Followers

Tuesday, January 1, 2008

பார்ப்பனன் கும்பிடாத அசிங்கத்தைச் சூத்திரப் பக்தர்களிடம் தள்ளி விட்டனர்.ஒருத்திக்கே டசன் கணக்கில் கணவன்கள்..... ஒருவனுக்கே ஆயிரக்கணக்கில் மனைவிகள் ...

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (22)
-சு. அறிவுக்கரசு

பாண்டவர்கள் அய்ந்து பேரும் ஒரு பெண்ணை மணந்து கொண்டார்கள்.

அய்ந்து பேருக்கும் பெண்டாட்டியாக இருந்தாலும் அவளைப் பத்தினிப் பட்டியலில் சேர்த்துப் பெருமைப்படுகிறது ஆரியம்.

ஆனால் எந்தப் பார்ப்பனனும் பாஞ்சாலியை வணங்கிக் கும்பிடுவது கிடையாது. அந்த அசிங்கத்தைச் சூத்திரப் பக்தர்களிடம் தள்ளி விட்டனர்.

இவர்களும் அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி பாஞ்சாலியைத் திரவுபதையாக்கிக் கோயில் கட்டிக் கும்பிட்டு வருகின்றனர்.

புருசன் வேண்டும் என்று கடவுளிடம் விண்ணப்பித் தாளாம், பாஞ்சாலி! நல்ல சரக்கு என்றால் தானாகவே விலையாகாதா? கடவுள் சிபாரிசு எதற்கு?

சரி, கேட்டால் கிடைக்கும் என்பதால் தானே கடவுளிடம் கேட்டாள் அந்த நம்பிக்கையில் இருக்க வேண்டியதுதானே?

கடவுளின் காதில் விழுந்ததோ இல்லையோ எனச் சந்தேகப்பட்டு அய்ந்து தடவை ``பதிம்தேஹி’’ என்று கேட்டாளாம். அதனால்தான் அய்ந்து ஆம்படையான்களாம்!

நாரத புராணம் அய்ந்து பேருடன் எப்படி முறை வைத்து வாழ்வது என்பதைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்.
வில் போட்டியில் வென்று பாஞ்சாலியுடன் திரும்பிய அர்ச்சுனன் குந்தியிடம் தான் கனியுடன் (கன்னி) வந்திருப்பதாகக் கூற அவனது தாயார், பாண்டவர்கள் ஐவரையும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள பணித்தாள்.

உண்மை தெரிந்த குந்தியும், பாண்டவர்களும் வருத்தமுற வியாசர் போன்றோர் பாஞ்சாலி முற்பிறவியில் பெற்ற சாபம் என்று சமாதானம் கூற, பாஞ்சாலி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானாள்.

அவ்வமயம் அங்கு வந்த நாரதர், தன்னை வணங்கிய திரௌபதியையும் பாண்டவர்களையும் வாழ்த்தி, திரௌபதியின் காரணமாக அய்வருக்குள் சண்டை ஏற்படாமல் ஓர் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். அது சமயம் சுந்தன், உபசுந்தன் என்ற சகோதரர்களின் வரலாற்றைக் கூறினார்.

சுந்தன், உபசுந்தன் என்ற சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அந்தச் சகோதரர்கள் பிரம்மனை நோக்கி தவமிருந்து சகல வித்தைகளையும் அறிந்து, நினைத்த உருவம் எடுக்க வல்லவராக வரம் பெற்றனர். மேலும் அசையும், அசையாப் பொருள்களாலும் மரணமில்லா வரமும் பெற்றனர்.
அவர்கள் தேவர்களையும் ரிஷிகனையும் துன்புறுத்தி வந்தனர். இப்படி அந்த அசுரர்கள் தங்களை அடக்க ஆளின்றி குருnக்ஷத்திரத்தில் இருந்து மூவுலகையும் ஆண்டு வந்தனர்.

இந்நிலையில் பிரும்மா விசுவகர்மாவிடம் யாரும் ஆசைப்படுமாறு மயக்கும் பெண் ஒருத்தியைப் படைக்கச் செய்தார். அவள் நினைத்த வடிவம் எடுக்கக் கூடியவளாகவும் இருந்தாள். அவளுக்கு திலோத்தமை என்று பெயர் இட்டார். அப்போது பிரம்மா அவளை சுந்தன், உபசுந்தன் இருவரையும் மயக்கி உனக்காக அவர்கள் இருவரும் சண்டையிட்டு மடியும்படிச் செய்யுமாறு திலோத்தமைக்கு ஆணையிட்டார் பிரமன்.

விந்திய மலைச் சாரலில் சுந்தனும் உபசுந்தனும் மதுவருந்தி, பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் எதிரில் திலோத்தமை திரிய, மதி மயங்கிய வெறி கொண்ட சகோதரர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து, சச்சரவு தொடங்கி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டனர்.

எனவே, திரவுபதி ஒவ்வொருவருடனும் ஓராண்டு வசிக்க வேண்டும். ஒருவரோடு வாழும்போது இன்னொருவர் கண்டால் ஓராண்டு பிரம்மச்சாரியாக காட்டில் வசிக்க வேண்டும் என்று பாண்டவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு கூறினார்.

இப்படி வாழும்போது நடந்த சம்பவங்களையும் சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவ தாரக் கதைகளைக் கூறும் பாகவத புராணத்தை அடுத்துக் காண்போம்.

திரவுபதியின் மகன்களைத் தூங்கும்போது கொன்று விட்டார்களாம். என்ன தர்மமோ தெரியவில்லை. போர் முறை ஒன்று இருந்தது. இரவு நேரத்தில் சண்டையிடாமல் சூரியன் எழுந்ததும் போராடி மறைந்ததும் நிறுத்தி விடும் மரபு இருந்தது. ஆனால் பார்ப்பனர்களின் கதையில் இந்த ஒழுங்கு முறை கடைப்பிடிக் கப்பட்டதாகத் தெரியவில்லை.

எதில்தான் ஒழுங்கு முறை இருந்தது?
ஒருவனுக்கே ஆயிரக்கணக்கில் மனைவிகள் ஒருத்திக்கே டசன் கணக்கில் கணவன்கள் அதுவும் போதாதென்று அடுத்த ஆண்கள்மீதும் ஆசை வைக்கும் திரவுபதைகள்.


இப்படி ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை முறை ஆரியப் பார்ப்பனர்களுடையது. தூங்கியவர்களைக் கொன்றதைப் பார்ப்போம்.

அநீதியின் உருவமாகிய கௌரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாறே `மகாபாரதம்’ இதை எழுதியவரும் வியாசரே. பாரதப் போரில் இரு தரப்பினிலும் பலர் போர்க்களத்தில் அடிபட்டு வீர சுவர்க்கம் அடைந்தனர். அப்போது துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரௌபதியின் புத்திரர்களை, தூங்கிக் கொண்டிருக்கும்போது குரூரமாகக் கொன்று விட்டான்.

இதைக் கண்டு தாயான திரௌபதி கதறி அழுது பரிதவித்துப் போனாள். அர்ச்சுனன் கோபம் கொண்டு அசுவத்தாமன் தலையைக் கொண்டு வருவதாகக் கூறி அசுவத்தாமனைப் பின் தொடர்ந்தான்.
பயந்து ஓடிக் கொண்டிருந்த அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அருச்சுனனும் அதையே பிரயோகிக்க இரண்டும் பயங்கரமாக மோதிக் கொண்டன. பிறகு கிருஷ்ணனின் ஆணைப்படி அர்ச்சுனன் பிரம்ம அஸ்திரத்தை தன்னிடமே இழுத்துக் கொண்டான்.

பிறகு அசுவத்தாமாவைப் பிடித்துக் கட்டி, யாக பசுவைப் போல் இழுத்து வந்தான். அப்போது கிருஷ்ணன் அருச்சுனனிடம் `அவனுக்குத் தயவு காட்டாதே’ என்றார்.

பிறகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரௌபதியிடம் சென்று அசுவத்தாமாவை தண்டிக்கப் போவதாகக் கூற, திரௌபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாவை வணங்கி, அர்ச்சுனனிடம் அவனை விட்டு விடுமாறு வேண்டினாள்.

அப்போது அர்ச்சுனன் அசுவத்தாமனுடைய சிகையை அறுத்து, தலையிலுள்ள சிரோரத்தினத்தையும் அபகரித்தான். பின்னர், அவனை கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி விட்டான்.

உறவினர்கள் பெரும்பான்மை யோர் பாரதப் போரில் மடிந்து போனதால் மனம் வெறுத்துப் போன தருமன் மக்களுக்குத் துரோகம் செய்து விட்டதை எண்ணி வருந் தினானாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பதைப் போல இவன் நாடாள வேண்டும் என்பதற்காக நாட்டு மக்களைப் போரிடச் செய்தவன் வருத்தப்பட்டானாம். அவனைப் பலரும் தேற்றினார்களாம்.

ஆனாலும் அவன் கதையும் எப்படி ஆனது என்பதைப் புராணமே கூறுகிறது.
கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் பெரிய தகப்பனாருக்கும் காந்தாரிக்கும் விஷயத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். திருதராஷ்டிரனிடமும் அனுமதி பெற்றுத் தர்மநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அமைதியும், ஆனந்தமும் சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணன் சில நாள்கள் அஸ்தினாபுரத்தில் தங்கி சுபத்திரையை அன்புடன் ஆதரித்து சந்தோஷப்படுத்தினார். மற்றவர்கள் சோகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு அவர் துவாரகைக்குப் புறப்பட்டார். எல்லோரும் அவர் பிரிவைத் தாங்காமல் வருந்தினர்.

வாத்யங்கள் முழங்க பயணம் தொடங்கிய ஸ்ரீ கிருஷ்ணனை விட்டுப் பிரிய மனமின்றி வெகுதூரம் தொடர்ந்து வந்த பாண்டவர்களையும், மற்றவர்களையும் சமாதானம் கூறி விடை கொடுத்தனுப்பினார்.
பிறகு தேரேறி உத்தவர், சாத்யகி ஆகியோருடன், துவாரகை அடைய அப்போது தனது திவ்யமான சங்கை ஊதினார். துவாரகை மக்கள் திரண்டு காணிக்கைகளுடன் வந்து ஸ்ரீ கிருஷ்ணனை உற்சாகத்துடன் வரவேற்றுத் துதித்தனர். கிருஷ்-ணர் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அரண்மனை சென்று, தேவகி முதலான மாதாக்களையும், வாசுதேவரையும் பணிவுடன் நமஸ்கரிக்க, அவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வதித்தனர்.

சூத முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு மேலும் கூறலானார். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் வரும் வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம தத்துவத்தைக் கேட்டு அறிந்து சிறந்த ஞானத்தைப்பெற்று ஸ்ரீ கிருஷ்ணன்மீது நிர்மலமான பக்தியும், அமைதியும் பெற்றார்.

நீண்ட நாள்களாய் பிரிந்திருந்த சிறிய தகப்பனார் விதுரரைக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ணீர் பெருக்கினார்.
பிறகு விதுரருக்குப் போஜனம் செய்வித்து யோகnக்ஷமங்களை விசாரித்தார். அப்போது விதுரர் தருமனுக்கு எல்லாவற்றையும் கூறினார். ஆனால், யதுகுலத்துக்கு நேர்ந்த கஷ்டத்தை மட்டும் கூறவில்லை. பிறகு தனது தமையனாருக்கு ஞானமார்க்கம் பற்றி எடுத்துக் கூறியவராக காலம் கடத்தி வருகையில் மரணகாலம் நெருங்குவதை அறிந்து தமையனிடம் பின்வருமாறு கூறினார்:

காலதேவனின் சக்தியை வெல்ல முடியாதல்லவா. விரைவிலேயே வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். அதற்காக இந்த வயதில் பிறரை அண்டி வாழ வேண்டும். எவர்களுக்காகப் பல கொடியச் செயல்களைச் செய்தீரோ அவர்கள் வீட்டிலேயே வாழலாமா? வீட்டைக் காக்கும் நாய்க்குச் சோறிடுவதைப் போல பீமன் உமக்கு அன்னம் இடுகிறான்.

எவ்வளவுதான் உயிர்மீது ஆசை வைத்தாலும் சரீரம் காலக் கிரமத்தில் அழியும். எவன் ஆசைகளை விட்டுப் பற்றின்றி வைராக்கிய மனதுடன், வீட்டை விட்டு வெளியேறி யாரும் அறியாமல் சரீரத்தை விடுகிறானோ அவனே தீர புருஷன்.

எவன் ஸ்ரீ ஹரியின் சரணங்களையே தியானித்து வீட்டை விட்டுத் துறவியாக புறப்பட்டுச் செல்கிறானோ அவனே உத்தமன். எனவே உடனே யாருக்கும் தெரிவிக்காமல் வடக்கு திக்கில் செல்லுங்கள் என்றார். உடனே திருதராஷ்டிரன், காந்தாரி பின் தொடர விதுரர் வழி-காட்ட வீட்டைத் துறந்து, இமயமலைக்குச் சென்றுவிட்டார்.

தருமர் வழக்கப்படி பெற்றோர்களை வணங்க வந்தவர், மாளிகையில் யாரும் இல்லாதது பற்றி சஞ்ஜயரைக் கேட்க, அவரும் தன்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை என்றார்.

அப்போது அங்கே வந்த நாரத முனிவர் `வீணாக வருந்த வேண்டாம்; எல்லாம் பகவான் கட்டளைப்படியே நடக்கும். பஞ்ச பூத சரீரத்தினால் ஆன எவரையும் காப்பாற்ற முடியாது’’ என்று கூறி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமலை சென்றதைக் கூறினார்.

தருமன் மனம் தெளிந்து சோகத்தை விட்டார்.
சில நாள்கள் கழிந்த பின் தருமர், உற்றார் உறவினர் nக்ஷம லாபங்களை அறிந்து வர அர்ச்சுனனைத் துவாரகைக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின.

பல மாதங்களிலும் அர்ச்சுனன் திரும்பி வராததால் பீமசேனனைத் துவாரகைக்குக் சென்று வருமாறு கூறினார். மேலும் நாரதர் கூறியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்தை விட்டு விடும் காலம் வந்து விட்டதோ என்று கவலையுற்றான்.

அவ்வமயம் துவாரகையிலிருந்து திரும்பி வந்த அர்ச்சுனன் யுதிஷ்டிரரை வணங்கிக் கண்ணீர் மல்க நிற்பது கண்டு பயந்தார். எல்லோரும் நலந்தானே என்று விசாரித்தார்.

அப்போது அர்ச்சுனன் நா தழுதழுக்க, ``ஸ்ரீ ஹரி உற்ற பந்துவாக இருந்தும் என்னை வஞ்சித்து விட்டார். என்னுடைய தேஜஸ் வீர்யம் எல்லாம் அபகரிக்கப்பட்டு விட்டது. நான் சக்தி அற்றவன் ஆகிவிட்டேன். அவருடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும்போது நெஞ்சம் துடிக்கின்றது. துவாரகா நகரமே சூன்யமாகி விட்டது. நமக்குக் கோவிந்தனுடைய நாமஸ் மரணமே தான் துணை அதுவே நமது துன்பங்களை நீக்கக் கூடியது’’ என்று ஆற்றாமையுடன் கூறினான்.

பின்னர் கீதோபதேசங்களை நினைவு கூர்ந்து ஞானம் பெற்றான். குணாதீத நிலையைப் பெற்ற அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சொற்களைக் கேட்டு சம்சார சூழலிலிருந்து விடுபட்டாள்.

சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும், வணக்கமுடையவனுமாகிய பேரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மதுரா நகரில் சூரசேன நாட்டிற்கு வஜ்ரனை அரசனாக்கினார்.

பின்னர் அகங்கார, மமகாரங்களை விட்டு மோகமின்றி எல்லாப் பந்தங்களையும் துறந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையை விட்டு வெளியேறினார். சகோதரர்களும் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். திரௌபதியும் வாசுதேவனையே சரணாக அடைந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவரையே அடைந்தாள்.
இவ்வாறு பகவானுடைய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடைய மகா பிரயாணத்தைப் பற்றி பாகவதம் கூறுகிறது.
http://viduthalai.com/20070609/snews02.htm
--------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: