Followers

Sunday, February 10, 2008

அய்யப்பன் கோயில் பவுத்தக் கோயிலே! கேரள அரசு தகவல்.

சபரிமலைக் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா? கூடாதா? என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.

இது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தில் கேரள அரசு கொடுத்திருக்கும் ஒரு தகவல் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

கேரள மாநிலத்தில் பழைய வரலாற்றை எழுதிய சில அறிஞர்கள், சபரிமலை சாஸ்தா கோயில் ஒரு காலத்தில் புத்த மத வழிபாட்டுக் கோயிலாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர் என்று கேரள அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்றின் உண்மைப் போக்கை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான தகவல் அல்ல.

ஆனால், இந்த மதத்தை வைத்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியூட்டக் கூடியதாகவும், வயிற்றைக் கலக்கக் கூடியதாகவும் இருக்கவே செய்யும் கேரள அரசின் இந்த உண்மையான கூற்றுக்காகக் கடுமையான கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கத்தான் செய்வார்கள்.

அய்யப்பன் கடவுளைக் காட்டித்தான் பக்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

பல்வேறு பிரச்சார யுக்திகளால் மக்கள் மத்தியிலே அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தையும் உண்டாக்கி வைத்துள்ளார்கள்.

பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவதால், பக்தித் தொழிலில் நல்ல வருமானமும் கிடைக்கிறது –

இந்து மதத்துக்கும் ஒரு வகையில் பலமான அஸ்திவாரமாகவும் இருக்கிறது.
இதிலே இடி விழுந்தால் அவர்கள் துடிக்கத்தானே செய்வார்கள்.
ஆனாலும், வரலாற்றை மறைக்க முடியாதே!

சபரிமலை அய்யப்பன் கோயில் மட்டுமல்ல;
இன்றைக்கு இந்து மதக் கடவுள்களாக இருக்கும் சிலைகள் பெரும்பாலும் ஒரு காலத்தில் புத்தர் சிலைகள்தான் –


கோயில்களும் ஒரு காலத்தில் பவுத்த விகாரங்கள்தான்!

இதுகுறித்த முழுத் தகவல்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஆய்வாளர் மயிலை சீனி. வெங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துப் பார்த்தால் மிக எளிதாகவே விளங்கிவிடும்.

அந்நூலின் 172 ஆம் பக்கத்தில் சாத்தனார் - அய்யனார் என்ற தலைப்பில் இதுகுறித்து விரிவாகவே அலசப்பட்டுள்ளது.

சாஸ்தா என்ற வடமொழிச் சொல்லுக்கு - சாஸ்திரங்களை நன்கு கற்று அறிந்தவர் என்று பொருள்படும்.

சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்த காதையில் பாசண்டச் சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு என வரும் அடியில் பாசண்டச் சாத்தான் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை - தொண்ணூற்று வகை சமய சாத்திர தருக்கக் கோவை இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவராதலின், மகாசாத்திரனென்பது புத்தருக்குப் பெயராயிற்று என்று கூறப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மயிலை சீனி. வெங்கடசாமி.

புத்தனுக்குரிய இந்த சாஸ்தா என்ற சொல்லை அய்யப்பனுக்கும் பயன்படுத்துவதிலிருந்தே - இதில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட சூழ்ச்சியை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

ஒரு காலத்தில் பவுத்த கோயில்களாக இருந்தவை, பவுத்தம் இந்தியாவில் அழிக்கப்பட்டபோது, இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன.

சாத்தானாகிய புத்தருக்கு அய்யப்பன் என்ற பெயரும் உண்டு என்பதை அறிந்துகொண்டால், இப்பொழுது இந்துக் கடவுளாக இருமுடி கட்டித் தரிசிக்கப்படும். அய்யப்பனின் மூலம் எது என்று விளங்கிவிடுமே!

தருமன் என்றும், தருமராசன் என்றும் புத்தருக்குப் பெயருண்டு.
இன்றைக்கு இந்து மதக் கோயில்களாக உள்ள தரும ராஜா கோயில்களும் தருமராசனாகிய புத்தரின் கோயில்களே!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்கூட - புத்தரின் நின்ற கோலம்தான் பிற்காலத்தில் மாற்றப்பட்டதாக ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

முகத்தை மறைக்கவே நெடுநாமம் சாத்தப்பட்டுள்ளது.வஞ்சகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

அயோத்தியில் ராமன் கோயில்மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சொந்தம் கொண்டாடுவோரை நோக்கி இப்பொழுது ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது.

அதே அணுகுமுறையில், அய்யப்பன் கோயில் என்பது புத்தர் கோயில்தான் - எனவே, அதனைப் பவுத்தர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், அதனை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
http://viduthalai.com/20080209/news02.html
-------------------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

PAISAPOWER said...

இது தொடர்பான எனது பழைய பதிவொன்றின் தொடுப்பு...

http://sadhayam.blogspot.com/2006/06/blog-post_30.html#links