Followers

Tuesday, January 15, 2008

கல்கி பகவான் படத்தில் குங்குமம் கசிகிறதாம்.பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்க....

பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்கும்பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

உளவுப் பிரிவினர் சாமியார்களைக் கண்காணித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கட்டும்

சாமியார் மோசடிகளை அம்பலமாக்கும் நூல் விரைவில் வெளிவருகிறது
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

சாமியார்களின் மோசடிகளை விளக்கி நாடெங்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

சாயிபாபா படத்தில் திருநீறு கொட்டுகிறது; குங்குமம் கசிகிறது என்று ஒரு காலகட்டத்தில் புரளியைக் கிளப்பி, சாயி பாபா வின் அற்புதங்கள் என்று கூறி ஒரு மகத்துவத்தைக் கற்பிக்க முயன்றார்கள்.

அது சுத்தப் புரட்டு என்று மக்கள் மத்தியிலேயே உண்மை வெளிப்பட்டு, அந்தப் பித்தலாட்டம் அம்பலமாகிப் போய்விட்டது.

அதே பாணி...இப்பொழுது அதே பாணியில் கல்கி பகவான் படத்தில் குங்குமம் வடிகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர். கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - அதனை நாம் நம்பவேண்டுமாம்!

சில வருடங்களுக்குமுன் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தக் கல்கி பகவான் இடையில் இருந்த இடம் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தார்.மும்பையில் கம்பி எண்ணினார் மும்பையில் ஒரு வழக்கில் சிக்கி, சிறையில் கம்பியும் எண்ணினார். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தாம் இருப்ப தாகக் காட்டிக்கொள்ள இப்படி ஒரு பிரச்சாரத்தைத் திட்டமிட்டுக் கிளப்பி விட்டுள்ளனர்.

சவால் விட்டே கூறுகிறோம்: கல்கி பகவான் படத்திலிருந்து குங்குமம் கசிகிறது என்பதை அறிவியல் சோதனைக்கு உட்படுத்தத் தயாரா?
பகுத்தறிவாளர்கள் முன்னிலையில் நிரூபிக்கத் தயாரா?

மக்களிடம் மூட நம்பிக்கையும், பக்தி என்ற பாமரத்தனமும் மண்டிக் கிடக்கின்றன என்கிற தைரியத்தில், சாமியார் தொழிலை நடத்தி, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.

அண்மைக்காலமாக சாமியார்கள் ஆங்காங்கே தலையெடுத்து, மக்களின் பணத்தைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், பெண்களிடத்தில் மிகவும் கேவலமாக நடந்துகொள்கிறார்கள்; பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பல குடும்பங்கள் இதனால் சீரழிந்து போயிருக்கின்றன.

இதில் ஓரிஜினல் சாமியார், போலி சாமியார் என்ற பேதம் எல் லாம் கிடையாது - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.
அரசு உளவுத் துறையின் கவனத்திற்கு...அரசு உளவுத்துறை இந்தச் சாமியார்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்;

காவல் துறையிலே இதற்கென்றே ஒரு பிரிவைக்கூட ஏற்படுத்தினால் நல்லது என்று திராவிடர் கழகம் இதற்கு முன்பேகூட தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுண்டு. இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்றே!
அடைமழைப் பிரச்சாரம் நடக்கட்டும்!சாமியார்கள் மோசடி குறித்து கழகம் ஒரு நூலினைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறது. சில நாள்களில் வெளிவரும்.

சாமியார்கள் பிரச்சினை எங்கெல்லாம் தலையெடுக்கிறதோ, அங்கெல்லாம் அடைமழைபோல பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் அப்பகுதிகளில் நடமாடும் சாமியார்கள்பற்றியும் தலைமைக் கழகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றர்; காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!

பக்தியின் பெயரால் சமூகத்தைச் சீரழிக்கலாம், பெண்களை நாசப்படுத்தலாம் என்ற கொடுமைக்கு முடிவு கட்டியே தீரவேண்டும்.தோழர்களே, சாமியார்கள் மோசடிகளை விளக்கி பிரச்சாரக் கூட்டங்கள் அடைமழைபோல் நடக்கட்டும்! நடக்கட்டும்!! சென்னை 4.1.2008 . தலைவர், திராவிடர் கழகம்.
http://viduthalai.com/20080104/news01.html
------------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
கடவுளையே “அபேஸ்” செய்துவிட்டனர்
விழாக்கள் தேவைதானா? கடவுள் விழாவில் ஜாதிக் கலவரம்
இது ஒரு புதுவகை மோசடி!
----------------------------------
மற்ற பதிவுகள்

No comments: