Followers

Sunday, December 30, 2007

கடவுள்களுக்குக் காசு செலவழிந்து காசுக்குப் பஞ்சம் வந்த காரணத்தால்...! ? சும்மா இருக்க முடியுமா! எப்படி சமாளித்தார்கள்!!

கூர்ம புராணம் என ஒரு புராணம். கூர்மம் என்றால் ஆமை. ஆமைக்கும் ஒரு புராணமா எனக் கேட்காதீர்கள். புராணம் முழுக்க வைணவ ஆதிக்கம்தான். நான்கு புராணங்கள் தவிர மீதி எல்லாமே இவர்களுடையதுதான். அந்த வகையில், ஆமைப் புராணம்.

கடவுள்களுக்குக் காசுக்குப் பஞ்சம் வந்த காரணத்தால் கடலைக் கடைய வேண்டி நேரிட்டதாம். கடலில் என்ன; இவர்களுக்குக் காசு கொட்டியா வைக்கப்பட்டுள்ளது?

ஆமாம் என்கிறது இந்தப் புராணம். கதையைப் படியுங்களேன். பாற்கடலைக் கடைய ஆயத்தம்பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்த பிறகு தேவேந்திரன் ஒரு நாள் கொலுவில் வீற்றிருக்க தேவர்கள், கந்தர்வர்கள், மும்மூர்த்திகள் கிம்புருடர்கள் நடன மாடி, அப்சரஸுகளின் ஆடல் பாடல் நடைபெற்றது. சிவதாண்டமும் கூடியது.

அவ்வமயம் குபேரன் எழுந்து, ``எனக்கு நவநிதிகள், ரத்தினங்கள் யாவும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்திரன் பதவி ஏற்றிட அவை யாவும் செலவழிந்து விட்டன. மகேச்வரர் இந்திராதி தேவர்களுக்கும், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் என்னிடமிருந்து நிதியை எல்லாம் எடுத்துச் செலவழித்தார் என்று கூறினான்.

அப்போது விஷ்ணு குபேரனின் கூற்றை ஆமோதித்து, ``இனி பாற் கடலைக் கடைந்தால் அகண்ட ரத்தினங்களும், மற்றும் அபூர்வ பொருள்களும் கிடைக்கும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறினார். உடனே அனைவரும் பாற் கடல் உள்ள இடத்தில் ஒன்று கூடினர். அரக்கர் கூட்டத்தையும் அனுப்பி வைக்குமாறு பாதாள லோக பலிச் சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பினார்.

அப்போது அசரீரி கூறியவாறு மந்தர மலைக்கெதிரில் விசித்திர நிறங்களுடைய ஆமை உள்ளது. அதனைக் கொண்டுவந்து கடலில் விட்டனர். உடனே அது மிகப் பெரிய உருவெடுத்து மந்திர மலையைத் தன் முதுகில் தாங்கிற்று.

பின்னர் வாசுகியை நாணாக மலையைக் சுற்றிக் கொள்ளுமாறு விஷ்ணு கூற, அது தான் தூள் தூளாகி விடுவேன் என அஞ்சிக் கூறிட, பகவான் உலகையே தாங்கும் உனக்கு இது ஒரு பொருட்டல்ல என்று கூறினார். `உனக்கோர் ஆபத்துமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
இவ்வாறு பாற்கடல் கடைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற, வாசுகி மந்திர மலையைச் சுற்றிக் கொள்ள அதன் தலைபக்கம் ராக்ஷசர்களும், வால் பக்கம் தேவர்களும் இருந்து பாற் கடலைக் கடைய ஆரம்பித்தனர்.
பாற்கடலில் தோன்றியவைதேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் விண்ணிலிருந்து `பாற்கடலைக் கடைவதைக் காணலுற்றனர்.

இடையில் கடைவதில் ஈடுபட்டவர்கள் களைப்புற்றனர். அவர்களுக்கு இயலாமை ஏற்பட்டது. எல்லோருக்கும் தேவையான பலம் தந்து இந்தக் கடைவதை வெற்றி கரமாக்குமாறு ஸ்ரீ ஹரியை வேண்டினர்.

அப்போது மகாவிஷ்ணு, ``தேவர்களே, தானவர்களே, இதற்குப் போய் அலுத்துக் கொள்ளலாமா? இது மிக அற்பப் பணி. சமுத்திரம் உள்ளது; மத்து உள்ளது; கயிறு உள்ளது; நானிருக்கிறேன். மேலும் முயற்சி செய்யுங்கள் என்றார்.
அவர்கள் மறுபடியும் புது உற்சாகம், பலம் கொண்டு கடைய ஆரம்பித்தனர். அப் போது மலை பலவிதமாக அசைய ஆரம்பித்தது. அப்போது மகாவிஷ்ணு மலையைக் காலால் அழுத்தினார். பின்னர் முழுமனதுடன், முழு மூச்சாய் மதனம் நடைபெற்றது.

சில நேரம் வரை ஒன்றுமே பலன் கிடைக்காததால் பிரம்மா ஜாம்பவானை ஓஷதிகளைக் கடலில் சேர்க்குமாறு கூறினார். பிறகு கடலிலிருந்து ஒரு வெள்ளை ரசம் வெளிவர அதனை பிரம்மா ஒரு தங்கக் கலசத்தில் போட்டு வைத்துக் கொண்டார்.

மேலும் கடைந்திட அதிலிருந்து அய்ராவதம் என்னும் யானை தோன்றியது. அதன் நாற்றம் பொறுக்க முடியாமல் அதனை வெறுத்தனர்.

அடுத்து சந்திரன் தோன்றினான். உடனே மகாலக்ஷ்மி பிறந்தாள். அவளுக்குப் பின்னால் ரம்பை, மேனகை, திலோத்தமை, கிருதாசி, ஸகேசி, மஞ்சு கோஷ், சித்திரலேகை முதலிய தேவலோக நடன மாதர்கள் தோன்றினர். பிறகு நிதிகள் தோன்றின.

தினமும் ரத்தினங்கள் சிந்தும் உடலுள்ள இரண்டு திவ்விய புருஷர்கள் வெளிப் பட்டனர். பிரம்மா அவர்களிருவரையும் லக்ஷ்மி சந்நிதியில் இருக்கச் செய்தார். அவர்கள் குபேரனுக்கு நவ நிதிகள் முழுவதும் கிடைக்கச் செய்தனர்.
பின்னர் உச்சைச் சிரவம் என்னும் வெண்குதிரை தோன்றியது.அதன் பின் ஒரு தாமரை மொட்டு குடைபோல் தோன்றியது. அதிலிருந்து ரத்தினங்கள் கொட்ட ஆரம்பித்தன. அது தான் பிரம்ம தண்டம். அடுத்து பிரம்மாவுக்கேற்ற கமண்டலம் வெளிப்பட்டது.

பின்னர் கல்பதரு, காம தேனு, சூரியமணி, சமந்தக மணி, கௌஸ்துபமணி, தேவ தத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம் ஆகியவை தோன்றின.
ஆலகால விஷமும், நீலகண்டனும்வெளிப்பட்ட பொருள்கள் மீது ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட வாதம் செய்யலாயினர்.
அப்போது சிவபெருமான் இவற்றை எல்லாம் ஓரிடத்தில் பத்திரப் படுத்தி மேலும் கடையுங்கள் என்று கூறினார். கடைசியில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றார்.


இது கேட்ட அனைவரும் செயல் வீரர்களாகி வேகவேகமாகக் கடைய ஆரம்பித்தனர். அப்போது பயங்கரமான, தாள முடியாத, அதிக வெப்பம் பரவிற்று. அதிலிருந்து விண்ணை முட்டுமளவு சுவாலை எழும்பியது. எவராலும் அதைச் சமாளிக்க இயலவில்லை.

அவ்வாறு ஆலகால விஷம் தோன்ற அதன் கொடுமையைத் தவிர்க்கும் வழி பற்றி யோசிக்கலாயினர். `இந்த விஷத்தைச் சமாளிப்பது எப்படி? மதனத்தை நிறுத்தி விடலாமா?

அப்போது அவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் ``நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எங்களால் சகிக்க முடியவில்லை என்றனர். தேவாசுரர்களின் தீன நிலை கண்டு மகாவிஷ்ணு தயை கொண்டு பெருமழை பொழியச் செய்து வெப்பத்தைத் தணித்தார். விஷ்ணு வெப்பத்தைத் தாங்கி நிற்க அவர் உடல் நீலநிறம் ஆகியது.

இனி என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் பிரம்மனிடம் சென்று வேண்ட, அவரும் அவர்களுடன் திருமாலிருப்பிடம் சேர்ந்தார்கள்.
விஷ்ணு அவர்களிடம் இப்போது அனைவரையும் காப்பாற்றக் கூடியவர் சிவ பெருமானே என்று கூறி அவர்களைச் சிவனிடம் அனுப்பி வைத்தார்.அனைவரும் கைலாயம் அடைந்து உமா மகேச்வரர்களிடம் வந்துள்ள ஆபத்தைப் பற்றி, அதாவது ஆலகால விஷத்தைப் பற்றிக் கூறித் தங்களைக் காத்தருளுமாறு வேண்டி துதி செய்தனர்.

``என் பக்தர்களுக்கு அபாய மென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா! எவ்வளவு கஷ்டமானாலும், ஆபத்து ஏற்படுவதானாலும் சரி என்று கூறி ஆலகால விஷத்தை ஏந்தி உட்கொண்டார்.

அவ்வாறு உட்கொள்ளும் முன் பார்வதியிடம் கூற அவள் பரமன் உட்கொள்வது விஷமல்ல, அமுதமாகும் என்று கூறினாள். அருந்திய ஆலகால விஷத்தை வயிற்றில் போக வொட்டாமல் நெஞ்சிலேயே நிறுத்த அது அவர் கழுத்தை நீலமாக்கிவிட்டது. அவரும் அதனால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.

எனினும் சிவனார் உடல் முழுவதும் பயங்கர வெப்பம் வீசிட பிரம்ம தேவன் சந்திரனைச் சிவனார் தலையில் நின்று அவன் அமுத கிரணங்களால் குளிரச் செய்யுமாறு கூறினார்.

மேலும் பிரம்மா கங்கையைச் சிவனார் தலையில் இருந்து உனது பிரவாகத்தால் நனைத்துக் கொண்டிரு. உனது அபிஷேகத்தால் பரமனுக்குச் சாந்தி ஏற்படுத்து என்று கூறினார்.

இதனால் சிவபெருமானுக்குச் சந்திரசூடன், சந்திரசேகரன், கங்காதரன், சந்திரகலாதரன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வாறு பரமசிவன் ஆலகால விஷத்தை உட்கொண்டு லோகக்ஷே மார்த்தத்திற்கு உதவினார்.--
புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (46)----சு. அறிவுக்கரசு
http://viduthalai.com/20071229/snews02.html
------------------------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: