Followers

Thursday, January 10, 2008

காவல்துறையே சட்டம் மீறலாமா?அரசு அலுவலகம், வளாகங்களில் கோயில்கள் எழுப்புவது மதவாதச் சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகும்.

மூடத்தனங்களிலிருந்து மக்களை விடுவிக்க வைப்பதில் அனைவருக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது!

சமூகச் சீர்திருத்தத் துறையின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தி செயல்பட வைக்கலாம்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

மக்களிடத்தில் மூட நம்பிக்கைகள் வளர்வது குறித்தும், சாமியார்களின் அட்டகாசங்கள்பற்றிம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க., - சங் பரிவார் போன்ற மதவாத சக்திகளை எதிர்க்கின்ற அதேநேரத்தில் நமது அரசு அலுவலகங்களும், வளாகங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் தரப்பட்டுள்ள மதச் சார்பின்மை (செக்குலரிசம்) என்ற தன்மையில் இயங்குகின்றனவா என்பது கவனிக்கப்படவேண்டிய முக்கியமான ஒன்றாகும்.

அப்படி இல்லாமல் இருப்பது பா.ஜ.க., இந்துத்துவா சித்தாந்தங்களுக்கான மறைமுகமான செயல் ஊக்கம் என்பதை அரசுகள் கவனிக்கத் தவறக்கூடாது.
காவல்துறையே சட்டம் மீறலாமா? சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய காவல்துறை அதிகாரிகளின் அலுவலகங்களே கூட மத நடவடிக்கைகளுக்கான இடங்களாக இருப்பது வேதனைக்குரியதாகும்.

தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே குறிப்பிட்ட மதத்தின் கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், தோழர்களும் நேரில் சந்தித்து, அரசு ஆணையையும் கொடுத்து - இது சட்ட விரோதமான செயல் என்று சுட்டிக்காட்டியும் உள்ளனர்.எனக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டது என்று ஒரு மாவட்டக் காவல்துறை அதிகாரி கூறலாமா?

உள்ளே எந்த மத கடவுள் சின்னங்களும் இடம்பெறாது; ஊழியர்களின் தியான மண்டபமாக அது இயங்கும் என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.
ஒரு வீட்டுப் புழக்கடையில் புதிதாக ஒரு கழிவறை கட்டுவதாக இருந்தாலும், அதற்கென்று வரைபடம் கொடுத்து உரியவர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது பாமரருக்கும் தெரிந்த ஒன்று. அப்படியிருக்கும்போது மதச் சார்பற்ற அரசு வளாகத்திற்குள் நிரந்தரக் கோயில் எழுப்பப்பட்டு இருப்பது எந்த வகையில் சரி? வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பை எங்கே தேடுவது?

பெண் சாமியார்களும் தோன்றிவிட்டனர்சாமியார்கள் புதிது புதிதாக முளைக்கிறார்கள். ஆண்களுக்குப் போட்டியாக பெண் சாமியார்களும் கிளம்பி விட்டார்கள். பணத்துக்காகக் கொலை செய்யக்கூட அஞ்சுவதில்லை. இந்தச் சமூகக் குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் கடுமையாக ஒடுக்கியே தீரவேண்டும்.

நாட்டில் ஆன்மீகம் வளரவேண்டும் என்று உபதேசம் செய்பவர்கள் இந்தக் கேவலமான நடவடிக்கைகள் பற்றி வாயே திறப்பதில்லை.எது எக்கேடு கெட்டாலும் பக்திக்கு ஊனம் வந்துவிடக்கூடாது என்பதிலே அவர்களுக்கு அக்கறை. அதனால்தான் உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனப் பெண் போல நடந்து கொள்கிறார்கள்.ஏடுகளும் பொறுப்பே!

ராசி பலன்களையும், மூடத்தனங்களையும் மக்களிடையே பரப்பி வரும் ஏடுகளும், இதழ்களும்கூட ஒரு வகையில் இந்தக் கேவலங்களுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூகச் சீர்திருத்தத்துறையை உருவாக்கி உறுப்பினர்களையும் நியமனம் செய்துள்ளார்.

மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை (Scientific Tember) வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகச் சீர்திருத்தத் துறைஅந்த அடிப்படையில் முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தியாவி லேயே முதன்முதலாக இத்தகைய துறை ஒன்றை தமிழ்நாட்டில் உருவாக்கி இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளார்கள்!அத்துறைக்கு உரிய அதிகாரங்களையும், நிதியையும் அளித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட ஆவன செய்வோம்.

திராவிடர் கழகம் தன் பணியைத் திட்டமிட்ட வகையில் செய்து வருகிறது என்றாலும், அந்த அளவு தீவிரமாக செயலாற்ற முடியா விட்டாலும், அடிப்படையான பணிகளை அத்துறை மேற்கொள்ளலாமே!

அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையில் இயங்குவது என்பது சட்டப்படியான நிலையாகும். அதனை உறுதிப்படுத்த சமூகச் சீர்திருத்தத் துறை தன் பங்கை வலுவாகச் செய்யலாமே - அதில் வெற்றியும் காணலாம்.
கள ஆய்வுகளை மேற்கொள்ளலாம்

வேப்பமரத்தில் பால் வடிகிறது என்று சொல்லி, அந்த மரத்துக்குக் கடவுள் சக்தித் தன்மையைக் கற்பிப்பது, (தொடர்ந்து உண்டியல் வசூலும் வந்துவிடும்) சாமியார் படத்தில் குங்குமம் கொட்டுகிறது என்கிற அற்புதப் பிரச்சாரங்களைச் செய்வது போன்றவற்றில் இத்துறை நேரிடையாகக் களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல் பூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தலாமே!எல்லோருக்கும் பொறுப்பு உண்டு

பக்தர்களின் மண்டையில் தேங்காய் உடைப்பது போன்றவை மருத்துவ ரீதியாக எவ்வளவு கெடுதல் என்பதை ஒரு நரம்பியல் மருத்துவரின் கருத்தைப் பெற்று சிறுசிறு வெளியீடுகளை இத்துறை கொண்டு வரலாமே!
குழிமாற்று நேர்த்திக் கடனைத் தடை செய்யவில்லையா?தொழில்வளமும், பொருள் வளமும் பெருகினாலும் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடத்தனத்தை ஒழிக்கவில்லையென்றால், ஏதோ ஒரு வகையில் அந்த வருவாய்களும் வளர்ச்சிக்குப் பயன்படாமல் மூடத்தனத்தில் கரைந்துபோகும்.இதில் அரசுக்கு மட்டுமல்ல - எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது.சென்னை5.1.2008 http://viduthalai.com/20080105/news01.html
----------------------
மற்ற பதிவுகள்

No comments: