Followers

Friday, December 28, 2007

யார் நாஸ்திகர்கள்? யார்? யார்? யார்?

"முன்னேற்றம்’’ பின்வருமாறு எழுதுகின்றது.

நாம் 'குடிஅரசின்’ கொள்கையைக் கைக் கொண்டு நாஸ்திகப் பிரசாரம் செய்வதால் சிலர் தூற்றுவதாகத் தெரிகிறோம். ஆகவே நாஸ்திகம் என்பதின் பொருள் என்ன? அப்பொருள்பற்றி நாம் எத்துறையில் பிரசாரம் செய்கிறோம்? என்பவைகளை நமது சகோதரர்களுக்கு விளக்க வேண்டியது நமது கடமையாகயிருக்கிறது.

'நாஸ்தி’ என்பது அழிதல் என்பதை யுணர்த்தும் ஓர் வடமொழிப்பதம், அதுகொண்டு 'நாஸ்தீகன்’ என்றால் அழிப்போன் என்பதுபொருள். மதக் கொள்கைகளை மறுப்பவர்களுக்கு 'நாஸ்தீகன்’ அதாவது கடவுள் கொள்கையை அழிப்போன் என்று பொருள் கொள்ளப்பட்டு நெடுஞ்காலத்திற்கு முன்பே, மதக் கொள்கைகளை ஜனங்களுக்குப் போதித்து அதனால் தங்கள் சுபோகங்களுக்கு வழியுண்டாக்கிக் கொண்டுவந்த மதபோதகர்களால் அவர்கள் சொல்லும் கொள்கைகளை தங்கள் ஆராய்ச்சி அறிவால் பகுத்துணர்ந்து அவற்றிலுள்ள ஆபாசங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியவர்களை அடக்குவதற்கு ஓர் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டு வந்தது.

இவ்வாயுதத்தை இப்போது சிலர் நம்மீது பிரயோகித்து அடக்கிவிட எண்ணுகிறார்கள். அக்காலத்திலுள்ள பொது ஜனங்களுக்கு அதன் உண்மை சரியாகத் தெரியாததால் கடவுளை இல்லையென்று சொல்லுகிறார்களாமே என்னும் பிரேமையால் அவர்கள் சொல்வதை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இக்காலத்து ஜனங்கள் பிறர் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்ளும் அறிவீனர்களாய் இல்லை.

பெரியாரென மதிக்கப்பட்டு வந்தவர்கள், கடவுள் என்பது எங்கும் நிறைந்தது சர்வ வல்லமையுள்ளது. காமம், ரூபம் குணம், பேதம் அற்றது. மனிதனுடைய ஆராய்ச்சிக்கு எட்டாதது என்றும், எவ்விடத்தும் நடக்கும் ஒவ்வொரு காரியங்களும் அதனுடைய செயலாலேயே நடைபெறுகிறது எனவும் சொல்லுகிறார்கள்.

எங்கும் நிறைந்துள்ள ஒன்று கோவிலிலுள்ள விக்கிரகத்தில் மட்டுமா இருக்கிறது? என்று கேட்டால் அப்படிக் கேட்பவர்கள் நாஸ்திகர்!

நாமம் இல்லாத ஒன்றுக்கு எப்படிப் பெயர்கள் வந்தது? என்றால் நாஸ்திகர்!

ரூபமற்ற ஒன்றுக்கு பலவிதமான இயற்கைக்குப் பொருந்தாத அவயவங்களும் கொண்டு ஏன் உருவகப்படுத்தப்படுகிறது? என்றால் நாஸ்திகர்!

குணமில்லாத ஒன்றுக்கு தன்னைப் புகழ்ந்து போற்றுபவர்களுக்கு நன்மையையும், போற்றாதவர்களுக்குத் தின்மையும் கொடுப்பதாகிய இச்சகம் பேசுவதில் விருப்பும், பேசாதத்தில் வெறுப்பும் கொள்ளும் குணமும், அவருக்கு நாம் விரும்பும் இனிய உணவுகளையும், தாம்பூலத்தையும், அணிகளையும், போதாததற்கு கள், சாராயம், மாமிசம், சுருட்டு முதலானவைகளையும் கொடுக்க வேண்டும்; கடவுளிடம் நமக்குள்ள அன்பைக் காட்ட இதுவே வழி; இப்படிச் செய்வதால் கடவுள் நம்மீது திருப்தியடைந்து நமக்கு நன்மை செய்வார் என்றும் சொல்லி கடவுளுக்கு லஞ்சம் வாங்கும் குணத்தையும், தனக்கு (கடவுளுக்கு) விரோதமாகப் பேசுவோர்களைத் தண்டிக்குங் குணமும் எங்ஙனம் வந்தது? என்று கேட்டால் நாஸ்திகர்!

ஒவ்வொரு மதாச்சாரியர்களுக்கும் வெவ்வேறு விதமாகத் தென்படுவானேன்? என்று கேட்டால் நாஸ்திகர்!

மனிதனுடைய ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று சொல்லப்படுவது இருப்பதும் இல்லாததும் எப்படித் தெரிந்தது? என்றாவது, ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது அறிவுத் திறமைக்கு தக்கவாறு தோன்றுவது எப்படி என்றாவது, அது இருக்கிறது, அனுமானங்களால் நம்பத்தான் வேண்டும், நம்பி துதிக்க வேண்டும்’’ என்றாவது சொல்பவர்களை நீங்களும் மனிதர்தாமே; மனித ஆராய்ச்சிக்கு அப்பாலுள்ளது உங்கள் ஆராய்ச்சிக்கு எப்படி எட்டியது?’’ என்று கேட்டு விட்டால் நாஸ்திகர்!

நடக்கும் ஒவ்வொரு காரியமும் கடவுள் செயலாலேயே நடக்கிறதென்றால் கடவுள் கொள்கையை மறுக்கும் செய்கையும் அவரால்தானே ஏற்பட வேண்டும்; அப்படி ஏற்பட வேண்டுமென்பது அவரின் கருத்தானால் நடந்துதானே தீரும். யாராலேனும் அதைத் தடுக்க முடியுமாவென்றாவது அல்லது எல்லாம் அவன் செயலால் ஆகுமென்று நாம் சும்மாயிருந்துவிட்டால் யாவும் நடைபெற்று விடுமா? வென்றாவது கேட்டால் நாஸ்திகர்!

இது மட்டுமல்ல! காலி வஸ்திரமும் விபூதிப்பூச்சும் கொண்ட மேனியராய் வந்து பிச்சை கேட்கும் பரம தடியனை ஏன் பிச்சையெடுத்து சோம்பேறியாகிறாய்? உழைக்கக் கூடிய சக்தியிருக்கும்போது ஏன் உழைத்துக் கௌரவமாய் வாழ்க்கை நடத்தக் கூடாது? என்று கேட்டால் நாஸ்திகர்!

கடவுளுக்குக் குடியிருக்க கோவில் கட்டுவதாகப் பணம் வசூல் செய்ய ஆடம்பரத்துடன் வருபவர்களை ``இப்போதிருக்கும் கோவில்கள் போதாதா? இன்னும் புதுப்புது கோவில்கள் கட்ட வேண்டியது அவசியமா?
இக்காலம் படிப்பில்லாது கண்ணிருந்தும் குருடர்களாக விருக்கும் மக்களுக்குக் கல்வி கற்பிக்கக் கூடிய பாடசாலைகள் ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கக் கூடாதா?’’ என்று கேட்டால் நாஸ்திகர்!

இறந்து போய் மோட்சத்திலிருக்கும் மூதாதைகளுக்குப் பார்ப்பனர் மூலம் ஊணும், உடையும் பொருளும் அனுப்ப வேண்டுமா?வென்றால் நாஸ்திகர்!

நினைத்த சுகங்களை அனுபவிக்க வசதியுள்ள மோட்சத்திலுள்ளவர்களுக்கு ஊணும், உடையும் பொருளும் நம்மிடமிருந்து தேவையா? வென்று கேட்டால் நாஸ்திகர்

இறப்பதற்கு முன்பு புரோகிதருக்குப் பசுவும், பொன்னும், ஆடைகளும் தானம் கொடுத்து மோட்சத்தையடைய யோக்கியதை பெற்றுவிட்டு ஒருவருக்கு இறந்து பல நாள்கள் சென்று கருமாதி முதலான கிரியைகளும், மாதா மாதம் நடத்தும் மாசியமும் வருஷா வருஷம் நடத்தும் திதியும் ஏன் நடத்த வேண்டுமென்று கேட்டால் நாஸ்திகர்!

குறிப்பிட்ட ஒரு குளத்திலோ அல்லது ஆற்றிலோ ஒரு தரம் ஸ்நானம் செய்து விட்டால் இந்தப் பிறவியிலும் முந்தின பிறவிகளிலும் செய்ததும், செய்யப் போவதுமான சகல பாவங்களும் போய் விடுமென்பதாகச் சொல்லும்போது ஏன் மேலும் மேலும் பாவங்களை செய்து கொண்டிருக்கிறது என்றாவது அல்லது குறிப்பிட்ட ஒரு தெய்வத்தின் பெயரை ஒரு தரம் உச்சரிப்பதாலாவது குறிப்பிட்ட ஒரு ஸ்தலத்துக்கு ஒரு தரம் போவதாலாவது விபூதி திருமண், துளசி, வில்வம், உத்திராச்சம் முதலான வஸ்துக்களை அணிந்து கொள்வதாலாவது சகல பாவங்களும் நசித்துப் போவதாக இருந்தால் நாம் ஏன் மென்மேலும் புண்ணியத்தைதேட வேண்டும்? என்றாவது கேட்டு விட்டால் நாஸ்திகர்!

பால்மணம் நீங்காத இளம் குழந்தைகளுக்குமணமுடித்து ஏன் குழந்தை விதவைகளை உண்டு செய்ய வேண்டுமென்றால் நாஸ்திகர்!

கோவிலிலுள்ள சாமிகளுக்குக் கல்யாணம் சாந்தி, பிராயச்சித்தம், தாசிகள், ஆயிரக்கணக்கான ஜனங்களால் இழுக்கப்பட வேண்டிய பெரிய தேர், அநாகரீகமான விழாக்கள் அவசியமாவென்றால் நாஸ்திகர்!

கடவுள் மக்களிடை உயர்வு தாழ்வு கற்பிக்கும் முறையுடன் நம்மைப் படைப்பாரா? உயர்ந்தோருக்கும், தாழ்ந்தோருக்கும் எந்த விதமான தோன்றக் கூடிய வித்தியாசங்கள் இருக்கிறது! அப்படி ஒன்றும் இல்லாதபோது ஏன் உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்க வேண்டுமென்று கேட்டால் நாஸ்திகர்!

கடவுள் ஒரு ஜாதியார் மட்டும் தன் சமீபத்தில் வரவும், தொட்டுப் பூசிக்கவும், மற்றவர் இவ்வளவு தூரத்தில்தான் இருக்க வேண்டும், இன்னும் சிலர் தான் இருக்கும் பக்கங்கூட; திரும்பிப் பார்க்கக் கூடாதென்றும் விதிகளை ஏற்படுத்துவாரா வென்றால் நாஸ்திகர்!

கடவுளை நம்ப வேண்டுமென்பவர்களும், கடவுளை நேரில் கண்டவர்கள் போன்று வேஷம் போடுபவர்களும் செய்யும் துர் நடத்தைகளைக் கண்டு இப்படிச் செய்வது ஞாயமா? என்று கேட்டால் நாஸ்திகர்!

கோவில்களிலும் மடங்களிலும் அதிபதிகளாகவிருக்கும் மகந்துக்கள், மடாதிபதிகள் முதலானோர் குடி, விபசாரம் ஆகியவைகளில் பெரும் பொருளைச் செலவு செய்வதைக் கண்டு வெளியில் பிரஸ்தாபித்தால் நாஸ்திகர்!

இன்னும் இவை போன்ற எண்ணற்ற காரியாதிகளுக்கெல்லாம் நாஸ்திகப்பட்டம் சூட்டப்பட்டு ஜனங்களிடம் `இவர்கள் கடவுளே இல்லை’’யென்று சொல்லுகிறார்கள் என்று கூக்குரலிடுகிறார்கள்.

நாம் கடவுள் உண்டென்றாவது, இல்லை என்றாவது சொல்லவில்லை. உண்டென்றால் அதற்குச் செய்கையும் குணங்களும் உருவமும், பிறப்பு இறப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாகக் கற்பிக்கத்தான் வேண்டிவரும்.

நாம் சொல்வதெல்லாம் உண்டென்றால் நாம் இல்லை என்று சொல்வதால் இல்லாது போய் விடாது.

இல்லையானால் உண்டென்பதால் உண்டாய்விடாது.

மனிதனது ஆராய்ச்சிக்கு எட்டாத ஒன்றென்பதாக யாவராலும், ஒப்புக் கொள்ளப்பட்டதான ஒன்றைப்பற்றி நாம் ஆராய்ச்சி செய்து காலத்தை வீணாக்குவதைவிட நமக்கு இக்காலத்துக்கு ஆகும் காரியங்களில் கவலை செலுத்துவோமென்பதே நமது கோரிக்கை. இதிலிருந்து நாஸ்திகர் என்பவர் யார் என்பது ஜனங்களுக்கு விளங்காமல் போகாது. -'திராவிடன்’ 23.2.1929
http://viduthalai.com/20070624/news10.htm
----------------------------
அழுத்தவும் :->> Show all posts

No comments: