Followers

Saturday, March 29, 2008

அரசு அலுவலகமா? கள்ளழகர் ஓய்விடமா?

கடவுள், மூட நம்பிக்கை. கோயில் விழாக்கள் காட்டுவிலங்காண்டித்தனம்.

அரசின் அலுவலகங்களின் பணியாளர்கள் விழாவில் பங்கு பெறுவது மதச் சார்பின்மைக்கு எதிர்.

இந்த நிலையில், கோயில் விழாக்களையே துறையின் சார்பாக நடத்துவது என்பது சட்ட விரோதம்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாசி மக விழாவில், ஒரு நாள் விழாவை வருவாய்த் துறை நடத்துவதும், ஒரு நாள் விழாவைப் பொதுப் பணித்துறை நடத்துவதும் சட்ட விரோதம்.

கடலூர் குரங்கு (அனுமார்) கோயில் விழாவில் ஒரு நாள் விழாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் நடத்துவதும் சட்டப்படி தவறு.

இதே மாதிரி ஊரூருக்கு ஒரு விழாவில் அரசுப் பணியாளர்கள் பங்கெடுத்து அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.

கடவுளை நம்புவதும், கும்பிடுவதும், விழாக் கொண்டாடுவதும் அவரவர் தனிப் பிரச்சினை.
விழாவுக்குப் போவதும், பங்கெடுப்பதும், நன்கொடை கொடுப்பதும்கூட, தனி நபர் விருப்பம்தான்.
குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்கவேண்டும் என்று அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் உள்ளன. ஆனால், அரசு அலுவலகங்களில் கடவுள் விழா நடத்துவது தவறு; குற்றம்.

அப்படி ஒரு விழாவை, அரசு அலுவலகத்தில் நடத்தவேண்டும் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் மதுரையில்! இவர்கள் கடவுளைத் தேடிப் போகாமல், கடவுள் இவர்களை நாடி வருகிறதாம்.

சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் உலா என்ற மூடத்தனமும், பைத்தியக்காரத்தனமும் நிரம்பிய விழாவின்போது அதைச் சுமந்து கொண்டு தெருத் தெருவாகச் சுற்றுவார்களாம். வழியில் அந்தப் பொம்மையைக் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் இறக்கி வைப்பார்களாம். தனியார் இடங்களிலும் இறக்கி எக்சிபிஷன் நடத்துவார்களாம். இதற்குக் கட்டணம் கட்டவேண்டுமாம்.

இதில் அரசு அலுவலகங்களும் அடங்குமாம். கலெக்டர் பங்களா, காவல்துறை, பொதுப் பணித்துறை, மின் வாரியம் என்று பல அரசு அலுவலகங்களிலும் காசு கொடுத்துக் கள்ளழகரைத் தங்க வைத்துக் கடவுளின் கருணா கடாட்சத்திற்குப் பாத்திரமாவார்களாம் அரசு அதிகாரிகள்.
அப்படி ஓர் அலுவலகத்தில் இந்தக் காரியத்தை நடத்திக் கொண் டிருப்பவர்கள் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள். மாவட்டத் தொழில் மய்ய அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

எல்லாம் வசூல் விசயம்தான்!
அலுவலகத்தின் உள்ளே வைத்துக் கொள்ளாதீர்கள்; அலுவலகத்தின் எதிரே வைத்துக் கொள்ளுங்கள் என்று அலுவலக உயர் அதிகாரி (பொது மேலாளர்) கூறினாராம். குதிக்கிறார்கள் பக்தர்கள்.காரணம்?

பொது மேலாளர் கிறித்தவர். விவகாரத்தை இந்துக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசிய ஜூனியர் விகடன் ஆள்களிடம் கலெக்டர் கூறியதாக அந்த ஏடு எழுதியிருப்பது இதுதான்: நான் இன்ன மதத்தைச் சேர்ந்தவன். அதனால் பொது இடத்தில் பிற மதக் கடவுள் உள்ளே வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என்று கூறினாராம்.

இது உண்மையானால், நமக்குத் தேவைப்படும் விளக்கம் ஒன்றுதான். அரசு அலுவலகம் திருவிழா நடத்தும் பொது இடமா?

மதச்சார்பற்ற அரசின் அலுவலகத்தில் கடவுள் படங்களே இருக்கக்கூடாது என்பது அரசு ஆணை. வழிபாட்டு இடங்களோ, கோயில்களோ, அதுபற்றிய வாசகங்களோ இடம்பெறக்கூடாது என்பதும் அரசின் ஆணைதான்.மதுரை மாவட்டக் கலெக்டருக்கு இவை தெரியாதா?

அரசுப் பணியிடத்தைப் பஜனை மடமாக்க விரும்பும் பார்ப்பனப் பத்திரிகை யாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டாமா?

அரசுக் கொள்கைக்கு எதிர்ப்பாக, ஆணைகளுக்கு எதிராக இவர் செயல்பட்டுவிட முடியாதே! அரசின் ஆணைப்படி அரசின் கொள்கைகளைச் செயல்படுத்த முனையும் ஓர் அலுவலரை முடக்கிப் போட முயல்கிறார்கள். சமூக சீர்திருத்தத் துறை இதில் கவனம் செலுத்தி விரைந்து செயல்பட வேண்டும்!- அரசு
http://viduthalai.com/20080328/news04.html
--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

Vajra said...

ஐயா, கோவில் விழாக்களை அரசு அலுவலகத்தில் நடத்துவது மதச்சார்பின்மைக்குப் புறம்பானது என்றால், கோவில்களை அரசு அலுவலகம் கட்டுப்படுத்துவது எத்தகய தொரு மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு ?


கோவில் உண்டியல் பணம் மட்டும் வேண்டும், கடவுள் வேண்டாமா ?