Followers

Tuesday, February 19, 2008

சிறிதளவு சாணி பட்டு விட்டால் கழுவியவன்.. சாணியை ....???

சிறிதளவு சாணி பட்டு விட்டால் கழுவியவன்.. சாணியை உருண்டை செய்து வைத்து கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.

பகுத்தறிவு முன் கடவுள் நிற்குமா?தன்னுடைய உடையில் சிறிதளவு சாணி பட்டு விட்டால் உடனே தண்ணீரினால் கழுவியது போதாது என்று சோப்பினால் தேய்த்து அதன் துர்நாற்றம் போகும் வண்ணம் கசக்குகிறான்.

ஆனால் சிறிதளவு சாணியை உருண்டை செய்து வைத்து, இதுதான் பிள்ளையார், விழுந்துக் கும்பிடு என்று கூறவும் உடனே கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.தெருவில் போகும்போது யாராவது தாய்மார்கள் குப்பையில் கொட்டும் சாம்பல் காற்றில் பறந்து வந்து மேலே பட்டவுடன், ஆத்திரம் பொங்கிக் கொண்டு, ஒரு பெண் பிள்ளை நம்மேல் குப்பையைக் கொட்டினாள் என்பதற்காக முறைத்துப் பார்த்துப் பேசிவிட்டுச் செல்கிற அதே மனிதன்

மேல் அடுத்த வீதியில் காளிதேவியின் உருவம் என்ற பரட்டைத் தலையுடனும், மஞ்சள் துணியுடனும் வேப்பிலைக் கொத்துடனும் ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருவள், ஒருபிடி சாம்பலை எடுத்து முகத்தில் வீசி அடித்தவுடன், "அம்மா தாயே இன்னொரு அடி அடிதாயே; என் பெண் ஜாதி பிள்ளைகளுக்கும் பிரசாதம் கொடு தாயே!" என்று தலையைக் குனிந்து கும்பிடுகிறான்.இவைகளின் மூலம் அவனுடைய பகுத்தறிவை எடை போட முடிகிறது.

தன் பகுத்தறிவையே உபயோகிக்கும் இடத்தில் உண்மை விளங்குகிறது. சாணியாகவும், சாம்பலாகவும் தோன்றி அவைகளின் ஆபாசங்கள் தோன்றுகின்றன.

ஆனால் பகுத்தறிவற்ற நேரத்தில் பகுத்தறிவை சரியாக உபயோகிக்காத நேரத்தில் சாணி உருண்டை சாமியாகவும், சாம்பல் கடவுளின் பிரசாதமாவும் தோன்றுகிறது.சாதாரணமாக ஒரு பெண் கடைக்குச் சென்று சிறிய திருகு அணி போன்ற நகை வாங்கினால் அந்தக் கடைக்காரன் படும்பாடு கொஞ்சமல்ல.

எத்தனைப் பவுன் எடை? நீடித்து உழைக்குமா? முன்பு இக்கடைக்காரனிடம் வாங்கியது இப்போது எப்படி இருக்கிறது? பவுன் சரியான மாற்று உடையதா? உறுதியான வேலைப்பாடாக இருக்கிறதா?

என்று தான் யோசித்துப் பார்ப்பதுமன்றி, அக்கடைக்காரனைக் குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகள் அவனைத் திணற வைத்து விடும்.அதைப் போன்றே ஒருவன் ஜவுளிக் கடைக்குச் சென்று துணி வாங்கினால், அத்துணியைப் பற்றி என்ன நம்பர் நூலில் செய்யப்பட்டது? கைத்தறியா, மில் துணியா? சாயம் வெளுக்காமல் இருக்குமா? அடுத்தக் கடையைவிட இந்தக் கடையில் கெஜத்துக்கு எவ்வளவு விலை அதிகம்? கெஜத்துக் கோலில் அளவு குறைவாக இருக்கிறதா?

–என்று இவ்வளவும் பார்த்த பிறகு பீஸ் விலை என்னவென்று கேட்டு மொத்தமாக வாங்கினால் சில்லறையில் வாங்குவதைவிட எவ்வளவு நயமாக இருக்கும் என்று இதையும் கணக்குப் பார்த்து கையில் உள்ள தொகையையும் எண்ணிப் பார்த்து இறுதியில் ஒரு கெஜம் துணி கொடு என்று வாங்கிச் சொல்கிறான். இக்காட்சியை சாதாரணமாகக் கடைவீதிகளில் காணலாம்.ஆனால் இவ்வளவு கேள்வியும், ஆராய்ச்சியும் அங்கே தான் தென்படுகிறதே தவிர வீட்டிற்கு வந்தவுடன் சாணி உருண்டையின் முன்பாகத்தான் விழுந்து கும்பிடுகிறான். கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் நிமிர்ந்திருக்கும் கற்களெல்லாம் சாமியாகக் கருதுகிறான்.

ஏனெனில் இங்கே பகுத்தறிவுக்கு அவன் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். சிறிதளவு பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தாலும் போதும். அத்தனையும் கருக்கல் என்று தென்பட்டுவிடும்.பாமர மக்கள் தான் இதைப்பற்றி சிந்திப்பதில்லை என்றாலும், படித்தவன், அறிவாளி என்று கூறிக் கொள்பவனும் இதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது.படித்த அறிவாளி என்பவனும் கடவுள் சொன்னது, ரிஷிகள் சொன்னது, சாஸ்திரத்தில் உள்ளது என்றால் உடனே முட்டாளாகி விடுகிறான். கடவுள் என்ன சொன்னார்? ஏன் சொன்னார்? எப்படிச் சொன்னார்? எதற்காகச் சொன்னார்?

என்பதை சிந்திப்பதே கிடையாது. மேல் நாட்டு உடைதான் உடுத்துகிறான். அயல் நாட்டில் சென்று கல்வி கற்று வருகிறான். மேல் நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சி பெற எவ்வளவோ செலவு செய்து படித்துவிட்டு வரும் பட்டதாரி என்பவன் கூட இங்கு வந்தவுடன் பிள்ளையார் கோவிலைக் கண்டவுடன்; அவசரமாக கால் செருப்பைக் கழட்டிக் கொண்டே தொப்பியை எடுத்து நெற்றியில் அடித்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

ஆராய்ச்சிக்கென்றே அயல் நாடு சென்றவன் இங்குள்ள பாழும் கடவுளையும், மதத்தையும்பற்றி சிறிதளவு கூட தன் புத்தியைச் செலுத்துவதில்லை. அதனால் தான் இங்கில்லாத கல்வி முறைகள் மேல் நாடுகளில் காணப்படுகின்றன. இங்குள்ளதைப் போன்று பாழாய்ப் போன கடவுள்களும் சாஸ்திரப் புராணங்களும் விஞ்ஞானிகளைக் கொண்ட நாடுகளில் இல்லை.

ஆதலால் ஆராய்ச்சி தங்குதடை இன்றி வளர்ந்து கொண்டே போகிறது அல்லது இவைகள் அங்கு இருந்திருக்குமெயானால் இத்தனை நாட்கள் வரை விட்டு வைத்திருக்கவும் மாட்டார்கள்.கடவுள் அவதாரம், மகான், ரிஷி, மகாத்மா இவர்கள் எல்லாம் மனிதனுக்கு மேலான எதைத்தான் கண்டுபிடித்தனர்?

ஏன் அவர்களுக்கு இப்பெயர்கள் உண்டாக வேண்டும்?
அவர்கள் கூறியது தான் முடிந்த முடிவானதா?
அவர்கள் உடம்பிலும் இரத்தம் தானே ஓடுகிறது?
அவர்கள் சிறுநீர் பன்னீரும் ஜவ்வாதும் கலந்த வாசனையாகவும் நம்முடையது கவிச்சியும் அடிக்கிறதா?

இதையெல்லாம் சிறிதளவு யோசனை செய்தால் போதும் எல்லாம் கற்பனைகளும் காட்டுமிராண்டிகள் கையாள்வதும் என்பது விளங்கும்.நாஸ்திகம் என்ற சொல்லை சிறிதளவு ஆராய்வோமானால் இச்சொல் முதலில் கூறியபடி வட சொல்லாகும் இதற்கு கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்திய பார்ப்பனர்கள், கடவுளை நிந்திக்க வேண்டுமென்பதற்கே புகுத்தி இருக்கிறார்கள்.

உண்மையாக கடவுள் நம்பிக்கைக்காரனும், கடவுளை நன்றாய் உணர்ந்தவனும் நாஸ்திகம் என்ற சொல்லுக்கு கடவுள் இல்லை என்ற பொருளைக் கூறவே மாட்டான், அப்படிக் கூறுகிறவன் கடவுளை அவமானப்படுத்துகிறவன் கடவுளை மட்ட ரகமாக நினைத்திருப்பவன் என்று தான் பொருள்படும்.

ஆனால் கடவுள் இல்லை என்பதற்கு தமிழர்களிடையில் ஒரு சொல் கிடையாது. ஏனெனில் கடவுளை அவமானப்படுத்தும் எண்ணம் இருந்திருக்குமானால் அதற்கு ஏதாவது ஒரு சொல்லை ஏற்படுத்தி இருக்கலாம். எவ்வளவோ தமிழ்ப் புலவர்கள், தமிழைப் போற்றி வளர்த்தவர்கள், தமிழில் ஆராய்ச்சியாளர்கள், தமிழை வளர்க்கப்பாடுபட்ட அரசர்கள், புலவர்கள் எல்லாம் இருந்திருக்க இதற்கு ஒரு சொல் இருப்பதாகக் காணவுமில்லை.

புதிதாக உண்டாக்கவுமில்லை. ஏன் என்றால் தமிழன் அவ்வளவு அறிவாளியாக, கடவுளை உணர்ந்தவனாக, கடவுளை அவமானப்படுத்தும் எண்ணம் இல்லாதவானாக இருந்திருக்கிறான். என்ன லாபம்? கடவுளின் தன்மைகள் என்ன? சர்வவல்லமை உள்ளவர் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) சர்வத்தையும் (யாவற்றையும்) செய்ய வல்லவர் அவருக்கு மேம்பட்டவர் எவரும் இல்லை. அவனுடைய அனுமதியின்றி அணுவும் அசையாது என்பதாகக் கூறிவிட்டு அந்தக் கடவுளை சாதாரண மனிதர் என்பவன் எப்படி இல்லை என்று சொல்ல முடியும்?

இவன் உண்டு என்பதால் அதை உண்டாக்கப் போகிறானா? அல்லது இல்லை என்பதால் அழிந்து விடப் போகிறானா?

இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றோ கடவுள் இல்லை என்றோ கூறுவதால் கடவுளுக்கு இதனால் தான் பெருமை கிடைக்கப் போகிறதா? அல்லது இவனுக்குத்தான் என்ன லாபம் கிடைக்கும்? யாவற்றையும் செய்விக்கிற, அவனன்றி அணுவும் அசையாத சக்தி உடைய கடவுளின் அனுமதி இன்றி நான் இக்கூட்டத்தில் பேசுவதற்கு வர முடியுமா?

இங்கு வந்து கடவுள்கள் இப்படியெல்லாம் பித்தலாட்டங்களையே உருவெடுத்தன என்றும், அவைகள் அத்தனையும் ஆபாசம், அநாகரிகம் என்றும் சொல்ல முடியுமா? இதையும் அவர் செய்விக்கிறார் என்று தானே பொருள்படும்? அவரே மனதில் இருந்து இதைப் போய் சொல் என்று உத்தரவு கொடுக்காவிட்டால் நான் எப்படி இங்கு கூற முடியும்? எனவே எல்லாம் அவருடைய அனுமதியின் பேரில் தான் கூறப்படுகிறது.

மேலும் இப்பேர்ப்பட்ட மேன்மை குணங்கள் கொண்ட கடவுள் என்ற சாதனத்தை சாதாரண மனிதன் இல்லை என்று சொல்லுவதால் அக்கடவுள் அழிந்து விடுமா? அக்கடவுளை காப்பாற்ற பார்ப்பனர்கள் தேவையா? அப்படி அழிந்து விடுவதாக இருக்குமானால் அக்கடவுளின் சர்வவல்லமையும் எங்கே போனது? தனக்கு மீறிய வேறு ஒருவர் இல்லை என்ற தன்மை எங்கே போனது? சர்வத்தையும் செய்விக்கும் குணத்தின் மேன்மைதான் என்ன?

ஆகவே அத்தனையும் பொய் அல்லது கற்பனை என்றுதான் கொள்ள வேண்டும். அல்லது மற்றவனைக் கடவுள் இல்லை என்று சொல்பவன் என்னும் அவனுக்கு நாஸ்திகன் என்னும் பெயர் கூறி அழைப்பது அறியாமையால் கூறுவதாகும்.

இல்லையேல் ஏதாவது நன்மையைப் பொறுத்து நாஸ்திகம் என்ற வார்த்தையைப் புகுத்தி இருக்க வேண்டும். அதாவது ஆண்டவனை வியாபாரப் பொருளாக்கக் கொண்டு பிழைத்து வரும் பித்தலாட்டக்காரர்கள் உண்டாக்கியதுதான் நாஸ்திகம் என்ற சொல். ஆனால் இந்த ஆயதத்தினைக் கொண்டு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அறிவாளிகளை அடக்கி இருக்கின்றனர்.

ஆரியர்களின் ஆணவத்தை அடக்கத் தோன்றிய வள்ளுவர் மக்களிடம் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்றார். அதாவது எதை யார் சொன்னாலும் மனிதனாகட்டும், ரிஷிகள், முனிகள் மற்றும் மற்றும் கடவுளே சொல்லியவை என்பதாக இருந்தாலும் அதனை ஆராய்ந்துப் பார்த்து அவன் உண்மைப் பொருளை அடைவதே மனிதனின் பண்புக்கு அழகு என்றார்.

இதுவுமன்றி "எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்றும் கூறியதிலிருந்து அப்படிக் கூறிய விஷயம் எதைப்பற்றியதானாலும் அக்கறை இல்லை உன்னைப் படைத்த கடவுள் என்கின்ற ஆண்டவனே கூறியதானாலும் சும்மா விடாதே அதையும் அலசி ஆராய்ந்து பார்.

அறிவு என்ற உரை கல்லில் உரைந்து அதைப் பற்றிய மதிப்பு என்ன? அது எத்தனை மாற்றுடையது? தங்கத்துக்கு சமமா? பித்தளைக்குச் சமமா? – என்று ஆராய்ந்து பார் என்றும் கூறிச் சென்றார்.அவரைப்போன்றுதான் புத்தரும் தோன்றினார். அவர் அறிவுக்கும் மேம்பட்டது ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். மற்றும் வெளிப்படையாக "கடவுளாவது வெங்காயமாவது" எல்லாம் அறிவுக்கும் கீழ்பட்டதுதான் என்று பொருள்படும்படி பச்சையாகவே கூறியிருக்கிறார்.

அதனால்தான் அவ்வித பகுத்தறிவாளிகளை எல்லாம் பார்ப்பனர்கள் கொடுமைக்குள்ளாக்கி அழித்திருக்கின்றனர். புத்தர் தோன்றிய இந்நாட்டிலேயே புத்தரின் கொள்கைகள் பரவாவண்ணம் போய்விட்டன.பார்ப்பனர்கள் இல்லாத அயல் நாடுகளில் புத்தரின் கொள்கைகளை அநேக மக்கள் பின்பற்ற இந்நாட்டிலோ புத்தரின் கொள்கைகளை கடைப்பிடிப்போர் மிகச் சிலர்தான்.

இதைப் போன்றே வள்ளுவரின் திருக்குறள் இருந்த இடமே தெரியாது போன காலமும் இருந்தது. எங்கள் முயற்சியால் தான் ஓரளவாவது திருக்குறளின் மேன்மையைப் பலர் அறிய முடிந்தது. குறள் மாநாடுகள் கூட்டினோம்.

மறைந்து கிடந்த அதன் மேன்மைகளை மக்களிடம் கூறினோம். அதன் பயனாக மக்கள் அதன் வழி நிற்க ஓரளவு வாய்ப்பும் கிடைத்தது.எவ்வளவோ நாகரீகம் கொண்ட தமிழர்கள் இன்றைக்கு அநாகரிகத்திலேயே ஆழ்ந்தவர்களாகவும், மூடப்பழக்க வழக்கங்களிலேயே ஆழ்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்றால் இந்நாட்டில் உள்ள கடவுள் மதம் சாஸ்திர புராணங்களே காரணமாகும்.

நாகரிகமே தெரியாத காலத்திலும் நாகரிகத்தில் தலை சிறந்து விளங்கிய தமிழ் மக்கள் இன்றைக்கு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அநாகரிகம் கொணடவர்களாக இருக்கிறனர்.உலகத்தில் ஒரு இடத்திலும் இல்லாத மதமும், ஆயிரக்கணக்கான கடவுள்களும் இங்கு தான் இருக்கின்றன. எங்கிலும் இல்லாத பார்ப்பனர்கள் இங்குதான் இருக்கின்றனர்.

ஆங்கில நாட்டில் பறைய துரை, பார்ப்பன துரை கிடையாது. ஜெர்மனி நாட்டிலும், அமெரிக்க நாட்டிலும் பார்ப்பனனும், பறையனும் கிடையாது. இப்படி ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கொண்டவர்களாகிய நாம் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். ஓரே கடவுளைக் கொண்ட மேநாட்டவர்கள் நாகரிகத்தில் சிறந்து அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

(19-08-1955 அன்று பெங்களுரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி 30-08-1955 "விடுதலை" இதழில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 பக்கம்… 266)
>> TAMILACHI BLOGSPOT.
-------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!

இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’

வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.-----
---------------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

No comments: