Followers

Thursday, December 13, 2007

சிவாஜியை கடத்த முயலும் இந்துத்துவா வரலாற்று புரட்டர்கள்!!!

சிவாஜியை கடத்த முயலும் இந்துத்துவா வரலாற்று புரட்டர்கள்---
கிருஷ்ணாகோப்கர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக் குழு உறுப்பினரான கிருஷ்ணா கோப்கர் அண்மையில் சென்னையில் நடை பெற்ற குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

தீக்கதிர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருடன் உரையாடியபோது இப்படிப்பட்ட சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சிவாஜியை இந்துக்களுக்காக போராடிய மன்னர் என்பதுபோல் சித்திரிக்க இந்துத்துவா கூட்டம் பல முயற்சிகளை செய்கிறது.

உண்மை வரலாற்றைத் திரிப்பது ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு புதிய விஷயம் அல்ல.

ஏற்கெனவே புராணக் கற்பனைகளையே இந்தியாவின் உண்மையான வரலாறாகத் திரித்துக் கூறுகிறவர்கள் இவர்கள். அதை மக்கள் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துகிறவர்கள். அப்படி நம்ப மறுக்கிறவர்களை தேசத் துரோகிகள் என்று சொல்லத் தயங்காதவர்கள்.

மராட்டியத்தில் சிவாஜி மீது மக்களுக்கு உள்ள அபிமானத்தை தங்களுடைய செல்வாக்காக இடம் மாற்றத் துடிக்கிறார்கள்.

அதற்கான ஒரு நீண்ட சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே சிவாஜியை இந்து மன்னன் என்றும், இந்துக்களுக்காக போராடியவன் என்றும் மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார்கள்.

உண்மையில் சிவாஜி இஸ்லாமிய மக்களிடம் மிகுந்த வாஞ்சையோடு பழகியவர். அவரது முக்கியமான படைத் தளபதிகள் பலரும் முஸ்லிம்கள்தான். அவர்களுடைய வீரத்தையும் துணிவையும் மிகவும் பாராட்டியவன் சிவாஜி.

இவ்வாறு சங்பரிவாரத்தின் பித்தலாட்டத்தைப் பிட்டுபிட்டு வைக்கிறார்.

மராத்தி மொழியில் வெளியாகும் ஜோதி மார்க் (தீப வழிகாட்டி) மாத இதழின் ஆசிரியருமான கிருஷ்ணா கோப்கர் அண்மையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

சில நாள்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் தொலைபேசி மூலம் இவரைத் தொடர்பு கொண்டு, நாங்கள் வரலாற்றை புரட்டுகிறோம் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள், எனக் கேட்டு கோபமாகப் பேசினாராம்.

ஆர்எஸ்எஸ்-காரர்கள் எப்படியெல்லாம் வரலாற்றை புரட்டுவார்கள் என்பதை அருகிலிருந்து பார்த்தவன்தானே நான் என்று சொன்னதும் சுதர்சனன் தொலைபேசியை வைத்து விட்டார், என்று தெரிவித்தார் கோப்கர்.

ஆம், தமது சிறு வயதில் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இணைந்து முனைப்புடன் செயல்பட்டவர்தான் கிருஷ்ணா கோப்கர். 1939 முதல் 41 வரை நான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தேன். ஆர்எஸ்எஸ் அளிக்கும் எல்லாவிதமான பயிற்சிகளையும் நானும் மேற்கொண்டேன். அப்போது அதன் தலைவராக இருந்த தேவரஸ் 60வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அதற்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் ஆரியர்களின் பெருமை பற்றியும், அவர்கள் தான் நாட்டின் முதல் குடிமக்கள் என்பதாகவும் கூறப்பட்டிருந்து.
ஆரியர்கள் இங்கே வந்து குடியேறியவர்களாகத் தானே வரலாறு சொல்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர்களோடு நான் விவாதித்தேன்.


அதற்கு அவர்கள், இந்தியாவின் நிலப்பரப்பு பூமியின் வடதுருவத்திலிருந்தே தொடங்குகிறது என்றார்கள்!

ஆகவே வடதுருவத்திலிருந்து புறப்பட்டு இமயமலை கண வாய் வழியாக வந்தாலும் அவர்களை அந்நியர்கள் என்று சொல்ல முடியாது என்று ஒரு விசித்திரமான வாதத்தை முன் வைத்தார்கள்!

மேலும் அவர்கள் சொல்கிற காலக்கணக்குப்படி பார்த்தால் அப்போது பூமி முழுவதும் பனியுகம் (அய்ஸ் ஏஜ்) பரவியிருந்தது. அப்போது மனித இனமே உருவாகியிருக்கவில்லை!

இப்படி அறிவியல் உண்மைகளை குப்பைக்கு வீசிவிட்டு, உணர்ச்சி வசப்பட வைக்கும் கற்பனையான கருத்துகளைத்தான் அவர்கள் முன்மொழிகிறார்கள் என்பது எனக்குப் பிடிபட்டது. அதன் பின் அவர்களிடமிருந்து விலகிவிட்டேன்

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அப்போது மார்க்சிய தத்துவம் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
வரலாற்றையும் சமுதாய மாற்றத்தையும் அறி வியல் கண்ணோட்டத்தோடு அணுகுகிற மார்க்சியம் என்னைத் தழுவிக் கொண்டது, என்று தெரிவித்தார் கோப்கர்.

ஆர்எஸ்எஸ் தலைவர்களோடு விவாதித்தபோது, அவர்கள் சாதி ஒழிப்பு, சமத்துவம் ஆகியவைதான் தங்களுடைய லட்சியம் என்று கூறினார்களாம். அவர்கள் தங்களுடைய குருவாக கொண்டாடும் கோல்வாக்கர் அப்பட்டமான மனுவாதியாயிற்றே!

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்றெல்லாம் பிரிக்கிற வர்ணாஸ்ரம தத்துவத்தை உயர்த்திப் பிடித்தவர் கோல்வாக்கர். அப்படியிருக்கும்போது உங்களால் எப்படி சாதி வேறுபாடுகளை ஒழிக்க முடியும், என்று இவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு தேவரஸ், கோல்வாக்கர் கூறியிருப்பவை அவரது சொந்தக் கருத்துகள். அவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ கொள்கைகள் அல்ல, என்று பதலளித்தாராம்.

அந்த நேரத்தில் என்னைப் போன்றவர்களை சமாளிப்பதற்காக தேவரஸ் இவ்வாறு போலியாக கூறியது அவர்கள் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் துடைத்துவிட்டது, என்று தத்துவ வெளிச்சத்தைத் தேடிய அந்த நாட்களை நினைவு கூர்ந்தார் கோப்கர்.

ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நட்புறவு இருப்பதை நான் பார்த்திருக்கேன். அந்த நட்பு கொள்கை இணக்கம் சார்ந்ததல்ல. மாறாக இருவருக்குமே பொது எதிரி கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்ற அடிப்படையில் ஏற்பட்ட நட்பு அது, என்றார்.

மும்பையில் சிவசேனா அடித்தட்டு மக்களிடையே தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது எப்படி?
அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொதுவாக எங்கும் வேலையின்மை ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து பலர் வேலைதேடி மும்பையில் வந்து குடியேறிவிட்டார்கள்.

வேலையில்லாத மராட்டிய இளைஞர்களிடையே இப்படிப்பட்ட மராட்டியரல்லாத மற்ற மாநிலத்தவர் வருகையால்தான் மராட்டியர்களுக்கு உரிய வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன என்ற பிரச்சாரத்தை பால்தாக்கரே கிளப்பிவிட்டார்.

அத்துடன் இந்துத்துவா பிரச்சாரத்தையும் இணைத்துக் கொண்டார்.
இப்படி மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு பகையுணர்வை தூண்டிவிட்டுத்தான் சிவசேனா வளர்ந்தது, என்றார் கிருஷ்ணா கோப்கர்.

இன்று ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக நடைபெறும் மாநிலம் மகாராஷ்ட்ராதான்.

இத்தகைய நிலைமை பிற்போக்கு சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது என்பதை ஆட்சியாளர்களும், ஜனநாயகவாதிகளும் மனதில் கொண்டு சரியான அணுகுமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் கிருஷ்ணா கோப்கர்.

பெரியார் சிந்தனைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தகம் ஒன்று தமக்கு தேவை என கேட்டுக் கொண்ட அவர், எங்கள் மாநிலத்தில் பிராமணீய எதிர்ப்பாளர்களுக்கு பெரியாரின் கருத்துக்கள் ஊக்க சக்தியாக விளங்குகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பகுத்தறிவுவாதிகள் பெரியாரோடு இணைந்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமூக சீர்திருத்த இயக்கம் இப்போது இன்னும் வலுவாக நடைபெற வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கிறது, என்றார்.- நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர், 2.12.2007
http://viduthalai.com/20071208/snews06.html

----------------------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: