Followers

Wednesday, January 9, 2008

புத்தாண்டுப் பிறப்பு என்னும் போதை. அந்தரங்கத்தில் பதுங்கி இருக்கும் ஆபாசங்களைத் தான் வெளிப்படுத்துகிறது.

புத்தாண்டு என்று சொன்னால், அதற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதும், அந்த நாளில் கேளிக்கையின் உச்சியில் மிதப்பது என்பதும், அறிவு வளர்ச்சியைக் காட்ட வில்லை; அந்தரங்கத்தில் பதுங்கி இருக்கும் ஆபாசங்களைத் தான் வெளிப்படுத்துகிறது.

புத்தாண்டு என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள் என்பதில் அய்யமில்லை. அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம்; வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்; உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம்; பலவற்றை நினைவூட்டிக் கொள்ளலாம்; அந்த அளவுக்கு அறிவு சார்ந்தும், அளவோடும் அமையவேண்டுமே தவிர,

ஆபாசத்தின் எல்லைக்குச் சென்று ஆட்டபாட்டம் போடுவது வரவேற்கத்தக்கதல்ல.

நட்சத்திர ஓட்டல்கள் என்பவை - ஒழுக்கக்கேட்டை வளர்க்க உரிமம் (லைசென்ஸ்) பெற்ற நிறுவனங்களாகவே மாறி விட்டன. புத்தாண்டில் அதன் வீச்சு அதிகமாக உள்ளது என்று கூறினாலும், சாதாரண நாள்களிலும்கூட அந்த அமைப்புகள் இளைஞர்களை ஈர்க்கும் போதைக் கிடங்குகளாகவே இருந்து வருகின்றன.

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்றால், மது அருந்துவதும், குத்தாட்டம் போடுவதும், நம் நாட்டுக் கல்வி முறை தந்த பரிசாகக் கருதுவதா?
கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும், நாகரிகத்தையும் பயிற்றுவிக்காத கல்வி எதற்குப் பயன்படும்? தனி வாழ்வுக்கும் சரி, குடும்ப வாழ்வுக்கும் சரி, சமூக வாழ்வுக்கும் சரி அதனால் கேடே தவிர நல் வளர்ச்சிக்கு உதவப் போவது இல்லை.

தகவல் தொடர்பு நிறுவனங்கள் (IT) கணினி நிறுவனங்கள் கைநிறைய சம்பளத்தை அள்ளிக் கொடுப்பதால் இந்த நிலை என்று கூறும் குற்றச்சாட்டு சரியானதல்ல. அதிகச் சம்பளம் வாங்கினால் அசிங்கமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதா?

கட்டுப்பாட்டை மீறுவதுதான், தான்தோன்றித்தனமாக நடப்பதுதான் உரிமை, நாகரிகம் என்று நினைப்பது அவற்றின் ஆழத்தைப் புரியாத தன்மையாகும். எவ்வளவுக்கெவ்வளவு கட்டுப்பாடும், அளவீடும், நிதானமும், பண்பாடும், கனிவு மிக்க அணுகுமுறையும் இருக்கிறதோ அதுதான் தலைசிறந்த உரிமையும் நாகரிகமும் ஆகும்.

பெற்றோர்கள் பெரும்பாடுபட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைப்பதும், சமுதாய அமைப்புகளும் போராடிப் போராடி கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும், கண்ட மாதிரி நடந்துகொள்வதற்காக அல்ல!

பொறியியல் படித்த ஒரு இளைஞன் அய்ந்து நட்சத்திர ஓட்டலில் ஆட்டம் போட்டு, மேடை சரிந்து நீச்சல் குளத்தில் வீழ்ந்து மரணம் அடைந்தான் என்றால், அதன் நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும்.அந்த இளைஞனின் பெற்றோர்தம் கனவு என்ன? எதிர்பார்ப்பு என்ன?

நட்ட ஈடாக இலட்சக்கணக்கில் ஓட்டல் நிருவாகமோ, அரசோ அள்ளிக் கொடுக்கலாம். ஆனால், மகனைப் பறிகொடுத்த மூப்படைந்த பெற்றோரின் மனப்புண்ணுக்கு மருந்து எங்கேயிருந்து கிடைக்கும்?

சென்னை - கிழக்குக் கடற்கரை சாலைபற்றி வரும் செய்தி கள் குமட்டிக் கொண்டு வருகின்றன. திரைப்படமும், சின்னத் திரைகளும், அதற்கேற்ப வெளியாகும் இதழ்களும், ஊடகங்களும் சமுதாயத்தை எந்தக் கடைகோடிக்குக் கொண்டு போய் தள்ளிவிடுமோ? என்று தெரியவில்லை.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலும் காலைமுதல் இரவு வரை, இரவுக்குப் பிறகும் கூட ஒரே குத்தாட்டங்கள்தான்.

தணிக்கைத் துறை என்ற ஒன்று இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. சின்ன திரைக்கும் கண்டிப்பாகத் தணிக்கை தேவை என்றுதான் தோன்றுகிறது.

கணினிப் பெட்டிகள் அவற்றில் இடம்பெறும் (வீடியோ கேம்ஸ்) விளையாட்டுகளில் சிறு குழந்தைகளும் தங்களின் மழலை நெஞ்சங்களைத் தொலைக்கும் பரிதாப நிலை.

இதனைப் பெருமையாகக் கருதும் பெற்றோர்கள் ஒரு பக்கம். ஒரு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. வீட்டிலிருந்து, கல்விக் கூடத்திலிருந்து, பணியாற்றும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சில பத்தியங்களைக் கட்டாயமாக திணித்தால் கூடப் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படிக்கும் அத்தனைப் பேருக்கும் உடற்பயிற்சி, என்.சி.சி., பயிற்சி, கட்டாய விளையாட்டு, குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டாய ராணுவச் சேவை என்கிற முறையில் சிந்திப்பதும், செயல் படுத்துவதும் நல்லது - உரியவர்கள் சிந்திப்பார்களாக! http://viduthalai.com/20080104/news05.html
-----------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: