Followers

Wednesday, December 12, 2007

காரி உமிழுங்கள்!

காரி உமிழுங்கள்!

நம் இளைஞர்கள் எவ்வித கடவுள் உருவத்தைக் கண்டாலும் காரி உமிழப் பழகிக் கொள்ள வேண்டும். உருவக் கடவுளை நாம் இதுகாறும் பார்ப்பான் பேச்சைக் கேட்டுக் கொண்டு வணங்கி வந்ததன் பயனாகவே நாம் சூத்திரர்களாக, நம் தாய்மார்கள் சூத்திரச்சிகளாக இருந்து வர நேரிட்டிருக்கிறது என்பதை நம் இளைஞர்களும், தாய்மார்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சர்வ சக்தியுள்ள தயாபரனான கடவுள் என்பதை சாணி உருண்டையாக ஆக்கி வைத்திருப்பது மகா மகா அயோக்கியத்தனமாகும்.

குழவிக் கல்லாக ஆக்கி வைத்திருப்பது அதைவிட அயோக்கியத்தனம் ஆகும். அக்குழவிக் கல்லை வைத்துக் கொண்டு அதன் பேரால் நம்மை ஏமாற்றிக் காசு பறித்து வாழ்ந்து வருவது வேறு எந்த நாட்டிலும் இல்லாத மகா மகா பித்தலாட்டம் ஆகும் என்பதை நீங்கள் உணர்ந்து, எங்கு எங்கு கடவுளைச் சாணி உருண்டையாக குரங்கு கழுகாக கல்லுருவமாகப் பார்த்தாலும் அதை மதிக்கக் கூடாது. உண்மையாகச் சொல்கிறேன்

- இதற்காக உண்மையாகக் கடவுள் உங்கள் மீது கோபித்துக் கொள்ளமாட்டார்.
இப்போது கல்லில் அவர் இருப்பாரானால் உண்மையாக அவர் சந்தோஷமே கொள்வார். தன்னைக் கல்லாக்கி வைத்துள்ள கபோதிகளின் வாழ்வுக்கு கேடு வந்துவிட்டது என்பதை அறிந்து நிச்சயம் அந்தக் கல்லில் கடவுள் இருக்கமாட்டார். எனவே கலங்காமல் அதை வெறுங்கள். கடவுள் ஒருபோதும் சாணி உருண்டையில் வந்து, கல்லில் வந்து தங்கும் அளவுக்கு ஈன நிலைக்கு வந்துவிடமாட்டார்.

இந்தப் பித்தலாட்டக்காரர்கள் தான் அவரைக் கல்லாக்கி விட்டு அவர் பேரால் நம்மைக் கொள்ளையடித்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இனியும் கல்லைக் கடவுளென்று நம்பி மோசம் போகாதீர்கள்!

சர்வ சக்தி படைத்தக் கடவுள் சின்னஞ்சிறு குழவிக் கல்லில் தான் வந்து
புகுந்திருக்கிறார் - என்று பார்ப்பான் சொன்னால், "இருந்தால் இருக்கட்டும்; அவர் அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கட்டும்; நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறிவிடுங்கள்.

கொஞ்ச காலத்தில் அந்தப் பார்ப்பானும், அத்தகைய பித்தலாட்டத்தை கைவிட்டு விடுவான்.கடவுளை நம்பி கண்ட பார்ப்பானுக்கு காசு கொடுத்து அவன் வயிற்றை பலூன் மாதிரி உப்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமான செயல் என்பதையும், அதனால் நாமும் நம் பெண்டு பிள்ளைகளும் மடையர்ளாகி வருகிறோம். சூத்திரர்களாகி வருகிறோம், அடிமைகளாகி வருகிறோம் என்பதையும் உணர்ந்து உருவக் கடவுளை ஒழிக்க உறுதி கொண்டெழுங்கள்.

நல்ல வேலையாக நமது மந்திரியாருக்குக் கொஞ்சம் புத்தி வந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது. எந்த மனிதனும் இனி கடவுளைப் போன்று வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட யோசித்து வருகிறாராம். உத்தரவு போடுவாரோ அல்லது பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அதைக் கைவிட்டு விடுவாரோ தெரியவில்லை. அம்மாதிரி ஒரு யோசனையாவது தோன்றியதே அந்த அளவுக்கு திருப்தியே!கடவளைப்போல் மனிதன் நடிக்கும் ஈனச் செயல் இந்நாட்டில் தான் இருந்து வருகிறது. அதுவும் இழிந்த – விவஸ்தை அற்ற இந்த இந்து மதந்தான் இதையெல்லாம் அனுமதித்துக் கொண்டு வருகிறது.

முஸ்லீம்கள், நபிநாயகத்தைப் போல்கூட ஒருவன் நடிக்கப் பொறுக்க மாட்டார்கள் - அனுமதிக்க மாட்டார்கள். அவர் உருவம் புத்தகத்தில் வெளி வருவதற்குக் கூட அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தவறி வெளிவரின் கிழித்தெறிவார்கள். தாம் போற்றும் தம் தலைவனையே உருவத்தால் வழிபடுவது அத்தலைவனுடைய உயர் தத்துவத்தை அவமதிப்பதாகும். இழிவுபடுத்துவதாகும் என்று உண்மையாகவே நம்புகின்றனர்.

ஆனால் நம்மவர்களோ தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்ப தங்கள் தன்மைக்கு, சுயநலத்துக்கு ஏற்ப பல கடவுள்களை கிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்றும், சிவன் என்றும், பிள்ளையார் என்றும், முருகன் என்றும், மும்முகத்தோன் என்றும், சங்கரன் என்றும் - பல உருவங்களில் சிருஷ்டித்து விட்டு, ஒவ்வொன்றிற்கும் கழுதை, குதிரை, கருடன், எருது, எலி, பூனை என்று பல வாகனங்களையும், பார்வதி, லஷிமி, சரஸ்வதி, வள்ளி, தெய்வானை என்ற பல மனைவிமாரையும் கற்பித்து விட்டு அனைத்துக்கும் கும்பிடுப் போட்டு தனித்தனி அர்ச்சனை செய்யச் செய்து பார்ப்பனர் தம் உடல் கொழுக்கச் காசு பணம் கொள்ளை அடித்து வருகின்றனர்.

ஒரு கிறிஸ்துவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக் களியாட்டத்திற்கு இடமே இராது.

அக்கடவுள்கள் காமக்களி, துர்நடத்தை, விபசாரம் முதலிய இழி காரியம் செய்ததாக இருக்காது.

அனைத்தும் ஒழுக்கத்தையும், மக்களிடம் எதிர்பார்க்கும் நீதியையும் ஒட்டியதாகவே இருக்கும்.

ஆனால் இந்து மத, வேத, புராண இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலோ கலை, இலக்கியம், பக்தி வழி திருவிளையாடல், அனைத்தும் காமக்களிப்பு நிரம்பியனவாகவே இருக்கும்.

கீதை போற்றும் கிருஷ்ணனை – சினிமாக் காட்சியில் கோபிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தெய்வானை புருஷனான சுப்பிரமண்யனை – தினை காக்கும் வள்ளியிடம் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்ப்போம்.

ஆனால் கிருஸ்துவைவோ, முகம்மது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை – ஏன்? அவர்களெல்லாம் லஷிய புருஷர்களாக – ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்க்பட்டவர்கள்.

நம் கடவுள்களெல்லாம் அனாகரீக மக்களால், மிருகப் பிராயத்தரால், பித்தலாட்டக்காரர்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். எனவேதான் அவர்கள் முன்னுக்குச் செல்ல, அறிவுலகு நோக்கிச் செல்ல நாம் பின்னுக்கு முட்டாள்தனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

இதற்கு இப்போதேனும் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளை நாம் உருவத்தால் கற்பித்துக் கொள்ள கூடாது. கடவுளை மற்ற மதத்தவர்களைப் போல்தான் மனதில் யோக்கியனாக, ஒழுக்கமுடையவானாக, அறிவுடையயோனாக எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒழுக்கமும் விஞ்ஞான அறிவும் உடையவனாக கற்பித்துக் கொள்ள வேண்டும்.

அயோக்கியனாக, பித்தலாட்டக்காரனாக தற்போது நம் மனதில் பார்ப்பானால் சிருஷ்டி செய்யப்பட்டுள்ள கடவுளை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமாயுள்ள இப்போதைய கடவுளை நம் மனத்திலிருந்து நாம் இன்றே கையை விட்டு வாந்தி எடுத்து விட வேண்டும்.

கடவுள், படக்காட்சியில் தன் மனைவியுடன் அல்லது கூத்தியுடன் கொஞ்சிக் கொண்டிருக்க நாம் அதைப் பார்த்து "கிருஷ்ண லீலை" என்று கை கட்டி நகைத்துக் கொண்டிருக்கும் மடத்தனம்,

அத்தகைய இழி செயல் படைத்த கடவுளரை நம்பி நம் காசு பணத்தைக் கரியாக்கி வரும் கயமைத்தனம் இன்றோடு ஒழிய வேண்டும். திராவிடனுக்கு இன்று இன்றியமையாது வேண்டப்படுவது மூட பக்தியல்ல.விஞ்ஞானம், அறிவு தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பணம் இல்லை!

அற்புத அதிசயங்கள் நிறைந்த 1949 - ஆம் ஆண்டிலும் நாம் சூத்திரர்களாக இருந்து கொண்டிருப்பதும், குழவிக்கல்லை நம்பி குருக்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதும் முழு முட்டாள்தனமாகும். அந்நிய நாட்டினர் சந்திர மண்டலத்திற்கு சேதி அனுப்பிக் கொண்டிருக்க,

நாம் செத்துப் போன நம் தகப்பனுக்காக பார்ப்பானிடம் இங்கு அரிசி, பருப்பு அனுப்பி அழுதுகொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

கடவுளுக்கு உங்கள் அன்பை, ஒழுக்கத்தைக் காட்டுங்கள்! உங்கள் பணத்தைக் கொடுத்து நாமம், சாம்பல் அடித்துக் கொள்வது கடவுளை மடையன், அயோக்கியன் என்று காட்டுவதேயாகும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை விட்டு முன்னேற்றத்துக்கு – ஒழுக்கத்துக்கு ஆளாக வழிகோளுங்கள். நீங்களாக உங்கள் முன்னேற்றத்திற்கு வழி தேடிக் கொள்ளாதவரை அரசாங்கம் உங்களை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்காது.

மதச்சார்பற்ற சர்க்கார் என்று வெளியுலகம் மதிக்கக் கூறிக் கொண்டிருந்தாலும் மத சம்பிரதாயப்படி ஹோமம் பூஜை தீபாராதனை செய்துதான் கப்பல் தண்ணீரில் விடப்பட்டது?!

சுயராஜ்யம் கூட நல்ல நேரம் பார்த்து புகுத்தப்பட்டது.

வகுப்புகளை ஒழிக்கும் சர்க்கார் என்று பிரசாரம் செய்யப்படினும், கடைவகுப்புக்கு மாத்திரம் சலுகைக் கொடுக்கும் போது தான் இது கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படமாட்டாது – மற்றபடி என்று சொல்லிவிட்டது.

ஆனால் "வகுப்பு இருக்கக் கூடாது" என்று உத்தரவிட துணிவு பிறக்கவில்லை – பிறப்பிக்கப் பயப்படுகிறது.

ஆகவே நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கைவிடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள்.

புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்.

புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்!

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரசங்கம் என்றால் புரிந்தாலும், புரியாவிட்டாலும் தலை வணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவார்த்தமான, மானமற்ற முட்டாள்தனத்தை விட்டொழியுங்கள்!

(26-12-1948 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி 31-12-1948 "குடிஅரசு" இதழில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:222)

நன்றி:>> THAMILACHI >>http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_4904.html
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: