Followers

Friday, January 25, 2008

இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’

இந்து மதத்தின் பெயரை சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது.

சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்திருந்த போது என்னிடத்தில் இது சம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும் பஞ்சாப் லாகூரிலிருந்து ‘ஜாத்பாத் தோரக் மண்டல’தலைவர் சாந்தராம். அவர்களும்,

முன்பு காரியதரிசியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும் உங்கள் காரியதரிசி எழுதின சில குறிப்புகளிலிருந்தும் நீங்கள் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும் நடுநிலைமையிலிருந்து கவலையாய் சீர்திருத்தக் கூடியவர்கள் என்றும் தெரிந்ததினால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் இதை நான் சொல்லுகிறேன்.

எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922-வது வருடத்திலேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ் மகாநாட்டில், ‘இராமாயணம் கொளுத்தப் பட்டாலொழிய தீண்டாமை ஒழியாது’ என்று சொல்லியிருக்கிறேன்.

வெகு பேர்களுக்கு அன்று ஆத்திரமாய் இருந்தது. இன்று எங்கள் நாட்டில் இப்படிப் பேசுவதும் கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசி வருகிறார்கள்.

மற்றும், பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்காரர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்றே சொல்லலாம். தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள்;

இந்துமத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களையெல்லாம் விட்டு விட்டார்கள்.
உச்சிக் குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள். அனேகர் புராணப் பண்டிகைகளையும் உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை.


இதற்கு முன்பு ஏழைகள் பணத்தை வஞ்சித்துக் கொள்ளையடித்த பணக்காரர்கள் இதற்கு முன்பு கோயில் கட்டிவந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம் முதலிய காரியங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

சென்சஸில் தாங்கள் இந்துக்கள் அல்ல வென்று அனேகம் பேர் சொல்லிவிட்டார்கள்.

புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும் ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்.

கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள் செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் போகத் தயாராய் இருக்கிறார்கள். எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத் திலிருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பும் முக்கிய காரணங்கூட இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழியவேண்டும் என்பதற்குமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்மபேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாம், தாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும், தாங்கள் இந்துக்கள் அல்லவென்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலகவேண்டும் என்றும், 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.

‘இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’ என்று கேட்கலாம்.

உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரை சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.


அப்படிச் சொல்லிக் கொள்ளுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிடர் சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அதிலும் கஷ்டமிருந்தால், சமரச சமயத்தார், மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம். பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அன்னிய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின் பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும்.


மதம் வேண்டுமானால் மதம் வேண்டும் என்பவர்கள் மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து, ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும்.

அப்படியில்லாமல், தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டான் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாசிரமத்தை மற்றொரு முறையில் பின் பற்றுவதேயாகும்.

பகுத்தறிவுவாதி என்று சொல்லுவது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒக்கும். நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்லர்.

ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்லர் என்றும், ஆரியர்கள் இந்த நாட்டிற்குக் குடியேறிவந்த ஓர் அன்னிய இனத்தவர்கள் என்றும்
அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண, இதிகாசங்களைச் சுமந்துகொண்டிருப்பதன் பயனாகவே இந்த இழி நிலையில் இருக்கின்றீர்கள் என்றும் தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும்.


தோழர்களே!முன்னுரையாக அதிகநேரம் பேசிவிட்டேன். அனேக காரியங்கள் நடக்கவேண்டி இருப்பதால் மாநாட்டுக் காரிய நடவடிக்கை ஆனபிறகு சில வார்த்தைகள் சொல்லுகிறேன். நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
(கான்பூரில், 29, 30, 31.12.1944-ல் நடந்த இந்திய பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாட்டுத் தலைமை உரை - ‘குடி அரசு’ 13.1.1945)
http://unmaionline.com/20051201/thanthai.htm
--------------------
படிக்கவும்:
இந்து மதம் வேண்டுமா? இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும்.
-----------------------
மற்ற பதிவுகள்

1 comment:

VANJOOR said...

தமிழர்களை சிந்திக்க வைக்கும் அருமையான கட்டுரை.

வாசகர்கள் உங்களின் இந்த கட்டுரையை முதலில் படித்துவிட்டு
" கிறிஸ்தவ ஜாதி சனியன்" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!
http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_8914.html

இதை படிக்க வேண்டுகிறேன்.

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/blog-post_896.html

//இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.//

இதை தாங்கள் பின்னூட்டமாக பதிப்பீர்கள் என நம்புகிறேன்.
முன் கூட்டிய நன்றியுடன்.
வாஞசூர்