Followers

Thursday, March 27, 2008

மோடியைத் தூக்கிப் பிடிக்கும் தந்திரம்

நரேந்திர மோடி என்னும் குஜராத் மாநில முதலமைச்சர் - இந்து மதவெறியர் - சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்து, குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக்கொள்ளத் துடிக்கும் குரூரர் - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளங் காட்டப்பட்ட பாசிஸ்ட் என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மத்தியில் நிலைத்துவிட்ட ஒன்றாகும்.

என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதற்கேற்ப, குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரப் பீடத்தில் அவர் அமர்ந்துவிட்டார் என்பதை வைத்து,

மோடி ஆட்சியில் மக்கள் நலமாக வாழுகிறார்கள், வளமாக வாழுகிறார்கள் - பொருளாதார வளர்ச்சி ஓகோவென்று வளர்ந்து ஓங்கிவிட்டது - அதன் காரணமாக மக்கள் அவரை நேசிக்கிறார்கள் - மதிக்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை நாடெங்கும் கிளப்பிவிட்டு,

அந்த மயக்கத்தில் மக்களை வீழ வைத்து, அதன்மூலம் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது நல்லது - அடுத்து மத்தியிலும் அத்வானி தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தை செயற்கையாக உருவாக்குவதுதான் இந்தியா முழுமையும் உள்ள பார்ப்பனர்களின் - அவர்கள் ஊடகத்தின் உண்மையான நோக்கமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, துக்ளக், கல்கி, தினமணி, தினமலர் கம்பெனிகள் இந்தக் காரியத்தை திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றன.

குஜராத்டுடே என்ற தலைப்பில் கல்கி இதழ் ஒரு தொடரே ஆரம்பித்துவிட்டது.இதுபற்றி துக்ளக்கில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெறுகிறது.

நேராக குஜராத் மாநிலத்துக்கே சென்று நேரடி தகவல்கள் என்ற பெயரால் மோடியை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளியுள்ளது.என்னதான் உண்மையைக் கரும் திரையிட்டு மறைத்தாலும், சிறுபான்மை மக்கள் மத்தியில் குஜராத் மாநிலத்தில் நிலவும் கருத்தினை கல்கியால் புறந்தள்ள முடியவில்லை.

2002 ஆம் ஆண்டின் (சிறுபான்மையினருக்கு எதிரான மதக்கலவரம்) வடு எல்லோர் மனத்திலும் இருக்கவே செய்கிறது. இப்போதும் சிறுபான்மையினருக்குப் பிரச்சினைகள் இருப்பது குறித்து இரு வேறு கருத்தில்லை என்று ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். வின்சன், சுரேஷ் ஆகியோர் கூறினர் (கல்கி, 30.3.2008).

சிறுபான்மையினர் திட்டமிட்ட வகையில், அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி, படுகொலை செய்ததெல்லாம் பெரிய விஷயமல்ல - சிறுபான்மையினரின் கடைகளையும், வீடுகளையும் கொளுத்திச் சாம்பல் ஆக்கப்பட்டதெல்லாம் சிறிய விஷயம்தான்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண்களைக்கூட பாலியல் பலாத்காரம் என்பது எல்லாம் வேறு எங்கும் நடக்காத ஒன்றா?

அவற்றையெல்லாம்விட மோடி ஆட்சியில் எப்படி எப்படியெல்லாம் நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது; தொழில் வளர்ந்திருக்கிறது, அலுவலகங்கள் எல்லாம் இலஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செயல்படுகின்றன - இதை மட்டும் கவனியுங்கள் என்பதுதான் இந்தக் கூட்டத்தின் பிரச்சாரத் தந்திரமாகும்.

விவசாயிகளின் தற்கொலைகள் அந்த மாநிலத்திலும் நடந்திருக்கின்றன; வேலையில்லாப் பிரச்சினை அங்கும் உண்டு என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!

இவற்றையெல்லாம்விட இந்த நாட்டுக்குரிய ஒரு பகுதி மக்கள் - இந்தியாவின் குடிகள் என்னும் உரிமையுடைய மக்கள், அவர்கள் மதத்தால் மாறுபட்டவர்கள் என்பதற்காக வாழும் உரிமையற்றவர்கள் என்ற வெறியில் அவர்களின் உயிரை ஒரு அரசாங்கமே முன்னின்று குடித்து முடிக்கிறது; நர வேட்டை ஆடுகிறது என்றால், அது அரசாங்கம்தானா?

மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல்வதன் பொருள் என்ன?இதற்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, நரேந்திர மோடியைத் தோளில் தூக்கி வைத்து குதியாட்டம் போட பார்ப்பன ஊடகங்கள் முன்வரட்டும்!

பார்ப்பனர்கள் எந்தத் தந்திரங்களையும் மேற்கொண்டு, தங்கள் நலன் சார்ந்தவற்றை மக்கள் மத்தியில் பிரபலம் செய்வார்கள் என்பதற்கு இந்தக் குஜராத் அரசு தொடர்பான அவர்களின் அணுகுமுறையே போதுமானது!
http://viduthalai.com/20080326/news06.html

No comments: