு எழுதும் முன்பு அனைவரையும் நிற்க வைத்து நெற்றியில் வெள்ளை அடித்து அனுப்பியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அசிங்கம் இது!இப்படியெல்லாம் செய்தால், தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண் பெறவேண்டுமே! கிடைக்குமா? பின் ஏன் இப்படிப்பட்ட மடத்தனமான காரியங்களை ஆசிரியர்களும் கல்வித்துறை அலுவலர்களும் செய்கிறார்கள்? செய்ய அனுமதிக்கிறார்கள்?

பள்ளிக் கூடங்களில் பக்தியை வளர்க்கிறார்கள். அறிவை வளர்க்கவில்லை.அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், முதலில் ஆசிரியர்களுக்கு அறிவு வரவேண்டும்; அவர்கள் முதலில் பகுத்தறிவாளர்களாக மாறவேண்டும்!அந்த நாள், எந்த நாள்?-அரசு
http://viduthalai.com/20080327/news04.html

1 comment:

Guru said...

தேர்வு நேர ஒலிபெருக்கி ஓசை,கால விரயம் செய்யும் தேர்வுக்கு முந்தைய தேவையற்ற பூஜை,மற்ற மதத்தினருக்கும் திருநீறு பூசுதல் கண்டிக்கப்பட வேண்டியதே...

//ஆசிரியர்களுக்கு அறிவு வ(ள)ரவேண்டும்!//
அதற்காக அனைத்து ஆசிரியர்களையும் குறிக்கும் வகையிலான தலைப்பிட்டது சரியா?ஓரிரு இடங்களில் நடைபெறும் சம்பவங்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் பொறுப்பாக முடியுமா?