Followers

Wednesday, January 16, 2008

எவ்வளவு பெரிய மோசடியை எவ்வளவு சாதாரணமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? யாரால்? யாரை ஒழிக்க?

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (48) சு. அறிவுக்கரசு

எவ்வளவு பெரிய மோசடியை எவ்வளவு சாதாரணமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

தேவர்களும் அசுரர்களும் சமமாக வேலை செய்தவர்கள் (ஒர்க்கிங் பார்ட்னர்) தானே!

கிடைத்தவற்றைச் சமமாகத்தானே பிரித்துக் கொள்ள வேண்டும்? சமமாக இல்லாததைவிட ஒன்றுமே தராமல் பெண்ணைக் காட்டி, அவள் கண்ணைக் காட்டி, ஏமாற்றி அனுப்புவதுதான் புராணம் கற்பிக்கும் நீதியா?

``தர்மம் சர என்று (அறத்தைப் பின்பற்று) என்கிறார்களே, அது இதுதானா? எவ்வளவு அயோக்கியத்தனமாக இருக்கிறது, கூர்ம புராணம்?

இந்தப் புராணம்தான் சிவன் எடுத்த 28 அவதாரங்களைப் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளது. வெறும் அவதாரங்கள்தானே தவிர, அவற்றிற்கென எந்த வகை வீரப்பிரதாபங்களும் கொட்டி அளக்கப்படவில்லை இப்புராணத்தில். சிவனின் அவதாரங்கள் இவைதாம்:1. ஸ்வேதா 2. சுதாரா 3. மதனன் 4. சுகோத்திரன் 5. கங்கணன் 6. லோகாட்சி 7. ஜெய்கிஷ்ஹவ்யன் 8. தாதிவாகன் 9. ரிஷபன் 10. பிருகு 11. உத்திரன் 12. அத்திரி 13. பலி 14. கவுதமன் 15. வேதகீர்ஷன் 16. கோகர்ணன் 17. ஷிகந்தகன் 18. ஜடமாலி 19. அட்டஹாசன் 20. தாருகன் 21. லங்காலி 22. மகாயாமன் 23. முனி 24. ஷுலி 25. பிண்டமுனீச்வரன் 26. ஸஹிஷ்ணு 27. சோம சர்மா 28. நகுலீஸ்வரன்.

இந்தப் புராணம் கூறுகிறது, பிரம்மா பருத்திச் செடியைத் தோற்றுவித்ததே முப்புரி நூல் எனப்படும் யக்ஞோப வீதம் என்னும் பூணூல் தயாரிப்பதற்காகத் தானாம். வேறு வழியில் சொன்னால் பருத்திச் செடியும் பருத்தியும் மனிதர்களின் மானத்தை மறைக்கும் துணிகளைத் தயாரிப்பதற்காக அல்ல; பார்ப்பனர்களின் மேலாதிக்கத் திமிரைக் காண் பிக்கும் பூணூலைத் தயாரிக்கத்தான் என்று எழுதியிருக்கிறது

இந்தப் புராணத்தில் என்றால், இந்தப் புராணங்கள் யாருக்காக? யாரால்? யாரை ஒழிக்க? இவற்றை நாம் விளங்கிக் கொண்டு புராணங்களை ஒழிக்க வேண்டாமா?

நாத்திகனிடம் பேசினால், பேசியபின் வாயைக் கழுவ வேண்டுமாம். சரி போகிறது!

பெண்களிடம் பேசிய பின்னரம் வாயைக் கழுவ வேண்டுமாம்!
ஒழுக்கம் தவறி ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவர்களிடம் பேசினாலும் வாயைக் கழுவ வேண்டுமாம். அப்படி என்றால் நாத்திகன், பிரஷ்டம் செய்யப்பட்ட ஒழக்கங்கெட்டவர்களோடு, பெண்களை (அவனது தாய், சகோதரி, மனைவி ஆகிய எல்லோரையும்) சேர்த்து கணக்கிட்டுக் கண்டிசன் போடுகிறார்களே, இந்தப் புராணங்களை விட்டு வைக்கலாமா?

இந்தப் புராணத்தில் வேதங்களைப் படிப்பததை பற்றிக் கூறப்பட்டுள்ளது. கீழ்க்காணும் சந்தர்ப்பங்களில் வேதம் படிக்கக் கூடாதாம்.1. கிரகண காலம் 2. சவச் சடங்கின்போது 3. படுத்திருக்கும் போது 4. புலால் சாப்பிட்ட பின் 5. புயலின்போது 6. பவுர்ணமி இரவில்.புலால் சாப்பிட்டபின் வேதம் படிக்கக் கூடாது என்கிறதே - என்ன பொருள்?

பார்ப்பனர்கள் மட்டும் தான் வேதம் படிக்கலாம். வேதம் கேட்கலாம். புலால் உண்டபின் வேதம் படிக்கக் கூடாது என்கிற நிபந்தனை பார்ப்பனர்களுக்குத் தானே!

அப்படியென்றால் பார்ப்பனர்கள் புலால் உண்டதைப் புராணம் ஒத்துக் கொள்கிறதே! அப்படியிருக்க மகாயோக்கியர்கள் போலப் பார்ப்பனர்கள் இன்றைக்குப் பேசுகிறார்களே! எப்படி இவர்கள் நியாயவான்கள்? (யார் சொன்னது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.)

காயத்ரி மந்திரத்தைப்பற்றி இந்தப் புராணம்தான் கூறுகிறது. எல்லா மந்திரங்களிலும் சிறந்த மந்திரமே இதுதானாம். அது இது:ஓம் பூர் புவஸ்ஸுவ: ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோனப் பிரசோதயாத் இந்த மகாமந்திரத்தைத்தான் பெருமையாக `காயத்ரியும் ஜெபிப்போம், கரண்டியும் பிடிப்போம் என்று முழக்கமிட்டுப் போனார்கள் பார்ப்பனச் சங்கத்தினர். காயத்ரி மந்திரம் தெரிந்து விட்டது.

அது என்ன கரண்டி பிடிப்பது? சமையற்காரப் பார்ப்பனர்கள் என்பதைத்தான் அப்படி `ஆயுதத்தைக் காட்டிச் `சிம்பாலிக் ஆகச் சொன்னார்கள்.இந்தப் புராணமும் பாபங்களுக்குப் பிராயச் சித்தத்தையும் விரதங்களையும் பற்றிப் பேசுகிறது. படியுங்கள்.

பிராமணனைக் கொன்றவன், மது உண்டவன், தங்கம் திருடியவன் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள‌ வேண்டும்.

பிராமணனைக் கொன்றவன் அதற்கு பிராயச் சித்தமாக காட்டில் குடிசையில் பன்னிரண்டு ஆண்டு காலம் வாழ்ந்து வர வேண்டும். அவன் இறந்தவர் தலையைக் குறிக்கும் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு பிராயச்சித்தம் (அ) தவம் முடியும் வரையில் அவன் வேறோர் அந்தணன் இல்லத் திற்கோ, கோயிலுக்கோ செல்லக் கூடாது. இந்த பிராமணக் கொலை அஜாக்கிரதையால் (அ) அசட்டையால் நேர்ந்ததானால் அதற்கே இப்பிராயச் சித்தங்கள்.

வேண்டுமென்றோ, தெரிந்து கொலை செய்திருந்தாலோ தவமோ, பிராயச் சித்தமோ போதாது. அத்தகைய பாவி தீக்குளித்தோ, நீரில் மூழ்கியோ, பட்டினி கிடந்தோ மரணமடைதல் சிறந்த பிராயச்சித்தமாகும்.

மற்ற பாவங்களுக்குப் பரி காரமாக கீழ்க்கண்ட விரதங்களை அனுஷ்டிக்கலாம். முக்கியமான சில கொடுக்கப் பட்டுள்ளன.

1) சந்தாபண விரதம்: ஒரு நாள் முழுவதும் பஞ்ச கவ்யம் உட்கொண்டு, அடுத்த நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.
(பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலந்தது. இதை கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.)

2) மஹாசந்தாபண விரதம்: இதில் பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இம்மாதிரி ஆறு நாள்கள் இருந்து ஏழாவது நாள் முழ உபவாசம் இருக்க வேண்டும்.3) பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்: இதில் முதல் மூன்று நாள்கள் பகலில் மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். அதுவும் சுமார் 26 முட் டையளவு மட்டும் உண்ண வேண்டும்.
அடுத்த மூன்று நாள்கள் 22 முட்டையளவு மாலையில் மட்டும் உட் கொள்ள வேண்டும். இறுதியாக மூன்று நாட்கள் 24 முட்டை அளவு மட்டும் உணவு உட்கொள்ள வேண் டும்.
அதிகிரிச்சா விரதம்: முன் விரதத்தை விடக் கடுமையானது. முதல் மூன்று நாள்கள் ஒரு கையளவு உணவு பகலில் மட்டும் உட்கொள்ளல். அடுத்து மூன்று நாள்களில் மாலையில் மட்டும் ஒரு கை அளவு உட்கொள்ளல். அடுத்து மூன்று நாள்களில் ஒரு கை அளவே பகலில் எப்போதாவது ஒரு முறை உட்கொள்ள வேண்டும்.
இறுதியாக மூன்று நாள் கள் உபவாசம் இருக்க வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு நாள்கள் விரதம் இது.
5) பராக விரதம்: இதில் 12 நாள்கள் தொடர்ந்து உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும்.6) தப்த கிரிச்சா விரதம்: இதுவும் 12 நாள்கள் கொண்ட விரதமே. இதில் ஒரு நாளைக்கு ஒரு முறையே நீராடல், முதல் 3 நாள்கள் நீர் மட்டும் அருந்தலாம். அடுத்த மூன்று நாள்கள் பால் அருந்தலாம். அடுத்த மூன்று நாள்கள் நெய் அருந்தி கடைசி மூன்று நாள்கள் உபவாசம் இருக்க வேண்டும்.7) பதகிரிச்ச விரதம்: இது நான்கு நாள்கள் அனுஷ்டிப் பது. முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம் நாள் உபவாசம்; மூன்றாம் நாள் அளவில்லா உணவு. நான் காவது இறுதி நாள் உபவாசம்.8) சாந்தாராயன விரதம்: இது பவுர்ணமியில் ஒரு மாதம் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.முதல் நாள் 15 கையளவு உணவு; அடுத்து 14 கையளவு உணவு அடுத்த அமாவாசை வரையில் உட்கொள்ள வேண் டும். அமாவாசை அன்று முழு உபவாசம். அடுத்த பிரதமை முதல் தினமும் ஒரு கையளவு அதிகம் ஆக்கிக் கொண்டே உணவு உட்கொள்ள வேண் டும். பவுர்ணமி அன்று 15 கையளவு உணவு உட்கொண்ட பின்பு உண்ணாவிரதம் முடிவடையும்.

http://viduthalai.com/20080112/snews02.html
--------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
தங்கத்தில் தேராம் பெண் கடவுளுக்கு ஒரு கோடி ரூபாய் பாழ்!
ஊர் இரண்டு பட்டது கடவுளுக்குத் திண்டாட்டம்.
--------------------------
மற்ற பதிவுகள்

No comments: