Followers

Saturday, February 2, 2008

மந்திரம் உண்மையா? ஓம்’ -பொருள் உரைத்தாலே அசிங்கம் தான் மிஞ்சும்.


கடவுள் என்பது எப்படிக் கற்பனையோ, பொய்யோ அதைப் போன்றவைதான் சாதகம், கிளிசோதிடம், மைபோட்டுப் பார்த்தல், கைரேகை பார்த்தல், குறி சொல்லுதல், தாயத்து எடுத்தல், செய்வினை, ஏவல், பில்லி சூனியம், மந்திரம் என்பவை எல்லாம் பொய்யும் கற்பனையும் கலந்த கலவையாகும்.

மக்கள் இவை எல்லாவற்றிலும் நம்பிக்கை வைத்திருப்பினும், அதிக நம்பிக்கை வைத்திருப்பது, மதிப்பது இன்னும் சொல்லப் போனால் பயப்படுவது மந்திரத்திற்கும் அதைக் கையாள்பவராகக் கருதப்படும் மந்திரவாதி எனப்படுவோருக்கும்தான்.

“உன் வீட்டுத் தோட்டத்தில் தங்கம் மற்றும் வைரம் நிறைந்த புதையல் உள்ளது. தெய்வத்தை வழிபட்டு பலி கொடுத்தால் - நர பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும். நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம்” என மந்திரவாதி என்பவன் ஆசைகாட்டினால், ஆசை வெட்கம் அறியாது என்பதற்கேற்ப பிறர் குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து பூசை செய்து, அக்குழந்தையைக் கொன்று விடும் நிகழ்ச்சி இன்றும் நம் நாட்டில் நடைபெறுகின்றது.

நாளையும் இது நடைபெறும். ஆனால் நாத்திகர்கள், ‘செய்வினை’ மூலம் தங்களை முடக்கிப் போடலாம். நடமாட முடியாமல் செய்யலாம் என ‘மந்திரவாதி’களுக்கு அறை கூவல் விட்டும் இதுவரை அவ்வாறு செய்ய எந்த மந்திரவாதியும் முன்வரவில்லை.

ஏன் முன்வரவில்லை என்பதுபற்றி மக்களும் சிந்திப்பதில்லை.
மந்திரம் எனக் கருதப்படும் சொல் அல்லது சொற்கள், நாம் நாள்தோறும் பேசும் சொற்கள் போன்றவையே. அவற்றிற்கு தனிச் சக்தி கிடையாது.

உண்மையைக் கூறினால் அவற்றிற்குப் பொருளே இல்லை. ‘லங் லங் லிங் லிங் சுங் சுங்’ இவற்றிற்கு பொருள் என்னவென்று யாராலும் கூற இயலாது. ஏனெனில் இவை மந்திரச் சொற்கள். இவற்றிற்கு எப்படி தனிச் சக்தி இருக்க முடியும்?

ஓம்’ எனும் மந்திரத்தின் பொருள் உரைத்தாலே அசிங்கம்தான் மிஞ்சும். எனவே மந்திரம் என்பது மோசடியும் ஏமாற்று வேலையுமாகும் என்பதை மந்திரத்தின் துணை கொண்டு அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கக்குவான்: அந்தக் காலத்தில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்பதால் பாம்பு கடிக்கு மந்திரம் உண்டென்று நம்பி மந்திரவாதி என்போரை நாடினர். அதுபோல எந்த நோய்க்குக் காரணம் தெரியவில்லையோ அந்த நோய்க்கு மந்திரத்தின்மீது நம்பிக்கை ஏற்பட்டது.

மாட்டுச் சாணத்தைச் சுட்டு ‘மந்திரமென்பது நீறு’ என்னும் உலகில் மந்திரங்களுக்கு மகிமை ஏற்பட்டது.

சிறுபிள்ளைகளைத் தாக்கும் நோய்களுள் கக்குவான் என்னும் நோயும் ஒன்று. இந்நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருமல் கடுமையாக இருக்கும். இருபது முதல் முப்பது முறைகூட இருமல் வரும்.
இந்நோய் தம்பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க, பெற்றோர்கள் மந்திரவாதிகளிடம் செல்வர். அவர்கள் ஓர் ஓலைச் சுருளை நூலில் கட்டிக் கொடுக்க, அதைப் பெற்று வந்து தம் குழந்தைகளின் இடுப்புக் கயிற்றில் கட்டி விடுவர். இது ஏமாற்று வேலை என்பதை அறியாத அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடியாகும்.

இதோ ஓர் ஏமாற்று மோசடி


-----(கலியுக மாறாட்ட மென்னும் கண்கட்டு வித்தை பக்கம் 210)


இது என்னவென்று தெரிகிறதா? ‘ராமஜெயம்’ எழுவதுபோல் இதுவும் ஒன்றா? அல்ல. மேலே உள்ளது போன்று பனை ஓலையிலோ, தாளிப் பனை ஓலையிலோ அல்லது செப்புத் தகட்டிலோ வீடுகள் கட்டி (கட்டங்களை வீடுகள் என்பர்). ஒவ்வொரு வீட்டிலும் ‘ரு’ என்னும் தமிழ் எழுத்தை எழுதி (இதை 5 என்ற எண் எனவும் கொள்ளலாம்) சுருட்டி நூலால் கட்டிக் கொடுத்து விடுவர். இதை இடுப்பில் கட்டிக் கொண்டால் நோய் எவ்வாறு வராமல் போகும் என்பதை அறியாத மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சாம்பாதிக்கும் மோசடியே, இந்த ஓலைச் சுருள்.

ஓலைச் சுருளால் நோய் நீங்குமா?
இப்போது கக்குவான் என்னும் நோய் பரவுவதைக் காண முடியவில்லையே. எவ்வாறு இந்நோய் வராமல் தடுக்கப்பட்டது? வைரஸ் என்னும் நோய்க் கிருமிகளால் ஏற்படுவதுதான் அம்மை என்னும் நோய். அது போல பாக்டீரியா எனும் நோய்க் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்தான் கக்குவான் என்னும் நோய்.
அறிவியலின் துணை கொண்டு தடுப்பூசி மூலம் எவ்வாறு அம்மை நோயை ஒழித்தார்களோ அதுபோலவே னுஞகூ என்னும் தடுப்பூசி போட்டதன் மூலம் கக்குவான் என்னும் நோயையும் ஒழித்துவிட்டனர்.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காதென்பது மந்திரவாதிக்கும் தெரியும். அதனால்தான் அவரும் தம் பிள்ளைகளுக்கு கக்குவான் நோய் வராமல் தடுக்க னுஞகூ ஊசி போட மருத்துவமனையில் “கியூ” வரிசையில் நிற்கிறார். எனவே ஓலைச் சுருள் வித்தை ஓர் ஏமாற்று வேலையே.


ஏவல், பில்லி சூனியம்: மூடப் பழக்கத்தில் முதன்மையான பயங்கரமான மூடப் பழக்கம் சூனியம் வைத்தல் என்பதன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே. ஒருவன் தன் எதிரியைக் கொல்ல நினைத்து அவனை அழித்து விடுவதற்காகச் செய்யப்படும் வித்தை சூனியம் வைத்தல் அல்லது மரண வித்தை எனப் படுகிறது. இது முழுக்க முழுக்கக் கற்பனையே.

ஆனாலும் மக்கள் இதைச் செய்யும், அதாவது சூனியம் வைக்கும் சூனியக்காரனைக் கண்டாலே அறியாமையால் பயந்து நடுங்குகின்றனர். ஒருவன் தான் எதிரியாகக் கருதும் ஒருவனைக் கொல்ல சூனியக்காரனிடம் செல்கிறான். பணத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்கிறான். சூனியக்காரனோ சூனியம் வைப்பதாகக் கூறி பல பொருள்களைக் கொண்டு வந்து நான்கு சந்துகள் சந்திக்கும் இடத்தில் யாரும் அறியாவண்ணம் மந்திர ஜெபம் செய்து தான் கொண்டு வந்த அழுகும் பொருட்களை மண்ணில் புதைத்து விடுகிறான்.

அத்துடன் பூமியில் புதைக்கப்பட்ட பொருள்கள் அழுகிப் போவது போல் உன் எதிரியும் அழுகிப் போவான் அதாவது இறந்து விடுவான் எனச் சொல்லி சென்று விடுவான். இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், ஈனத் தனம் என்பதை அறியா படித்த பாமரர்கள் கூட மதியிழந்து பயந்து சாகின்றனர். உண்மை என நம்புகின்றனர்.

ஒருவனுக்கு அகால நோய் வருமேயானால், அந்நோய் சூனியத்தால் ஏவி விடப்பட்டதென்று கருதுகிறான். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்ற தத்துவத்தை அறிவியல் கூறும். இங்கும் சூனியம் வைத்தலும் சூனியம் எடுத்தலும் உண்டு. தன்நோய் சூனியத்தால் ஏவி விடப்பட்டதென்று கருதுபவன் பிரிதொரு சூனியக்காரனிடம் செல்கிறான். உடன்பட்ட சூனியக்காரன், சுளகு கொண்டு வந்து அதன் பின்புறம் நன்கு சாம்பல் தூளை தடவி, ஒரு சக்கரம் போடுவான் - அவன் போடும் படம் மற்றும் கிறுக்கல் எழுத்திற்கு சக்கரம் என்று பெயர். இதோ மந்திரம் என்னும் ஏமாற்று வேலை. சக்கரம் (ஆனந்த லகரி, சவுந்தரிய லகரி மூலமும் மந்திர யந்திர பூஜா விதியும் பக்கம் 5)

எழுத்தும் உள்வட்டமும் வெள்ளை நிறம் கட்டம் முழுவதும் கருப்பு.
------இவ்வாறு சக்கரம் போட்டு, அதற்குரிய மூல மந்திரமான “ஓ? (ஓம்) ஆனந்தவல்லி, அமுர்த அய்யுங் கிலியுஞ் சவ்வும் கிலியும் வால சவுந்தரி நமஸ்து” என 1008 உருபோட்டால் (1008 முறை சொன்னால்) ஏவல், வஞ்சனை, பில்லி சூனியம் நீங்குமாம். நீங்கி தைரியம் ஏற்படுவதுடன் எல்லா வினையும் நீங்கும் என்று பித்தலாட்டம் செய்து இவன் பங்கிற்கென பணத்தைப் பிடுங்கிக் கொள்கிறான். இந்த ஏமாற்று வேலை இன்னும் நம் நாட்டில் நடைபெறுவதுடன், தொடர் நிகழ்வாகவும் உள்ளது. இவ்வாறு செய்து நிரூபிக்க முடியுமா?

முடியாதென்பது மந்திரக்காரனுக்குத் தெரியும். ஆனால் மக்கள் அறிய மாட்டார்கள்.
எல்லா விஷம் நீங்க, ‘சர்வ சுர விஷ நிவர்த்தி மூலமந்திரமான,’ ஓ? (ஓம்) காமாட்சி தேவி காரண சவுந்தரி பங் பங் நமஸ்த்து’ எனும் மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
‘ஓ? திவ்ய பரிமள சகஸ்திர சுரூபி லங் லங் லிங் லிங் சுங் சுங் நமோஸ்த்து’ என்னும் மந்திரமோ பெண்களுக்குப் பிடித்திருப்பதாகக் கற்பிக்கப்படும் பேய், பிசாசு விலக்கலுக்கான மந்திரம் இவ்வாறு அனேக மந்திரங்கள் அவற்றிற்கென தனித்தனி சக்கரங்கள் ஏமாற்று வேலையின் உச்ச கட்டமே மந்திரங்கள் என்பவைதான் என்பதை மக்கள் என்று உணர்வரோ?

குறி சொல்லுதல்: குறி சொல்லுதல் என்பதும் ஒரு பித்தலாட்டத் தொழிலாகும். குறி சொல்பவனும் மோசக்காரனே.

குறிபார்த்தல் என்பது மக்களிடையே ஏற்பட்ட ஆசையின் காரணமாக விளைந்த மூடநம்பிக்கையே யாகும். தனக்கு ஏற்படும் துன்பங்களை முறையான வழியில் போக்காமல் குறிமேடையில் போக்கிக் கொள்ள நினைத்து, பொருள் இழந்து, அறிவு இழந்து, மானம் இழந்து பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுக்கின்றனர்.

குறிபார்த்தல் என்பது கிராமப்புறங்களில் பிரபலமடைந்த ஒன்று. குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், கணவருடன் மன வேறுபாடு கொண்டவர்கள் மன வேறுபாடு நீங்கி தன் கணவன் தன்னுடன் அன்பாக இருக்கவேண்டியும் குறிபார்ப்பவனை நாடிச் செல்கின்றனர்.

அந்த ஏமாற்றுக்காரனும் வாயில் வந்ததையெல்லாம் உளறி வைக்கின்றான். ஒன்றிரண்டு சரியாக இருப்பின் அவன் மீது நம்பிக்கையும் பலபொய்யாக இருப்பினும் ‘நம் விதி’ என்று தன்னையே நொந்து கொள்வதுமான வழக்கம் இன்றும் நடைமுறையிலுள்ளது.

தம் பொருள் களவு போய் விட்டால் அதைக் கண்டுபிடித்துத் தருமாறும், உழைப்பின்றி செல்வம், புகழ்பெற வேண்டியும் சென்று ஏமாந்த நிலையிலும் அறிவின்றி மீண்டும் பொருளிழப்பிற்கு ஆட்படுகின்றனர்.
இந்த ஏமாற்று வேலையை - பித்தலாட்டச் செயலை பரப்பியும் வருகின்றனர்.

குறி சொல்லத் தெரிந்து கொண்டு ஏமாற்றிப் பிழைக்க வழியும் கூறுகின்றனர். அதற்கென மந்திரமும், வித்தையும் உள்ளது. அந்த வித்தைக்கு “கர்ண யெட்சணி வித்தை” என்று பெயர். இதற்கென்று தனிச் சக்கரம், தனி மந்திரம் என்னும் ஏமாற்று வேலையும் உண்டு.
சக்கரம்
இதோ அந்த இன்னொரு பித்தலாட்டம்:
எழுத்து வெள்ளை உட்புறம் முழுதும் கருப்பு
(கலியுக மாறாட்ட மென்னும் கண்கட்டு வித்தை. பக்கம். 218)

இதற்கான மந்திரம்: “ஓம் பத்மாவதி கர்ண எட்சணி டார் டார் சுவாகா”
இம்மந்திரத்தை முதலில் தூய தீபம், நைவேத்தியம், பால், பொங்கல், பாயாசம், வஸ்து, வெண்கலம், சுகந்த பரிமளம், ஊதுவத்தி கொளுத்தி பூசித்து 1008 உரு போடவேண்டும். இந்தப் படத்தை செம்பு ரேக்கில் எழுதி, ஒரு சிறிய சுரை வேரை நடுவில் வைத்து, செபித்து எட்டாம் நாள் அதைச் சுருட்டி குளிசமாடித் தலையிற் குடுமியிற் கட்டிக் கொள்ளவும். தினசரி காலையில் கொஞ்சம் செபித்து தன் வாயிற் வந்தபடியெல்லாம் குறி சொல்லி வரவும் யாவர்க்கும் அது சரியாயிருக்கும். உடனுக்குடன் உரு செபித்துக் கொண்டே வரவும்.

இப்படி லட்சமாகிடில், லட்சம் உருப்போட்டால் நன்மை. இதற்குச் சுக்கிரவாரந் தோறும் (அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்) பூசை செய்து வரவும் சித்தியுண்டாம்” இது எப்படி இருக்கிறது?

முட்டாள்தனத்தின் கடைசி எல்லைக்கே சென்றாகிவிட்டது. அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்தால் என்ன? மூடப் பழக்கத்தின் முடை நாற்றம் இருந்து கொண்டேதான் இருக்கும் போலும். அவர்கள் முறையைச் சொல்லி விட்டார்கள். அதை உண்மையென்று எவ்வாறு நிரூபிக்க முடியும்?
ஒருக்காலும் முடியாது.

இவ்வாறு மந்திரவாதிகள் என்போர் செய்யும் சித்து வேலைகள் பொய்யே என திராவிடர் கழகத்தின் சார்பில் தான், மேடைகளில் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்னும் செயல் விளக்கம் செய்து காட்டப்படுகிறது.

“குளத்து நீரில் மூழ்கிக் குளித்துவிட்டு வெளியில் வந்தால் தன் நெற்றியில் ‘ஓம்’ என எழுதப்பட்டிருக்கு” என ஒருவர் கூறியதற்கு “நான் நீரில் மூழ்கி குளித்துவிட்டு வெளியில் வந்தால் என் நெற்றியில் “கடவுள் இல்லை” என எழுதப்பட்டிருக்கும்” என்றதும் ஏதும் கூறாது சென்று விட்டார்.
ஆகவே எதுவும் மந்திரமல்ல. ஏமாற்று வேலையே என்பதுணர்க.

மூடப்பழக்கமோ, ஏமாற்று வேலையோ எப்பக்கம் இருந்து வந்தாலும் அதை பெரியார் பெரும் படை முறியடித்தே தீரும். மக்கள் இன்று ஏமாந்தாலும் ஒருநாள் விழிப்படைவர். பில்லி சூனியம், குறி சொல்லுதல் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள மா.சிங்கார வேலர் எழுதிய “மெய் ஞான முறையும் மூடநம்பிக்கையும்” என்னும் புத்தகத்தையும், பொய்யான, போலியான, ஏமாற்றும் முறையைத் தெரிந்து தெளிய ‘கலியுக மாறாட்ட’ மென்னும், கண்கட்டு வித்தைகள் என்ற புத்தகத்தையும் மற்றும் ‘ஆனந்த லகிரி’ ‘சவுந்தரிய லகரி’ மூலமும் ‘மந்திர யந்திர பூஜா விதியும்’ என்னும் புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளவும். >>- ச.அ.சாமி >> http://unmaionline.com/20060801/manthiram.htm
-------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
--------------------------------------

No comments: