Followers

Monday, February 11, 2008

இந்தியாவைத் தவிர வேறு நாடுகளைப் பிரம்மா படைக்கவில்லை!!!.தன் மரண‌த்தை கனவின் மூலம் எப்படி அறிந்து கொள்ளுவது?

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (50)--சு. அறிவுக்கரசு.

18 புராணங்களில் மிகப் பெரியது கந்தபுராணம். மிகவும் சிறியது மார்க்கண்டேய புராணம். இந்தப் புராணங்களை வரிசைப் படுத்தியதில் கடைசிப் புராணம் பிரம்மாண்ட புராணம் என்பதாகும்.இந்தப் புராணம் உலகைப் படைத்தது பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாகப் புளுகுகின்றன. அதில் பிரம்மாண்டப் புளுகு இது.

பிரம்மா என்கிற படைப்புத் துறைக்கான கடவுள் என்பது பகலில்தான் படைப்பைச் செய்கிறதாம். இந்தப் பிரம்மனும்கூட நாராயணனே என்கிறது இப்புராணம். நர என்றால் நீர்; அயன என்றால் உறங்குதல். எனவே நாராயணன் என்றால் நீரில் தூங்குபவன் அல்லது நீர்த் தூங்கி எனப் பொருள்.
பிரம்மா ஏழு கடல்களையும் ஏழு நிலப்பகுதிகளையும் தோற்றுவித்ததாம். அதன்பின் பிரம்மாவின் உடலில் இருந்தே தேவர், அசுரர், யட்சர்கள் ஆகிய பல வகையினரும் தோன்றினர் என்கிறது இந்தப் புராணம். அப்புறம், ஒன்பது ரிஷிகளும் தோன்றினார்களாம்.

பிறகு ரிஷிப் பட்டாளங்களாகிய சனந்த, சனக, சனாதன, சனக்குமார ரிஷிகளும் தோன்றினார்களாம்.பிரம்மனுக்குத் திருப்தி வரவில்லையாம். முதல் ஆணையும் பெண்ணையும் தன்னில் இருந்தே பிரம்மா தோற்றுவித்ததாம்.
ஆணுக்கு மனு என்றும் பெண்ணுக்கு சதநீபை என்றும் பெயர் வைக்கப்பட்டதாம். இவர்களின் மகன்கள் பிரியவிரதன், உத்தானபாதன், மகள்கள் பிரசுதி, ஆகிருதி என்றும் இவர்களின் வமிசம் வளர்கிறது.

ஒரே ஜோடி. அப்படியானால், சந்ததிகள் அனைவரும் சகோதர சகோதரி கள். இந்தச் சகோதர சகோதரிகளுக்குள் தான் கல்யாணம் நடந்துள்ளது.
எவ்வளவு ஒழுக்கக் கேடான பிரச்சினை? எவ்வளவு ஒழுக்கக் கேடான சிருஷ்டிக் கடவுள்?

நான்கு யுகங்களும் நான்கு வர்ணங்களும் இதன் படைப்பு தான். நான்கு வருணத்தாருக்கு வெவ்வேறு தொழில்கள். ஜாதிக் கொடுமையின் மூல வேர் இந்தப் புராணம். நான்கு வருணத்தாரும் வாழ்க்கையில் நான்கு நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். பிரமச்சரியம், கிருகஸ்தியம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என நான்கு நிலைகளாம்.

பறவைச் சகுனம், பல்லிச் சகுனம், தூங்கி விழித்தவுடன் பார்க்க வேண்டியவை போன்ற மூடநம்பிக்கைகளைக் கூறும் மூலக் கோளாறு இந்தப் புராணம். தீய சகுனங்களைப் பற்றியும் எழுதி வைத்துப் பயங்காட்டுகிறது.

பஞ்சாங்கங்களில் பட்சி சகுனம், பல்லி சகுனம், விழித்தெழுந்தவுடன் காணக் கூடிய பொருள்கள் என்று பல கூறப்பட்டுள்ளன. பிரம்மாண்ட புராணம் தீய சகுனங்கள் பற்றியும் அவற்றின் பலன்களையும் கூறுகிறது.

கனவில் துருவன் (அ) அருந்ததி விண்மீன்களைக் காண முடியாதவன் ஓராண்டிலும், சூரியக் கிரணங்களைக் காண முடியாதவன் பதினோறு மாதங்களிலும்;

பொன் (அ) வெள்ளி வாந்தி எடுப்பதாகக் கனவு வந்தால் பத்து மாதங்களிலும், அழுக்குடைய பாதம் கண்டால் சில மாதங்களிலும், ஒரு காகம் அழுது (அ) புறா ஒருவர் தலைமீது இறங்கினால் ஆறு மாதங்களிலும் மரணம் அடைவர்.
ஒருவரைக் காக்கைகள் (அ) சாம்பல் சூழ்ந்து கொண்டால் அய்ந்து மாதங் களிலும்,

பிரதிபிம்பம் காணப் படாவிட்டாலும், தலையின்றி காணப்பட்டாலும் ஒரு மாதத்திலும், ஒருவரிடம் பிண வாசனை ஏற்பட்டால் பதினைந்து நாட்களிலும் மரணம் அடைவர்.

குரங்கு (அ) கரடிகளால் இழுக்கப்படும் தேரில் தெற்கே செல்வது போன்ற கனவு வந்தால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும். ஒருவர் செவிடானது போல் (அ) கருப்பு உடைகளுடன் இருப்பதாகக் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும்.

கழுத்தளவு பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாகக் கண்டால் விரைவில் மரணம். கனவில் பாம்புகள், சாம்பல், நிலக்கரி, முடி, உலர்ந்து போன ஆறு ஆகியவை காணப்படின், பத்து நாள் களில் மரணம். கருப்பு உடை அணிந்தவரால் கல்லால் அடிபடுவதாக ஒருவன் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படும்.

விடியற் காலையில் முன்னால் ஓநாய் ஊளையிட்டால் சில நாள்களில் மரணம். விளக்குத் திரி அணையும் போது ஏற்படும் சுடல் நாற்றம் தெரியாதவன் மரண வாயிலில் இருப்பான். கண்களில் தொடர்ந்து கண்ணீர், காது நீளுதல், மூக்கு வளைவாகத் தோன்றுதல் ஆகியவற்றால் விரைவில் மரணம் காட்டும்.

கரு நாக்கு, சாம்பல் முகம், சிவந்த கன்னம் மரண அறிகுறி. ஆடிப், பாடி, சிரித்துக் கொண்டு தென் திசைக்கு பயணம் செய்தல் மரண வாயிலுக்கு அறிகுறி, வெளியேற முடியாத பள்ளத்தில் விழுந்திருத்தல், மற்றும் கொலை செய்யப்படுவதாக, தீயில் விழுவது போல் வரும் கனவுகள் மரணம் அருகில் எனக் சுட்டிக் காட்டுபவை.

அதன் பிறகு காலண்டர் கணக்கு முறை பற்றியும் இப்புராணம் கூறும்.பிரம்மக் கணக்கின்படி ஒரு நாள் என்பது ஒரு கல்பம். ஒராயிரம் கல்பங்கள் பிரம்மாவின் ஓர் ஆண்டு.

எண்ணாயிரம் கல்பங்கள் பிரம்ம யுகம். ஓராயிரம் யுகங்கள் ஒரு கவனம். இரண்டாயிரம் கவனங்கள் ஒரு திரிவிரதம். பிரம்மாவின் வாழ்க்கைக் காலம் திரிவிரதா எனப்படும். 33 கல்பங்கள் முடிந்து தற்போது வராக கல்பம் நடை பெறுகிறதாம்.

நாராயணனின் தொப்புள் வழியே தோன்றிய தாமரைப் பூவில் பிறந்ததாம் பிரம்மா. அதனால் பத்ம (தாமரை) யோனி எனப் பெயரும் உண்டாம்.

இந்தப் பிரம்மா சிவனைக் கண்டு யார் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டதாம். சிவனைத் தங்களுக்குச் சமமாக ஏற்க பிர்மா. மறுத்த தாம். நாராயணன், அவரும் கடவுள்தான்; நம் இருவரையுமே வென்றுவிடக் கூடிய சக்தி படைத்தது சிவன் என்று கூறியதாம்.

பிரம்மாவுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்ததாம். உடனே அதன் மடியில் நீலமும் சிவப்பும் கலந்த ஒரு குழந்தை தோன்றி விட்டதாம்.

கல்யாணமும் வேண்டாம், மனைவியும் வேண்டாம், மனைவிக்குப் பிரசவ வேதனையும் வேண்டாம்!

அந்தக் குழந்தை அழுததாம். பக்கத்திலிருந்த மேதாவி யாரோ, தனக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று கேட்டுதான் குழந்தை அழுகிறது என்றதாம்.
உடனே பிரம்மா ருத்ரன் எனப் பெயர் வைத்ததாம்! ருத் என்றால் கத்தி அழுதல்; ஆகவே அந்தப் பெயர் வைத்ததாம். இந்தக் குழந்தை சூரியனில் ருத்ரனாக, நீரில் பாவனாக, பூமியில் சிவனாக, தீயில் பசுபதியாக, காற்றில் ஈசனாக, விண்ணில் பீமனாக, பார்ப்பனர் உடலில் உக்கிரனாக, சந்திரனில் மகா தேவனாக வசிக்குமாம். இடத்திற்குத் தகுந்த நிறம் மாறுமாம் பச்சோந்தி. ஆனால் பிரம்மாவின் மகன் இடத்திற்கு ஒரு பெயர் வைத்திருக்குமாம்.

பாரதவர்ஷத்தை (நாட்டை) உருவாக்கியதாம். இது போக பூமி அல்லவாம். கர்மபூமியாம். வாழ்க்கையே கர்மா (கடமை) என்பதால் இந்தப் பெயராம்.

இந்தியாவைத் தவிர வேறு நாடுகளைப் பிரம்மா படைக்கவில்லை.
ஆனால் 14 லோகங்களைப் பற்றிக் கூறுகிறது. பூலோகம், புவர்லோகம், சுவர் லோகம், மகர் லோகம், ஜனலோகம், தபலோகம், சத்திய லோகம் என்று மேல் உலகங்கள் ஏழாம். அதல, சுதல, நிதல, கபஸ்தல, மகாதல, கீதல, பாதாளம் என ஏழ கீழ் உலகங்களாம்.

புராணப் புளுகு அளவில்லாமல் போய்விட்டது. இதைப் படியுங்கள்.கலியுகம் நான்கு யுகங்களில் இறுதியானது. இது கொடுமை மிக்கது. வருணா சிரம தருமங்கள் நிலை குலையும். ஏமாற்றுக்காரர்கள் தலை முடியை மழித்து சமயக்குரவர் போல் சாஸ்திரம் படிப்பார்கள். அவர்களை ஏற்று மக்கள் மோசம் போவார்கள்.

உண்மையில் தரும நெறி உடையார் இந்த யுகத்தில் நல்ல பலன் பெறுவர். கலியுகத்தில் ஒரு நாளின் தருமம், துவாபரயுகத்தில் ஒரு மாத பண்ணியத்துக்கும், திரேதாயுகத்தில் ஓராண்டு பண்ணியத்துக்கும் சமமாகும்.
எனினும், கலியுக முடிவில் தருமம் நிலை நாட்டப்படும். விஷ்ணு பிரமிதி மன்னன் வடிவில் அவதரிப்பார். இவர் `கல்கி எனவும் கூறப்படுவார்.

கல்கி தனது முப்பத்திரண்டாவது வயதில் தருமத்தை நிலை நாட்ட ரத, கஜ, துரக, பதாதிகளுடன் கிளம்பி துஷ்டநிக்கிரகம் செய்து, சிஷ்டபரிபாலனம் செய்வார். இவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெறும்.
இவ்வாறு அய்ம்பத்திரண்டு ஆண்டுகள் கழிய உலகை ஆண்டு வருவார். இவ்வாறு சத்ய யுகத்திற்கு கலியுகம் வித்திடும். மக்களெல்லாம் சிறிது சிறிதாக உயரம் குறைந்து குள்ள மனிதர்கள் ஆகித் தோன்றுவர். >>சு. அறிவுக்கரசு.

http://viduthalai.com/20080202/snews02.html
------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கியது போதாது என்று தன் நச்சு வேருடன் அமெரிக்காவில் குடியேறி கிருத்துவ மதத்திதலேயே ஊடுருவும் பார்பனியம்.

இப்படிப்பட்ட கணவன் அமைய வேண்டும் என்று தான் பெண்கள் விரதம் இருந்து வேண்டுகிறார்களா? ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு

ராமன் தேடிய சீதை.தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைத்து மிகக் கொடிய வார்த்தைகளால்.....
---------------------------
மற்ற பதிவுகள்

3 comments:

செந்தழல் ரவி said...

Good Article. Keep it up..!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஏமாற்றுக்காரர்கள் தலை முடியை மழித்து சமயக்குரவர் போல் சாஸ்திரம் படிப்பார்கள். அவர்களை ஏற்று மக்கள் மோசம் போவார்கள்.//

இது உண்மைபோல்; வாழும் ஒருவரை நினைக்க வைக்குதே!!!!

saranboy said...

அருமை... பிற மதத்தையும் ஆராய்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.